பல “வரி” கவிதை

 

tax

உழைத்து சம்பாதித்தால் “வருமான வரி”.
தங்கறதுக்கு “வீட்டு வரி”.
தாகம் தணிக்க “தண்ணி வரி”.
வெளிய போகணும்னா “சாலை வரி”.
சந்தோஷமா இருக்க “கேளிக்கை வரி”.
என்ன வாங்கினாலும் “விற்பனை வரி”.
எதை பண்ணினாலும் “சேவை வரி”.
சேர்த்துவச்சா “சொத்து வரி”.
தரமா வேணும்னா “சுங்க வரி”.
எதுவும் பத்தலைன்னு “மதிப்புகூட்டு வரி”.
இத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா,
மவனே கட்டுறா “சொகுசு வரி”.

இத்தோட இல்லாம,
அடுத்து வரும்பார் “சிறப்பு வரி”.
புள்ள பொறந்தா “பிறப்பு வரி”.
புட்டுகிட்டாலும் “எறிப்பு வரி”.
காசு வாங்கி ஒட்டு போட்ட நாட்டுல
யார் எக்கேடுகெட்டாலும் எல்லாம் சரி…

– பிரவீன் குமார் செ.

பிகு: 15% சேவை வரி உயர்வை கண்டு காண்டானதில் கிறுக்கியது.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை

friendship day tamil poem

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

– பிரவீன் குமார் செ.

செய் அல்லது செத்து மடி – கவிதை

 

IMG_7829

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.
எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.
எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.
நம் வெற்றியை கண்டு
உளம் மகிழ யாருமில்லை என்றாலும்
நம் தோல்வியை கொண்டாட
பெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…
சற்று தடுமாறினாலும்,
நம்மை உயிரோடு விழுங்க
அது தூங்காமல் விழித்திருக்கிறது.

“காலம் கனியும்”
என காத்திருத்தலும் பயனுக்கில்லை.
“வாழ் அல்லது வாழவிடு”
என்ற அறசீற்றமும் பிரயோஜனமில்லை.
உனக்கு இருக்கும் ஒரே வழி,
“செய் அல்லது செத்து மடி..”

– பிரவீன் குமார் செ

இன்றைய தீபாவளி – கவிதை

tv

அலாரம் ஏதும் வைக்காமல்
தெருவில் குழந்தைகள் வெடிக்கும்
பட்டாசு சத்தத்தில் முனகியவாறே எழுந்து
அருகில் இருக்கும் மொபைலை தேடி எடுத்து
வந்திருக்கும் சில வாழ்த்து மெசேஜை படித்துவிட்டு
பதிலனுப்ப அதிக காசு என்பதால்
மீண்டும் அதை அப்படியே வைத்துவிட்டு
ஷாம்பு கண்டீசனர் போட்டு தலை குளித்து
மஞ்சள் தடவி புதுச்சட்டை உடுத்தி
கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து
சூடான அசைவ உணவை சாப்பிட்டுகொண்டே
வரவேற்பறை சென்று டீ.வியை ஆன் செய்து
ஏதோ ஒரு நடிகர் பேட்டியை பார்க்க ஆரம்பித்து
இரவு ஒரு புதுப்படத்துடன் முடியும்
ஒரு மகத்தான நாளாக மாறிக்கொண்டிருக்கிறது
இந்த தீபாவளித்திருநாள்!

– பிரவீன் குமார் செ

ஆட்டோக்ராப் – கவிதை

Slam Book

ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்கையின் கடைசி நாள் என்பது மறக்க முடியாதது. எங்கள் வகுப்பில் மொத்தம் முப்பது மாணவர்களும், இருபத்தியிரண்டு மாணவிகளும் இருந்தோம். 2005ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அனைவரும் பிரியத்தயார் ஆனோம். மாணவிகளில் அநேகம் பேருக்கு அடுத்து திருமணம் தான் என்பது உறுதியாக தெரிந்தது. பிரச்சனை எங்களை போன்ற மாணவர்களுக்கு தான். அது அடுத்து என்ன என்ற கேள்வி?

அதுவும் குறிப்பாக எனக்கோ எதிர்காலம் பற்றிய பயம் வாட்டி வதைத்தது. அப்போது ஆட்டோக்ராப் என்று ஒவ்வொருவரும் தங்கள் டைரியை மற்றவரிடம் கொடுத்து, கல்லூரி வாழ்க்கையின் போது தங்களுக்குள் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பதிவு செய்துக்கொண்டோம். எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து  ஆட்டோக்ராப் டைரியிலும் கடைசியில் ஒரு கவிதையையும் சேர்த்தே எழுதிக்கொடுத்தேன். இப்போது இந்த கவிதையை மீண்டும் படிக்கும் போது கூட எதோ ஒரு இனம்புரியாத வலி மனதில் மின்னி மறைகிறது.

இதோ!
எதிர்காலம் எனும் வானத்தில்
முப்பது நிலவுகளும்,
இருபத்தியிரண்டு நட்சத்திரங்களும்,
தற்காலிகமாய் பதிக்கப்படுகிறது

நட்சத்திரங்கள்
நிரந்தரமாகிவிடும்.
தேய்வதும்,
வளர்வதும்,
நிலவின் கையில்தான்.

கடவுளிடம் வேண்டிக்கொள்.
நிலவுகள் அனைத்தும்
பவுர்ணமியாகட்டுமென்று.

நம் பயணங்கள்
வெவ்வேறு பாதையில்.
சந்திப்பு என்பது
சுலபத்தில் சாத்தியமில்லை.

அதனால்
இந்த எழுத்துக்களை
உன்னருகில் விட்டுச்செல்கிறேன்.

இதை
நீ மீண்டும் படிக்கும்போது
தேய்ந்திருக்கிறேனோ?
வளர்ந்திருக்கிறேனோ?
காலம் பதில் சொல்லும்!

வெறும்
முயற்சியையும்
தன்னம்பிக்கையும்
கைபிடித்துக்கொண்டு.
இதோ
பாதையே இல்லாத
என் இலக்கை நோக்கி
பயணாமாக போகிறேன்
என் எதிர்காலத்தை தேடி.

முகவரியோடு இருந்தால்
நினைக்க மறக்காதே!
முகவரியிழந்து இருந்தால்
மறக்க நினைக்காதே!

– பிரவீன் குமார் செ