ஒரு ஜல் புயல், நிறைய மழை, கொஞ்சம் தத்துவம்

rain-story

தீபாவளி வரும் முன்னமே ஒவ்வொரு வருடமும் மழை கொட்டுவது தொடங்கிவிடும். பண்டிகை நெருங்க நெருங்க, கொள்ளுப்பட்டாசு வெடிக்கும் பொடுசுகள் முதல், கம்பி மத்தாப்பு பிடிக்கும் பெருசுகள் வரை அனைவரும் வேண்டிக்கொள்வது தீபாவளியன்று மழை பேயக்கூடாது என்ற ஒன்றாகத்தான் இருக்கும். தீபாவளியை ஒவ்வொருவறும் அவர்கள் விரும்பும் விதமாக கொண்டாடுவர். இருப்பினும் அனைவருக்கும் தீபாவளியன்று மழை நிச்சயம் எதிரிதான். பட்டாசு வெடிக்காமல், பிரியாணி வயிறு முட்ட தின்று விட்டு வீட்டிலேயே முடங்கிவிடுபவர்களுக்கு கூட பிரச்சனை இருக்கிறது. மழை பெய்தால் சன் டைரக்ட் டி.டீ.ஹெச் இணைப்பில் சிக்னல் வராமல் போய்விடுமே என்பதால் மழை வரக்கூடாது என்ற கவலை அவர்களுக்கும் உண்டு.

இப்படி அனைவர்களுக்கும் மழை ஒரு விதத்தில் இடையூறாக  இருக்கும் பட்சத்தில் இம்முறை தமிழகதிற்கு வந்து தொலைந்தது ஒரு ஜல் புயல். சென்னை அருகே மையம் கொண்டு இருந்த அந்த புயல் கடற்கரை பிரதேசங்களை நோக்கி கண்டபடி மழை பொழிந்து தள்ளியது. கடற்கரையை விட்டு வெகு தொலைவில்  தென் இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் நான் வாழும் நகரமான சேலத்திலும் அதன் தாக்கம் இருந்தது. பல சந்தர்பங்களில் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று திரும்பும்போது அனைவரும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்தபடி தான் வீட்டிற்கு திரும்பவேண்டி இருந்தது.

ஜல் புயல் உருவாவதற்கு முன்பே தீபாவளி வந்த அதே வாரத்தில் நானும் மூன்று முறை நன்றாக  நனைந்தபடி வீட்டிற்கு வந்திருந்தேன். தீபாவளியன்று முன்னிரவு கூட கொஞ்சம் பட்டாசு வாங்கலாம் என்று சரியாக மழை விட்ட அந்த சொற்ப நேரத்தில் வெளியே சென்றேன். ஆனால் மீண்டும் நனைந்தபடிதான் திரும்பநேரிட்டது. மழையில் தொடர்ந்து நனைத்துக்கொண்டு இருப்பது எனக்கு அந்நேரத்தில் எரிச்சலை தந்தது. நனைத்தபடி வீட்டிற்கு வந்த போது எங்கள் தெருவில் சிறுவர்கள் குடை பிடித்தவாறு மழையில் பட்டாசு கொளுத்திக்கொண்டு தீபாவளியை வரவேற்றுக்கொண்டு இருந்ததை பார்க்கும் போதுதான் கொஞ்சம் புத்துணர்வு வந்தது.

அடுத்த நாள் தீபவளியன்றும் மழையில் நனைவது படலமாக தொடர்ந்தது. கடைக்கு செல்ல வேண்டும். உறவினர்களை, நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.. இப்படி இருமுறை மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை. பத்தாததற்கு தீபாவளி இனிப்புகள் வேறு டசன் டசனாக அதுவரை கணக்கில்லாமல் முழுங்கி இருந்தேன். அடுத்தநாள் சனிக்கிழமை இரவு தொண்டை வலிக்கான  அறிகுறி சிறிது தென்பட்டது. வீட்டு மருத்துவத்தைக்கொண்டு அன்றைய இரவை கடத்தினேன். மறுநாள் ஞாயற்றுக்கிழமை காலை வலி அதிகமாகி இருந்தது, உடல் தளர்ந்து காய்ச்சல் வரும் சூழ்நிலை அதிகம் தென்பட்டது. இப்படியே விட்டால் மறுநாள் திங்கள்கிழமை பணிகள் செய்யவிடமால் படுக்க வைத்து விடுமென்று உள்ளுணர்வு சொல்லியது.

