2004ஆம் வருடம். நெய்வேலி நூலகத்திலே புத்தகப்புழுவாய் நான் வாழ்ந்துகொண்டு இருந்த காலம் அது. இயக்குனர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி வெளிவந்து ஓடிக்கொண்டு இருந்த அந்த நேரத்தில் அவர் எழுதிய தொடர் ஒன்று விகடனில் வெளியாவதை அறிந்ததும் அதை தேடி அலைந்தேன். அச்சமயத்தில் நான் மிகவும் பிரம்மித்து ரசித்த நபர் அவர். இன்னுமும் என் வாழ்நாளில் நான் சந்திக்க நினைக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அதை பற்றி தனி பதிவாகவே எழுத பிறகு உத்தேசம்.
அப்போது ஆனந்த விகடன் வாங்கும் அளவுக்கு கூட சில சமயம் என் பாக்கட்டில் காசு இருக்காது. மதியம் கல்லூரி முடிந்ததும் உணவு கூட உண்ணாமல் நூலகத்திற்கு சென்று வார வாரம் அந்த தொடரை படித்துக்கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததா என்று என்னால் இப்போது சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் அது நிச்சயம் அப்போதையகனவிற்கு ஒரு துளியேனும் உயிர் பாய்ச்சி இருக்கிறது என்பதை இன்றும் என்னால் உணர முடிகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு அதை இணையத்தின் காணக் கிடைத்தேன். காதல், எதிர்பார்ப்பு, இயலாமை, லட்சியம், ஏமாற்றம், வெற்றி என அனைத்தையும் அலசுகிறது அது. இதோ நீங்களும் கனா கானுங்கள்!
ஹாய், நான் செல்வராகவன்… சுருக்கமாக செல்வா!
விகடனில் எழுத ஒரு வாய்ப்பு என்றதும் எனக்குள் ஒரு சிலிர்ப்பு. கனவுப் பத்திரிகையில் கை பதிக்கப் போகிறோமா என்று பிரமிப்பு. விகடனின் வாசகர்களில் ஒருவன் நான். தெலுங்கு உட்பட நான்கு படங்கள் இயக்கியவன். ரகளையான இளைஞர் கூட்டத்துக்கு நடுவே இருபத்துநாலு மணி நேரமும் இருந்த சென்னைப் பையன். உள்ளதை, உணர்ந்ததை உங்களுடன் பேச வருகிறேன்… ஒரு சராசரி இளைஞனாக!
வடபழனி முருகன் கோயிலில், பாவாடை தாவணி யில் பூஜைக் கூடையுடன் வந்து நின்று, சிணுங்குகிற செல்போனில் சிநேகிதனை அழைத்து, ‘‘மம்மியோட கோயிலுக்கு வந்திருக்கேன். அஞ்சு நிமிஷத்துல வந்தேனா, நீ அடிக்கடி கேப்பியே… அந்த ‘ஹோம்லி லுக்’ல என்னைப் பாக்கலாம். மவனே, சான்ஸை விட்டே, என்னிக்கு எனக்கு எவன்கூட கல்யாணமோ, அன்னிக்குதான் புடவை கட்றதா ஐடியா வெச்சிருக் கேன்!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘தோ வந்துட்டேன் மம்மி!’’ என்று பிராகாரத்தில் ஓடுகிற பேரழகுப் பிசாசு ஒன்றைப் போன வாரம் பார்த்தேன். இதுதான் இன்றைய ‘யூத்’ உலகம்!
கண்களில் பல்பு முளைக்கும். இதயம் இடம் மாறித் துடிக்கும். அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். ஒரே நேரத்தில் ஞாபக சக்தியும் ஞாபக மறதியும் அதிகரிக்கும்… அது இதுவென ‘காதல்’ பற்றி எக்கச்சக்கமாக எழுதி, படித்து, கேட்டு, பார்த்துப் பழகிவிட்ட தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு புதுசா என்ன சொல்ல இருக்கிறது?
இதோ, கனா காணும் காலங்களுக்குள் போகலாமா?
‘‘ஹலோ!’’
‘‘ஹலோ… அய்யே… நீயா?’’
‘‘ஏன்… ஐஸ்வர்யா ராய்க்கு வெயிட் பண்ணிட்டிருந்தியா?’’
‘‘சீச்சீ! உன்னைப் பார்த்தப்புறம் ‘என் வாழ்க்கையில நல்ல விஷயங்களே இனி நடக்க வாய்ப்பில்லை’னு தெரிஞ்சுபோச்சே?’’
‘‘பொறுக்கி நாயே!’’
‘‘தாங்க் யூ! சரி… சொல்லு, என்ன புரோகிராம்?’’
‘‘நான் ஃப்ரீதான். எங்கயாவது மீட் பண்ணுவோமா..?’’
‘‘ம்… பண்ணலாமே. நீயே சொல்லு! எங்கே போகலாம்… பீச்?’’
‘‘ஐயோ… பீச் வேணாம். ரிஸ்க். சுனாமி வருதுன்றாங்க…’’
‘‘ம்ம்ம்… தியேட்டர்?’’
‘‘நான் மாட்டேம்ப்பா! நீ மணிரத்னம் பட ரேஞ்சுக்கு எல்லா ஸீனும் இருட்டா இருக்கிற மாதிரி படத்துக்குக் கூப்பிடுவே. நோ சான்ஸ்!’’
‘‘அப்ப நீயே சொல்லு..! எங்க போலாம்?’’
‘‘நீ சொல்லேன்!’’
‘‘கொஞ்சம் ‘லாங்’கா போலாமா?’’
‘‘கொஞ்சம் ‘லாங்’னா..?’’
‘‘மகாபலிபுரம்! பல்லவர் காலச் சிற்பங்கள் நிறைய இருக்காம். நான்தான் இன்னும் முழுசா பார்த்ததே இல்லியே!’’
‘‘உதை வாங்குவே! வாட் அபௌட் ஸ்பென்சர்ஸ்?’’
‘‘ஊர்ல பாதிப் பேரு அங்கதான் இருப்பானுங்க. அவனுங்க ஓசிக்கு ஜொள்ளுவிட, நான் ஆளு கூட்டிட்டுப் போணுமா?’’
‘‘தோடா! யாராச்சும் பாத்துருவாங்களோனு உனக்குப் பயம். அதைச் சொல்லு!’’
‘‘ய்யே, எங்கப்பா வர்றாரு, நான் அப்புறம் பேசறேன்.’’
‘‘இதெல்லாம் பொண்ணுங்க பேச வேண்டிய டயலாக். போடாங்…’’
எதிர்முனை போன் கோபத்துடன் அறைந்து வைக்கப்பட… திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்.
செல்போனை எடுக்கிறான் இவன். இது வேறு ஏரியா…
‘‘ஹாய்..! குட்மார்னிங்டா!’’
‘‘வணக்கம் தமிழகமே! என்ன பூஜா, காலைலயே போன்!’’
‘‘இன்னிக்கு சன்டே இல்லியா! உன் ஞாபகம் வந்துச்சு. சரி, என்ன பண்றே?’’
‘‘இப்போதான் எழுந்தேன். பல்லு விளக்கலாமா, வேணாமானு யோசிச்சிட்டிருக்கேன்.’’
‘‘விட்டா, பாப்பையாவைக் கூப்பிட்டுப் பட்டிமன்றமே நடத்துவேடா… அழுக்கா! மணி ஒன்பதரைடா!’’
‘‘நைட் லேட்டாயிருச்சு!’’
‘‘டாய், என்னை விட்டுட்டு நைட் ஷோவா?’’
‘‘சொன்னா நம்ப மாட்டே, எக்ஸாம் நெருங்குதேனு புக்கைக் கையில எடுத்தேன்.’’
‘‘என்னது..? இரு இரு. சன், ஸ்டார்னு எதிலாச்சும் ஃப்ளாஷ் நியூஸ் வருதானு பார்க்கிறேன்.’’
‘‘ரொம்ப வாராத! ‘அட் எ ஸ்ட்ரெட்ச்’ படிச்சுடலாம்னு தோணுச்சு. அப்படியே உட்கார்ந்துட்டேன். பாவம் எங்கப்பா, டீயெல்லாம் போட்டுத் தந்தார்…’’
‘‘நம்பறேன், சரி… அதெல்லாம் போகட்டும். இன்னிக்கு என்ன பண்ணப் போறே..?’’
‘‘ம்… கிரிக்கெட் ஆடலாம்னு…’’
‘‘ஈவ்னிங்..?’’
‘‘ஷாப்பிங் போலாம்னு அம்மா பேசிட்டு இருந்தாங்க..!’’
‘‘ஹலோ பையா! அந்த இளம் ஜோடிகளை ஷாப்பிங் அனுப்பு. நீ கிளம்பி வா!’’
‘‘ம்ம்ம்… காபி ஷாப்?’’
‘‘ப்ச்..! அங்க இருக்க அத்தனை பேருக்கும் நம்ம ஜாதகமே தெரிஞ்சிருக்கும். அவ்ளோ பேசிட்டோம். வேற ஏதாவது இடம் சொல்லு!’’
‘‘ஒண்ணு பண்ணு! அப்படியே கிளம்பி இங்க எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வந்துடு.’’
‘‘அப்படிங்கிறே…’’
‘‘அப்படித்தான். என்ன ஒண்ணு! நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா டிரெஸ் மாட்டிட்டு வா! ஏற்கெனவே எங்க தாத்தாவுக்கு ரெண்டு அட்டாக் வந்துருச்சு!’’
‘‘குட் ஜோக்! சரி, சிம்ரன்ட்ட சொல்லி, எனக்கு ஃபிரைட் ரைஸ் ரெடி பண்ணச் சொல்லேன்.’’
‘‘எதிர்கால மாமியாருக்கு நிகழ் காலத்திலேயே மரியாதை தர மாட்றியேடீ!’’
‘‘நேர்ல வர்றப்போ பாரு, ‘ஆஷ்ரம் போயிருந்தோம். உங்களுக்காக மதர் போட்டோ வாங்கிட்டு வந்தேன்’னு சொல்லி, உங்கம்மாவை எப்படிக் கவுக்கறேன்னு!’’
இன்றைய இளைஞர் உலகம் படு வேகம். இன்னும் சொல்லப்போனால், சினிமாவில் காட்டுவதெல்லாம் பித்தலாட்டம்!
சென்னை மாதிரி ஒரு நகரத்தில் இந்த இரண்டு டைப் தொலைபேசி உரையாடல்களும் சகஜம். இரண்டு ஜோடிகளுமே காதல் வசப்பட்டவர்கள். இரண்டுமே மிடில் கிளாஸ் குடும்பங்கள். இதில் முதல் ஜோடியை விட, இரண்டாம் ஜோடிக்கே இளமைத் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்பு பிரகாசம்!
‘முதல் ஜோடி ஏன் ஜெயிக்காது..?’ என்று குறுக்கே சில குரல்கள் கேட்கின்றன. விஷயம் இதுதான். அவர்களுக்குள் இருப்பது காதல் அல்ல. அது வயசும் மனசும் நடத்துகிற இளமைக் குறும்பு. மனதில் தயக்கமும் கண்களில் பயமும் வயசுக் குறுகுறுப்புமாக இவர்களிடம் இருப்பதெல்லாம் ஜஸ்ட் ‘ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷன்’!
தான் செய்வது தவறு என்ற பதற்றம் இருப்பதால், யார் கண்ணிலும் படாமல் ஓடி ஒளிந்து தொடுகிற ஆசையில்தான் நகர்கிறது அவர்களின் உறவு. அப்பா அருகே வந்தால்கூட தொலைபேசியை விட்டுவிட்டு ஓடுகிற ஒருவனால், காதலைக் கம்பீரமாகச் சொல்ல முடியாது!
அதே நேரத்தில் இரண்டாம் ஜோடி, மிக இயல்பானவர்கள். ஒருவர் குடும்பத்துக்குள் மற்றொருவர் போய் வருகிற அளவு பக்குவப்பட்டவர்கள். பெற்றோரிடம் எதையும் கலந்துபேச முடிகிற வரம் பெற்றவர்கள். நட்பு, காதல் என எல்லாவற்றையும் கைப்பிடித்துக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவதே இவர்களின் சிறப்பு. இருந்தாலும், விதிகளுக்கு உட்பட்டு விளையாடும் ஆட்டம் அல்ல காதல்!
முதல் ஜோடியில் அந்தப் பையன், தான் நேசிக்கும் பெண்ணுக் காக, எதையும் செய்யத் துணிந்தவனாக நாளையே மாறக்கூடும். ‘வீடாவது, ஒண்ணாவது… நம் எதிர்காலம்தான் முக்கியம்’என்று முடிவெடுத்து, காதலில் ஜெயிக்கிற வித்தை கற்கலாம். எங்காவது ஒரு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் திருமணம் முடிக்கலாம். எம்.ஜி.ஆர். நகரின் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாழ்க்கையைத் துவங்கலாம்.
சொல்லப்போனால் எல்லாக் காதலும் ஜெயிக்கலாம். ஜெயிக்க முடியும். இந்த உலகத்தில் ‘காதல் தோல்வி’ என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய முடியும். அது பெரிய வித்தை அல்ல!
என் நண்பர்கள் இருவரின் கதைகளை…
சென்னை – சில வருடங்களுக்கு முன்பு… பிரபல இன்ஜினீயரிங் கல்லூரி… லஞ்ச் டைம்…
‘‘எக்ஸ்கியூஸ்மீ காயத்ரி! உன்கிட்டே ஒரு விஷயம்…’’
‘‘ஸாரி, என்கிட்டே காசு இல்லே!’’
‘‘ச்சே… அது இல்லே காயூ! நீ இன்னிக்கு கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கே! அதான் தைரியமா சொல்லிடலாம்னு…’’
‘‘ய்யே என்னா? பில்ட்–அப் பெரிசா இருக்கு..?’’
‘‘ப்ளீஸ்! நான் சொல்றத டென்ஷன் ஆகாமக் கேளேன்! உன்னை முதன் முதலா பார்த்தப்போ நீ ஸ்கை ப்ளூ கலர்ல சுடிதார் போட்டிருந்தே, துப்பட்டானு ஒண்ணு மட்டும் கண்டுபிடிக்கலேன்னா உலகத்தில் நிறைய ஆக்ஸி டென்ட்ஸ் நடந்திருக்கும்னு அன்னிக்குதான் தோணுச்சு…’’
‘‘பிரகாஷ்… உன் லிமிட்ஸ் கிராஸ் பண்றே!’’
‘‘இல்ல காயூ! இந்த ரெண்டு வருஷமா மனசுல வெச்சுக்கிட்டு சாவறேன். இதுக்கு மேல என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. பைத்தியம் பிடிச்சுடும்…’’
‘‘டாய், நீ என்னென்னவோ உளர்ற… நிஜமாவே அடி வாங்கப் போறே! ’’
‘‘அதான் காயூ, இப்பிடி வாழ்க்கையில நான் என்னென் னமோ வாங்கப்போறேன். அப்பிடியே உனக்கு ஒரு தாலியும் வாங்கிடட்டுமா?’’
‘‘வ்வாட்?’’
‘‘ஓபனாவே சொல்றேன் காயூ! ஐ லவ் யூ! ப்ளீஸ்… தயவுசெஞ்சு, ‘யூ ஆர் ஜஸ்ட் எஃபிரெண்ட்’னு சொல்லிடாத! நீ யெஸ் சொல்றமாதிரி எவ்வ ளவோ நாள் கனவு கண்டிருக் கேன். என் ஃப்யூச்சரே உன் கையிலதான் இருக்கு. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை.’’
காயத்ரி பிரகாஷைக் குறுகுறுவெனப் பார்க்கிறாள்.
‘‘என்ன காயூ… அப்படிப் பார்க்கிறே?’’
