பத்து வருட கனவை பசித்து, முன்று வருட கடின உழைப்பை மென்று, கோடி கோடியாக பணத்தை முழுங்கி, வெளிவந்து இருக்கும் இந்த எந்திரன் எதிர்பார்ப்பை வீணடிக்காத ஒரு தந்திரன். ஹாலிவுட் தரத்திலான முதல் தமிழ் சினிமா இது. இந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். அசர வைக்கும் இயந்திர மனிதன், மிரள வைக்கும் காட்சிகள் என இயக்குனர் சங்கரின் கனவு மிகப்பிரம்மாண்டமாய் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் நிறைவேறி இருக்கிறது. ரஜினியின் இத்தனை வருட சினிமா கேரியரில் எந்திரன் ஒரு மிக முக்கியமான படம்.
விஞ்ஞானியான டாக்டர் வசிகரன் (ரஜினி) தனது பத்து வருட உழைப்பால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார். இது சாதாரணமான இயந்திரன் அல்ல. மனித மூளையை விட பன்மடங்கு சிந்திக்கக்கூடிய, பன்மடங்கு சாதுர்யமான, அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஒரு செயற்கை அறிவூட்டப்பட்ட இன்னொரு ரஜினி. இது அனைத்து மொழிகளும் பேசும், அனைத்து கலைகளும் அறிந்திருக்கும், நெருப்பில் செல்ல முடியும், தண்ணீருக்குள் நீந்த முடியும், புத்தகங்களை ஒரே நொடியில் படித்து முடிக்கவும் முடியும். இதன் பெயர் தான் சிட்டி. மனித குலத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சிட்டி அது அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதை போன்ற பல இயந்திர மனிதர்களை இந்திய ராணுவத்திற்கு செய்து தருவதே வசீகரனின் லட்சியம்.
இதே போன்று, இன்னொரு ஆராய்சிக்கூடத்தில் வசீகரனின் குருநாதர் தீய சக்திகளுக்கு வழி வகுக்கும் வழியில் அதே போன்ற இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுறுகிறார். இச்சூழ்நிலையில் வசீகரன் உருவாகிய சிட்டியின் மூலக்கருவை (நியூரல் ஸ்கீமா) திருட முயன்று அதுவும் முடியாமல் போகவே சிட்டியை பரிசோதித்து அனுமதி வழங்கும் குழுவில் இருப்பதினால் அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அதற்கு அந்த இயந்திரத்திற்கு மனித உணர்வுகளான அன்பு, பாசம் போன்றவைகள் புரியாததால் மனிதகுலத்திற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என குற்றாம் சாட்டி வசீகரனின் கனவை குலைக்கிறார்.
மனமுடைந்த வசீகரன் மீண்டும் அதை தன் ஆராய்ச்சிக்கூடத்திற்கு கூட்டி வந்து அதற்கு அனைத்து மனித உணர்வுகளையும் புரிய வைக்கிறார். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. அதுவரை வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் இயந்திரமாக செயல்பட்ட அது மனிதனை போல் சிந்திக்கவும் தொடங்குகிறது. விளைவு வசீகரனின் காதலியான சனாவிடம்(ஐஸ்வர்யாவை) அதற்கு காதல் உணர்வு வருகிறது. அதன் உணர்வுகள் வசீகரனின் கட்டுப்பாட்டை மீறி செல்வதை அறிந்ததும் கோபத்தில் அவர் சிட்டியை உடைத்து குப்பைக்கூலத்தில் தூக்கிப்போடுகிறார். விஷயம் அறிந்த வில்லன் அதை மீண்டும் இணைத்து அதன் மூலக்கூற்றை கண்டுபிடித்து அதை தீய செயல்கள் புரிய ப்ரோக்ராம் மூலம் மாற்றியமைக்கிறார். அது சானா மீது வெறித்தனமான காதலில் மீண்டும் எழுகிறது. உலகத்தை அழிக்கவும் அது முற்படுகிறது. ஆனால் இம்முறை யாருக்கும் கட்டுப்படாத இயந்திரமனிதனாய்….
இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரம் சிட்டி என்கிற இயந்திர மனிதனே. இதில் ஹீரோவும் அதுதான், காமடியனும் அதுதான், கடைசியில் வில்லனும் அதுதான். ஒரு ரஜினியை திரையில் கண்டாலே ரசிகர்களின் ஆராவாரத்திற்கு அளவு இருக்காது அதவும் நூற்றுக்கணக்கான ரஜினியென்றால்? சொல்லவா வேண்டும் தீபாவளிதான். ரோபோவே ஜொள்ளும் அளவிற்கு பொருத்தமான அழகி ஐஸ்வர்யா ராய்தான் என்பது படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும். முப்பத்தி ஏழு வயது மதிக்கத்தக்க திருமணமான ஒரு பெண்மணியை ஹீரோயினாக நம் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அது இவர் மட்டும் தான். இப்படத்தில் கொள்ளை அழகு (மேக் அப் உதவியுடன்). இந்த படத்தில் சந்தானமும், கருணாசும் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து நகைச்சுவை செய்ய முயல்கிறார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அதுவும் அவர்களின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு துளியும் ஒட்டவில்லை என்பதே அதற்கு காரணம். இரண்டு பேருமே “அட நம்ம இவ்வளவு பெரிய படத்துல நடிக்கிறோமா” என்ற ஆச்சர்யத்தையும், பயத்தையும் முகத்தில் சுமந்தவாரே படம் முழுக்க வருவது போல் தோற்றம் அளிக்கின்றனர்.
முற்பகுதிகளில் சிட்டி ரோபோ செய்யும் சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவிற்கு விறுவிறுப்பு. அந்த ரயிலில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், நெருப்பில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதில் ஆகட்டும் கண்டிப்பாக இந்தியாவின் சூப்பர் மேன் சிட்டி தான். ஆங்கில படத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த மாதிரி காட்சிகள் தமிழ் படத்தில் காணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. முக்கியமாக சிட்டி பிரசவம் பார்க்கும் அந்த காட்சியை காணும்போது அனைவருக்கும் கண்டிப்பாக சிலிர்த்துவிடும். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை போல் இந்த சிட்டியையும் பல படங்களில் தொடர்ந்து இந்திய சினிமாவில் எடுக்கும் அளவிற்கு ஸ்கோப் இருக்கிறது. ஷங்கருக்கு இந்த யோசனை இருக்கிறதா என்று தெரியவில்லை.
அதே மாதிரி ரஜினியை தவிர வேறு யாராலும் இந்த படத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியாது. ரோபோவாக நம்ம ஊர் நடிகர்களை நாம் திரையில் ஏற்றுக்கொள்ள தவறினால் முழு படமுமே எள்ளி நகைக்கக் கூடியதாகிவிடும் சூழ்நிலை இருக்கிறது. ரஜினி கணக்கச்சிதமாக இயந்திர மனிதனாக இதில் பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பகுதியில் வரும் அந்த வில்லத்தனமான இயந்திரனின் சிரிப்பும், ஆடு மாதிரி கத்திக்கொண்டே நடந்து வரும் தோரணையும் ரஜினியை பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் கூட அவருக்கு தீவிர ரசிகனாகியே தீரவேண்டும். ஸ்டைல் எதுவும் இல்லமால் தன் நடிப்பை வெளிக்கொண்டு வர நல்ல படமாக இது அமைந்துள்ளது. ரஜினியை ரோபோவாக முற்றிலும் நம்பும்படியாகவும் கொஞ்சமும் இம்மி பிசகாமல் இப்படத்தை உருவாக்கிய விதத்தில் இயக்குனர் ஷங்கரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயர் கண்டிப்பாக எந்திரன் அவருக்கு பெற்றுக்கொடுக்கும்.
ஒரு விஞ்ஞான அறிவுள்ளவன் அனைவருக்கும் புரியும்படியாக கதை சொல்ல முடியாது. அதே போல் ஒரு படைப்பாளியால் விஞ்ஞானியை போல் டெக்னிக்கல் வார்த்தை அறிந்திருக்க முடியாது. ஆனால் இரண்டையும் கையாளக்கூடிய திறமை படைத்த ஒரே லோக்கல் சரக்கு சுஜாதா மட்டும் தான். அவரில்லாமல் இந்தப்படம் கண்டிப்பாக இந்த அளவிற்கு சாத்தியப்பட்டு இருந்துருக்காது. இந்த கதையின் மூலக்கருவே மறைந்த சுஜாதாவின் ஒரு பழைய சிறுகதையின் தாக்கத்தால் உருவானதே என எங்கோ படித்தாய் ஞாபகம்.
படத்தின் வசனங்களில் நிறைய இடத்தில், சுஜாதா தான் இறந்தாலும் தன் எழுத்திற்கு அழிவில்லை என்று ஞாபகப்படுத்துகிறார். சந்தானமும், கருணாசும் சிட்டி ரோபோவிடம் “எங்களுக்கு மட்டுமே இருக்கும் ஒன்று உனக்கு இல்லை” என்று அதை உசுப்பேற்றிவிட. அது வசீகரனிடம் சென்று “அது என்ன எனக்கு மட்டும் இல்லை” என்று அம்மாஞ்சியாய் கேட்பது போன்ற நையாண்டி வசனமும். இன்னொரு காட்சியில் மனிதர்களிடம் மட்டுமே இருப்பது போட்டி, பொறாமை, வஞ்சகம், துரோகம் போன்ற உணர்வுகள்தான் என்ற வசனமும் ஹய்லைட். கொசுவிடம் பேசும் அந்த காட்சிகளும் சுஜாதாவின் கைவன்னம்தான்.
பின்னணி இசையில் ஏ.ஆர் ரகுமானுக்கு சரியான தீனி இந்த படத்தில் கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் வருவது போன்ற பின்னணி இசை இந்திய மண்ணில் இவரை தவிர வேறு யாராலும் தரமுடியாது. அட ஹாலிவுட்காரனுங்களுக்கே இவர் மியூசிக் போட போய்ட்டார் அப்புறம் என்ன ஹாலிவூட் போன்ற பின்னணி என்ற அடைமொழி?!!! சும்மா சொல்லக்கூடாது க்ளைமாக்சில் கலக்கிவிட்டார் மனுஷன். அரிமா அரிமா பாடலில் வரும் “எந்திரா எந்திரா” பிட் தான் இனிமேல் அலாரம் டோனாக வைக்கப் போகிறேன். எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் “எந்திரா… எந்திரா,,,” என்று உச்சக்குரலில் கத்தி எழுப்பி விடும் ஒரு பாடல்.
ஆஸ்கார் விருது பெற்ற ராசூல் பூக்குட்டி இத்திரைப்படத்திற்கு அதே உலகத்தரமான ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்துள்ளார். அது படத்தை பார்த்தால் தான் உணர முடியும். ஒளிபதிவாளர் ரத்தினவேலு அபாரம். கிளிமாஞ்சரோ பாடலையும், காதல் அணுக்கள் பாடலையும் திரையில் காணும்போது கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. கொள்ளையழகாய் தன் காமிராவில் படம்பிடித்து இறக்கிறார். சாபு சிரிலின் கலையும் அப்படியே. படத்தில் எந்த இடத்திலும் கிராபிக்ஸ் எது? செட் எது? என்றே கண்டுபிடிக்க முடியாது.
இப்படி படம் நெடுக பல பெருமைகள் இருந்தாலும் படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. என்னதான் மாதக்கனுக்குல பரீட்சைக்கு படிச்சிட்டு போனாலும் சில கேள்விகளுக்கு சொதப்புவது இல்லையா அது போல தான். லஞ்சம், அரசியல் போன்று தான் தொன்று தொற்று பின்பற்றும் பார்முலாவை இந்த படத்தில் விட்டுவிட்டு வந்தாலும் ரஜினி இருக்கும் தைரியத்தில் கதையிலும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார் போலும். கதைக்களம் நமக்கு புதியதாய் இருந்தாலும் கதை அரதப்பழசுதான். முக்கோண காதல் கதை. கடைசியில் உண்மையான காதலர்களே சேருகிறார்கள். இந்த படத்திற்கான ரோபோ என்ற கருவை வைத்து படத்தின் கதையில் பூந்து விளையாட வாய்ப்புகள் இருந்தும் ஒரு இந்தியக்கதையை ஆங்கில படத்திற்கு இணையான தரத்தில் சொல்ல மட்டுமே முயன்று இருக்கிறார் இயக்குனர்.
சில இடங்களில் காட்சிகோர்வைகள் இல்லை. இன்னும் சில இடங்களில் டீடைல்ஸ் பத்தவில்லை. பாமரனுக்கு புரியாது என்று விட்டு விட்டார்களோ என்னவோ. எனக்கு க்ளைமாக்சை காணும்போது ராமநாரயனின் “குட்டி பிசாசு” ட்ரைலரை பார்த்த நியாபகம் தான் வந்தது. (படம் பார்க்கவில்லை). கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக சிந்தித்து கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம். கிராபிக்ஸ் பண்ணிக்காலம் என்ற நம்பிக்கையில் அதை பற்றி கவலைப்படவில்லை போலும். ஆங்கிலப்படங்களை அவ்வளவாக கண்டிராதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கிளைமாக்ஸ் பிரமிக்க வைத்து இருந்து இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நீண்டு போய் தொய்வை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் குறைகள் என்பதை விட படத்தை மேலும் மெருகேற்றகிடைத்த வாய்புகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் எந்திரன் தலையில் தூக்கிவைத்து கொண்டாடவேண்டிய ஒரு படம். தமிழ் படமாயிற்றே… இங்கே இருந்து இவ்வளவு தூரம் பண்ணி இருப்பது சும்மாவா?