உடனே மருத்துவரை சென்று பார்த்தே ஆகவேண்டும். தீபாவளி விடுமுறையில், ஞாயற்றுக்கிழமையில், ஆதுவும் மழைகொட்டிக்கொண்டு இருக்கும் புயல் நேரத்தில் எந்த டாக்டர் இருப்பாங்க? கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா எனக்கு அந்த பிரச்சனை இல்லை. எங்க ஏரியாவில் ஒரு அதிரடி வைத்தியம் செய்யும் டாக்டர் இருக்கிறார். எந்த நோயாக இருந்தாலும், காயச்சலாக இருந்தாலும் ரெண்டே ரெண்டு இன்ஜெச்சன் தான். இந்த பக்கம் ஒன்னு அந்த பக்கம் ஒன்னும். எல்லாமே பட்டுன்னு காணமா போய்டும். எவ்வளவு மழை பேஞ்சாலும், கடை அடைப்புனாலும், பண்டிகைனாலும், ஏன் உலகமே அழிஞ்சாலும் மனிதர் கடமை தவறாமல் அவர் கிளினிக்கில் அமர்ந்து இருப்பார்.

இப்போ அங்கே செல்ல எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் இருந்தது… அது தான் மழை.. பொறுத்திருந்து பார்த்தேன் மழை நின்றபாடில்லை. உடல் தளர்வும், காய்ச்சலும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. வீட்டிலிருப்பவர்களை தொந்தரவு செய்ய விருப்பமில்லை. என் இரு சக்கர வாகனத்தை இயக்கும் சக்தியை என் உடல் இழக்கும் வரை பொறுத்திருக்கவும் விருப்பமில்லை. சட்டென்று ஜர்க்கினை தலையோடு மாட்டிக்கொண்டு அடை மழை என்றும் பாராமல் அந்த அதிரடி வைத்தியரின் கிளினிக்கை நோக்கி விரைந்தேன்.

மழை.. மழை, மழை,, முகத்தின் மேலே அடிக்கும் மழை துளிகள்  வாகனத்தை இயக்க சிரமம் விளைவித்தது. உடலிலே நடுக்கம்.. அதனால் வாகனத்தை மிகவும் பொறுமையாகவே செலுத்தினேன். இதனால் என்னை முந்திக்கொண்டு பல கார்கள் சென்று கொண்டு இருந்தது.. உள்ளே சிறிதும் நனையதாதபடி மழையை ரசித்துக்கொண்டு செல்லும் மனிதர்களை கண்டேன். ஆனால் நானோ மழையில் தொடர்ந்து நனைந்து காய்ச்சல் வந்த பிறகும் அதற்கு வைத்தியம் செய்ய கூட மழையில் நனைத்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கிறேன். அவர்களை பார்த்து முதல் முறையாக கொஞ்சம் நியாயமான பொறாமை எட்டி பார்த்தது.

இனி எந்த காரும் என்னை கடந்து செல்ல எனக்கு விருப்பமில்லை.. வாகன விசையை இப்போது சற்று  மேலும் கூட்டினேன். அடுத்த சில நிமிடங்களில் கிளினிக்கிற்கு செல்லும் அந்த தெரு வந்தடைந்தது.  அந்த தெருவிற்குள் கார்கள் செல்ல முடியாதென்பதால் அந்த தெருமுனையில் காரை நிறுத்தி ஒரு குடும்பம் இறங்கிக்கொண்டு இருந்த்தது. அந்த கிளினிக் அங்கிருந்து சில அடி தூரம் தான் இருக்கும். இரு சக்கர வாகனம் மட்டுமே நுழையும் இடம் அது. ஒரு குடையை பிடித்தவாறு ஒரு கல்லூரி  மாணவி போல் தோற்றமுடைய நைட்டி உடையில் ஒரு பெண் அந்த காரிலிருந்து கடைசியாக  இறங்கினார் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது அவர்களும் அந்த கிளினிக்கை நோக்கி தான் செல்கிறார்கள் என்று.  மீண்டும் நாம் காய்ச்சலோடு மழையில் நனைத்து செல்கிறோமே என்ற எண்ணத்தை அந்த காட்சி எனக்குள் உருவாக்கியது. அதே நேரத்தில் அனைவரும் காரில் இறங்கி நடக்க ஆரமிக்கவும் நான் அந்த தெருவுக்குள் அவர்களை கடந்து நுழையவும் சரியாக இருந்தது.