‘‘ம்ம்ம்… உன்னை என்ன பண்றதுனு யோசிக்கிறேன்.’’
‘‘செருப்பைக் கழட்டி அடி. பிரின்சிபால்ட்ட கம்ப்ளெயிண்ட் குடு. உங்க அண்ணனுங்ககிட்ட சொல்லி என் கையைக் காலை ஒடி… இல்லேன்னா என்னை லவ் பண்ணேன் ப்ளீஸ்!’’
காயத்ரி சிரிக்கிறாள்.
‘‘உன்னைப் பிடிக்கும் பிரகாஷ். ஐ லைக் யூ. ஆனா, அது லவ் இல்ல.’’
‘‘கொஞ்சம் ட்ரை பண்ணு காயூ! ‘லைக்’ கண்டிப்பா ‘லவ்’வாகிடும்…’’
‘‘ஓகே. பார்க்கலாம்! அதுசரி, ஏண்டா இப்படித்தான் ப்ரப்போஸ் பண்றதா… இவ்ளோ கூட்டத்துக்கு நடுவுல..?’’
‘‘ஹி… ஹி..! நம்ம சுந்தர்தான் இப்படிப் பப்ளிக்ல ‘லவ் யூ’ சொன்னா சேஃப்டியா இருக்கும்னான்.’’
‘‘அச்சச்சோ… அவனுக்கு வேற இது தெரியுமா? என்னை காதலிக்கிற விஷயத்தை என்கிட்டேதானே முதல்ல சொல்லணும். எப்படி அவன்கிட்டே சொன்னே?’’
‘‘இல்ல! சுந்தர்கிட்ட நானா சொல்லல. அன்னிக்கு தாமஸ் எல்லாருக்கும் பார்ட்டி குடுத்தான். அங்கதான் கொஞ்சம் மப்புல உளறிட்டேன்…’’
‘‘அடப்பாவி… உங்க கேங்குக்கே இந்த விஷயம் தெரியுமா? உன்னை…’’
காயூ துரத்த, பிரகாஷ் ஓட, ‘ஆஹா, மேட்டர் ஹிட்டு!’ எனக் காத்திருந்த கூட்டம் கொண்டாட, மொட்டை வெயிலடிக்கிற ஒரு மட்ட மத்தியானத்தில், ஒரு காதல் பைக் டாப் கியரில் கிளம்பியது!
இரண்டே மாதம்தான். போனிலும் நேரிலும் கெஞ்சியே ஒப்புக்கொள்ள வைத்தான். வீட்டில் திருடி மோதிரமும் சுடிதாரும் பிறந்த நாள் பரிசாகத் தந்தான், உருகி உருகி எழுதிய க்ரீட்டிங் கார்டுடன். அவன் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. அவள் கரைந்து, அந்த வார்த்தைகளைச் சொன்னாள்… ‘பிரகாஷ், ஐ லவ் யூ!’
நண்பர்கள் இருபக்கமும் உரம் போட்டார்கள். கடலை, கடலலை என வளர்ந்தது. இரு வீட்டுப் போன்களிலும் வெளியாட்கள் என்கேஜ்ட்டோன் நிறையக் கேட்டார்கள். விஷயம் இரு வீட்டுக்கும் தெரியவந்தபோது, கடுமையான எதிர்ப்பு. நண்பர்கள்தான் அந்த ஐடியாவைக் கொடுத்தனர். ‘‘காயத்ரி மேஜர்! இனிமே நீ எதுக்கும் கவலைப்படாதே! ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிரலாம். தாலி கட்டிட்டு போய் காலில் விழுந்தா தாம்தூம்னு குதிச்சுட்டு ரெண்டு வீட்லயும் அக்செப்ட் பண்ணிருவாங்க!’’ என்று ஏற்பாடுகளைக் கவனித்தார்கள். காதல் முன் பி.இ. தோற்றுப்போனது.
நண்பர்கள் பர்ஸ் திறந்தார்கள். காயத்ரியும் பிரகாஷ§ம் வாடகைக்கு வீடு பிடித்தார்கள். ஷாப்பிங் போனார்கள். தாலி தேர்ந்தெடுத்தார்கள். பாத்திரங்கள் வாங்கினார்கள். பட்டுச்சேலை எடுத்தார்கள். ஃபர்ஸ்ட் வேட்டி, அதுவும் பட்டு வேட்டி வாங்கினார்கள். ப்ளவுஸ், பிரா, பேண்டீஸ் வரை வாங்கக் கூடவே இருந்தான் பிரகாஷ். எதற்கும் இருக்கட்டும் என்று சானிட்டரி நாப்கின் ஒரு பாக்கெட் வாங்கி பையில் திணித்தாள் காயத்ரி. பெண்களை வாசனையாகவே, அழகாகவே பார்த்துப் பழகிய பையன், முதன்முதலாகத் தன் காதலியின் தேவைகளைச் சேகரித்தபோது பெருமிதமாக உணர்ந்தான்.
டிரைவ்-இன்னில் ஓரமாக அமர்ந் தார்கள். ‘‘மாசம் பத்தாயிரம் ரூபா இருந்தாப் போதும். ஆனா அதுக்கு எங்கே போறது?’’ ஆரம்பித்தது காயத்ரி.
‘‘அதெல்லாம் பிரச்னையே இல்லை. ஒரே வாரத்திலே பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிடுவேன். டோண்ட் ஒர்ரி,ஃபிரெண்ட்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க.’’
‘‘ஏன் பிரகாஷ், நானும் வேலைக்குப் போகட்டா?’’
‘‘சேச்சே! உன்னைக் கஷ்டப் படுத்தவா கல்யாணம் பண்றேன்?’’
‘‘இல்ல பிரகாஷ், ஏதாவது நர்சரி ஸ்கூல் டீச்சர் மாதிரியாவது போகணும். ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா வரும்ல. உனக்கும் கொஞ்ச நாள் ஹெல்ப்பா இருக்கும்.’’
‘‘என்னம்மா, வீட்டுப்பக்கம் நம்மைச் சேர்த்துக்க மாட்டாங்கனு முடிவே பண்ணிட்டியா?’’
‘‘பின்னே, ஆரத்தி கரைச்சி வெச்சு காத்திருப்பாங்கனு கனவு காண்றியா?’’
‘‘இல்ல, சுமாரான ஒரு பொண்ணுக்கு இவ்ளோ அழகான பையன் கிடைச்சிருக்கான்னு ஒரு வேளை..’’
‘‘டாய்ய்ய்!’’ எதிர்காலம் மறந்து சிரித்தார்கள்.
பதிவுத் திருமணம். மாலைகள் வாங்கி வந்த நண்பர்கள் சாட்சிக் கையெழுத்துப் போடும்போது, கண்கள் பனித்தார்கள். ஒவ்வொருவர் பால்பாயிண்ட் பேனாவைப் பிடித்து கையெழுத்திடும்போது, விளக்கேற்றும் மெழுகுவத்தி போல ஃபீல் பண்ணினார்கள். ஆட்டோ ஃபோகஸ் கேமராவில் அந்த சரித்திரம் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸில் பதிவானது.
புறாக்கூண்டு வீடு. இருவருக்கு அது போதுமே! (‘ரெண்டு பேருக்கு இது ஜாஸ்தி. உன்னை நான் சுமப்பேனே……. என் உள்ளங் கையிலே’, ‘ச்சீ! ராஸ்கல்!’) சுகத்துக்கு முன்னால் சுவரின் எல்லைகள் பெரிதாகத் தெரியவில்லை.
திகட்டத் திகட்ட சந்தோஷம் கைக்குள் எட்ட… ஒரு வாரம் கடந்தது. இரண்டு குடும்பமும் இடிந்து நொறுங்கின. இருவரையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. காயத்ரியின் குடும்பம் இரண்டே வாரங்களில் வேறு வீட்டுக்குக் குடிபுகுந்த செய்தியும் வந்தது.
வேலை தேடும் வேலையில் இறங்கினான் பிரகாஷ். நண்பர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கவனிக்கப் போய்விட்டார்கள். ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்த ஆரம்பித்தார்கள். போனில் இவர்கள் குரல் கேட்டால் நண்பர்கள் ‘ராங் நம்பர்’ என்றார்கள்.
‘இல்லானை, இல்லாளும் வேண்டாள்’. காதல் கணவன் கசந்து போனான். ஆசை மனைவி அரக்கியானாள்.
பிரகாஷை நான் பாரிமுனைப் பக்கம் கேசட் விற்கும் கடையில் பார்த்தேன். ‘செல்வா… பெரிய டைரக்டராகிட்டே!’ என்றான் காசெட்டின் மேல் விழும் தூசியைத் தட்டியபடி. ‘இருக்கேன் ஏதோ’ என்றான். நிறையக் குடிப்பான் போலத் தோன்றியது. ‘காயத்ரி எப்படியிருக்கா?’ என்றேன். ‘எவனுக்குத் தெரியும்?’’ என்றான்.
கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் சரவணனைச் சந்தித்தேன். அவனைப் பற்றியும்… ,,,
‘காதலைச் சொல்லிடும் வழி… இதயம்!’ என எங்களுக்குக் கற்றுத் தந்தவன் சரவணன்… என் நண்பன்!
திருத்தமான பையன். தெளிவாகப் பேசுவான். பிரமாதமாகப் படிப்பான். கலகலப்பாகப் பழகுவான். ‘தன்னைப் பார்க்க மாட்டானா… தன்னுடன் பேச மாட்டானா’ என எந்தப் பெண்ணும் சரவணனுக்காக ஏங்குவாள்.
ப்ரகாஷ் மாதிரி சரவணனும் என் க்ளாஸ்மேட். ஆனால், அவனைப் போல இவன் கண்கள் எப்போதும் பெண்களைத் தேடாது. பேரழகியே எதிரில் வந்தாலும் இரண்டு செகண்ட் பார்த்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் போய்விடுகிற பையன்.
ஒளிவு மறைவே கிடையாது சரவணனிடம். லஞ்ச் டைமில் அப்பாவுக்கே போன் செய்து, ‘‘இன்னிக்கு கிளாஸ் செம போர்ப்பா! பசங்க எல்லாரும் எஸ்கேப் ஆகறாங்க. ஏதாவது பிக்சர் போலாம்னு பிளான்’’ என்பான். பூத்தை விட்டு வெளியே வரும் போது, எங்கள் எல்லோரின் பொறாமைப் பார்வையும் அவன் மீதே இருக்கும்.
‘‘மவனே… காலேஜ் கட் அடிக்க அப்பாகிட்டயே ஐடியா கேட்கறியே… செம தில்லுடா உனக்கு!’’ என்போம்.
‘‘அதில்லடா! அப்பாகிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ‘ஓ யெஸ்… என்ஜாய்!’னு சிரிப்பார். சாயங்காலம் வீட்டுக்குப் போனதும், ‘அது உன் ஃபேவரைட் சப்ஜெக்ட் ஆச்சே, ஏண்டா போரடிச்சுது?’னு விசாரிப்பார். இவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங்கா எங்க அப்பா இருக்கும்போது அவர்கிட்டே ஏன் நான் பொய் சொல்லணும்?’’ என்பான். எங்கள் பொறாமை மேலும் அதிகமாகும்.
எங்கள் எல்லோரையும்விட அவனுக்கு முதல் நண்பன் அவன் அப்பாதான். அவர் மின்சார அலுவலக ஊழியர். எல்.கே.ஜி. முதல் ஹைஸ்கூல் வரை தினமும் அவர்தான் சரவணனை பள்ளியில் விடுவார். கூட்டிச் செல்வார். வழியில் அவன் வயதுக்குத் தகுந்தாற்போல் பேசிக்கொண்டே வருவார். இரவு அவன் படிக்கும்போது முன்னால் உட்கார்ந்து இருப்பார். அவன் தூங்கிவிட்டானா என்று பார்த்தபின்தான் படுக்கைக்குச் செல்வார்.
சரவணனும் சளைத்தவனில்லை. அப்பாவுக்கு எது வேண்டுமோ அதைச் சரியாக செய்துவிடுவான். படிப்பா… ஓகே! கண்ணியமா… ஓகே! தன் கடமையையும் தன் மீது பெற்றோருக்குள்ள எதிர்பார்ப்புகளையும் நன்கு உணர்ந்தவன். அப்படிப்பட்ட சரவணனும் காதலில் விழுந்தான், அனுவைப் பார்த்தவுடனே!
ஆனால், இரவு பகலாகக் கனவு காணவில்லை. அவள் பின்னால் தெரு நாய் போல தொடரவில்லை. ஒரு நாள், சரவணன் தன் பையிலிருந்து ஒரு குட்டி நோட் புக் எடுத்து நீட்டினான். பிரித்தாள் அனு.
‘அனு பல்லவி’ என்று முதல் பக்கத்தில் பிங்க் நிறத்தில் தலைப்பு. பக்கங்கள் புரட்டப் புரட்ட, ஒரே நேரத்தில் கோடி கிடார்கள் ஒரே நரம்பைத் தடாரென மீட்டியது போல உணர்ந்தாள் அனு.
குட்டி குட்டியாகக் கவிதைகள்…
‘சிவப்பணு… வெள்ளையணு…
என் அத்தனை அணுக்களும்
சத்தம் போடுகின்றன அனு… அனு..!’
‘லஞ்ச் அவரில் பகிர்ந்துண்ணும்
காக்கைகளாவோம்.
அனுவின் கை சாதம்…
அடடா, பிரசாதம்!’
‘தெய்வம் நீ ஏறியதும்
தேராகி விடுகிறது
சிட்டி பஸ்!’’
உளறல்களாக இருந்தாலும் அவன் உள்ளம் தெரிந்தது. அவனைப் பிடித்திருந்தது. ‘ஒரு வாரம் டைம் குடு சரவணா!’ என்றாள். ‘ஒரு மாசம்கூட எடுத்துக்கோ அனு!’ என்றான்.
இரண்டே நாட்கள்… அனு தன் பிரியத்தையும் சொன்னாள். இருவரும் அடுத்தவர் அறியாமல் காதலித்தார்கள்.
கடிதப் பரிமாறல்களிலேயே கல்லூரிக்குள் வளர்ந்த காதலைப் பொத்திப் பொத்தி வைத்திருந்தாலும் அதை அப்பாவிடம் சொல்லச் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த சரவணன், ஒரு நாள் சொல்லிவிட்டான். ‘ஓ அப்படியா, இதுபத்தி நாளைக்குப் பேசலாம்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
‘‘எங்கப்பா எதுக்கும் இப்படி ரியாக்ட் பண்ணினதில்லை. ‘கேரி ஆன்’னு ஜாலியா சிரிப்பார்னு நினைச்சேன். ஆனா, நேத்து அவர் பேசினது கொஞ்சம் பயமா இருக்குடா!’’ என்றான் சரவணன் என்னிடம். ‘‘எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப் படாதே!’’ என்று மட்டும் சொல்லி அனுப்பினேன்.
மறுநாள், சரவணன் பயந்த மாதிரிதான் ஆகிப்போனது. ‘‘எனக்கு உன் காதல், கத்திரிக்கா எல்லாம் பிடிக்கலை…’’ என்றவர், அனுவையும் சரவணனையும் அழைத்து, ‘‘படிக்கிற வயசுல வர்ற காதல் எதிர்காலத்தையே அழிச்சுடும். நீங்க ரெண்டுபேரும் இன்ஜினீயராகணும்னு பேரன்ட்ஸ் கனவு கண்டுட்டு இருக்கோம். நீங்க இப்படி காதலிலே இறங்கினா, அது படிப்பைத்தான் சாப்பிடும். வயசுக்கோளாறு, வாழ்க்கையைப் பாதிச்சிடக் கூடாது.
எப்படியும் எல்லாருக்கும் கல்யாணம் நடக்கும். அது உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி உங்களுக்குள்ளேயே நடந்தா எனக்கும் சந்தோஷம்தான். நல்லபடியா படிப்பை முடிங்க.
