வழக்கமாக கழியும் நாளாக அல்லாமல் நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் ஸ்தம்பிக்க வைத்த அந்த ஒரு நாள். மூளைச்சாவுற்ற ஹிதேந்திரனின் இதயம் அவசரம் அவசரமாக காரில் எடுத்து செல்லப்பட்டு மின்னல் வேகத்தில் சென்னை சாலைகளில் கடந்து ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாள். அதுதான் இந்த “சென்னையில் ஒரு நாள்”.
மலையாளத்தில் ட்ராபிக் என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்து ஜெயித்த படம் இது. இப்போது ரீமேக் செய்யப்பட்டு ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழில் வெளிவந்திருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு சமூக அக்கறையுடன் வெளிவந்து மக்களிடம் ஒரு நல்ல கருத்தை விதைக்கும் படம்.
மீடியாவில் வேலைக்கிடைத்து, பல கனவுகளுடன் முதல் நாள் வேலைக்கு செல்லும் இளைஞன் கார்த்திக். குடும்ப சூழ்நிலையால் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட ட்ராபிக் போலீஸ் சத்தியமூர்த்தி (சேரன்). பேர் புகழ் என்ற மாய வலையில் சிக்கி, தன் மகள், மனைவியிடம் கூட நேரம் செலவிடாமல் சதா பரபரப்பாக சுத்திக்கொண்டிருக்கும் சினிமா நட்சத்திரம் கவுதம் (பிரகாஷ் ராஜ்). புதிதாய் திருமணமாகி தன் மனைவியுடன் புது வாழ்கையை தொடங்கியிருக்கும் டாக்டர் ராபின் (பிரசன்னா). இவர்கள் நால்வரும் சந்திக்கும் ஒரு புள்ளி தான் கதை துவங்கும் இடம்.
படத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே சிக்னலில் காத்திருக்கும் கார்த்திக் திடீர் விபத்தினால் தூக்கி எறியப்பட்டு மூளைச்சாவுறுகிறான். மற்றொருபுறம் பிரகாஷ் ராஜின் மகள் இதயக்கோளாறினால் அவதியுற்று சில மணி நேரங்களில் மாற்று இதயம் பொருத்தப்படாவிட்டால் உயிரிழக்கும் நிலை. கார்த்திக்கின் மூளைச்சாவு, அவனை கொன்று, இதயம் பிரிக்கப்பட எடுக்கும் முடிவு என்ற எமோஷனல் காட்சிகளில் தொடங்கி, 120 கிலோமீட்டர் தூரமுள்ள வேலூருக்கு குறைவான நேரத்தில் காரில் எடுத்துச்செல்லும் பரபரப்பான காட்சிகளாக விரிந்து, அந்த சிறுமியின் உயிர் காப்பாற்றப்படும் ஒரு நெகிழ்வான முடிவுடன் நிறைவடைகிறது படம்.
இடைவேளையின் போது மக்கள் அனைவரும் கைதட்டிவிட்டு அரங்கிலிருந்து வெளியேறுவதை முதன் முறை பார்க்கிறேன். பரபரப்பின் உச்சத்தில் நிறுத்தப்படும் அந்த இன்டர்வல் ப்ளாக் மக்களை ஆர்ப்பரிக்க செய்துவிடுகிறது. வெளியே வந்து, மீண்டும் உள்ளே செல்லும் வரை அநேகம் பேர் படத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்ததையும் கேட்க்க முடிந்தது. பொதுவாக நான்கு, ஐந்து முறை மக்கள் ஒரு சேர கைதட்டி பார்த்தாலே படம் ஹிட் என்று கூறுவர். இதில் பல இடங்களில் கைதட்டலை கேட்க முடிகிறது. இதுதான் கதை என்று தெரிந்தும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன என்று படத்தோடு ஒன்றிப்போய் பார்க்க முடிகிறது என்பது தான் படத்தின் மிகப்பெரிய பெரிய ப்ளஸ்.
படத்தில் அடிக்கடி கதையின் முன்னும் பின்னும் சென்று, ஒரே நேரத்தில் பல நபர்கள், பல நிகழ்வகளை காட்ட வேண்டி இருப்பதனால் எடிட்டருக்கு இதில் சவாலான வேலை. கச்சிதமாக செய்திருக்கிறார். இறந்து போன கார்த்திக்கை ஐ.சி.யூவில் அவனுடைய காதலி பார்க்கும்போது, அப்படியே பேட் இன் ஆகி உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் அந்த சிறுமியையும், அருகில் நிற்கும் அவளுடைய தாயார் ராதிகாவையும் காட்டப்படும்போது ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் சூழ்நிலைகள் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இப்படி படம் நெடுகிலும்.
படத்தின் இன்னொரு முக்கியமான ப்ளஸ் என்பது நண்பர் அஜயன் பாலாவின் வசனம். மிக யதார்த்தமாக, சினிமாத்தனம் இல்லாமல் கதையோட்டத்திற்கு பக்க பலமாய் இருக்கிறது. “Lets give him a good farewell” என்று கார்த்திக்கை கொன்று இதயத்தை எடுக்க ஏற்பாடு செய்யச்சொல்லி அவன் காதலி பார்வதி சொல்லும் இடமாகட்டும். சென்னை டூ வேலூர் ட்ராபிக் கண்ட்ரோல் செய்ய முடியாது என்று ஆரம்பத்தில் கையை விரிக்கும் கமிஷனர் சரத்குமாரிடம், எனர்ஜி வார்த்தைகள் பேசி விஜயகுமார் அவரை சம்மதிக்க வைப்பதும், பின்னர் அந்த எனர்ஜி அப்படியே சரத்குமாரிடம் இருந்து அவருடைய கீழ்நிலை ஊழியர்களிடம் ட்ரான்ஸ்பர் ஆகுமிடம். “ஒரு நடிகரா நீங்க ஜெயிச்சிருந்தாலும் உங்க வாழ்கையில தோத்துட்டீங்க. தமிழ் சினிமா பார்த்திராத பிக்கஸ்ட் பெயிலியர் ஆப் தி பிக்கஸ்ட் ஸ்டார்” என்று பிரகாஷ் ராஜிற்கு ராதிகா வார்த்தைகளால் சூடுபோடும் இடம் என்று பல இடங்களில் பளிச்சென்ற எதார்த்த வசனங்கள்.
மினிஸ்டர், எம்.பி. என்று யார் பேசியும் கார்த்திக்கின் பெற்றோர் அவனை கொன்று இதயத்தை தானமாய் தர சம்மதிக்கவில்லை என்று பிரகாஷ் ராஜிடம் அவர் பி.ஏ கூறும்போது. “என் பொண்ணுன்னு சொன்னீங்களா?” என்று சீறும் அந்த ஒரு இடம் போதும் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்துக்கொள்ள. படத்தில் அனைவரின் நடிப்பும் பிரமாதம் என்ற போதிலும் கார்த்திக்கின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தன்னுடய மகனை கொல்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டு அங்கிருக்க முடியாமல் தன் மனைவியுடன் காரில் வெகு தூரம் சென்று யாருமற்ற ஒரு இடத்தில் நிறுத்திவிடுவார். இதயம் உடலில் இருந்து பிரிக்கப்பட்டதை தெரியபடுத்த ஹாஸ்பிடலில் இருந்து போன் வரும். அப்படியே மனைவியை திரும்பி பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை. அனைவரையும் கலங்கடிக்கும் இடம் அது.
பல கோடி செலவு செய்து அழகான ஒரு வீடு கட்டினாலும் அதில் திருஷ்டிக்கு ஏதேனும் வைப்பது போல் இந்த படத்திற்கு சூர்யா. க்ளைமாக்ஸில் வரும் அந்த ஜிந்தா காலனி சீக்வென்சும், சூர்யா வீர வசனம் பேசி தனது ரசிகர்கள் மூலம் ட்ராபிக் கிளியர் செய்து உதவுவது அத்தனையும் தேவையற்ற நாடகத்தனம். படத்தின் நடுவில் தனது பாதையில் இருந்து சிறிது நேரம் காணமல் போகும் அந்த காரை போலே, கதை தனது பாதையிலிருந்து முற்றிலும் விலகி காணாமல் போகும் இடம் அது. இருப்பினும் குடும்பத்துடன் அனைவரும் காணவேண்டிய தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான படம். படம் முடிந்து நீங்கள் வெளியே வரும்போது, குறைந்தபட்சம் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்திருந்தாலே அது இந்த திரைப்படத்தின் வெற்றி.