உள்ளே சென்றால் ஒரே கூட்டம். வேறு எந்த மருத்துவரும் அன்று எங்கேயும் இருக்க வாய்ப்பில்லை என்று அது உறுதி படுத்தியது.  எனக்கு இருந்த அதே பிரச்சனையை அனைவருக்கும் இருப்பதை அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைக்கொண்டு உணர முடிந்தது. சில நொடிகளில் அந்த கார் கும்பலும் உள்ளே வந்தது. இரு பெண்கள், ஒரு நடுத்தர வயது ஆண் மற்றும் ஒரு இளைஞன் என்று அந்த நைட்டி பெண்ணிற்கு துணையாக வந்து இருந்தனர். யாரும் ஒரு துளி நனையவில்லை.

சிறிது நேரம் கழிந்தது.. எனக்கு முன் வந்து இருந்த அனைவரும் மருத்துவரை  பார்த்துவிட்ட சென்றுவிட்ட நிலையில் என் டர்ன் வந்தது. நானும் உள்ளே செல்ல எழுந்தேன். அதே நேரத்தில் திடிரென கார் கும்பலில் இருந்த ஒரு பெண்ணும் எழுந்தார். “தம்பி நாங்க தான் பர்ஸ்ட் வந்தோம் அதனால நாங்க தான் உங்களுக்கு முன்னாடி போகணும்” என்றார். நான் ஒன்றும் புரியாமல் “என்ன சொல்றீங்க என்றேன்”. அதற்கு அவர் “ஆமாம் தம்பி, நீங்க இந்த தெருவில் பைக்ல நுழையரப்பவே நாங்க கார்ல வந்து இறங்கிட்டோம். நீங்க போறத கூட பார்த்தோம், அதனால நாங்க தான் பர்ஸ்ட்  வந்தோம்”….   “ஆஹா, இப்படி எல்லாம் கூட உக்காந்து யோசிக்கராங்களா”என்ற ஆச்சர்யத்தில் இருந்து நான் மீள்வதற்கு முன்னர் அங்கிருந்த செவிலிப்பெண் எனக்காககுரல் கொடுத்தார். “ஏம்மா.. விட்டா வீட்ல இருந்து மொதல்ல யார் புறப்பட்டாங்கன்னு கூட சொல்லுவா போல இருக்கே.. நீங்க அடுத்ததாக தான் உள்ள வந்தீங்க.. கொஞ்சம் ஒட்காருங்க” என அவரை அமைதிப்படுத்தி என்னை உள்ளே அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அது சிலம்பரசனின் “மன்மதன்” திரைபடத்தின் வசனமான “பர்ஸ்ட் யாரு பர்ஸ்ட்டு வாராங்கங்கறது முக்கியமில்லை, கடைசியா யாரு பர்ஸ்ட் வாராங்கங்கறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தின் பிரதிபளிப்பில் உதிர்த்த ஒரு பஞ்சாயத்து தீர்ப்பாக தோன்றியது.

உள்ளே சென்றதும் அந்த அதிரடி மருத்துவரிடம் நான் கேட்ட கேள்வி இது தான் “தீபாவளி நேரம், மழை இப்படி பேயுது, நீங்க இருப்பீங்கலானு சந்தேகத்தோடு தான் வந்தேன் என்றேன்”. அதற்கு அவரோ “இதை ஒரு சேவையாக நான் செய்து வரேன். நமக்கு விடுமுறை எல்லாம் கிடையாது. நம்மளை நம்பி மக்கள் வராங்க. அவங்களுக்கு சேவை செய்வது நம் கடமை.  இல்லேன்னா முப்பத்தாறு வருஷம் இதே இடத்துல உட்கார்ந்து இருக்க முடியாமா?. தீபாவளி அன்னைக்கு கூட நான் வந்தேன், ஆனா பேசண்ட்ஸ் தான் எதிர்பார்த்த அளவுக்கு வரல” என்று நகைச்சுவையாக ஒரு தத்துவத்தை அவர் பங்கிற்கு உதிர்த்து விட்டு “நீங்க வேணா பாருங்க வீட்ல போய் இறங்கினதும், சளி, காய்ச்சல், உடல் சோர்வு எல்லாம் உடனே போயிடும்” என்று சொல்லி இன்ஜெக்சன் போட்டார்.  நான் அங்கிருந்து கிளம்பினேன்.