நான் காதலுக்கு எதிரி இல்லே! பொறுப்புகளைத் தட்டிக் கழிச்சுட்டு பண்ற காதல்தான் தப்புங்கறேன்’’ என்று இருவரிடமும் இணையாக அமர்ந்து பேசினார். அன்று இரவு அனுவுக்கு அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு.
அவரது பேச்சை இருவருமே சரியான கோணத்தில் எடுத்துக் கொண்டது இளமைப் பருவ ஆச்சரியங்களில் ஒன்று.
படிப்பு முடியும் வரை அவர்கள் கல்லூரி தவிர வேறெங்கும் சந்தித்துக் கொண்டதில்லை. அப்பா ஆசைப்பட்டபடியே சரவணன் அமெரிக்கா போனான். ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, அந்தக் குடும்பங்கள் சொந்தங்களாகின. இன்று அமெரிக்காவில் இருக்கிறார்கள் அனு – சரவணன்!
இன்றும் அப்பா சொல்வது தான் வேதம் சரவணனுக்கு.
இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த வருட எக்ஸாம் நெருங்குகிற நேரம், ‘உன் ஃபிரெண்ட்ஸை எல்லாம் க்ரூப் ஸ்டடிக்குக் கூப்பிடேன்’ என்று சரவணனின் அப்பாவே எங்களையும் கூப்பிட்டார். அவரே இரவுகளில் எங்களுக்கு அவ்வப்போது டீ தந்தார். அங்கே போய்ப் படித்ததில், தேறவே தேறாது என்று நான் நம்பிக்கை இழந்திருந்த நாலு பேப்பர்களை க்ளியர் செய்தேன். அப்படி ஒரு அப்பன் அமைவது வரம்!
‘அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியே… உன் காதலைச் சொல்லுப்பா’ என்று உங்களில் சிலர் கேட்பது கேட்கிறது.
என் ஒரு காதலைத்தான் ‘7-ஜி ரெயின்போ காலனி’-யில் சொல்லியிருந்தேன். ஒன்றோடு நின்றுவிடுமா காதல்?
அதற்குப் பின்பும் காதல்கள் இருக்கின்றன. அதில் கலாட்டாவான, அதே சமயம் கண்றாவியான காதல் அது!
‘ஆரம்பிச்சுட்டாண்டா’ என்கிறீர்களா?
காதல் ஒரு முறைதான் வரும் என்பதெல்லாம் சும்மா! வயசும் மனசும் கூட்டணி போடும்போதெல்லாம், அராஜக மெஜாரிட்டியுடன் காதல் ஆளுங்கட்சியாகும்!
அனிதா என் முதல் காதலி. என் வாழ்வில் வானவில்லாக வந்து போன ‘ரெயின்போ காலனி’ தேவதை. காதலி போன பிறகு காலனி வாழ்க்கையும் காலி!
வீடு மாறினோம். விலாசம் மாறியது. என் தந்தை இயக்குநரானார். கொஞ்சம் பெரிய வீடு இது. அங்கே எதிர்வீட்டில் இருந்தாள் ஷ்யாமளா!
சிம்பிளாகச் சொன்னால் வாய் வெந்துவிடும். ஒரு முறை பார்த்தால் இரண்டு நாட்களாவது தூக்கம் கெடும். மனசு தூக்கித் தூக்கிப் போடும். உடம்பு ராட்டினம் ஆடும். அப்படி ஒரு அழகுப் பிசாசு!
ஒரு மழைக்கால சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நனையாதபடி அவள் தன் நைட்டியை மெலிதாகத் தூக்கியபோது, தொலைந்து போனேன்.
‘‘யார்றா அந்தப் பொண்ணு?’’ என்று பேச்சுவாக்கில் என் தெரு பசங்களிடம் கேட்டேன்.
‘‘பேரு ஷ்யாமளா! ப்ளஸ் டூ படிக்கிறா! இன்னும் எவனுக்கும் சிக்கலை மாப்ளே!’’ என்றார்கள்.
இது போதுமே… ஸ்கூல் யூனிஃபார்மில் அவள் தெருவில் இறங்கி நடந்தால் ஏரியாவே ஃபுல் ஃபார்மில் இருக்கும். எந்நேரமும் ஒரு பாடல் ஆரம்பிக்கலாம் என்பது போல தெருவே பரபரப்பாகும்.
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தெருவில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தோம். கண்களையும் இதயத்தையும் ஷ்யாமளா வீட்டு வாசலில் போட்டுவிட்டு சும்மா ஆடுவோம். அவள் தரிசனம் கிடைத்தால் ஒன்று சிக்ஸர்… அல்லது கிளீன்போல்டு!
பந்து அவள் வீட்டுக்குள் விழுந்தால், அது சிக்ஸர் என்று அறிவித்தோம். எப்போது பந்து அந்தப்புரத்தில் விழுந்தாலும் அதை எடுத்துவர நான் தான் முதல் ஆளாக ஓடுவேன்.
‘‘எடுத்துக்கோ செல்வா!’’ என்பாள். சிலசமயம் நைட்டியுடன். சிலசமயம் துப்பட்டா இல்லாத சல்வாரில். அபூர்வ மாக தாவணியில். அவ்வப்போது டைட்டான டி-ஷர்ட்டில். ஆஹா, அவள் உச்சரிக்கும் போதுதான் என் பெயர் எவ்வளவு அழகு!
ஒரு நிமிடம் உயிர் விலகி, ஊர்வலம் போய்விட்டு வரும்.
‘‘ஹாய்… ஹலோ, குட் மார்னிங்!” என அவளிடம் சிரித்தேன். ‘‘எக்ஸாம் ஈஸியா இருந்துச்சா?’’ என ஏதேதோ பேசினேன். பழக்கமானேன். இன்னும் இன்னும் நெருக்கமானேன். பேச்சுவாக்கில் ஷ்யாமளா என்னைவிட ஒரு வயது பெரியவள் என்று தெரிந்தது. அய்யோ, அப்படியா! அதனாலென்ன… டேக் இட் ஈஸி!
இந்த ஏழை பக்தனுக்கும் கடவுள் கண் திறந்தான். ஒரு முறை பேச்சுப் போட்டியில் எனக்கும் பரிசு கிடைத் தது. வழங்கியவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ‘’சொல்லியிருந்தா நானும் ஃபங்ஷன் வந்திருப்பேன்ல…’’ என்றாள் ஷ்யாமளா. எனக்கு அதுதான் பரிசு!
என் வீட்டுக்கு எப்போதாவது ஷ்யாமளா வருவாள். தீபாவளி சட்டையைத் தேடி போட்டுக்கொண்டு எதிரில் செல்வேன். ‘’என்ன செல்வா… எதும் ஃபங்ஷனா?’’ என்பாள். ‘’இல்லல்ல… சும்மா கிரவுண்டுக்கு. விளையாட…’’ என்பேன். தோள் குலுக்கிச் சிரிப்பாள். தினம் தினம் போட தீபாவளிச் சட்டை இல்லை என்னிடம்!
அப்படியே பிக்கப்பாகி ஷ்யாமளா வீட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அம்மா, அப்பா, தம்பி என்று அளவான குடும்பம். எல்லோரும் பிஸி. நிறைய நேரம் தனியாகத்தான் இருப்போம்.
‘’இன்னிக்கு பேப்பர்ல ஹெட்லைன் பார்த்தியா ஷ்யாம்..?’’
‘‘என்னவாம்?’’
‘‘செல்வா- ஷ்யாமளா இன்று பொருட்காட்சியைச் சுற்றிப் பார்க் கிறார்கள்னு தலைப்புச் செய்தியே போட்டுட்டான்!’’
ஒருகணம் புரியாமல் மறுகணம் கண்களில் பல்பு காட்டுவாள். என் தோள் தட்டிச் சிரிப்பாள். குதித்துச் சொல்வாள். ‘’அய்யோ… இதாண்டா உன்கிட்டே எனக்குப் பிடிச்சிருக்கு. சரி, இன்னிக்கு எக்ஸிபிஷன் போலாமா?’’ என்பாள்.
என் குடும்பத்தோடு அவளும் அவள் அம்மாவும் வருவார்கள். அவளுக்கு இணையாக நடக்கும்போது, யாரும் அறியாமல் அங்கங்கே பட்டுக் கொள்ளும். எனக்குள் தீ பற்றிக் கொள்ளும்.
அவளுடன் தனியே இருக்கும் சந்தர்ப்பங்களில் யதார்த்தமாய் அவள் உடை சரியும். இயல்பாய் சரி செய்வாள். சிக்னலா..? அப்படியே சட்டென ஒரு கிஸ் அடித்தால்? எனக்குள் படபடப்பு அதிகமாகும். ‘ஏதாவது செய்டா செல்வா!’ என்று எனக்குள்ளே கதறுவேன். இந்த பயம்தான் பிடுங்கித் தின்னும்!
இருந்தாலும் ஒரு சாத்தான் ஆப்பிள் தின்னச் சொல்லி என்னைத் தினம் தினம் துன்புறுத்தியது. ஆப்பிள் என்ன விலை?
ஒரு பிற்பகல்… ஷ்யாமளாவின் வீட்டில் என்னையும் அவளையும் தவிர யாருமில்லை. ‘சர்த்தான்… ட்ரை பண்ணு மாமேய்!’ என்றது சாத்தான். ஏதோ எடுக்கத் திரும்பியவளை சட்டென அணைத்துவிட்டேன்… மெலிதாய், பின்பக்கமிருந்து.
ஷ்யாமளா அப்படியே நின்றாள். ‘’செல்வா!’’ என்று என் தோள்தொட்டு முன் பக்கமாய் இழுத்தாள். உடம்பு நடுங்க, அப்படியே அவளை மீண்டும் அணைத்தேன். சரிந்தவளின் மீது முகம் புதைத்தேன். என்னை இதமாக இறுக்கினாள். ஓரிரண்டு நிமிடங்கள் உலகம் நின்றது. அப்புறம் அடுத்தது என்ன? ஐ லவ் யூ சொல்லலாமா? உதட்டில் முத்தமிடலாமா? விக்கெட் விழுமா? நிமிர்ந்தேன்.
‘’என்ன செல்வா? என்ன ப்ராப்ளம்?” என்றாள் எதுவுமே நடக்காதது போல. கலக்கமும் தயக்கமுமாய் அவளைப் பார்த்தேன். ‘‘அப்படி உட்காரு! ஃபிராங்க்கா பேசலாம். காபி சாப்பிடறியா..?” என்றாள். வெட்கம் பிடுங்கித் தின்ன, விருட்டென வெளியில் வந்தேன். அது எப்படி ஒரு ஆணின் தொடுதல் புரியாமல் போய் விடும். அல்லது புரியாதது போல் நடிக்கிறாளா?
இதயம் விட்டுவிட்டுத் துடித்தது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பிரச்னை ஆக்காமல் விட்டாளே!
அந்த நிம்மதி அன்று இரவு வரை தான். வெளியே சுற்றிவிட்டு வீட்டுக் குள் வந்தபோது என் வீட்டில் ஷ்யாமளா. என் உலகம் உறைந்தது. கண்கள் துடித்தன. கால்கள் துவள… அப்படியே நின்றுவிட்டேன். அவள் நேரே என்னிடம் வந்தாள்.
‘’இப்பத்தான் ஆன்ட்டி சொன்னாங்க. நீ இந்த டெர்ம் சரியா மார்க்ஸ் வாங்கலியாமே?’’ அப்படியே டைட் க்ளோஸ்-அப்பில் பார்த்தேன்.
‘‘ஏதாச்சும் டவுட்ஸ் இருந்தா, என்கிட்டே கேட்டிருக்கலாமே நீ… ம்?’’
கேட்கட்டுமா? மனதுக்குள் என்னென்னவோ ஓடிற்று. அவள் ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தாள். ‘‘என் தம்பி வயசுடா உனக்கு. நீயும் எனக்குத் தம்பிதான். எப்ப வேணாலும் வீட்டுக்கு வா! நான் சொல்லித் தர்றேன். ஓ.கே!’’ என்று போய்விட்டாள். என் அம்மா அவளைப் பெருமையாகப் பார்த்தார்.
தம்பியா..? ஒற்றை வார்த்தையில் என் கனவைக் கசக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாளே!
தினம் பார்க்கும்போது, “இந்தவாட்டி எத்தனை மார்க்..? எப்போ எக்ஸாம்..?’’ என்று கேட்பாள். செயற்கையாய்ச் சிரித்தபடி கடந்துவிடுவேன். ஏன் ஷ்யாமளா… என்னடி ஆச்சு? என்னை ஏன் கைவிட்டாய் என் பரதேவதையே?
ஒரு வருடம்தான். அதிரவைக்கும் அந்தச் செய்தி வந்தது. எங்கள் தெருவி லேயே இருந்த ஒரு பையனுடன் ஓடிப் போய்விட்டாள் ஷ்யாமளா.
நான் சிதறிப் போனேன்.
ஷ்யாமளாவை இழுத்துக்கொண்டு ஓடியவன் கிட்டத்தட்ட ஒரு வெட்டி. தத்திப் பயல். பக்கத்தில் போனாலே நாறுவான். அவனோடு எப்படி இவளுக் குக் காதல் வந்தது..? தேவதைகள் முட்டாள்கள்!
இனி காதலே வேண்டாம்டா சாமி!
ப்ளஸ் டூ\வில் குறை வாக மார்க் கிடைத்தா லும் இன்ஜினீயரிங் ஸீட் கிடைத்தது. பிரசவ வைராக்கியம் மாதிரிதான் ஆகிப்போனது என் காதல் வைராக்கியமும்.
காரணம் – தேவதைகள் இன்ஜினீயரிங்கும் படிக் கிறார்கள்!
யூனிஃபார்ம் கழற்றி, கலர்கலர் உடையில் கல்லூரிக்குள் நுழைந்த போது நான் உள்ளுக்குள் மிகப் பெருமிதமாக உணர்ந்தேன்.
ஆனால், அந்த வளாகம் என்னைத் திகைக்க வைத்தது. பேச்சில், உடையில், வாசனையில், சிரிப்பில் என அந்தச் சமூகமெங்கும் ஆங்கிலம்.
நான் அப்பாவி. மிடில் க்ளாஸ் பையன். அவர்களுள் ஒருவனாக அந்த ஜோதியில் சங்கமிக்க முடியாமல் திணறினேன் – ‘காதல் கொண்டேன்’ வினோத் போல!
அதையும் மீறி, அவர்களிடம் தப்பித் தவறி நான் ஆங்கிலம் பேச முயற்சிக்க… ‘‘ப்ளீஸ்… உன் கால்ல வேணா விழறோம். இங்கிலீஷ்ல பேச ட்ரை பண்ணாத. தாங்க முடியலம்மா!’’ என்றனர் அந்த மேதாவிகள். பல ராத்திரிகள் புழுங்கியிருக்கிறேன். பல இரவுகள் கண்ணீருடன் விழித்திருக்கிறேன்.
கொடுமையான அந்த நாட்களில் வெளிச்சமாக வந்தாள் ஆர்த்தி!
அள்ளிக் கொஞ்சலாம் போல ஒரு அழகு. தங்க நிறம், நல்ல உயரம். தெலுங்குக் களை. குட்டி வால் போல நீண்ட கூந்தலில் கட்டியிருக்கும் ஸ்கார்ஃப் – இதயத்தின் நிறம்.
எல்லா சாலைகளும் ரோமை நோக்கி நீண்ட கதை தெரியாது. ஆனால், கல்லூரியின் எல்லா பார்வைகளும் ஆர்த்தியை நோக்கியே ஓடிக்கொண்டு இருந்த காலம் அது. அவள் நடந்தால் நிலம் குளிரும். கடந்தால் காற்று சுகந்தம் வீசும். சுற்றுச் சூழலையே வாசமேற்றிய வசந்தம் அவள்.
ஒரு நாள் ஒரு கனவில் ஆர்த்தி வந்தாள். கிச்சுகிச்சு பண்ணினாள். கொஞ்சினாள். கெஞ்சினாள். ஏதேதோ பேசினாள். எதற்கெடுத்தாலும் சிரித்தாள். செல்லமாய்க் கடித்தாள். மண்டையில் தட்டிவிட்டு மறைந்து போனாள்.
பொங்கிய கண்களுடன் போனேன் கல்லூரிக்கு. நெருக்கமான பையனிடம் பேச்சுவாக்கில் என் கனவைச் சொன்ன போது, ‘‘எங்களுக்கும் அதே கனவுதான். என்ன, உனக்கு சைவம்… எனக்கு அசைவம்!’’ என்று கெட்ட சிரிப்பு சிரித்தான்.
என் பிரச்னை இதுதான். நான் பார்க்கும் பெண்ணைத்தான் ஊரே பார்க்கும். நான் ஆசை ஆசையாய் காதல் வாங்கப் போனால், அங்கே நூறு பேர் எனக்கு முன்னே லைன் கட்டி நிற்பார்கள்.
ஆர்த்தியிடம் ஒரு வார்த்தை பேச, ஒரு புன்னகையைப் பிடுங்க, அவள் விழி வெளிச்சம் பட பெருங்கூட்டம் போராடி யது. ஷேக்ஸ்பியர்கள் ஆங்கிலத்தில் விளையாடி னார்கள். கலீல் ஜிப்ரான்கள் கவிதைகளில் கலக்கினார்கள். அலெக்ஸாண்டர்கள் ரகளையான பைக்குகளில் ‘ரோட் ஷோ’ காட்டினார்கள். எல்லோரையும் ஆசீர்வதித்தாளே தவிர, யாருக்கும் ஆதரவு தரவில்லை ஆர்த்தி.
நெடுஞ்சாலை ஓரத்தில் வெள்ளரிக் காய்களுடன் காத்திருக்கிற சிறுவனைப் போல, நானும் காத்திருந்தேன் காதலுடன். சரியான சந்தர்ப்பம்தான் கிடைக்கவில்லை. என் வீட்டு பாத்ரூம் கண்ணாடியிடம் கேட்டால் கதறி அழும். அத்தனை ஒத்திகைகள். இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களை பயம், கூச்சம் காரணமாக இழந்தேன்.
ஒருநாள் அவள் லஞ்ச் முடித்து வரும்போது வகுப்பறைக் கதவை மறித்து நின்றேன். காற்றினிலே வரும் வாசம்… ஆர்த்தியவள் குழல் வாசம். என் மனம் படபடவென துடித்தது. அத்தனை அழகை அருகில் பார்த்ததும் நாக்கு வறண்டது. நான் மிதக்க ஆரம்பித்த சமயத்தில் ‘‘எக்ஸ்க்யூஸ் மீ..!’’ – என்று சங்கீதமாய்ச் சொன்னாள்.
வார்த்தை மறந்து, வாயடைத்து விலகி, வழிவிட்டேன். அந்த இரவெல்லாம் என் தூக்கத்தில் எக்கோவாக ‘எக்ஸ்க்யூஸ் மீ!’க்கள்.
என் மூன்றாம் மழை ஆர்த்தி! அவளைத் துரத்த ஆரம்பித்தேன்.
ஆர்த்தியிடம் கைனடிக் ஹோண்டா இருந்தது. மஹாத்மா காந்தியை மனதில் கும்பிட்டுவிட்டு, ஒத்துழையாமைப் போராட்டமும் நான்கு நாள் பட்டினிப் போரும் இருந்ததில் வீட்டிலிருந்து புதிய பைக் கிடைத்தது. ஆர்த்தியின் வீட்டுக்கும் கல்லூரியின் வாசலுக்குமாக பைக்கில் துரத்தினேன்.
முதல் வாரம் அவள் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்த வாரம் என்னைக் கவனிக்க ஆரம்பித்தாள். எதிர்பாராத தருணத்தில் இரண்டு நொடிகள் ஆர்த்தியின் கண்கள் என் கண்களைப் பார்த்து ‘சரக்’கெனத் திரும்பியது. ஆனால், இதற்கே ஒரு வருடம் போயிருந்தது. நான் மெக்கானிக்கல் போனேன். ஆர்த்தி எலக்ட்ரிகல் ஆனாள்.
என் அடுத்த மூவை ஆரம்பித்தேன். காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை எழுதினேன். கையெழுத்துப் போட தைரியம் வரவில்லை.
இடைத் தரகர்களை நம்பாமல், முதல் முயற்சியாக அவள் ஸ்கூட்டர் ஹேண்டில் பாரில் செருகி வைத் தேன். இப்படியே தினம் தினம் ஒரு கவிதை, ஒரு கடிதம்.
இந்தக் கல்லூரியில்தான் தன்னை நேசிக்கிற ஒரு மகா கவிஞன் எங்கோ இருக்கிறான் என்று அவள் என்னைத் தேடித் துடிப்பாள். ஒரு நாள் நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளும் போது, ‘என்னை அவ்ளோ பிடிக்கு மாப்பா!’ என்று ஆனந்தமாய் அழுதபடி என்னை சரணடைவாள் என அந்த நாளுக்காகக் காத்திருந்தேன்.
ஒருநாள் அவளின் நண்பன் என் தலையில் கல்லைத் தூக்கிப் போட் டான். ‘‘அய்யே… ஆர்த்திக்குத் தமிழே தெரியாது மச்சான்!’’ அடச்சே!
கடித ஐடியா காலி. அடுத்தது என்ன? துடித்தது புஜம். மனக்குழப் பத்துடன், என் காலனி நண்பன் சுந்தரிடம் போய் நின்றேன். பயமாக என்னைப் பார்த்தான். கன்வின்ஸ் செய்தேன்.
‘‘நான் ஆயிரந்தான் லவ் பண்ணினாலும், அப்படி ஒரு அழகி கிட்டே பேசற பாக்கியம் உனக்குத்தான் கிடைச்சிருக்கு. இதைத்தாண்டா விதின்றாங்க’’ என்றேன். அவன் கொஞ்சம் இறங்கி வந்தான்.
‘‘மச்சான் அவகிட்டே பேசுடா! ‘இங்கே பாரு ஆர்த்தி… என் ஃப்ரெண்ட் உன்னை உயிருக்குயிரா லவ் பண்றான். ஆனா, அவன் வெளியே சொல்ற டைப் இல்லே! எப்பப் பார்த்தாலும் உன் நினைப்புதான். உன் பேரைத் தன் கைல எழுதிருக்கான், பேனாவிலே இல்லே ப்ளேடால! (சும்மா!) நீ இல்லேனா செத்துருவேன்னு பினாத்தறான்… ஏதோ உன்கிட்டே இன்ஃபார்ம் பண்ணனும்னு தோணுச்சு. அதான்…’னு அவகிட்டே பேசுடா! ப்ளீஸ்டா!’’ என்றேன்.
ஏகப்பட்ட கெஞ்சலுக்குப் பிறகு அந்தப் புறா தூது போக சம்மதித்தது. பூத்துக்குள் நுழைந்து அவளிடம் போனில் பேசிவிட்டு வந்த அவன் முகத்தில் பேயறைந்த களை.
பார்த்த எனக்கு உள்ளங்கால் வரை வியர்த்தது. ‘‘என்னடா..!’’ என்றேன் படபடப்பாய்.
‘‘அவ செம ராங்குடா! நீ சொன்ன மாதிரியே பேசினேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டுட்டு, ‘ஏன்… இதை சார் நேர்ல வந்து சொல்ல மாட்டாரா..?’னு கேட்டுட்டு, உன் அட்ரஸை யும் வாங்கிட்டாடா!’’ என்றான்.
ஹிட்ச்காக் படம் பார்த்தது போலிருந்தது. எனக்கு ஒன்றும் புரிய வில்லை.
அடுத்தநாள் கல்லூரி யில் ஆர்த்தி கிடைக்க வில்லை. லஞ்ச் டயத்தில் அவளின் மூன்று நண்பர் கள் என்னை நோக்கி வந்தார்கள். பகீரென்றது.
‘‘ஏன் செல்வா… உனக்கு சுந்தர்னு யாரையாச்சும் தெரியுமாடா..?’’ என்றார்கள்.
உள்ளே அலாரம் அடித்தது. ‘‘சுந்தரா..? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே!’’ என்றேன் பதற்றத்தை மறைத்தபடி.
‘‘இல்லே… நேத்து உன் பேரைச் சொல்லிட்டு, நம்ம ஆர்த்திட்ட ஏதேதோ பேசியிருக்கான். அது போகட்டும். உன் கையைக் காட்டு!’’ என்றார்கள். ஆர்த்தி பெயரை ப்ளேடில் கீறிய தழும்பு ஏதாவது இருக்கிறதா..? என்ற சோதனை. என் கை சுத்தம் என்று தெரிந்ததும், ‘பொழச்சுப் போ!’ என்பதுபோல் விலகினார்கள்.
கடைசி வரை அவளிடம் அறிமுகப் படுத்திக் கொள்ளக்கூட முடியாமல், பேசாமலே முடிந்துபோனது அந்தக் காதல்.
என்னைத் திரும்பிப் பார்க்காத அந்த ஆர்த்தியை ஏதாவது காட்டுக்குக் கடத்திக் கொண்டுபோய் விடலாமா? ஒரு வாரம் தனிமையில் என்னோடு இருந்தால், அவளுக்கு என் மேல் காதல் வந்துவிடுமா..?
கற்பனையிலேயே குமுறினேன். கடத்தத்தான் தைரியம் வரவில்லை. கதையாவது எழுதலாம் என்று முயற்சித் தேன். அதுதான் ‘காதல் கொண்டேன்’.
பின்னொரு சந்தர்ப்பத்தில் கல்லூரி நண்பன் ஒருவனை யதேச்சையாக சந்தித்தபோது ஆர்த்தி பற்றிப் பேச்சு வந்தது. காலேஜ் முடிகிற வரை மொத்தக் காலேஜையும் தன் அழகில் கட்டிப் போட்டிருந்தாலும் யாருக்கும் துளி இடம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் ஆர்த்தி. அதற்கப்புறம் என்னவானது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது.
‘‘என்னாச்சுடா அவளுக்கு..?’’
‘‘அவ தெளிவுடா! இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண் ணிட்டு ஃபாரின்ல செட்டில் ஆகிட்டா! அலைஞ்சு அலைஞ்சு பசங்களுக்கு அரியர்ஸ் வந்ததுதாண்டா மிச்சம்!’’ என்றான் விரக்தியோடு.
எனக்குச் சத்தியமாய்ப் பெண்களைப் புரியவில்லை.
கடவுளே… என்னையும் ஒரு பெண் காதலிப்பாளா..? என்று ஏக்கமே வந்தது. அது நடந்தது, நான் சினிமாவுக்குள் வந்த பிறகு!
‘கமான்… கமான்! உன் டைரியோட அந்தப் பக்கத்தைப் புரட்டு!’ என்கிறீர்களா.
கல்லூரிக்குப் போன புதிதிலேயே தெரிந்துவிட்டது – என்னால் நாட்டின் நம்பர் ஒன் இன்ஜினீயர் ஆக முடியாது!
அந்த வயதில் அந்தத் தெளிவாவது அவசியம்.
நம்மால் எது முடியும், எது முடியாது என்று தெரியாமல்தான் நம்மில் பல பேர் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். நமக்குள் என்ன திறமை இருக்கிறது என்று நமக்கே தெரியாவிட்டால், உலகத்தில் என்ன செய்ய முடியும் நம்மால்?
ஏறக்குறைய இரண்டு மாதங்கள் யோசித்து, ‘இனி சினிமா!’ என்று முடிவெடுத்தேன். ‘கதை எழுத வரும்’ என்று நம்பினேன். சினிமாவில் பாதிப்பேர் பெரிதாகப் படித்தவர்கள் இல்லை என்று கேள்விப்பட்டதும், மனதுக்குள் ஊற்று பெருக்கெடுத்தது. இரண்டாம் வருடத்துடன் இன்ஜினீயரிங் போதும் என்று முடிவெடுத்தேன்.
‘பளார் பளார்’ என இரண்டு முறை அறைந்தார் அப்பா. அம்மாவோ, பூஜையறையினில் கடவுள் முன் அழுதார். வேறு வழியின்றி மீதி இரண்டு வருடங் களை தியேட்டரும் கல்லூரியுமாக முடித்தேன்.
‘எக்கேடாவது கெட்டுப் போ’ என்று என் தந்தை தண்ணி தெளித்துவிட்டார். கோடம்பாக்கத்தில் என் போராட்டத்தை ஆரம்பித்தேன்.
என் ‘தண்டச்சோறு’ வாழ்க்கை தொடங்கியது. பகலில் தெருத்தெருவாகப் படம் பண்ண (ஒரு தன்னம்பிக்கைதான்!) முயற்சிப்பதும், இரவில் தந்தையுடன் சண்டையுமாக வாழ்க்கை ஓடியது. டெல்லிக் குளிர் வாட்டி வதைத்த ஒரு திரைப்பட விழாவில் அவளைப் பார்த்தேன். மொழி தெரியாத படத்தை முழி பிதுங்கப் பார்த்துக்கொண்டு இருந்த நான் கொட்டாவி விட்டபடி திரும்பினால்… பக்கத்தில் அவள்! அந்த அரை இருட்டில் சிகரெட் லைட்டர் ஜோதி போல ஜொலித்தாள். மாநிறம் தான். சுருள்சுருளாக நெளியும் கேசம். ஏதோ சுகந்த வாசம். ஜீன்ஸ், டி-ஷர்ட் அவள் அளவுகளையும் அழகையும் பிரமாதமாக எடுத்துக்காட்டியது. அவளை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.
எத்தனை காதல்கள் வந்து போனாலும், புதிதாக ஒரு பெண் வந்தால் பூ பூக்கும் வாசம்!
திரையின் வெளிச்சத்தில் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமாக அழகாய் இருந்தாள். விளக்குகள் எரிந்தபோது, அவள் பேரழகி எனத் தெரியவந்தது.
கலைந்து நகர்கையில் (வேண்டுமென்றே!) அவள் காலில் மிதித்தேன். ‘ஓவ்’ என அலறினாள். கலவரமாகத் திரும்பினேன். ஓவராகப் பதறினேன். ‘இருட்ல சரியா தெரியலை’ என்றேன். என் பிரச்னை எனக்கு! தயவுசெய்து மன்னியுங்கள் என ஏராளமான முறை கெஞ்சி னேன். ஐடியா வொர்க் அவுட் ஆயிடுத்து! சிறிது தூரம் அவள் கூடவே நடந்தேன். வழியில் காபி ஷாப் இருந்தது.
“என்கூட ஒரு காபி சாப்பிட முடியுமா?”
“என்ன… காலை மிதிச்சதுக்கு காபியா?”
“ம்… காலை மிதிக்கலைனாலும் காபி சாப்பிடக் கூப்பிட்டிருப்பேன்!”
முதல் முறையாகப் புன்னகைத்தாள். ஏதேதோ பேசினோம். அத்தனையும் ஆங்கிலத்தில்!
அவள் ஒரு ஜர்னலிஸ்ட். அதுவும் இங்கிலீஷ் ஞானி. உலக சினிமாவை அலசிப் பிழிந்து உதறிக் காயப்போடுகிற அசைன்மென்ட். பேசப் பேச, இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது புரிந்தது. காதலில், முதலில் கண்ணுக்குத் தெரிவது ஒற்றுமைகள்தானே?
அந்த ஒரு மணி நேரம் அவளை நன்கு சிரிக்க வைத்தேன். அப்புறமென்ன? தினமும் சினிமா அவளுடன்தான்! இரண்டாவது நாளில் தோள்கள் உராய்ந்தது. ‘‘ஹேய்ய் யூ!’ எனச் செல்லமாகக் குட்டினாள். தோள் தட்டினாள். கூட்டத்தில் விரல்கள் பற்றினேன். பகலில் நேரிலும் இரவெல்லாம் போனிலும் பேசினோம்.
ஐந்தாவது நாளில் வில்லெடுத்து மெள்ள ஒரு அம்பு விட்டேன். ‘உன்னைப் போல் ஒரு தோழி என் வாழ்க்கையில் வந்தால் அது வரம். வரம் நிச்சயம் வரும்’ என்று கவிதை மாதிரி சொன்னேன். மறுநாளே அவள் ‘உன்னைப் பிரிந்தால் என்னவோ போலிருக்கிறது’ என்றாள்.
இது… இதைத்தானே எதிர் பார்த்தேன். மறுநாள் ஒரு திருநாள். ரோஜாவுடன் காதல் சொன்னேன். பூவைப் போலவே பூத்தது அவள் முகம். அப்பாடா… என் காதலைச் சொன்னதும், முதன் முதலாக ஒரு பெண்ணின் முகத்தில் சந்தோஷம் பார்த்தேன்.
“சரியா வருமா?” என்றாள்.
“என்ன… லைஃப் ஃபுல்லா உன்கூட இங்கிலீஷ்ல பேசணும். அதுதான் கஷ்டம்!” என்றேன். மெலிதாகச் சிரித்தபடி, “ஐ டூ லவ் யூ செல்வா!” என்றாள்.
உள்ளுக்குள் பறந்தேன். முதல் முறையாக ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு தலைநகர வீதிகளில் நடந்தேன். விழா முடிந்தது. விடைபெற மனமில்லை. இரண்டு நாட்கள் டெல்லி யைச் சுற்றினோம் காசெல்லாம் கரைந்தது. ‘ஊருக்குப் போகிறேன்’ என்றேன். கொஞ்சம் கண்ணீரும் நிறைய முத்தங்களுமாக வழியனுப்பினாள்.
சென்னை வந்தேன். கனவு போய், நினைவு சுட்டது. சினிமா என் மூளைக்குள் டிரம்ஸ் அடித்தது. பின்னே? வாழ்க்கையை அல்லவா அடகு வைத்திருக் கிறேன். வெறி பிடித்தாற்போல் வேலையில் மூழ்கினேன்.
தினமும் போனில் காதல் பேசுவோம். மாதக் கடைசியில் பில்லைப் பார்த்து, ‘ஏண்டா… நீ சோறுதான திங்கிறே?’ என்றார் அப்பா.
ஒரு மாதத்தில் அவளே என்னைப் பார்க்க வந்தாள். சென்னையைச் சுற்றினோம். அவள்தான் செலவழித்தாள். ஒரு நெருக்கமான நேரத்தில், அவளின் ‘இறந்த காலம்’ சொன்னாள். அவளது பழைய காதலன் என்னென்ன டார்ச்சர்கள் செய்தான் என்று விவரித்தாள்.
‘நாம் எப்படி இருந்தாலும், வருபவள் கன்னி கழியாமல் வரவேண்டும்’ என்பதுதானே எல்லா ஆண்களின் குணமும். உள்ளே ஏமாற்றம் உணர்ந்தாலும், ‘நமக்கும் இது மூன்றாவது காதல்தானே!’ என்று தேற்றிக்கொண்டேன். ‘நானிருக்கிறேன்!’ என்று நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தேன்.
இப்படியே கழிந்தது ஒரு வருடம். அடிக்கடி சென்னை வந்துவிடுவாள். நான் டெல்லி போகவே இல்லை. சிகரெட்டுக்கே கையேந்துகிற செல்வராகவன் வேறு என்ன செய்வான்?
அவளோ மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற பெண். இருந்தும் புரிந்துகொண்டாள். என் மீதான காதல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. ஒரு சில மாதங்களில் என் மீது வெறிகொண்ட பிராணி போல பேரன்பு கொண்டாள்.
தூரம்! காதலின் மிகப் பெரிய எதிரி இதுதான். நான் என் வேலையின் சலிப்பை அவ்வப்போது அவள் மீது காண்பித்தேன். நான் அவளை விட்டுப் போகிறேன் என்று அவளுக்குத் தோன்றியது. ஆயிரமாயிரம் சண்டைகள் ஆரம்பமாயின.
தினமும் இருபது தடவை போன் செய்து, நான் எங்கே யாருடனிருக்கிறேன் என்று சோதனை செய்தாள் (பாழாய்ப் போன மொபைல்!). இங்கு வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டு இருந்த எனக்குள் எரிச்சல் பரவியது.
என் போனில் தற்செயலாக ஒரு பெண் குரல் கேட்டால், அவர்களின் ஜாதகம் என்னவென்று குடைந்தாள். நேரில் ஒருமுறை சண்டை போடும்போது, சில்வர் தட்டை எடுத்து வீசினாள். என் நெற்றி கிழிந்து ரத்தம் வந்தது. உடைந்து கதறினாள். ‘என் காதலைப் புரிந்துகொள்ள மாட்டாயா?’ என்று அழுதபடி எழுந்து போனாள்.
ஒரு நாள் திடீரென போன் செய்து, ‘உன் தொழில் பிடிக்கவில்லை. விட்டு விடு… நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!’ என்றாள்.
‘முடியாது…’ என்றேன். மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். ‘உன் காதலே வேண்டாம், போடி!’ என்று கோபத்தில் கத்தினேன்.
ஆண்டவா! அடுத்த நொடி என் வாழ்க்கையிலேயே மிக வேதனையான தருணம். எங்கேயோ ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் போனில் இருந்தவள், தன் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு அலறினாள்.
என்ன இனிமை என நான் நேசித்த குரல்… என்ன இளமை என நான் கொண்டாடிய அழகு… எல்லாம் விலகி நிற்க, என் காதோரம் அவள் அலறல் சப்தம். குலை நடுங்கிப் போனேன். என் நண்பன் ஒருவனின் நம்பர் தேடி, விஷயத்தைச் சொல்லி அவள் வீட்டுக்கு ஓடுமாறு கெஞ்சினேன். அவன், அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.
இங்கே எங்கள் வீடு ஜப்திக்குப் போன நேரம் அது. ஊரெல்லாம் அலைந்து, இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு நானும் டெல்லிக்கு ஓடினேன். ஆஸ்பத்திரியில் அவள் பக்கத்திலேயே இரண்டு நாள் உட்கார்ந்திருந்தேன். கண் விழித்து என்னைப் பார்த்தவள் சொன்ன முதல் வார்த்தை…
‘‘ஐ ஹேட் யூ!’’
ஒரு பெண் மனதில் இடம் பிடிக்க என்ன வேண்டும்?
அழகு, அறிவு, பணம், பதவி… இவை எல்லாவற்றையும்விட அவசியமான ஒன்று உண்டு. அதன் பெயர் உண்மை!
ஒரு பெண் உன் மேல் பைத்தியமாகச் சுற்ற வேண்டுமா? உன்னை வாழ்க்கை முழுக்க உண்மையாக நேசிக்க வேண்டுமா?
‘அட, நடக்கிற காரியமா ஏதாவது சொல்லுப்பா?’ என்கிறீர்களா!
நடக்கும், இதெல்லாமே நடக்கும். எப்போது?
வயசின் வேகத்தில் எதிர்ப்படுகிற எல்லாப் பெண்களையும் துரத்துவது, சும்மா டைம்பாஸ்க்கு விரட்டுவது, அவ்வப்போது பஸ்ஸிலும், பைக்கிலும், அபூர்வமாக தியேட்டரிலும் உரசிக்கொள்ளத் தேடுவது, இரண்டு மூன்று பெண்களை ஒரே நேரத்தில் பராமரிப்பது, ‘சும்மா தொட்டுட்டு விட்டுரலாம்’ எனத் திட்டம் போட்டுத் திரிவது… இது எதுவும் காதல் இல்லை… அசிங்கம்! ஒருநாள் இவையெல்லாம் உன்னையே அசிங்கப்படுத்திவிடும். இப்படித் திரிந்தால் வாழ்க்கையில் உனக்கு வந்து சேர்வதும் அப்படிப்பட்டதாகவே வாய்க்கும்.
காதலில் உண்மை வேண்டும் என்று எனக்குப் புரியவைத்த கதைகள் பல உண்டு. நெகட்டிவ்வான உதாரணமாக இருந்தான் என் நண்பன் குமார். அப்போது அவனுக்கு வயசு 21. இஞ்ச் இஞ்ச்சாக இளமைத் திமிர் தாண்டவமாடும் வயசு. எப்படிப்பட்ட புதுசையும் பழசாக்கிவிடுகிற பயங்கரவாதி.
எந்தப் பெண் எதிரே வந்து நின்றாலும், அவன் பார்வை மிகச் சரியாக தவறாகத்தான் போகும். வாசிக்கிற புத்தகம், பார்க்கிற படம், சுற்றுகிற இடம் என எல்லாமே இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குள்ளாகும் செயல்கள். வீட்டில் அவனுக்குத் தனி அறை. தாராளமான சுதந்திரம்.
அவனுக்கு ஒரே ஒரு தங்கை. தங்கை யின் தோழிகள் அடிக்கடி வீடு வந்துபோவார்கள். அப்படி யார் வந்தாலும் அவனும் இருப்பான். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்.
தங்கையின் ஒரு தோழியின் பெயர் மாலினி. ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்கத் தூண்டும் அழகு. ‘குனிந்த தலை நிமிராத பெண்’ என்பார்களே… அதற்கு உதாரணம் மாலினி.
அவன் வாழ்வில் இன்னொரு சாகச பயணம் துவங்கியது. களம் இறங்கினான். கலகல பேச்சால் ஈர்த்தான். அவள் அவனைப் பிரமிப்புடன் பார்த்தாள். இரண்டு வார்த்தைகள் பேசத் தயங்குபவள், அவன் பேச்சைக் கண்டு மயங்கிப்போனாள்.
அவன் வழக்கமாக எல்லாப் பெண்களிடமும் சொல்லும் அதே அம்பை எடுத்தான். ‘ஐ லவ் யூ’ என்றான். பாவம் மாலினி… அவள் அதை அப்படியே நம்பினாள்.
நான் மாலினியைப் பார்த்திருக்கிறேன். கலர் கோழிக்குஞ்சு போல இருப்பாள். எதிரில் ஒருவர் வந்தாலே இரண்டு அடி விலகி நடக்கிற சின்னப் பெண்.
விதி விளையாடியது. தயங்கித் தயங்கி ஒரு நாள் அவளும் அவனுக்கு ‘லவ் யூ’ சொன்னாள்.
இரண்டே மாதங்களில், அவன் அவளைப் பலவந்தப்படுத்தி முத்த மிட்டான். பயந்து போனாலும், பாவி மகள் அப்போதே தன்னை அவனது மனைவியாக உணரத் தொடங்கினாள். விடுவானா வில்லன்? அதையே சாக்காக்கி, அவளைப் பாடாய்ப் படுத்தினான்.
“எனக்கு என்னமோ உன் மேல நம்பிக்கையில்லை மாலு… நாளைக்கு உங்க அம்மா\அப்பா சொல்றாங்கனு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா..?” என்றான். அவள் துடித்துப்போனாள்.
“அப்பன்னா… எனக்கு உன்மேல நம்பிக்கை வரணும்னா, நீ இப்பவே..!” என்று கரெக்ட்டாகக் கார்னர் பண்ணி னான். அவள் கலங்கி நின்றாள்.
“இதோ பாரு… எனக்கு எப்பவும் டென்ஷனா இருக்கு. சரியா படிக்கக் கூட முடியலை. இப்போ அது மட்டும் ஆகிப்போச்சுன்னா நீ என்னைத்தானே கல்யாணம் பண்ணியாகணும்… நீ எனக்குனு ஆகிட்டா, அந்த நிம்மதி யிலேயே நான் ஒழுங்கா படிப்பேன் மாலு!”
விதவிதமான தருணங்களில், வசீகர மான வசனங்களில் பேச ஆரம்பித்தான். அவள் மறுத்துவிட்டுப் போய்விட்டாள். இவன் அந்த நிமிடத்திலிருந்து அவளை ஒதுக்க ஆரம்பித்தான். “அப்ப என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல… அதானே அர்த்தம். ஓகே… அப்போ இந்த லவ்வே வேணாம்” என்றான். அவள் பயந்துபோனாள். முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு வேறுவழி இல்லாது அவனிடம் வந்தாள்.
ஒரு மாதம்… தோழியுடன்கம்பைண்ட் ஸ்டடி என்று தினம்தினம் இவன் வீட்டி லேயே தங்கினாள். வீடு அடங்கியதும், நள்ளிரவில் அவளைத் தன் அறைக்கு வரச் சொல்வான். ஏமாற்றி ஏமாற்றியே வேட்டையாடினான். எல்லாம் முடிந்தது.
அடுத்த மாதம்… ‘பரீட்சை’ என்று காரணம் சொல்லி அவளைப் பர்ப்பதையே தவிர்த்தான். தேர்வுகள் முடிந்ததும் அவள் ஓடி வந்தாள்.
வானம் பார்த்தபடி, உதடு பிதுக்கிய படி, சாத்தான் குரலில் பேச ஆரம் பித்தான் அவன். “இல்ல மாலு… நான் உனக்கு சரியான ஆள் இல்ல. எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். என்னால ஒரே ஒரு பொண்ணு கூட மட்டுமே வாழ முடியாது. நான் கொஞ்சம் ஃப்ரீக் அவுட். ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ.”
அவள் உடைந்து சுக்குநூறானாள். எவ்வளவோ கெஞ்சினாள். கதறி அழுதாள். கண்ணீர் கொட்டினாள். அவன் அதையே வேறு வேறு வார்த்தை களால் சொல்ல ஆரம்பித்தான்.
‘’பாரு… உன்னோட நான் இருந்தப்போ எனக்கு வேற பொண்ணு ஞாபகம்தான் வரும்…. என்ன பண்ணச் சொல்றே? நான் அப்படித்தான்!”
தினம்தினம் வீட்டுக்கு வந்து கெஞ்சு வாள். யாருக்கும் தெரியாமல் அழுவாள். கடைசியில்தான் அவளுக்குப் புரிந்தது… அவன் தன்னைக் காதலிக்கவே இல்லை என்பது!
எனக்கு அந்த நிமிடம் இன்னும் நினைவிருக்கிறது. நாங்கள் கும்பலாக இருந்தபோது அவள் வந்தாள். எங்களுடன் நின்றிருந்த அவனை உற்றுப் பார்த்தாள். முழுசாக ஒரு நிமிடம்… ‘‘நீ நல்லாவே இருக்கமாட்டேடா!” வெடித்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி போய்விட்டாள்.
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து அவள் மீண்டாள். படிப்பை முடித்தாள். திருமணம் செய்துகொண்டாள். அவளது கணவனிடம் எல்லாம் சொன்னாளாம்.
“உன்னோட ‘பாஸ்ட்’ பத்தி எனக்கு கவலை இல்லை. நம்மோட ஃபியூச்சர் பத்திப் பேசுவோம்.” ஒரே வரியில் முடித்துவிட்டானாம். பின்னர் கேட்டுத் தெரிந்த கதை இது!
இன்று மாலினி சென்னையில்தான் இருக்கிறாள். மிகப் பெரிய ஆர்க்கிடெக்ட். ஆனால் குமார்? பத்தினி சாபம் பலித்தது!
வீதி தோறும் விளையாட்டுப்பிள்ளை யாகத் திரிந்த குமாரும் ஆசை ஆசையாய் ஒரு திருமணம் செய்தான். ஆனால், அதற்குப் பிறகும் குமார் எந்தவிதத்திலும் மாறவே இல்லை. விதி ஒரு கொடூர சவுக்கை சுருட்டி வைத்துக் காத்திருந்தது அவனுக்குத் தெரியாது. திடீரென வீட்டுக்குத் திரும்பியவன் யாரோ ஒருவனைத் தன் மனைவியுடன், தன் பெட்ரூமிலேயே பார்த்தான்.
கடவுளே… இன்னும் அவர்கள் தம்பதி களாகவே வாழ்கிறார்கள்… பெயரளவில். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!
வாழ்க்கை மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்க மாட்டார்!
தெளிவான ஆணுக்கு நிச்சயம் அற்புத மான ஒரு பெண் கிடைப்பாள் என்பதை இன்னும் நான் நம்புகிறேன்!
நமக்கும் நாய்க்கும் அட்லீஸ்ட் இந்த வித்தியாசமாவது வேண்டும்தானே!
பெண் என்பவள் பெரும் சக்தி. ஒரு துளி அன்பு காட்டினால் அவள் கடலாய்ப் பொங்குவாள்.
கடலுக்குக் குளிரவைக்கவும் தெரியும். கொந்தளித்துச் சுற்றிச் சுழற்றிச் சூறையாடவும் தெரியும்.
சரி, உண்மை மட்டும் போதுமா காதலுக்கு..? இன்னமும் இருக்கிறது. அதுபற்றி…
காதலில் உண்மை மட்டுமே போதாது… கொஞ்சம் பொய்யும் வேண்டும்! ஆச்சர்யப்படாதீர்கள்… அவள் சந்தோஷப்படுவாள் என்றால், ஆயிரம் பொய்கள்கூடச் சொல்லலாம்!
சின்னச் சின்னச் சந்தோஷங்கள்கூட அவர்களை அப்படியே மலரவைக்கும். ‘உனக்காக…எல்லாம்உனக்காக!’ என்று நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அவளுக்காகத்தான் என்பதுபோல் காட்டுங்கள்.
அவளைப் பார்க்கப் போகும்போது லேட்டாகிவிட்டதா? மலர்க்கொத்தோடு செல்லுங்கள்… அட்லீஸ்ட் ஒரு ரோஜாப் பூ! ‘உன்னைவிட அழகா ஒரு பூ வாங்கிடணும்னு பாண்டிபஜார் முழுக்கத் தேடினேன். ப்ச்… அப்படி ஒண்ணு இல்லவே இல்லை தெரியுமா?’ – கூசாமல் சொல்லுங்கள். அவள் அதை ரசிப்பாள்.
போகும் வழியில் பிளாட்பாரத்தில் ஒரு டெடிபியர் பொம்மை வாங்கினாலும், ‘‘ரெண்டு நாளு எல்லாக் கடையும் ஏறி இறங்கினேன். உன் பெட்ரூம்ல இருக்கப் போற பொம்மை… உன்னோட படுத்துக்கப் போற பொம்மையாச்சே! அதான், நல்ல பொம்மையா…’’ – என அள்ளிவிடுங்கள். சிரிப்பாள். சிரித்தபடி உதைப்பாள். துரத்துவாள். சிணுங்குவாள். ‘ச்சே… நமக்காக சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட எவ்ளோ அலையறான்!’ என்று ரகசியமாகப் பிரமிப்பாள்.
ஆபத்தில்லாத பொய்கள், அவளை ஆனந்தப்படுத்தும்!
அடிக்கடி போன் போடுங்கள்… ‘‘ஒரே நேரத்தில்தான் எல்லாருக்கும் விடியுது… ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி விடியுமே… நீ எப்போ… எப்படிக் கண்விழிக்கிறேனு பார்க்கணும்னு பயங்கர ஆசையா இருக்குப்பா. ஆமா, நீ எப்படி பார்சல் பண்ண பொக்கே மாதிரி அப்படியே தூங்குவியா? இல்லே…’’
‘‘டாய்…!’’ அவள் அலறும்போது, “ச்சும்மா உன் வாய்ஸைக் கேட்கணும்னு ஆசையா இருந்துச்சு… வெச்சுடறேன்!” என்று ஃபீல் காட்டுங்கள்.
“க்ளாஸ்ல இருக்கியா..? எத்தனாவது லார்ஜு..? அய்யோ, அசிங்கமாத் திட்டாத…’’ என சிரிக்க வையுங்கள்.
“இல்லடா… ஃபிசிக்கல் கெமிஸ்ட்ரி புட்டுக்கிச்சு! இந்த ஜென்மத்துல நான் டிகிரி வாங்குவேன்னு தோணலை…’’ என ஆறுதல் தேடுவதாக பாவ்லா பண்ணுங்கள்.
அடிக்கடி பேசுங்கள். ஆனால், அது தொந்தரவாக மாறிவிடக்கூடாது. அலையவும் வேண்டும். ரொம்ப அலையவும்கூடாது. இறங்கிப்போனால், அவர்களுக்கு ஒரு மிதப்பு வந்துவிடும்.
உங்கள் விருப்பங்களில், முடிவுகளில் உறுதியாக இருங்கள். ஆண்மையின் கம்பீரம் பெண்களுக்குப் பிடிக்கும். ஆனால், எதையும் அவர்கள் மேல் திணிக்காதீர்கள்!
எதற்கும் கட்டாயப்படுத்தாதீர்கள்… ‘இப்படி இரு, அப்படி இரு’ என கட்டளை இடாதீர்கள். அதை எந்தத் தேவதைகளும் விரும்புவதில்லை.
பெண்களை அவர்கள் போக்கில் போய்த்தான் பிடிக்க வேண்டும். அதன் முதல் தகுதி… பொறுமை!
காவ்யாவும் முருகனும் காதலர்கள். காவ்யாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அத்தனை பேரும் ஃப்ரீக் அவுட், பீட்டர் பார்ட்டிகள்.
அவர்களில் ஒருவன் காவ்யாவிடம் ‘ப்ரப்போஸ்’ செய்து டெபாசிட் இழந்தவன்.
திடீரென எங்கிருந்தோ வந்த முருகனை, காவ்யா காதலிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. முருகனைப் பற்றி அவதூறு அணுகுண்டுகள் வீசி, அவனது கேரக்டரை காலி பண்ணினார்கள்.
நொறுங்கிப்போனான் முருகன். அவர்களை எப்படி கட் செய்வது எனத் தெரியாமல் தவித்தான். ஒருநாள் என்னிடம் வந்து புலம்பினான்.
“என்னால தாங்க முடியல..! செத்துபோலாம்னு இருக்கு செல்வா!”
“மடையா! கொஞ்சம் பொறுமையா இரு… பதறாத! நீ அவளுக்கு ஆறு மாசமாதாண்டா லவ்வர். அவனுங்க பத்து வருஷமா ஃப்ரெண்ட்ஸ். அவளுக்கு உன்னை மாதிரியே அவனுங்களும் முக்கியம்!”
“காவ்யாவை மிஸ் பண்ணிடு வேனோனு பயமா இருக்குடா!”
அதுதான் காதல்! கண்கள் மூடினால் கவலைகள் விழிக்கும். இழந்து விடு வோமோ என்று பயம் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகம் வரும். சடார் சடாரெனக் கோபம் வரும். அவள் இன்னொருவனிடம் இரண்டு வார்த்தைகள் அதிகம் பேசினால் கொந்தளிப்பு ஏறும்.
நாளடைவில் அந்தக் காதல் வெறியாகி, அவளுக்கு ஒருநாள் உங்களைப் பிடிக்காமல் போய்விடும். ‘நீ ஒரு சைக்கோ!’ என்று ஓடிவிடுவாள்.
ஆண்கள் படும் வேதனைகள் பெண் களுக்குப் புரியாது!
“முருகா, அவ பர்த்டே வருதுனு சொன்னேல்ல… பார்த்துக்கலாம்!” என்றேன் ஆறுதலாக.
பிறந்த நாளில் அவள் நண்பர்கள் வந்தார்கள்.‘ஹேப்பி பர்த்டே!’ பாடினார்கள். கேக் வெட்டினார்கள். கிரீட்டிங், கிஃப்ட்கள் கொடுத்தார்கள். எல்லோரும் போன பிறகு, அவள் முன்னே தனியாகப் போய் நின்றான் முருகன்.
“மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே… ஹேப்பி பர்த்டே காவ்ஸ்!”
மலர்க்கொத்தும், பரிசும், கிரீட்டிங் கார்டும் கொடுத்தான்.
பளீரென்று சிவப்பு ரோஜாக் கள், தங்க இதயத்தில் ஒரு குட்டி மோதிரம் (உபயம்: செல்வா). ‘உன்னிடம் ஐந்து நிமிடம் மனம் விட்டுப் பேச முடி யுமா?’ என்றது கிரீட்டிங் கார்டு. காவ்யா உருகி நின்றாள்.
“ஹேய் முருகா… என்னப்பா?”
“இல்ல காவ்யா… இவ்ளோ நாளா சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன். நீங்கள்லாம் ரொம்ப நாளா ஃப்ரெண்ட்ஸ். என்னதான் இருந்தாலும் நான் நேத்து வந்தவன்…’’
‘‘வாட் நான்சென்ஸ்! நீயும் அவங்களும் ஒண்ணா முருகா! அவங்கல்லாம் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்… நீ என் உயிர்டா!’’ – பதறினாள் காவ்யா. ‘‘தேங்க்ஸ் காவ்யா! நான் இப்போகூட சொல்லியிருக்க மாட்டேன். அவனுங்க என்னைப் பத்திப் பேசினா விட்ருப்பேன். ஆனா, உன்னைப் பத்தி… என் னால தாங்க முடியலைப்பா!”
“யாரு?”
“எல்லாரும்! உன்னைப் பார்த்துட்டுப் போறப்போ, ஸ்ட்ரீட் கார்னர் டீ ஷாப்ல நின்னுக்கிட்டு ரொம்ப தப்பா… அசிங்கமாப் பேசறானுங்க. இப்ப வேற வழியில்லாமதான் நீ என்னை லவ் பண்றியாம்.”
அவள் முகம் சிவந்தது.
“அப்படீனு யாரு சொன்னா?”
“யார் யாரோ சொல்றானுங்க காவ்யா. இதோ பாரு காவ்யா! நான் இதுவரைக்கும் உன்கிட்ட எதையும் மறைச்சது கிடையாது. இதையும் இப்ப சொல்லிட்டேன். எனக்கு இது போதும். நான் வர்றேன் காவ்யா!”
எழுந்து வந்துவிட்டான். அவன் சொன்னது பொய்தான். ஆனால் ‘பொய்மையும் வாய்மையிடத்து’ பொய்!
கணக்கு சரியாக இருந்தது. காவ்யா நண்பர்களைத் துரத்திவிட்டாள். முருகனின் காதல் சிக்கலின்றி ஜெயித்து விட்டது!
சில நேரங்களில் சில மனிதர்களிடம் தாம்தூம் என்று குதித்தால் வேலை ஆகாது. குளிரவைத்துதான் சூடு போட வேண்டும். அது இன்னும் ஆழமாகப் பதியும்!
தப்பித் தவறிகூட பெண்களைக் கை நீட்டிவிடாதீர்கள்.
ஏதோ ஒரு ஆவேசத்தில் ஒரு முறை அவளை அறைந்தாலும், உங்கள் காதல் பத்து அடி பின்னால் போய் நிற்கும். கை நீட்டும் ஆணை அந்தப் பெண்ணே காறி உமிழ்ந்துவிடுவாள். அதுதான் உண்மை!
“என்ன செல்வா! இவ்வளவு செய்ய வேண்டுமா பெண்களுக்கு?”
“ஆமாம்! பிரியமானவளுக்கு விருப்ப மானவற்றைச் செய்தால் என்ன குறைந்துபோகப் போகிறோம்?
எல்லா தீபங்களுக்கும் பிரகாசம் கூட்ட, ஒரு கரம் தூண்டத்தான் வேண்டும்.
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். கொஞ்சம் இனிப்பு சேருங்கள். யாராவது ஒரு பெண்ணிடம் முட்டாளாக இருப்பதைவிட உயர்ந்த சுகம் என்று உலகத்தில் ஏதும் கிடையாது. ‘சரி… ஆணுக்குத்தான் உபதேசமா… பெண்ணுக்கில்லையா?’ என்று கேட்பது புரிகிறது.
கோபித்துக் கொள்ளாவிட்டால்…
‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’
ஒரு பெண் இறுக்கமாய் இருந்தால்… திமிர், கொஞ்சம் சிரித்துப் பேசினால்… ‘ஈஸி’ டைப். பையன்களிடம் நட்பாய் இருந்தால்… எதற்கும் துணிந்தவள். விருப்புவெறுப்புகளில் தெளிவாக நின்றால்… அடங்காப் பிடாரி. தன் வாழ்வைத் தானே தீர்மானித்தால்… ஓடுகாலி. பெண்களுக்கு சமூகம் சூட்டுகிற பெயர்களுக்கா பஞ்சம்?
பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் ஆதங்கம்.
சில மேலை நாட்டுப் பெண்களைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தாண்டி, ஆணுக்கு மேலாக அவர்கள் கரமும் தரமும் ஓங்கியிருக்கும். தனியாகவே வாழ முடிகிற துணிவும் தகுதியும் இருக்கும்.
ஆனால், இங்கே இந்தியாவில் கல்யாணச் சந்தை என்று வந்துவிட்டால், பெண்கள் நிலை பரிதாபம்.
ஏறக்குறைய துப்பறியும் நிபுணர்களாகவே மாறி, என்னென்னவோ விசாரித்த பின்புதான் ஒரு பெண்ணை ஒப்புக்கொள்வார்கள்.
ஆனால், பெரும் காமுகனுக்குக்கூட பேசாமலேயே பெண் கொடுக்கச் சம்மதிப்பார்கள்.
என்ன நான்சென்ஸ் இது!
பெண்கள் எப்போதுமே பெரும் சக்தி. அனிச்சையாய் மாராப்பைச் சரிசெய்கிற விரல்கள். கண் சிமிட்டல்களையும் காத்திருப்புகளையும் தவிர்க்கிற விழிகள் என இயற்கையாகவே பெண்களிடம் எச்சரிக்கை உணர்வு அதிகம்.
அவர்கள் உடலைத் தருவதற்கு முன் உள்ளத்தைத் தருபவர்கள். ஆண்கள் போல அவசரக் குடுக்கைகள் அல்ல!
பெண்களின் பிரச்னையே, அவர்களின் வீடுதான். தனியாகச் செல்ல அனுமதி மறுப்பார்கள். வெளி மனிதர் வீடு வந்தால் உள்ளே ஒளிந்துகொண்டாக வேண்டும். கொட்டிக் கொட்டியே பெட்டிப் பாம்பாய் ஆக்கி விடுவார்கள். அப்படி ஒரு பெண்ணிடம், எவனோ ஒருவன் துரத்தித் துரத்தி அன்பைக் கொட்டும்போது, மாயக் கதவுகள் தகர்ந்து, அவள் குழந்தையாகி விடுகிறாள். வந்தவன் நல்லவனானால்… அவர்கள் அதன்பிறகு இனிதாக வாழ்ந்தார்கள்’ என்று சுபம் போடலாம். நாதாரி நாயாக இருந்தால், ஆரம்பிக்கும் நரகம்.
பத்தாவது படிக்கும்போது ப்ரீத்திக்குக் காதல். +2 படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம்செய்து கொண்டாள்.
‘தொலைந்து போ’ என்று பெற்றோரும் கைவிட்ட கதை அது!
அவனும் நல்லவன்தான். வயசின் வேகத்தில் வாழ்க்கை ஆரம்பத்தில் இனித்தது. ப்ரீத்திக்கு முதல் குழந்தை 18 வயதில். 20 வயதில் இன்னொன்று. 22 வயதுக்குள் வாழ்க்கையில் எல்லாம் பார்த்தாயிற்று. 24 வயதில் சலித்துப்போய், ‘ச்சீ!’ என்றாகி விட்டது.
ஐயோ… ப்ரீத்தி மாதிரி எத்தனை எத்தனை பெண்கள், வாழ்க்கையில் எத்தனை தொலைக்கிறார்கள். கல்வி, ரசனை, திறமை, இளமை, நட்பு, அடையாளம் என எத்தனை இழக்கிறாய் பெண்ணே!
எங்களால் கீர்த்தனாவை மறக்கவே முடியாது. கொள்ளை அழகு… பையன்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். எல்லாவற்றுக்கும் புன்னகை மட்டுமே பதில்.
எனக்கும் அவளைப் பிடிக்கும். அவள் கண்களில் மிதக்கும் கனவுகள் பிடிக்கும். நானும்கூடக் காதலைச் சொன்னேன். சிரித்தாள். ‘இதுதான் உன் வாழ்க்கையின் லட்சியமா..?’ என்றாள். நான் பதில் கிடைக்காமல் தடுமாறினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள் கீர்த்தனா. அந்த நிமிடம் எனக்கு அவமானமாக இருந்தாலும் பிறகு அதைக் கடந்து அவளுடன் நட்பைத் தொடர முடிந்தது.
இப்போது நாசாவில் வேலை செய்கிறாள். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செல்வா! எவ்வளவு நாள் கனவு… நான் ஜெயிக்கப் போறேன். இன்னும் ஒரு வருஷத்துல ப்ராஜெக்ட் லீடர் ஆயிடுவேன்’ என்று மெயில் அனுப்பியிருந்தாள். கணவன் பற்றியோ, குழந்தை பற்றியோ… ம்ஹ§ம்!
வாழ்க்கை சிலருக்கு எவ்வளவு எளிதாகப் போய்விடுகிறது!
அவளுக்கும் உணர்வுகள் இல்லாமலா இருந்திருக்கும்? உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துப் பறந்தால் மட்டுமே, உயரம் கைகூடுகிறது.
காதலா, சரி…
திருமணமா? செய்து கொள்.
‘கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது’ என்று உன் வேலையை, திறமையை, அடையாளத்தை விலையாகக் கேட்கிறானா?
‘ச்சீ…போடா!’ என்று துரத்து!
உன் அருமை புரிந்து உன்னை ‘இன்ச்… இன்ச்!’ ஆகக் காதலிக்க ஒருவன் கிடைப்பான். அதுவரை காத்திரு! கிடைத்தது போதும் என்று அவசரப்படாதே!
தன்னடக்கத்துக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
கறுப்பு, குள்ளம், படிப்பு, பணம் என்று எதுவுமே பிரச்னை ஆகக் கூடாது பெண்களே… மனம் மட்டும்தான் பிரதானம்!
கறுப்பாக இருந்தால், உன்னை ஒருவரும் பார்க்கா விட்டால், உன்னைக் காதலிக்காவிட்டால் என்ன இப்போது?
இதை ஒரு குறையாகத் துயரப் பட்டு புழுங்கும் பல பெண்களைப் பார்த் திருக்கிறேன்! இளமை கொல்லும் அந்த மூன்று வருடங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் பின் நீதான் ராணி!
இதற்கெல்லாமா தனிமைப்பட்டு போவது? உலகத்தின் பெரிய மாடல்கள் கறுப்பு நிறம்தான். முதலில் உன்னை உனக்குப் பிடிக்க வேண்டும்!
செல்வி… நல்ல கறுப்பு. காலில் மெலிதான ஊனம். விந்தி விந்தி நடப்பாள். அவளே எல்லாரிடமும் வலிய வலியப் பேசுவாள். நாலு பேர் இருக்கிற இடத்தில், நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பாள்.
அவளின் தோழிகள்கூட அவளை ஒரு பொருட்டாக நினைத்தது கிடையாது. திடீரென்று ஒரு நாள் விஷம் குடித்துவிட்டாள் செல்வி. காரணம்… ‘கல்லூரியில் யாரும் அவளைக் கண்டு கொள்ளவில்லையாம்!’
மருத்துவமனையில் போய்ப் பார்த்தோம். அவளது பெற்றோர்கள், அழுதுகொண்டே வாசலில் நின்றார்கள். ‘என்ன கொற வெச்சோம் இவளுக்கு?’ என்று விசும்பினார்கள். நண்பர்கள் ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.
நான் அவளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டுக் கேட்டேன்.
”அடடா! பொழைச்சிட்டியா… கொஞ்சம் விஷம் கொண்டுவந்து தர்றேன். குடிக்கிறியா செல்வி?”
“விஷம் கொண்டு வந்து தர்றேன்… குடிக்கிறியா?” அமைதியாகக் கேட்டேன். ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க என்னைப் பார்த்தாள் செல்வி.
“ஆமா செல்வி! அழகு, கலர்… இது மாதிரி ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கே செத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேல்ல!
நாளைக்கு வாழ்க்கையில இன்னும் பெரிய பெரிய சோதனைகள் வருமே செல்வி… அதெல்லாம் நீ எப்படித் தாங்கப் போறே? வேணாம்! ப்ளீஸ்… இப்பவே செத்துடேன்!”
“செல்வா, ப்ளீஸ் கெட் அவுட்!” – அவள் கண்களில் அழுகை முட்டியது.
“அவனவன் எய்ட்ஸ§க்கு மருந்து கண்டுபிடிக்கிறதுஎப்படி? க்ளோனிங் பண்றது எப்படினு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான். உனக்கு என்ன கவலை பாரு! (சிரித்தேன்) உலகத்துல ஒரு வேளை சாப்பாடு இல்லாம கோடிக்கணக்குல சாகுறாங்க.. இங்க உனக்கு சாப்பாடு, விதவிதமான டிரஸ், கேக்கறதெல்லாம் செய்யறதுக்கு அப்பா, அம்மா, பி.இ., இவ்வளவு இருந்தும் சாகறதுன்னா… உடம்பு முழுக்கத் திமிர்னு அர்த்தம்..!”
“வெளில போடா நாயே… கெட்-அவுட்!” உடைந்து போய் பெரிதாய் கத்தினாள். நான் பேசாது வெளியே வந்துவிட்டேன். அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில் செல்வியைப் பார்க்கவோ, பேசவோ சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. நான் மெக்கானிக்கல். அவள் இ.இ.இ.
எப்போதாவது தென்பட்டால்கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவாள். ஏறக்குறைய என்னை ஒரு விரோதி போலத்தான் பார்த்தாள்!
ஒரு வருடம் முன்பு முன்னாள் மாணவர்கள் எல்லோரும் கல்லூரியில் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்ளக் கூடினோம். 1997-ம் வருட மாணவர்களில் ஏறக்குறைய அனைவரும் வந்திருந்தார்கள்.
ஒரே ஜாலியும் கலாட்டாவுமாக இருந்தது அந்தச் சந்திப்பு. அநேகமாக அனைவருமே அடையாளம் மாறியிருந் தார்கள். அடையாளம் தெரியத் தெரிய… ஒரே ஆனந்தம்தான்! எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினோம். ஒரே நேரத்தில் பதில் சொன்னோம்! பெரும் பாலானவர்களுக்கு திருமணம் ஆகியிருந் தது. சிலர் மனைவி, குழந்தை களுடன் வந்திருந்தார்கள். நாங்கள் பார்த்து ஏங்கிய சூப்பர் ஃபிகர்களெல்லாம் ஆன்ட்டிகளாகி இருந்தனர். கண்கள் நம்ப மறுத்தன. ‘ச்சீ… இது அவளில்லை’ என நாங்களே ஒரு ஆறுதலுக்கு சொல்லிக்கொண்டோம்!
யாரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிற மாதிரி தெரிய வில்லை. கஷ்டப்பட்டாலும் வெளியில் சொல்ல மனமில்லை! படிக்கிற காலத்தில் என்னைத் திரும்பிக்கூட பார்க்காத பெண்களெல்லாம் அன்று என்னை வியப்பாகப் பார்த்தபோது மனதில் ஒரு சந்தோஷம்! என் முகம் கொஞ்சம் டி.வி\யிலும் பத்திரிகைகளிலும் வந்து விட்டதால் என்னைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது. என் படங்கள் பற்றி, அதில் வந்த காட்சிகள் பற்றி பட்டிமன்றமே நடந்தது.
திடீரென ஒரு பெரிய படகு கார் வந்து நின்றது. பென்ஸ்… உள்ளிருந்து அவள் இறங்கினாள். நாங்கள் கண்ணிமைக்காது பார்த்தோம். ஆ! உடலெங்கும் மினுமினுப்பு. மாநிறம். டாலடிக்கும் வைரம் காதிலும் கையிலும். நடையிலே ஒரு கர்வம். பார்வையில் ஒரு அலட்சியம். உலகம் என் காலடியில்தான் என்பது போல். ஆஹா.. இவளை எங்கோ பார்த்திருக்கிறேனே! சுரீரென உறைத்தது. ஹேய்… இது… இது… ஆம்… அவள், அதே கறுப்பு செல்விதான்!
கண்ணிமைக்க முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை… அங்கே ஒரு அசாதாரண அமைதி நிலவியது. செல்வி பார்த்து பொறாமைப்பட்ட சிகப்பழகிகளின் முகங்களைப் பார்க்க வேண்டுமே… பொறாமை தாண்டவம்!
ஒரு கும்பல் அப்படியே செல்வியைச் சூழ்ந்தது. நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்! எல்லா கேள்வி களுக்கும் ஒரு தலையசைப்பு. மெல்லிய புன்முறுவல். அடிக்கடி மணி பார்த்துக் கொள்ளும் மெல்லிய ஆணவம்… வாழ்க்கையில் வெற்றியடைந்த அடையாளங்கள்.
ஏறக்குறைய அனைவரும் கிளம்பிவிட்டனர். செல்வி கடைசியாக என்னிடம் வந்தாள். நான் இமைக்காது பார்த்தேன். அவளும் பார்த்தாள். மௌன விநாடிகள் நகர்ந்தன.
‘ஹாய் செல்வி..!’ என்று மௌனத்தைக் கலைத்தேன். அவள் பேசாது என்னைத் தழுவிக் கொண்டாள். ஒரு இரண்டு நிமிடம். அப்படியே நின்றிருந்தோம். நண்பர்கள் புரியாமல் பார்த்தனர். என் மார்பில் ஈரமானது போல் உணர்ந்து திடுக்கிட்டுப் பார்த்தேன். செல்வி சத்தமில்லாமல் அழுதுகொண்டு இருந்தாள்.
“ஏய்… என்ன செல்வி இது… … இதோ பார்…” மற்றவர்களுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். படிப்பை முடித்ததும் தனியாக ஒரு கம்பெனி தொடங்கி விட்டாளாம். வெறித்தனமான உழைப்பு. இன்று இந்தியாவெங்கும் ஐந்து கிளைகள்!
“எதைப் பத்தியும் கவலைப்படல செல்வா… ராத்திரி, பகல் எதுவுமே தெரியாது.பகலெல்லாம் என் கம்பெனியில் இருப்பேன். ராத்திரி முழுக்க இன்டர்நெட்ல ரிசர்ச்…. ப்ச்… நேத்துதான் நீ பேசிட்டு போன மாதிரி இருக்கு. என்னிக்காவது உன்னைப் பாத்தா தேங்க்ஸ் சொல்லணும்னு நெனச்சேன்… நல்லவேளை! நீயும் நல்ல நிலைமையில் இருக்கே. இல்லன்னா இவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு நாம இப்படி இருக்கோமேனு உன் மனசு வருத்தப் பட்டிருக்கும்.” நிறைய பேசினாள். மீட்டிங் முடிந்து தனியாக காபி ஷாப் வந்திருந்தோம்.
“கல்யாணம் பண்ணலையா செல்வி?”
“ப்ச்… உன்ன மாதிரி ஒருத்தனை தேடிட்டிருக்கேன் செல்வா…”
புருவம் உயர்த்திப் பார்த்தேன். பார்வை புரிந்து, “ஆனா, நீ வேணாம்!” என்றாள். சிரித்துவிட்டேன்.
“இப்ப நிறைய விஷயங்கள் புரியுதுடா… காலேஜ்ல எப்படில்லாம் இருந்தேன்னு நினைச்சா சிரிப்புதான் வருது. உலகம் ரொம்ப பெரிசுடா! நாமதான் அதைச் சுருக்கிடறோம்.’’
எனக்குப் புரிந்தது. நானும் இதை உணர்ந்திருக்கிறேன். இளமையில் நிறைய விஷயங்கள் புரியாது. வயது ஆக ஆக ஒவ்வொன்றாகப் பிடிபடும். அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டால், வாழ்க்கை திசை மாறிப் போய்விடும். ஏறக்குறைய கண்ணீருடன் தான் இருவரும் பிரிந்தோம். இருவரும் செல் நம்பர்கூடப் பகிர்ந்துகொள்ளவில்லை. சில உறவுகளுக்குத் தூரம் அழகு!
சோகங்களை மிதித்து, சோதனைகளை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கி, இரவு களில் அழுது, நாம் நம்புவது சரிதான் என்று ஆணித்தரமாக மனதினில் பதித்து, வெறித்தன மாக அலைந்து திரிந்தால்தான் வெற்றி சாத்தியமாகிறது.
காரில் நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டு இருக் கிறேன்… செல்வி சொன்னது எனக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது. ‘உனக்கென்ன… ஈஸியா டைரக்டராகிட்டே!”
அப்போது சிரித்து, அடுத்த சப்ஜெக்ட் தாவிவிட்டாலும் மனசு அதை நினைத்து கொந்தளிப்பில் இருந்தது. சினிமாவில் என்னைக் குத்திக் கிழித்து ரணகளப்படுத்திய நபர்கள்தான் எத்தனை எத்தனை?
யுவனும் நானும்!
யுவன் எனக்கு முக்கியமான நண்பன். தொழில் ரீதியாகவும், மனதளவிலும் நிறைய பகிர்ந்து கொண்டு இருந்திருக்கிறோம். யுவன் என்றால் எனக்கு அணை போட முடியாத பொங்கிப் பாயும் இளமை துள்ளல்தான் நினைவுக்கு வரும். அவனை கல்யாண மேடையில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. ம்… எங்களுக்கும் வயதாகின்றது!
சினிமா உலகில் எப்படியோ ஐந்தாறு வருடங்கள் கடந்துவிட்டேன். இன்று ஜில்லிடும் ஏ.சி.காரில் உலவு கிறேன். கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஆனாலும், என் ஜன்னலுக்கு வெளியே நடமாடுகிற மனிதர்களைப் பார்த்தால், ஏனோ பொறாமை எட்டிப் பார்க்கிறது.
பைக்கின் முன்னால் ஒட்டிக்கொண்டு ஒரு குட்டிக் குழந்தை… பின்னால் கட்டிக்கொண்டு காதோரம் ரகசியம் பேசும் மனைவி… குஷியாகக் காற்றில் பறக்கும் கணவன்… ம், கொடுத்து வைத்தவர்கள்!
காலையில் ஆபீஸ் போய், மாலையில் வீடு திரும்பி, குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடி, குடும்பத்துடன் சாப்பிட்டு, டி.வி. பார்த்து பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்குப் போகிறவர்கள் பாக்கியசாலிகள்!