இந்த திரைப்படத்தில் சங்கர் சொல்லவந்த விஷயம் இது தான், வஞ்சகம், துரோகம், பழிவாங்குதல் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்களை விட்டொழிந்து வாழ வேண்டும். அது மட்டுமில்லாமல் வசீகரன் தனக்கு துரோகம் செய்துவிட்ட சிட்டியை வெட்டி உடைக்கும் போது “எனக்கு வாழனும் டாக்டர், நான் சனாவை காதலிக்கிறேன்னு” கெஞ்சும்போதும். க்ளைமாக்சில் சிட்டி தன்னை தானே ஒவ்வொரு பாகமாய் கழட்டி உயிர்துறக்கும் சீனும் கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் பாரத்தை ஏற்படுத்துவான் இந்த எந்திரன்.
இந்த படத்தில் இயக்குனர் சங்கருக்கே தெரியாமல் இன்னொரு மெசேஜ் இருக்கிறது. அது என்னவென்றால், எப்பேர்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பெண்ணை மட்டும் காதலிக்க ஆரம்பித்தால் கடைசியில் அவனுக்கு நிச்சயம் சங்கு தான். அது ரோபோவாக இருந்தாலும் சரி. பூம் பூம் ரோபோடா…..
பே…..
I accept movie is an entertainer.But the CG works are unrealistic(the way it was rendered) when compared to hollywood movies.There is no logic in the many scenes.
Any way thumbs up for shankar for his brave attempt.
மெசேஜ் மெசேஜ் மெசேஜ்
அருண்… க்ளைமாக்சில் மட்டும் தான் கிராபிக்ஸ் வேலைகள் சில இடங்களில் தெரியும். லாஜிக்கலாம் ஹாலிவுட் படங்களிலும் கிடையாது. நம்பும்படி சொல்வதில் தான் இயக்குனரின் திறமை இருக்கிறது. சில இடங்களில் அது நீங்கள் சொன்ன மாதிரி நிச்சயம் மிஸ்ஸிங்…
//”ரஜினியை ரோபோவாக முற்றிலும் நம்பும்படியாகவும் கொஞ்சமும் இம்மி பிசகாமல் இப்படத்தை உருவாக்கிய விதத்தில் இயக்குனர் ஷங்கரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயர் கண்டிப்பாக எந்திரன் அவருக்கு பெற்றுக்கொடுக்கும்.”//
GREAT LINES ABT FILM
தலைவா…..
நல்லா அடிச்சு வெளையாடி இருக்கீங்க…. விமர்சனம் ரொம்ப விரிவா இருக்கு…
படமும் பாக்ஸ் ஆஃபீஸ்ல பட்டையை கெளப்பிட்டு இருக்கு….
Rajani movie has always punch dialogue, style like putting gum in his mouth, Cigar smoking etc. But Rajani didn’t do all these styles in this movie .Shankar wanted Rajani’s acting in this movie NOT Styles and punch dialogues like asusual Rajani movies. But Shanker directed “SIVAJI” asusual Rajini movie. Last Scenes of ENTHIRAN movie is unrealistic. Overall Rajani delivered good acting in this movie with Shanker’s direction. Shanker copied some of the scenes and concepts for this movie from Will Smith’s I,Robot movie released in 2004.
Super star super star than..
Nice film
சூப்பர் படம். நானும் இந்த படத்தை அடுத்த வாரம் பார்க்க போறேன். படம் பார்த்துவிட்டு இங்கே விமர்சனம் எழுதுகிறேன். நன்றி பிரவீன்.
ஹாய் பிரவீன், இந்த விமர்சனத்தின் மூலம் கதையின் தன்மையை உணரமுடிகிறது. ஆனால் ரஜினியின் வில்லத்தனத்தை திரைஅரங்கில் மட்டுமே காணவேண்டும்…
tamil
“கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக சிந்தித்து கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம்”
படம் பார்த்தேன். மிகவும் அருமை. கிளைமாக்ஸில் சில இடங்களில் கிராபிக்ஸ் நன்றாக தெரிகிறது. மத்தபடி படம் சுப்பெரோ சுப்பர்.
அருமை,..ஆனால் இவ்வளவு நெடிய பக்கம் தேவையா…
நன்றி சிவா. இப்போ இது நீண்ட பக்கமாக தெரிகிறது. படம் வந்த பொது இதுதானே ஹாட் டாபிக் 🙂