வெளியே அந்த கிளினிக்கை ஒட்டி அமைந்துள்ள மருந்துக்கடையில் மருந்து வாங்கிக்கொண்டு இருக்கும் போது அவர்களை கவனித்தேன். ஒரு சிறுமியை கையில் சுமந்தவாறு மழைக்கு ஒதுங்கி நிற்பது போல் அதே மருந்து கடை வாசலில் நின்றிருந்தார் ஒருவர். அந்த சிறுமிக்கு தந்தையாக தான் அவர் இருக்க வேண்டும். அவள் மழைத்துளியை வெறித்துப்பபார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கும் நிச்சயம் காய்ச்சலாகத்தான் இருக்கும். அவள் பார்வையில் ஜீவன் இல்லை. ஆனால் அவர்களை சிறிது நேரத்திற்கு முன்பு தான் சந்தித்தேன். கிளினிக்கிற்கு உள்ளே எனக்கு முன்னே மருத்துவரை சென்று பார்த்தவர்கள் அவர்கள் தான்.

மருந்துகளை வாங்கிக்கொண்டு ஜர்கினை சரிசெயத்தவாறே அங்கிருந்து நகர முயன்றேன். “சார்” என்று அழைத்தது அவர் குரல்.  “சொல்லுங்க” என்றேன் அவரை நோக்கி. “நீங்க எதுவரை போறீங்க? போகிற வழியில அந்த பஸ் ஸ்டாப்ல எங்களை எறக்கி விட முடியுமா, என் பொண்ணுக்கு காய்ச்சல், மழை இப்போதைக்கு நிக்கிற மாதிரி தெரியல?” என்றார்.

என் பைக்கில் அவர்கள் இருவரையும் ஏறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். போகும் போது அவரிடம் கேட்டேன் “இந்த மாதிரி நேரத்துல பஸ் சரியான நேரத்துல வரும்னு சொல்ல முடியாது. யாரையாவது பின்னாடி குழந்தைய புடிச்சிட்டு வர சொல்லி பைக்ல நீங்க வந்து இருக்கலாமில்ல என எதேச்சையாக கேட்டேன்”. அதற்கு அவரோ “என்கிட்டே பைக் இல்லைங்க,  சைக்கிள் தான் இருக்கு. அதுல பின்னாடி என் மனைவியை உட்கார வச்சிட்டு குழந்தைய புடிச்சிட்டு இந்த மழைல வர முடியாது. அதனால ஷேர் ஆட்டோல நானே கூட்டிட்டு வந்துட்டேன்” என சொன்ன போது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். காரில் நனையாமல் சென்றவர்களை பார்த்த போது எனக்கு அந்த நேரத்தில் தோன்றிய எண்ணங்கள் சுக்கு நூறாய் சிதறியது.

பஸ் ஸ்டாப் வந்தது. “நீங்க போங்க சார். ஷேர் ஆட்டோ வரும் நான் போய்டுவேன், ரொம்ப நன்றி” என்று சொல்லி இறங்கிக்கொண்டார்.  குடை கூட இல்லாமல், ஒரு துண்டை அந்த குழந்தையில் தலையில் சுற்றிவிட்டுகொண்டே, ஷேர் ஆட்டோவை நோக்கி சாலையில்  பார்த்தபடி நின்றிருந்த அந்த தகப்பனின் கண்ணில் ஒரு இயலாமை தெரிந்தது. அந்த சிறுமியின் முகம் எனக்கு இன்னும் மறக்கவில்லை.  பஸ் ஸ்டாப்பில் அவர்களை இறக்கிவிட்டு  நான் வீட்டிற்கு வந்தடைந்த போது அந்த மருத்துவர் சொன்னது போல் எனக்கு உடல் சோர்வும், காயச்சலும் என்னை விட்டு வெகு தூரத்தில் போயிருந்தது..

4 thoughts on “ஒரு ஜல் புயல், நிறைய மழை, கொஞ்சம் தத்துவம்”

  1. நண்பா, இப்பொழுது நீங்கள் நலமாக உள்ளீர்களா? தீபாவளி திருநாள் எவ்வாறு கொண்டாடினீர்கள்.
    நானும் மழையில் நனைந்தேன், அதையும் ரசித்தேன். மழையை வெறுக்காதீர்கள். பூமியும் சற்று நீர் பருகட்டும். இல்லையென்றால் காய்ந்த பாலை வனம் போல ஆகிவிடும்.

  2. செல்வா.. மிக்க நன்றி.. இப்போது ஓரளவு நலம்.. நான் நிச்சயம் மழையை வெறுக்கவில்லை. தொடர் மழையும், புயலையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பையுமே வெறுத்தேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *