கி.பி 2020 – கவிதை

Future India

கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
அலாரம் அடிக்க தொடங்கியது.
எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
இப்போது உருமாறி விட்டது என்பதினால்
செய்தி காண கணினித்திரை விரிந்தது!

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
பூமி திரும்புகிறான்  இந்தியன் என்றும்,
வேலை தேடி இந்தியாவிற்கு
படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
விரிந்து சென்றது இணையவலை.

லஞ்சம் இல்லா அரசியலால்
எதுவும் சாத்தியம் என்றேதான்
நெஞ்சம் சொல்லியது என்னோடு
அது உண்மையானது இன்றோடு.

இந்த சந்தோஷ அலையில்
மனம் பயணித்த வேளையில்
ஏதோ ஞாபகம் வந்தது போல்
இணையதளத்தை மாற்றினேன்.
இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
இணயதளம் தான் அது.

என் மகனை அதில் சேர்க்க
விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
பெயர்
முகவரி
புகைப்படமென்று
நீண்டு சென்ற அதன் நடுவே,
ஜா….தி நின்றது வெறியோடு
அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!

இரும்பாக இந்தியா மாறினாலும்
துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
மனதை தேற்றிய நேரத்தில்
வெளியே யாரோ அழைப்பது கேட்டது.

கதவை திறந்து நான் பார்த்தேன்
ஒரு முறை தேற்றிய என்மனதை
மறுமுறை தேற்ற முடியவில்லை.
வெளியே
திருவோட்டோடு பிச்சைக்காரன்!

– பிரவீன் குமார் செ

பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.

எனக்குள்ளே குற்றஉணர்வு – கவிதை

 

feeling-gulity-tamil-poem-by-praveen

நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதென
உள்ளுக்குள்ளே குற்றஉணர்வு.

எதை எதையோ எழுதிட
எனக்கும் கூட ஆசைதான்.
இருந்தும் தெரியவில்லை
எதைப்பற்றி எழுதுவதென்று.

நூலகம் சென்றேன்
கவிதைகள் கற்க.
பிரபலாமான கவிஞர்கள்
பிரபலம் பெரும் கவிஞர்கள்
வித விதமான கவிதை புத்தகங்கள்.
வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது!

தேடினேன்
தேடினேன்
நீண்ட நேர தேடலின் பயனாய்
கிடைத்து விட்டது
வைரமுத்துவின் கவிதை.

அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்.
முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்!
வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
வைர வரிகளை படைத்திட!

காதலை பற்றி எழுதிய கவிஞர்
என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
என்னில் காயாமல் இருந்தது சில நேரம்.

ஏழைகளின் துயரங்கள்
எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
கிராமத்து வாழ்க்கையை
நானும் வாழ்ந்தேன் சில கனம்.

சில நேரம் அரசியல்வாதியானேன்.
சில நேரம் ஆசிரியரானேன்.
பல நேரம் குழந்தையானேன்.
எதை படித்தேனோ
அதை போலவே மாறினேன்!

பயணம் முடிந்தது இனிதாய்.
கவிதை எழுதும் திறனிலே
பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
காதலை தவிர மாற்றத்தையும்
கவிதையாக்கும் முறையை அறிந்தேன்.

வீட்டிற்கு சென்றேன்.
மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
காகிதம் மேல் பேனா வைத்தேன்.
பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.

யோசித்தேன்…
யோசித்தேன்…
ஆழ்ந்து யோசித்தேன்….
இருந்தும்
காதலை தவிர
கருமமும் வரவில்லை!

நிலாப்பெண் – கவிதை

the-girl-and-the-moon-girl-moon_big

நிலவும் அழகுதான்
அண்ணாந்து பார்த்து
ரசிக்குமளவிற்கு.

பார்த்தால் பக்கம்தான்
நிஜமோ,
தொடக்கைகள் நீண்டும்
தொட்டுவிடா தொலைவிற்கு.

தனிமையான இரவுப்பொழுதில்,
நிலவே
துணையாகிறது.

கண்கள் காணக்கிடைத்தும்,
சொந்தமில்லை என்பதே
நிஜமாகிறது.

உன்னை நிலவென்று ஒருமுறை
கவிதை எழுதினேனே,
இப்போது புரிகிறது
நீ நிலவுதான்!

தேர்வு – கவிதை

exam-tamil-poem

தேர்வு தொடங்கியது.
கேள்வித்தாள் ஒருகையில்,
பதில்தாள் மறுகையில்.

கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
ஒன்று
இரண்டு
முன்று
.
.
.
அடுக்கிக்கொண்டே போனேன்.

தேர்வு நேரம் முடிந்தது.
ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

பாவம்!
அவருக்கு தெரியாது
என் பாக்கட்டில் மீதமுள்ள
நான் எழுதிய கவிதை தாள்களை!

பாவம்!
யாருக்கும் தெரியாது,
கடைசி வரை அந்த கேள்வித்தாள்
என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

விடையில்லா தேடல்

தேடினேன்
தேடினேன்
நீண்ட நாட்களாய் தேடினேன்
கிடைக்கவில்லை!

தொலைந்த இடம்
தெரியவில்லை.
தொலைத்த இடம்
தெரியவில்லை.
அட
இதயம் கூடவா
திருட்டு போகும்!

ஆனால்
அதை திருடியது அவளென்றறிந்து
என் இதயம் திரும்பக்கேட்டேன்.
மறுத்துவிட்டாள்.

சரி,
என் இதயம் தான் கிடைக்கவில்லை,
அவள் இதயமாவது கிடைக்குமென்று
தேடினேன்.
தேடினேன்.
அதுவும்,
கிடைக்கவில்லை.

அடிப்பாவி!
உனக்கு இதயமே இல்லையா!

– பிரவீன் குமார் செ