உணவை பாதுகாக்க கைகோர்ப்போம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
இது பழமொழி.

“காலாவதியாகாத” உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்.
தானத்தில் சிறந்தது “கலப்படமற்ற” அன்னதானம்.
இது புதுமொழி.

Food Safety

மனிதன் என்றைக்கு பணத்தை படைத்தானோ அன்றைக்கே மனிதத்தின் அழிவுக்காலம் தோன்றியது என்று சொல்லலாம். பண்டமாற்றுமுறை வழக்கொழிந்து போய், பணத்திற்கு பண்டம் வாங்கும் முறை வந்த போதுதான் பணத்தை நோக்கிய நம் இனத்தின் பயணம் தொடங்கியது. உணவுக்காக பணத்தேவை என்பது போய், இப்போது வாழ்க்கைதரத்தை உயர்த்திக்கொள்ள பணம் தேவை என்றாகிவிட்டது. அதற்காக பணம் சம்பாதிக்க நிறைய வழிகளை இந்த சமூகம் கட்டமைத்தபோதும், விரைவில் சம்பாதிக்க நம் இனத்தவர்கள் எண்ணியதால் அதற்காக சிலர் எதையும் செய்யத்துணிந்தனர். ஆம் எதையும். ஆனால் அதற்கான நாம் கொடுக்கப்போகும் விலை தான்  கொஞ்சநஞ்சமல்ல.

கடைசியில் எதற்காக பணத்தை நாம் படைத்தோமோ, மனித இனம் இப்பூமியில் உயிர்வாழ ஆதாரமாக எது தேவைப்படுகிறதோ அதை கூட நாம் விட்டுவைக்கவில்லை. விளைவு; உணவில் கலப்படமும். காலாவதியான உணவை விற்பதும். இயற்கைக்கு மாறாக காய்கறி, பழங்களை விளைவிப்பதும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் நான் சொல்லித்தெரியவேண்டியது இல்லை. பாடப்புத்தகத்திலும், செய்திகளிலும், அரசின் விழிப்புணர்வு செயல்பாடுகளினாலும், நம் ஆறாம் அறிவின் மூலமும் அதன் ஆபத்தை அறியப்பெற்று மீண்டும் பணத்தாசையில் அந்த தவற்றை செய்பவர் தான் நாம். ஆனால் அதற்கான முடிவு ஒன்று தான். நிச்சயம் மனித இனத்தின் மிகபெரும் அழிவு அது.  நாம் மூட்டை மூட்டையாய் பணத்தை தூக்கிக்கொண்டு கலப்படம் இல்லா இயற்கை உணவைத்தேடி அலையப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.  அப்படியே எங்காவது அது கிட்டினும் அதற்காக அடித்துக்கொண்டு மாண்டுப்போகும் ஒரு பணத்தாசை பிடித்த இனமாக வரலாற்றில் இடம் பிடிக்கப்போகிறோம். ஆனால் அந்த வரலாற்றை படித்துப்பார்க்க நம் சந்ததிகள் நிச்சயம் இருக்கப்போவதில்லை.

இப்படி பட்ட சூழ்நிலையில் நம் விழிப்புணர்வும், தவறு செய்யும் நிறுவனங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும், அவர்களை புறக்கணிப்பதும் மிகவும் அவசியம். பெரும் பணமுதலைகள் முன்,  சாமான்யர்களாகிய நாம், குறைந்தபட்சம் அதை தான் செய்ய முடியும். ஆனால் அதையும் செய்யத்தவறி மறைமுகமாய் அவர்களுக்கு துணைபோய் அடிமையாய் வாழ்த்திடும் வாழ்க்கையை நம்மில் பலர் இன்னும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம். நிச்சயம் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்து உருவாக வேண்டும்.

சென்ற வாரம் (06/10/2014) சேலம் தாதகாப்பட்டியில் மூன்றுதளங்களில் பிரமாண்டமாக அமைந்துள்ள “ஜெய்சூர்யாஸ் பல்பொருள் அங்காடி”க்கு (Jaisurya’s Deparment Store) சில பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். இது சேலம், ஈரோடு நாமக்கல் பகுதிகளில் பல கிளைகளை கொண்டுள்ளது. எல்லா பொருட்களையும் அதன் தாயரிப்பு தேதியையும், காலவதியாகும் தேதிகளையும் சரிபார்த்தே வாங்கிய நான், கோதுமை பிரட் பாக்கெட்டை கவனிக்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அடுத்த நாள் காலை அதை உண்டும் விட்டேன். மீண்டும் மறுநாள் காலை அதை உண்ண எடுக்கும் போது அந்த பிரட் துண்டுகள் பூசனம் பிடித்து இருந்ததை கவனித்தேன். (கோதுமை பிரட்டின் நிறம் முதல் நாள் கவனக்குறைவை ஏற்படுத்திவிட்டது).  இதை வாங்கி இரண்டு நாள் தானே ஆகிறது. அதுவும் குளிர்சாதனப்பெட்டியில் அல்லவா இதை வைத்திருந்தோம் என்று அதன் தயாரிப்பு தேதியை பார்த்தால் அது அச்சிடப்படவில்லை. அதன் காலாவதி (Best Before) தேதியைப் பார்த்தால் அது 09/09/14 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது அந்த பிரட் பாக்கட் காலாவதி ஆகி சுமார் ஒரு மாதம் கழித்து என்னிடம் அது விற்கப்பட்டு இருக்கிறது. பூசனம் பிடித்த உணவை என் கவனக்குறைவால் நானும் உண்டு இருக்கிறேன். எனக்கு கோபம் கோபமாய் வந்தது. நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். என் கவனக்குறைவால் மிகவும் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். என்ன செய்ய?

