“ஐ” திரைப்படம் – என் பார்வையில்

ai-movie-review-tamil

என்னை பொறுத்தவரை, ஒரு நல்ல திரைப்படம் என்பது கண்டிப்பாக நிறைய நாட்கள் தியேட்டரில் ஓடி லாபம் சம்பாதிக்கும் படங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கனக்கச்சிதமாக மக்களை திரையோடு ஒன்றி கட்டிப்போட வைக்கக்கூடிய இரண்டு வகை சினிமாக்கள் போதும். ஒன்று, தன்னையோ, தனக்கு தெரிந்த நபர்களையோ, நிஜ வாழ்க்கை சம்பவங்களை  திரையில் பிரதிபலித்தல். சில சமயம் அதில் வரும் கதாபத்திரங்களை உண்மையென நம்பி அதன் கண்ணோட்டத்தில் படத்தை பார்ப்போம். அது அழுதால் நமக்கும் வலிக்கும், அதற்க்கு கோபம் வந்தால் கோபம் நமக்கும் வரும், அது காதலித்தால் அந்த பெண்ணையோ/ஆணையோ நாமும் காதலிப்போம்.  குறைந்தபட்சம் அந்த கதையில் ஏதோ ஒரு மூலையில் பெயர் இல்லாத, திரையில் தோன்றாத பாத்திரமாக நாமும் அமர்ந்து, அமைதியாய் படத்தை வேடிக்கை பார்ப்போம். உதாரணங்கள், அலைபாயுதே, 7G ரெயின்போ காலனி, கற்றது தமிழ்  என்று நீளும் லிஸ்டில் கடைசியாய் நான் ரசித்தது விண்ணைத்தாண்டி வருவாயா. இவ்வகை திரைப்படங்கள் படம் முடிந்து நாம் வெளியே வந்தும் கூட நம் மனதில் இருந்து சுலபத்தில் அது அகலாது. அதன் வீச்சு தனி நபர்களையும், அவர்களது அக்காலத்தின் சூழ்நிலையையும் பொருத்தது.

இன்னொருவகை சினிமாவோ, நிஜத்தில் நடக்காத கதைக்களம், சம்பவங்கள், காட்சிகளை கொண்டது. இவ்வகையான சினிமாக்களில் நம்மால் நேரிடையாக கதையில் தொடர்புகொள்ள முடியாவிடிலும், நம்மை வேறெதுவும் யோசிக்கவிடாமல் காட்சிகளை ஆச்சரியங்களோடு அல்லது வேகமான நகரும் சம்பவங்கள், நகைச்சுவைகளை வைத்து கதை சொல்லப்படும். நம்மால் நிஜத்தில் செய்ய முடியா விஷயங்களை அதன் கதாபாத்திரங்கள் திரையில் செய்யும். நேரில் காணக்கிடைக்கா விசுவல்கள் திரையில் நம்மை பரவசப்படுத்தும். நடைமுறையில் நடக்க வாய்ப்பில்லாத அதன் சம்பவங்கள் நம்மை பெரிதும் பிரம்மிக்கவைக்கும். தொய்வில்லாமல் தொடர்ச்சியாய் இவை திரையில் நிகழுமேயானால், கைதட்டி, விசிலடித்து நாம் அப்படங்களை கொண்டாடவும் தவறுவதில்லை. ஆனால் அனைத்தும்   படம் முடியும் வரை மட்டுமே.  வீட்டிற்க்கு வந்ததும் அதை மறந்துவிட்டு நம் வேலையை தொடருவோம்.

