லஞ்சம் மற்றும் ஊழல் தலை விரித்தாடும் இந்திய தேசத்தில் பணத்திற்காக தினந்தோறும் அரங்கேறும் அசிங்கங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. மனிதன் பணத்தை என்று கண்டு பிடித்தானோ அன்றே அதற்கு பிள்ளையார் சுழி போட்டாயிற்று. மனிதேநேயமில்லாத பணத்தாசை பிடித்த மிருகங்கள் களை எடுக்கப்படாத வரை நம் நாடு கண்டிப்பாக செழிக்காது.
சென்ற மாதம் என்னுடைய நெருங்கிய உறவினர் பெண்மணி ஒருவர் மூளைவளர்ச்சி குன்றிய தன் மகனிற்கு “ஊனமுற்றோர் சான்றிதழ்” வாங்க சேலத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றார். “ஊனமுற்றோர் சான்றிதழ்” வைத்திருந்தால் அரசாங்கமிடமிருந்து சிறிதளவு மாதமாதம் உதவித்தொகை பெற முடியும். அது தன் மகனை பராமரிக்க ஓரளவிற்கு அவருக்கு உதவியது. ஆனால் அதற்காக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த சான்றிதழை பெற வேண்டி இருப்பது போல் தெரிகிறது.
அதை வழங்கும் அந்த அரசு அலுவலர் ஒவ்வொரு முறையும் லஞ்சம் பெற்றே உதவி கோரும் அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வந்துக்கொண்டு இருக்கிறார். உனமுற்றோர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் போய் சேரும் உதவித்தொகையில் கூட லஞ்சமா? இத்தனைக்கும் அந்த அலுவலரும் கால் “உனமுற்றவர்” என்று அந்த பெண்மனி என்னிடம் கூறியது தான் வேதனையின் உச்சம். மனிதநேயம் நம்மிடம் எங்கு போயிற்று?
இதே மாதிரி இன்னொரு அசிங்கம் நடந்தேறியது திருப்பூர் நகரில். கொஞ்சம் பழைய செய்திதான் ஆனால் சுரணையுள்ள எந்த மனிதனுக்கும் ஆத்திரத்தை வரவைக்கும் ஒரு வீடியோ அது. தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் கூட வந்திருக்கிறது. விசாரணைக்கு ஒருவரை அழைக்காமல் இருக்க பத்தாயிரம் பணத்தை லஞ்சமாக ஒரு கடையில் அவரிடம் பெறுகிறார் இன்ஸ்பெக்டர் பெண்மனி ஒருவர். அந்த காட்சியை வீடியோ சுப்பிரமணி என்பவர் கையும் களவுமாக பதிவுசெய்ததவாறு வீடியோ ஆரம்பமாகிறது.
பிறகு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி போலிசை அந்த இடத்திற்கு வரச்சொல்கிறார் அவர். அந்த நேரத்தில் அந்த பெண்மனி தன் மானத்தை(!!!) காத்துக்கொள்ள அவரிடம் காலில் விழுந்து கெஞ்சி தன்னை விட்டுவிடும்படி கதறி அழுகிறார். இவரும் விடுவதாய் இல்லை. தன் வாழ்நாள் முழுதும் துடைத்தெறிய முடியாத அந்த இழுக்கு, கேவலம் வெறும் பணத்தால் தானே. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு… கடைசியில் அங்கு வரும் போலிஸ் வீடியோ எடுத்தவரை அள்ளிக்கொண்டு போகிறது. இந்த மாதிரி நிகழ்வுகளை வீடியோ பதிவை செய்வதற்கு பதிலாக அந்த நபர்களை சுட்டுக் கொள்ளவேண்டும். ஏன் ஊருக்கும், உலகிற்கும் பாரமாய். அவர்களை களையெடுக்க கண்டிப்பாக ஒரு இந்தியன் தாத்தா நம் நாட்டிற்கு சீக்கிரம் தேவை.