எங்களின் உலகம் வேறு! நாங்கள் சில நேரம் மாதக் கணக்கில் ஒழுங்காகத் தூங்குவதில்லை.சாப்பிடு வதில்லை. எந்நேரமும் பதற்றம். ஏதேதோ ஓட்டம். சினிமா ஒரு காடு. அடர்ந்து இருள் படர்ந்து கிடக்கும் காடு. இரவும் பகலும் விழித்திருந்து வெறித்தனமாக இரை தேடினால் மட்டுமே உயிர் வாழ முடிகிற பிராணிகள் நாங்கள்!
படிப்பை முடித்து எந்த வேலைக்கும் போகாமல் ‘இனி சினிமாதான் என் வாழ்க்கை!’ என்று வீட்டில் ஒரு வருடம் உட்கார்ந்திருந்தேன். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் அது.
எங்கிருந்தோ ஒரு துணிச்சல்… சினிமாத் தேடலுடன் கிளம்பினேன். தினமும் தெருத்தெருவாக ஒவ்வொரு சினிமா கம்பெனியாகச் சுற்றுவேன். ”நான் இவருடைய அஸிஸ்டென்ட். தயாரிப்பாளரைப் பார்த்துக் கதை சொல்ல முடியுமா?” என்பேன். எல்லா இடத்திலும் எப்பொழுதும் ஒரே பதில்தான் வரும்… ”ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்து பாருப்பா!”
வெளியில் வந்தால், தெருவில் நாலு பேர் நிற்பார்கள். ‘‘என்ன?’’ என்றால், ‘‘தயாரிப்பாளர் இந்த வழியாத்தானே ஆபீஸ§க்குள்ள போவார்!” என்றான் ஒருவன். ‘‘அதனால..?’’ என்றேன் ஒரு டீ வாங்கித் தந்துவிட்டு.
அவன் கண்களில் கொஞ்சம் உயிர் வந்தது. பைத்தியக்காரன் போல் பார்த் தான். ‘’தினமும் விஷ் பண்ணுவோம்… ஒரு ஆறு மாசம் கழிச்சு அவரே யாரை யாவது உள்ள கூப்பிடுவாரு…’’ என்றான். எனக்கு மயக்கமே வந்தது. ‘‘வேற வழி இல்லையா?’’ என்றேன். ”நீ நகரு… என் இடத்துல வேற எவனோ நிக்குறான்” என்று விலக்கினான். இப்படி தினமும் ஒரு தினுசான அனுபவம். சினிமா ஓங்கி அறையும். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்புவேன்.
இதோ இரண்டு வருடத்தில் நான் ஒரு குட்டி மணிரத்னம்… நான்கு வருடத்தில் அடுத்த ஸ்பீல்பெர்க் என விழித்துக்கொண்டே கனவு கண்டிருக் கிறேன். இரண்டு மாதங்கள் உதவி இயக்கு நராக வேலை பார்த்தேன். அங்கே பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, சிலர் இன்னும் உதவியாளர்களாகவே இருப்பதைப் பார்த்ததும், ”எங்கே நம் விதியும் இப்படியே முடிந்து விடுமோ?” என்று பயந்து வேகமாக வெளியேறிவிட்டேன். ஒரு தொழிற்சாலையில் அடைபட்டுக் கிடக்கக் கூடாது என்பதற்காகத்தானே நான் இன்ஜினீயர் வேலைக்கே போகாமலிருந்தேன்!
எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும். ‘சில வருடங்களில் நானும் இதுபோல் ஆகிவிடுவேனா?’ | பயம் வயிற்றைப் பிசையும். சோறு இறங்காது. தந்தை என் வேதனை பார்த்து, ‘‘நானே தயாரிக்கிறேன்… ஏதாவது கதை இருந்தா சொல்லு!’’ என்றார். சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு ஹீரோவிடம் கதை சொல்ல, கஷ்டப்பட்டு நேரம் வாங்கித் தந்தார். கதை சொன்னதும், கண்ணீருடன் என்னை கட்டிப்பிடித்த ஹீரோ, ”எனக்கு இதை அப்படியே எடுத்துக் கொடுப்பா!’’ என்றார்.
மடமடவென்று வேலைகள் ஆரம்பமாயின. ‘‘எல்லாவற் றையும் என்னைக் கேட்டுத் தான் செய்ய வேண்டும்’’ என்றார் ஹீரோ. செய்தேன். ஹீரோயினாக ஒரு மும்பை அழகியைக் காட்டி, ‘‘கேளுங்கள்’’ என்றார். ஒரு மாதம் மும்பையில் அலைந்துஅந்த ஹீரோயினைப் பார்த்தேன். அவர் கதை கேட்கும் முன் ‘‘சம்பளம் இவ்வளவு இருந்தால் மட்டும் பேசலாம்’’ என்று ஒரு தொகை சொன்னார்.
எனக்குத் தலை சுற்றியது. பின்னே… சம்பளமாக என் படத்தின் பட்ஜெட்டை அல்லவா கேட்டார்! ஹீரோவுக்கு போன் செய்தால், அரை மனதோடு, ‘‘அப்படியா… சரி, புதுமுகம் பாருங்க!’’ என்றார். கிடைத்த போட்டோக்களை அள்ளிக்கொண்டு போய், அவரிடம் காட்டினேன்.
‘’யாருமே சரியாயில்லையே!’’ என்றார். ‘‘என்ன செய்யலாம்?’’ என்றேன். ‘’பார்க்கலாம்… நான் அவசரமா வெளியே போறேன்…’’ என்று நகர்ந்து விட்டார்.
ஒரு ஆறு மாதம் அவர் பின்னாலேயே அலைந்தேன். அவர் ஷ¨ட்டிங்கில் இருக்கிற இடமெல்லாம் போனேன். ஒரு நல்ல நாளில், ”இந்த ஸ்கிரிப்ட் உங்களால சரியா ஹேண்டில் பண்ணமுடியுமானு தெரியலை… ஸாரி!” என்றார்.
எனக்கு இன்றைக்கும் அவர் மேல் கோபமே இல்லை. அவருக்கு அப்போது என்ன பிரச்னையோ? ஆனால், என்னை அவ்வளவு அலைக் கழித்ததுதான் வருத்தம்!
நொறுங்கிப்போய் திரும்பி வந்தேன். இனிமேல் என்ன இருக்கிறது என்று நொந்து போன வேளையில் எனக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்டவர்கள் இருவர்.
அவர்கள் நடிகர் முரளியும், விக்ரமும்!
‘எப்போ ஷ¨ட்டிங் ஆரம்பிக்கலாம்?’
‘காதல் கொண்டேன்’ கதையை நான் சொன்னதும், நடிகர் முரளி என்னிடம் கேட்டது, இன்றைக்கும் நினைவிருக்கிறது. என் உள்ளே புது ரத்தம் பாய்ச்சிய வார்த்தைகள்!
நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா என்ன? பாடல் பதிவு செய்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்தன. ஆனால், அந்த என் கனவு அதற்கு மேல் வளரவில்லை!
என்னென்னவோ காரணங்கள். பக்கங்கள் போதாது.
என் தந்தை ‘நீ பறப்பதற்கு ஆசைப்படுகிறாய்’ என்றார். நான் பறந்துகொண்டேதான் இருந்தேன். கீழே இறங்கினால் தானே ஆசைப்பட!
ஆனால், என்றைக்கும் எனக்கு முரளியின் சிரித்த முகம் நினைவிருக்கும். ‘காதல் கொண்டேன்’ படம் வந்ததும், அதைப் பார்த்துவிட்டு ‘தனியரு மனுஷனா போராடி ஜெயிச்சுட்டீங்க செல்வா..! உங்க குடும்பத்தைத் தூக்கி நிறுத்திட்டீங்க!’ என்றார். வார்த்தைகளின் கனம் தாங்காமல் எனக்குக் கண்ணீர் முட்டியது.
‘சேது’ ஹிட்டான சமயம். நடிகர் விக்ரமைப் பார்த்து கதை சொன்னேன். அசந்துபோய்ப் பார்த்தார். ‘பிரமாதமா இருக்கு. நிச்சயமா நாம பண்ணலாம்!’ என்று இடைப்பட்ட காலத்தில் எனக்கு நம்பிக்கை தந்த இன்னொரு நல்லவர்.
மூன்று தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றிச் சொன்னார். போய்ப் பார்த்தேன். ‘நல்லா இருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சு வந்து பாருங்க!’ ‘ஓகே’தான். ஆனா, நான் ரிஸ்க் எடுக்க முடியாது!’ என்று பதில்கள் வர… நொறுங்கிப் போனேன். விக்ரம் தட்டிக் கொடுத்தார். ‘சோர்ந்துடாதீங்க… வாய்ப்பு வரும்! உங்களை இந்த இண்டஸ்ட்ரி நிச்சயமா மிஸ் பண்ணாது செல்வா!’ என்ற அவரது வார்த்தைகள், என் நரம்புகளில் உற்சாக மின்சாரம் பாய்ச்சின.
‘காதல் கொண்டேன்’ கதையைச் சுமந்து தெருத் தெருவாக அலைந்தபோது, என் விதி இப்படியெல்லாம் மாறும் என்று சத்தியமாக நான் நினைத்ததில்லை.
என் குடும்பத்தினர் யாரையும் என்னால் நேராகப் பார்த்துப் பேச முடியாது. யார் என்ன பேசினாலும், நான் தண்டமாக இருக்கிறேன் என்று குத்திக்காட்டுவது போல் இருந்தது! அப்போதெல்லாம், கடவுள் என் முன்னால் வந்து எனக்கு எதிரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி பேசிவிட்டுப் போவார்.
உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்கு அப்படித் தெரிந்தது. நான் அவரிடம் அழுவேன். சம்பந்தமே இல்லாமல் மூன்று நாட்கள் அவரையே நினைத்துக்கொண்டு பட்டினி இருந்ததைச் சொல்வேன். ‘ஏன், என்னைப் போட்டு இப்படிப் படுத்தி எடுக்கிறே?’ என்று திட்டுவேன். மானசீகமாகக் கோபித்துக்கொள்வேன்!
இதோ, ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பதி சந்நிதியில் அவரைப் பார்த்து மெய்யுருகி நின்றபோதுதான் புரிந்தது… அவர் முகத்தில் மெலிதான கேலிப் புன்னகை!
எனக்கு உண்மை சுட்டது. ‘கேட்டதெல்லாம் கொடுத்த பிறகும், மறுபடி வந்து பிச்சை எடுக் கிறாயே!” கண்களால் பேசினார். பதில் சொல்லத் தெரியாமல் நன்றியுடன் வெளியே வந்தேன்.
‘துள்ளுவதோ இளமை’ என்று படம். நான் கடவுளுடன் பேசிக்கொண்டு இருந்த காலத்தில் என் தந்தை எடுத்த படம். பாதிக்கு மேல் வளர்ந்து நின்றிருந்தது. ஒரு நாள் எனக்குப் போட்டுக் காண்பித்தார். படத்தில் எனக்குக் காட்சிகள் புரியவில்லை. கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன். அவரது வலி புரிந்தாலும், ‘எனக்குப் பிடிக்கலை!’ என்றேன். எடிட்டரும் உதவியாளர் களும் ஆமோதித்தனர். ‘என்ன செய்யலாம்?’ என்றார் அப்பா. விழி பிதுங்கிய யோசனைக்குப் பிறகு, ‘நீயே செய்றியாடா?’ என்றார். என்ன தோன்றியதோ… ‘சரி!’ என்றேன்.
வேலையில் இறங்கினேன். அதுவரை எடுத்திருந்த மொத்தப் படத்தையும் தூர வைத்துவிட்டு, புதிதாக எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்பாவுக்கு அதில் வருத்தம். ஆனாலும், மறைத்துக் கொண்டு தோள் கொடுத்துத் தாங்கினார்.
அந்தப் படத்தில் ஏற்கெனவே நடித்த பெண் ணிடமே மீண்டும் கால்ஷீட் கேட்டோம். ‘உங்களை மாதிரி உப்புமா கம்பெனிக்கு எல்லாம் இனிமே அவ நடிக்க மாட்டா… அவ தெலுங்குல பயங்கர பிஸி! இனிமே எனக்கு போன் பண்ணித் தொந்தரவு பண்ணாதீங்க!’ என்று ஏழெட்டுக் கெட்ட வார்த்தைகள் சொல்லி யாரோ போனை வைத்தார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தையிடம் போன் செய்தால், ‘நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணுமா? மரியாதையாகப் போய்விடுங்கள். இல்லை என்றால் கோர்ட்டில் கேஸ் போடுவேன்!’ என்றார்.
அப்போதிருந்த பொருளாதாரச் சிரமங்களுக்கு நடுவே, இன்னொரு புது ஹீரோயின் தேடுவது எவரெஸ்ட்டில் ஏறுவதற்குச் சமமாக இருந்தது. என் கேமராமேன் அர்விந்த் யோசனைப்படி, பெங்களூர் தெருக்களில் தேடி ஷெரீனைக் கண்டுபிடித்தோம். திட்டமிட்டபடி படத்தை முடித்தோம்.
‘துள்ளுவதோ இளமை’ என் கனவுப் படம் இல்லை. என் மனதில் ஓடிய உலக சினிமா இல்லை. ஆனாலும், அது ஒரு வாய்ப்பு… முதல் வாய்ப்பு!
என் அப்பா கேட்டவுடன், ‘என் கதையைத்தான் முதலில் எடுப்பேன்!’ என்று அடம் பிடிக்காமல், ‘சரி’ என்று சொன்ன அந்த ஒரு சிறிய பதில்தான், என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. எவ்வளவு சிறிய வாய்ப்பிருந்தாலும், அதில் முன்னேற்றத்துக்கு ஒரு துளி தென்பட்டாலும் சம்மதித்து, சவாலை ஏற்பது உத்தமம்!
இன்றைய இளைஞர்களிடம் எனக்குப் புரியாதது இதுதான். எத்தனையோ சின்னச் சின்ன நல்ல வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டுவிட்டு, வாழ்க்கையெல்லாம் புலம்பியபடி திரியும் எத்தனையோ இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். காற்றிலே ஒரு நூல் பறந்து வந்தாலும், அதைப் பிடித்து முன்னுக்கு வர மாட்டேன் என்று வறட்டுக் கௌரவம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை… ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்று சொல்லி வைத்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை!
இப்படி அட்வைஸ் சொல்கிற அளவுக்கு நான் பெரியவன் இல்லை. அது எனக்கும் தெளிவாகத் தெரியும். ஆனாலும் காதல், கனவு, வாழ்க்கை பற்றிய என் வாழ்க்கைப் பாடங்கள் உங்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற ஆசையில்தான் எழுதினேன்… ‘கனா காணும் காலங்கள்!’
இதோ, என் அடுத்த படம் ‘புதுப்பேட்டை’ என்னை இழுக்கிறது. தூக்கமில்லா இரவுகள் காத்திருக்கின்றன. அடுத்த தேர்வுக்குத் தயாராகிறேன்!
இன்னும் இன்னும் சொல்லத் துடித்த விஷயங்கள் நெஞ்சுக்குள் நிற்கின்றன. பகிர்ந்துகொள்ளப் பக்கங்கள் தந்த விகடனுக்கு நன்றி. அழுத்தமான கைகுலுக்கலுடன் விடைபெறுகிறேன்.
இன்னொரு பயணத்தில், இன்னொரு தருணத்தில் சந்திப்போம்!
முழுவதும் படித்தேன்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
நன்றி பிரவின்… பகிர்தமைக்கு நன்றி… பலருக்கு கடந்து வந்த பாதயெய் பார்ப்பது போல் இருக்கும். இப்படி மனதில் நினைப்பதை சொல்லும் தைரியம் ஒரு சிலருக்கு மட்டும்தான் வரும். செல்வராகவன் ஒரு நல்ல நண்பனாக தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்…
Its great sir… All the best for your next film 🙂
இந்த கட்டுரைகள் படிக்க படிக்க இனிமையாக இருக்கின்றது. மிக்க நன்றி.