ஷங்கர் படம் எப்பொழுதும் இதில் இரண்டாம் வகை திரைப்படம் தான். முதல் இரண்டு, மூன்று படங்களோடு ஸ்டாக் தீர்ந்து தடுமாறும் இக்கால இயக்குனர்கள் வரிசையில் மனுஷன் தொண்ணூறுகளில் இருந்து இன்னமும் நின்னு விளையாடி, நாட் அவுட் பேட்ஸ்மேனாக விலாசிக்கொண்டு இருக்கிறார். பிரமாண்டத்தின் உச்சமான “எந்திரன்”னுக்கு அப்புறம் இனி பெருசா என்ன பண்ணிடப்போறாருன்னு இந்த படத்தை பார்த்தா “அதுக்கும் மேல”  அவர் மண்டையில் ஸ்டாக் வச்சி இருக்கார் என்பது தெளிவாக தெரிகிறது.

ஒவ்வொரு பாடலிலும் எதாவது தீம் வைத்து இருக்கிறார். ஸ்பெஷல் எபக்ட்ஸ்கான ஐடியாக்கள் எப்படி இவ்வளவு படங்கள் பண்ணியும் இப்படி அருமையாக யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஏதாவது புதுசாக, அதே சமயம் ஆச்சர்யமாக பல விஷயங்கள் உள்ளே புகுத்திக்கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ஷங்கர் ஒரு நல்ல இயக்குனர் தான். ஆனால்  சிறந்த திரைக்கதை ஆசிரியராக அவரை நிச்சயம் என்னால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. அதுவும் இந்த படத்தில் சுஜாதா இல்லாத குறை  திரைக்கதையில் அப்பட்டமாக தெரிகிறது. அடுத்தது என்ன என்று பரபரக்க வைக்காத திரைக்கதை, எளிதில் யூகிக்கக்கூடிய திருப்பங்கள், அருவருக்கத்தக்க பழிவாங்குதலும், அதன் மேல் நிகழ்த்தப்படும் ரசிக்கமுடியா நகைச்சுவைகளும் எனக்கு சற்று ஏமாற்றமே அளித்தது.

vikram-i-movie

ஜிம் நடத்திக்கொண்டு ஆணழகனாக கட்டுடலோடு வலம் வரும் “லிங்கேஸ்வரன்” ஆகட்டும், பின்பு மாடலாக மாறி ரொமான்ஸில் பின்னி எடுக்கும் “லீ” ஆகட்டும், சற்றும் எதிர்பாராத வித்தியாசமான கதாபத்திரத்தை தன் முதுகில் சுமந்து நடித்த “கூனன்” ஆகட்டும் – விக்ரமை  தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. (முடிந்தால் யாரையாவது suggest செய்யுங்கள் பார்ப்போம்). அபாரமான நடிப்பு, அசாத்தியமான ஈடுபாடு. ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்கவே நமக்கு தாவு தீர்த்துவிடுகிறது, மனுஷன் பட்டன் தட்டினா உடல் சைஸ் டக்குனு மாறிடும் போல. ஆணழகன் போட்டியில் . ஸ்டேஜில் வந்து அவர் நிற்கும் தருணங்களும், ஜிம்மில் நடக்கும் சண்டைகாட்சிகளும் ஹாட்ஸ் ஆப் சியான்.  அவரை சமீபத்தில் நேரில் சந்தித்தபோது “பேஸ்புக்”னாவே எனக்கு கொஞ்சம் அலர்ஜி என்றார். ஆனால் இப்போதைக்கு இணையத்தில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரே நடிகர் அவர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சினிமாவுக்காகவே நேந்து விடப்பட்ட காளைதான் அவர்.

எமி ஜாக்சன் தன்னை முழுமையாக படத்தில் அர்பணித்து இருக்கிறார். நம்மூர் நடிகைகளே தமிழில் தடுமாறும் இக்காலத்தில் கொஞ்சமும் பிசகாமல் திரையில் அவருக்கு வசன உச்சரிப்பு லிப் சின்க் ஆகிறது. நடிப்பு, நடனம் உடல் மொழி என மிகச்சிறப்பாக தன்னை பிரசன்ட்செய்திருக்கிறார். சந்தனமும் வழக்கம் போல் தன் பணியை கட்சிதமாக செய்கிறார். வசனங்கள் நிறைய இடங்களில் நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறது.  ஏனோ ரகுமான் மேல் வர வர எனக்கு ஈர்ப்பு குறைந்து வருகிறது. தொண்ணூறுகளிலும், இரண்டாயிரத்தின் ஆரம்பங்களிலும் இருந்த ரகுமான் எங்கே? எனக்கு மட்டும் தான் இப்பொழுதெல்லாம் அவரின் இசை இரைச்சலாக கேட்க்கிறதா? இல்லை எனக்கு ரசனை மழுங்கிவிட்டதா? என்ற குழப்பம் சிறிதுகாலமாக என்னை வாட்டி வதைக்கிறது! பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல் இருக்கிறது. சீனாவில் வரும் அனைத்து காட்சிகளும், க்ளைமாக்சில் வரும் பூச்செடிகள் புடைசூழ இருக்கும் அந்த தனி வீடும் இன்னமும் என் நினைவை விட்டு அகலவில்லை.

ai0vikram-amy-jackson

சுட்டுபோட்டாலும்  ஷங்கர் படத்தின் பெண் கதாபாத்திரங்களை என்னால் காதலிக்க  முடியாது. பாய்ஸ் ஹரிணி ஆகட்டும், அந்நியன் நந்தினி ஆகட்டும் எந்திரன் சனா ஆகட்டும். (கவனிக்க: அதன் கதாநாயகிகளை சொல்லவில்லை). அந்த வகையான போலியான பெண் பாத்திரப்படைப்பின் உச்சம் தான் “ஐ” படத்தின் “தியா”.  இந்த சூழ்நிலையில் இத்திரைப்படம் ரொமாண்டிக் ரிவஞ்/த்ரில்லர் என்பது சற்று துரதிஷ்டவசமானது. “இடைவேளைக்கு முன்னர் சைனாவில் நடக்கும் காதல் சம்பவங்களும். கதையின் முடிவில் காட்டப்படும் (க்ளைமாக்ஸ் முன்னரும் எண்டு கார்டின் போதும் வருவது) காதல் காட்சிகளும் நம்பகத்தன்மை அற்றுப்போகிறது. “ஐ” மாதிரியான காதலை முற்படுத்தப்படும் படங்களில் நம்பகத்தனையற்ற காதலும், பாத்திரப்படைப்பும், காட்சியமைப்புகளும் திரையில் ஒன்றி ரசிக்கப்படும் தன்மையை முற்றிலும் சிதைத்துவிடுகின்றன.

இந்த மாதிரி படங்களில் நாம் கொஞ்சாமாவது எமோஷனலி கனெக்ட் ஆக வேண்டும். கூனன் கதாபாத்திரம் மேல் நமக்கு நம்மை அறியாமல் பரிதாபம் வந்திருக்க வேண்டும். அதற்க்கு காரணமானவர்களை கண்டு நாம் கொதிப்படைந்து இருக்கவேண்டும். லிங்கேஸ்வரன், தியா அவர்களது காதலை நாமும்  காதலித்திருக்கவேண்டும். ஆனால் இது எதுவும் நிகழவில்லை. அந்த திரைக்கதை அதை நிகழ்த்தவில்லை. ஒரு அழகான நம்பகத்தன்மையுள்ள காதலை உள்ளே புகுத்தி எமோஷனலி கனெக்ட் ஆகும்படி கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் வடிவமைத்து இருந்தால், “ஐ” திரைப்படம் நிச்சயம் நம்மை “ஐ”ஸ் (Eyes) உள்ளேயே இன்னும் கொஞ்சநாள் “ஐ”க்கியம் ஆகியிருக்கும். மற்றபடி இதன் அசாதாரணமான உழைப்பை, பிரம்மாண்டத்தை ஒரு முறையேனும் திரையில் பார்க்காமல் நம்மால் ஒதிக்கிவிடவும் முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *