பறிக்க படா
பூக்களைப் போல்
ரசிக்கப்படா கவிதைகள்
என்னுடையது…
என்று நான் கவிதையிலேயே புலம்பிக்கொண்டு இருந்த கல்லூரிக்காலம் அது. என் கிறுக்கல்களுக்கு மத்தியில் நானே ஆச்சர்யப்படும் படியான கவிதைகள் அவ்வப்போது என்னிலிருந்து வருவதை நான் உணர்ந்தாலும், யாரேனும் அதை படித்து விட்டு நிறை/குறை சொல்லுவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். நண்பர்கள் யாருக்கும் அப்போது கவிதைகளை படிப்பதில் சுத்தமாய் ஆர்வம் இல்லை. கவிதைகள் படிப்பவர்கள் யாரும் எனக்கு அப்போது பழக்கமுமில்லை. நான் எழுதுவது கவிதை தானா? இல்லை கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனா? என்று பல முறை எனக்கு ஐயம் எழுந்ததுண்டு. எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் அந்த வலியை உணர்ந்து இருப்பர் என நினைக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் ஒரு கவிதைப்போட்டியை கேள்விப்பட்டேன். என்னை நானே பரிட்சயத்துப்பார்க்க இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் நான் கத்துக்குட்டிகளுடன் போட்டி போடவில்லை. உண்மையாலுமே கவிஞர் என்று பெயர் வாங்கியவர்களுடன். அது ஒரு பெரிய அளவில் நடத்தப்பட்ட போட்டி. சிறிது தயக்கத்துடன் என்னுடைய ஒரே ஒரு கவிதையை அந்த போட்டிக்கு அனுப்பினேன். அதுவும் என்ன காரணத்தினாலோ அந்த கவிதையின் கடைசி வரியை மட்டும் மாத்திவிட்டு அனுப்பினேன்.. “அவள் சொந்தம் இல்லை.. இருந்தும் முயற்சியுடன் நான்” என்று முடியுமாறு தான் உண்மையில் அதை எழுதி இருந்தேன்.
சிலவாரங்களில் அந்த ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. “நெய்வேலி கவிஞர்களின் கவிதை” என்ற தொகுப்பில் என்னுடைய அந்த ஒரு கவிதையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
2004ஆம் ஆண்டு ஜுலை மாதம்.
ஏதோ ஒரு நல்ல நாள்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி.
லிக்னைட் ஹால்.
அந்த கவிதை தொகுப்பில் வெளியான கவிதையின் கவிஞர்கள் அனைவரும் வயதில் மிகவும் பெரியவர்கள். நான் மட்டுமே பத்தொன்பது வயது நிரம்பிய கல்லூரி மாணவன் என்பதால் கொஞ்சம் ஓரத்தில் ஒதுங்கி மேடையில் நின்றுக்கொண்டேன். என்னையும் கவிஞனாய் மதித்து, பல பேர் முன்னிலையில், அப்போதைய கடலூர் மாவட்ட கலக்டர், மேடையில் அந்த புத்தகத்தையும், மூன்று நூறு ருபாய் தாளையும் எனக்கு பரிசாக அளித்தார். முதன் முதலாய் என் கிறுக்கல்களுக்கு கிடைத்த அங்கிகாரம் அது.
சந்தோசத்தின் உச்சத்தில் அதை வாங்கி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினேன். நண்பன் ஒருவன் “மச்சி நீ நெஜமாவே இத்தனை நாள் கவிதை தான் எழுதின போல” என்று ஆச்சர்யமாய் கேட்டான். எனது அங்கீகாரம் உறுதியானது. உடனே இன்னொருவன் “எப்போ ட்ரீட்?” என்றான். கூடவே செலவும் உறுதியானது.
அடுத்த சில நாட்களில், புத்தகப்புழுவாய் நான் ஊர்ந்துக்கொண்டு இருந்த நெய்வேலி நூலகத்திற்கு வழக்கம் போல் சென்றேன். கவிதை புத்தகப் பகுதியில், நான் மிகவும் விரும்பும் நா.முத்துக்குமார், வைரமுத்து போன்றோரில் கவிதைப்புத்தகங்களுக்கு நடுவே “நமக்கென்ன என்று” என் கவிதை பிரசுரமான அந்த கவிதைத்தொகுப்பும் இருந்ததை ஏதேச்சையாக கண்டேன். நான் காண்பது உண்மை தான் என உணர சில நிமிடங்கள் பிடித்தது….
தன்னால் ரசிக்கப்படும் கவிதையே
வாசிப்பவருக்கும் வசப்படும்
அருமை.
வாழ்த்துகள்.
சொல்ல வார்த்தை இல்லை…. மகிழ்ச்சி பொங்கியது …. வாழ்த்துகள்!!!