mold bread with fungus

 

Proof to complaint at food safety departmentexpired food item - food safety complaint

 

யோசித்துப்பார்த்தேன்.

1. வேறு ஏதேனும் சப்ளையர்ஸ் காலாவதியான பிரட்பாக்கட்டை இடையில் நுழைத்து அவர்களை ஏமாற்றி இருந்தால்?அந்த பிரட் பாக்கெட் ஜெயசூர்யாஸிசின் சொந்த தயாரிப்பாகும். இதனால் அவர்கள் யாராலும் ஏமாற்றப்படவில்லை என்பது முதலில் உறுதியாகிறது.

2. ஒரு வேலை பணியாளரின் கவனக்குறைவால் இது நிகழ்த்திருந்தால்? அந்த அங்காடி உள்ளே நுழைந்ததும் முதலிலேயே மேசையில் இருப்பது பிரட் பாக்கெட்டுகள் தான். ஒவ்வொரு பிரட் வெரைட்டியில் சுமார் ஐந்து பாக்கெட் என நான்கு வெரைட்டிகள் தான் மேசையின் மேல் இருந்தது என நினைக்கிறேன். கிட்ட தட்ட நாற்பது நாட்களாகவா அந்த பெரிய அங்காடியில் அந்த ஐந்து பாக்கட்டுகளை யாரும்  வாங்காமல் இருப்பார்கள்? (கலாவதி ஆன தேதியில் இருந்து பத்து நாட்களுக்கு முன்னர் அது தயாரிக்கபட்டதாக அறிகிறேன்.)

3. ஒரு வேலை உண்மையாகவே அது விற்பனை ஆகாமல் இருந்திருந்தால்? அந்த அங்காடியின் ஒவ்வொரு சிறுபகுதிகளுக்கும் தனிதனி பணியாளர்கள் இயங்கிக்கொண்டு இருப்பதாகவே காணமுடிகிறது. ஒரு கண்ணாடி மேசையில் கேக், பிரட், இனிப்பு  என்று வெகு சீக்கிரம் வீணாக போகக்கூடிய பொருட்களை தினமும் கண்காணிக்கும் நபருக்கு பல வாரங்களாக விற்பனை ஆகாமல் அப்படியே இருக்கும் பொருட்களை பற்றிய கவனம் இல்லாமலா போய்விடும்?!

4. எது எப்படியோ. நேரில் சென்று அவர்களிடம் இதற்கு நியாயம் கேட்டால் என்ன? என்று ஒரு கேள்வி எழாமல் இல்லை! காலாவதி ஆகி குறைந்தபட்சம் ஓரிரு நாட்கள் மட்டுமே ஆகி இருந்தால் மனிதத்தவறேதும் நிகழ்திருக்கலாம் என்று அவர்களிடம் சென்று  கவனமாய் இருக்க எச்சரிக்கை செய்து, வேறு பிரட் பாக்கெட்டோ அல்லது பணத்தை திரும்பவோ பெறவோ முறையிடலாம். ஆனால் மேற்கொண்ட சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது, காலாவதி ஆகி முப்பது நாட்கள் ஆகிவிட்டதால் இதை மனிதத்தவறென்று கருத்தில் கொள்ள இயலவில்லை.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் ஈரோட்டில் உள்ள கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சில உணவுப்பொருட்கள் வீட்டிற்கு வாங்கிவந்ததாகவும் அவை அனைத்தும் பழையபொருட்கள் என்று பிறகு தெரியவந்ததாகவும் சொன்னது நியாபகம் வந்தது. அது தான் இப்போது ஜெய்சூர்யாஸ் என்று பெயர்மாற்றபட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி இந்த கதை நீண்ட காலமாக தொடர்வது போல் ஒரு உள்ளுணர்வு எழுந்ததால், அங்கு பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், அந்த கடையை சோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.

எப்படி ஒரு கடையை சோதனைகுட்படுத்துவது?

இதற்க்கு முன்னர் இதை போன்ற பல பிரச்சனைகளை வேறு பொருட்களில்/நிறுவனங்களில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் பிரச்சனை இந்த அளவிற்கு வீரியம் இல்லாததால் அவர்களிடம் நேரிடையாக முறையிட்டு பணத்தை திரும்ப பெற்றிருக்கிறேன், பொருட்களை மாற்றி தரவைத்திருக்கிறேன், மன்னிப்புக்கடிதம் கூட தரவைத்து அவர்களின் தவற்றை பதிவுசெய்து இருக்கிறேன். ஆனால் இம்முறை அப்படி அல்ல.

இணையத்தின் மூலம் சென்னையில் உள்ள “உணவுப்பாதுகாப்பு துறை” அலுவலகத்தை தொடர்புக்கொண்டு சேலத்தில் உள்ள அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை வாங்கினேன். சேலம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த புகாரை கூறியவுடன் அடுத்த அரை மணி நேரத்தில் திருமூர்த்தி என்ற அதிகாரி என் இருப்பிடத்திற்கு வந்து பிரட்பாக்கெட், பில் போன்றவைகளை ஆய்வு செய்து அதை உறுதிபடுத்திக்கொண்டார். (இது வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் நாம் தொடர்புகொள்ளாமல் இருப்பது அவசியம். அவர்களுக்கு விஷயம் தெரிந்து உஷாராக வாய்ப்பு இருக்கிறது).

உடனே அவரும் அவர் உதவியாளரும் அந்த ஆங்காடிக்கு சென்று அணைத்து பிரட்பாக்கட்டுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது நேரம் காலை சுமார் பதினோரு மணி இருக்கும். ஒருவேளை பழைய தேதியிட்டு ஏதேனும் இருந்தால் அதை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பு சோதனைக்கு உட்படுத்துவதாய் இருந்தது.    ஆனால் எதிர்பாராவிதமாக, அதே சமயம் ஆச்சர்யமாக அனைத்து பிரட் பாக்கட்டுகளிலும் தயாரிக்கப்பட்ட தேதி அன்றைய தேதியாகவே இருந்தது (விற்பனை நன்றாக நடைபெறுகிறது என்றும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்).

உடனே அவர் அந்த நிறுவனத்தின் கிளை நிர்வாகியை அழைத்து என்னுடைய புகாரை சொல்லி, அவர்களை எச்சரிக்கை செய்து, மற்ற பொருட்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். என்னை எழுத்துப்பூர்வமாக புகாரை அளிக்குமாறு கூறினர். ஏற்கனவே அந்த நிறுவனத்தின் மேல், அதுவும் அந்த கிளையில் சில புகார்கள் உணவுப்பாதுகாப்புத்துறையில் இருப்பதை அறியபெற்றதால் நான் புகாரை எழுத்துப்பூர்வமாக கொடுப்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி புகாரை அளித்தேன். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Officer Raid & Inspect Jaisuryas Deparmental Store(திரு.திருமூர்த்தி அவர்களும் அவரது உதவியாளரும் சோதனை செய்தபோது)

நீங்களும் ஏதேனும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் தயங்காமல் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அளியுங்கள். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

உணவுப்பாதுகாப்புத்துறை தொலைபேசி எண்கள்:

சென்னை: 044 – 24351051
சேலம்: 0427 – 2450332
இணையத்தளம்: http://www.fssai.gov.in

 

(உணவு பாதுகாப்பு துறைக்கு நான் எழுதிய புகார் கடிதத்தின் சீல் செய்யப்பட்ட நகல்)
scan0003-page1

5 thoughts on “உணவை பாதுகாக்க கைகோர்ப்போம்”

  1. பெரும்பாலும் பிரட் வகைகளை உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிகம் உண்பார்கள்.இவர்களுடைய தயாரிப்பை தின்றால் அதனாலேயே உடல் நலம் குன்றிவிடும் போல…?! கண்டிக்கத்தக்க அலட்சியம்.

  2. உண்மைதான் தேவா.. வாடிக்கையாளர்களாகிய நாம் பொருட்களை வாங்கும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக உணவு மற்றும் மருந்துகளை வாங்கும் போது…

  3. எனக்கு ஒரு சந்தேகம். உணவு பாதுகாப்பு ஆதிகாரி ஜைசுர்யாஸ் இடம் ஆங்கு செல்லும் முன்பு அவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கலாம் என்று. உங்களுடுய முயற்சி உணவு பாதுகாப்பின் முதல் படி தான் என்று நான் நினைக்கிறன். நாம் அந்தந நிறுவனத்தின் மீது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

  4. நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். என் மனதின் ஒரு ஓரத்தில் இந்த எண்ணம் தோன்றாமல் இல்லை. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?!

  5. உணவை பாதுகாக்க கைகோர்ப்போம் = பிரவீன் குமார் = நீங்களும் ஏதேனும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் தயங்காமல் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அளியுங்கள். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

    உணவுப்பாதுகாப்புத்துறை தொலைபேசி எண்கள்:

    சென்னை: 044 – 24351051
    சேலம்: 0427 – 2450332
    இணையத்தளம்: http://www.fssai.gov.இன் = காலக்கெடு முடிந்த உணவுப் பொருட்கள் விற்ற கடை, அதற்காக நண்பர் திரு ப்ரவீன் குமார் எடுத்த நடவடிக்கைகள், அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் பற்றி பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி திரு ப்ரவீன் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *