ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ரொம்பா நாளா வாய்க்கா தகராறு, இதுல வேற கிட்ட தட்ட ஏழு வருடம் கழித்து தல-தளபதியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஹ்ம்ம் ஸ்டார்ட் ம்யூசிக்… பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் தாரத்தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு என்கின்ற ரேஞ்சிக்கு இவர் படத்தை அவர்களும், அவர் படத்தை இவர்களும் முழு நேர தொழிலாய் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள். படம் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு ரசிகர்களும் அதை பார்த்து விடுவார்கள். ஆனால் இவர்களின் சண்டையால் எந்த படம் சிறந்த படம் என்று உறுதிப்படுத்திக்கொண்டு திரையரங்கம் செல்ல சாமானியர்கள் தான் தடுமாறவேண்டியிருக்கிறது.
ரிலீஸ் ஆன அன்று சேலம் கைலாஸ் பிரகாஷ் திரையரங்கில் “ஜில்லா” இரவுக்காட்சிக்கு புக் செய்திருந்தேன். 10:30 மணிக்கு காட்சி தொடங்கும் என்பதால் சுமார் 10 மணிக்கே போயிருந்தோம். திருவிழா மாதிரி கூட்டம். 10:30 மணி ஆகியும் முந்தைய காட்சி முடிந்து யாரும் வெளிவரவில்லை. சாலையிலேயே அனைவரும் கூட்டம் கூடமாய் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை. விஜய் போஸ்டர், கட் அவுட் அருகே நின்று நிறையே பேர் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டும், அதை பேஸ்புக்கில் அப்லோட் செய்துக்கொண்டும் இருந்தனர். மணி சுமார் பதினொன்று ஆனது. இரண்டு தியேட்டருக்கான கூட்டமும் சாலையில் பொறுமையிழந்து இருந்ததால் தள்ளுமுள்ளு கூச்சல் ஏற்பட்டது.
போலீஸ்காரர் “தம்பி புரிஞ்சிக்கோங்கப்பா. ரொம்ப நீளமான படமாம்… அதுமட்டும் இல்லாமல் லேட்டா தான் போட்டாங்களாம்.. தயவு செஞ்சி வெயிட் செய்யுங்க… பணம் சம்பாதிக்கறது அவுங்க, நாங்க இங்க உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறோம்” என்று சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்திக்கொண்டு இருந்தார். ஒருவழியாய் படம் முடிந்து எங்களுடைய காட்சி சுமார் பதினொன்று முப்பதுக்கு தொடங்கியது. வழக்கமாய் ஹாய் சொல்லி நம்மை வரவேற்கும் முகேஷ் அன்று விடுப்பு எடுத்திருந்தார். (ஒருவேளை முந்தைய காட்சி முழு படம் பார்த்து இருப்பாரோ?).
படம் மூன்று மணி நேரம் நீளம். இருபது நிமிடம் இடைவேளை வேறு. ஒருவழியாய் படம் முடிந்து வெளியே வந்த போது மணி சுமார் மூன்று. வீட்டிற்கு வந்தால் அம்மா வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சி இருந்தேன்னா கோவிலுக்கு போலாம் இன்னைக்கு ஏகாதேசி. சொர்க்கவாசல் திறக்கும் என்றார். நான் என்னுடைய ரூம் வாசலை சாத்திவிட்டு என் கனவு வாசலை திறந்துவைத்தேன். என்னா அடி… ஒரு மனுஷனுக்கு ரெஸ்ட் வேணாமா!?
ஜில்லா:
- ஜில்லாவை பொறுத்தவரை சாதாரண கதை தான் என்றாலும் சுத்தமாய் சுவாரசியமாய் இல்லாத திரைக்கதையும், வழக்கமான டெம்ப்ளட் காட்சியும், காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகளும் நிறைந்த வழக்கமான விஜய் படம். இதை நடுநிசியில் நான் பார்க்கவேண்டும் என்று என் விதி இருந்திருக்கிறது.
- என்னுடன் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் இடைவேளையின் போதே வீட்டிற்க்கு போய்விடலாம் தூக்கம் வருது என்றார். (ஒன்னரை மணி). இன்னொரு நபரோ இடைவேளை பிறகு காஜல் அகர்வால் டான்ஸ் இருக்கும் அதனால வெயிட் பண்ணுவோம் என்றார். விதி மீண்டும் விளையாடியது.
- இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. மீதம் ரசிகர்களிடையே அல்ரெடி ஹிட். படத்தின் பின்னணி இசையும் அபாரம். மொத்தத்தில் இமான் கொஞ்சம் இந்த படத்தை தாங்கி இருக்கிறார்.
- இப்படி ஒரு வழக்கமான மசாலா படம் என்று தெரிந்தும் மூன்று மணி நேரத்திற்கு எடிட்டர் ஏன் ஜவ்வனே இழுத்தார் என்று தெரியவில்லை!
- “பசங்க” ஸ்ரீ ராம் விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கும், விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கு வரும் பையன் சம்பத்திற்கும் பொருத்தமாய் இருந்தும் ஏன் மாற்றி நடிக்கவைத்தார்கள் என தெரியவில்லை.
- படம் ஏன் நீளம்னு யோசிச்சு பார்த்தால் சரியான ஒரு காரணம் தென்பட்டது. படம் இரண்டரை மணி நேரத்திற்கு தான் எடுத்து இருப்பார்கள் போல. ஆனால் சண்டைகாட்சிகளில் விஜயிடம் அடிவாங்கும் ஒவ்வொருவரும் ஸ்லோ மோஷனில் பறந்து விழுந்து ஆளுக்கு தலா ஒரு நிமிடம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி முப்பது பேர் அடிவாங்கியவுடன் உடனே கீழே விழாததால் படம் முப்பது நிமிடம் நீண்டு விட்டது.
விஜய்க்கு உண்மையிலேயே செம மாஸ் இருக்கிறது. குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கும். மரணமொக்கை படங்களையும் அதை மொக்கை என்று ஏற்றுக்கொள்ளாமல் அதை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படிபட்ட படத்திற்கும் கண்டிப்பாக ஓபனிங் காரண்டி இருக்கு. அப்படி இருந்தும் அவர் நல்ல படங்களை கொடுக்க முயலாமல் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் கொடுக்கும் ரகசியம் தான் புலப்படவில்லை. ஒரு காலத்தில் விஜய்யின் பரமரசிகனாய் இருந்திருக்கிறேன். அது திருமலை வரை.
அதுவரை ஒவ்வொரு படங்களிலும் வித்யாசமமான கதைகளில் நடித்துக்கொண்டு இருந்தவர் தனக்கான ரூட் பிடித்துவிட்டதாய் எண்ணி தொடந்து பஞ்ச் டயலாக் பேசி பேசியே வில்லன்களை பஞ்சராக்கிக்கொண்டு இருந்தார். இதை அவரும் கூட தனது பேட்டிகளில் உறுதிபடுத்தியிருக்கிறார். நடுவில் அத்தி பூத்தார் போல் கில்லி, காவலன், துப்பாக்கி போன்ற படங்களும் வரத்தான் செய்தது. பத்துவருடங்களுக்கு இவ்வளவு தான் என்றால் இது தொடரும் பட்சத்தில் அவருடைய பாதி சினிமா வாழ்க்கை நம்மை ஏமாற்றியதாகவே இருக்கப்போகிறது.
வீரம்:
- இதுவும் சாதாரண கதை தான் என்றாலும், ரசிகர்களை குறிவைத்து எடுத்திருந்தாலும் குறைந்தபட்சம் கொஞ்சம் சுவாரசியமாய் திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். சந்தானம் காமடியும் அதற்க்கு நிறைய உதவி இருக்கிறது.
- தேவையான இடங்களில் மட்டும் பஞ்ச் டயாலக் வைத்தும் சில இடங்களில் அதை ரசிக்கும்படி இருந்ததாலும் அந்த அளவுக்கு காது கிழியவில்லை.
- பாடல்களும், பின்னணி இசையும் படு மொக்கை. பாடல்கள் நன்றாக இருந்திருந்தால் இன்னும் படத்தை சப்போர்ட் செய்திருக்கும்.
- அஜீத் ஏன் இன்னமும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார் என்று தெரியவில்லை. மங்காத்தா படம் ஓகே. ஆனால் இதில் அப்படியே தமன்னாவின் அப்பா போலவே இருக்கிறார். தந்தையும் மகளும் டூயட் பாடுவதை பார்க்க கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.
- ரயில் சண்டைகாட்சி அமைப்பு மிக நன்றாக இருந்தது. மாஸ்னா என்னனு தெரியாதவங்களுக்கு அந்த காட்சிகளில் புரிந்துக்கொள்ளமுடியும்.
- · தமன்னா வெள்ளை பொம்மைன்னு எல்லாருக்கும் தெரியும் அனால் அவர் அஜித் பக்கத்தில் நிற்கும்போது அஜித் கூட கொஞ்சம் கருப்பாக தான் தெரிகிறார். என்னா கலரு!
விஜயை போலவே அஜீத்திற்கும் செம மாஸ் இருக்கிறது. நல்ல ஓபனிங் இருக்கிறது. ஆனால் விஜய் தெளிவாய் ஒரு தப்பான ரூட் பிடித்து போய்க்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர் எந்த பாதையில் போவது, எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்று தவறான படங்கள் கமிட் செய்கிறார். இயக்குனர்களும் அவரை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவருக்கும் எப்போவாவது அத்திபூத்தார்போல் நல்லா படம் அதுவாக அமைகிறது.
ரசிகர்களை மட்டுமே குறிவைத்து படம் எடுக்கும் போக்கை விட்டு விரைவில் இவர்கள் மாற வேண்டும். புறக்கணிப்பு இல்லாமல் மாற்றம் நிகழப்போவதில்லை. குறைந்தபட்சம் இன்னொரு ரசிகர்களிடம் சண்டை போடாத அளவிற்கு முதிர்ச்சி ஏற்பட்டு அங்கிருத்து அந்த மாற்றம் ஏற்படவேண்டும். ஆனால் அதற்கான சாத்தியம் இருப்பதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
ஒரு வேலை நீங்கள் தல-தளபதி ரசிகர்கள் அல்லாத பட்சத்தில் நிச்சயம் இந்த இரண்டு திரைப்படமும் பார்த்தே தீரவேண்டிய படம் இல்லை. அப்படி எதோ ஒரு படம் குடும்பத்தோட பொங்கலுக்கு போகணும்னு விருப்பம் இருந்தால் வீரம் “முயற்சி” செய்யலாம். ரிஸ்க் எடுக்க “வீரம்” இல்லாதவங்க பொங்கல் சாப்பிட்டுவிட்டு சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக எனப்படும் ஏதேனும் ஒன்றை பார்க்கவும். எப்படியும் அடுத்த தீபாவளிக்கு இந்த இரண்டு படமும் உங்கள் வீடு தேடி வரும்! குமுதா ஹாப்பி அண்ணாச்சி?