நடிகர் பாண்டியராஜனை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சியில், காரை ரிவர்ஸ் பார்க்கும் போது, சுவரை முட்டும் வரை ஹாயாக பார்த்துக்கொண்டு பிறகு “ஆம். முட்டுச்சுங்க” என்று சொல்லுவதாகட்டும். இன்னொரு படத்தில் “வேணு பாத்ருமில் இருந்த தோட்டை காணோம்” என்று ஜனகராஜ் சொல்லும்போது திரு திருவென முழிப்பதாகட்டும். இப்போ வந்த அஞ்சாதே படம் வரை மனிதர் கிளாஸ் தான். அந்த குள்ள உருவமும், திருட்டு முழியும் யாரால் மறக்க முடியும்? அதுதான் அவருக்கு ப்ளஸ் பாயிட் என்று அனைவரும் இதுவரை நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சினிமாவில் அவர் நுழைந்த ஆரம்பத்தில் அது தான் அவருக்கு மிகப்பெரிய மைனஸாக இருந்திருக்கிறது.
உனக்கு டைரக்டர் ஆவதற்கான உருவமே இல்லை என்று அவரது அம்மாவே கடைசிவரை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார். அப்படி இருக்கையில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, பிறகு அவரே டைரக்டர் ஆகி, நடிகர் ஆவதற்குள் எத்தனை போராட்டங்கள், சிரமங்களை அவர் சந்தித்திருக்க வேண்டும்? அதை தாண்டி அவர் சாதித்து காட்டியதற்கு எத்தகைய தன்னபிக்கையும், மனதைரியமும் அதற்கு வேண்டும்? இவை அனைத்தையும் கண் முன் நிறுத்தி படிப்பவர்களுக்கு அதே தன்னம்பிக்கையை ஊட்டுகிறது அவர் எழுதிய இந்த “தேடல்” புத்தகம்.
அவரே நேரிடையாக நம் அருகே அமர்ந்து, தோள்மேல் கையை போட்டு, பொறுமையாக அவருடைய வாழ்க்கை சம்பவங்களை நம்மிடம் பகிர்வது போல் மிகவும் எளிமையான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது. அவமானங்களை கண்டு துவண்டுவிடமால் அதை வெற்றிபடிக்கட்டுகளாய் மாற்றிடும் சூத்திரத்தை சொல்லுகிறார். வெறும் அட்வைஸ் மட்டும் செய்து தன்னை மேதையென காட்டிக்கொள்ளாமல், ஒரு சராசரி மனிதன் சமூகத்தில் ஒரு தனக்கென ஒரு இடத்திற்கு வந்த பிறகு வெளியே சொல்ல தயக்கப்படும் பல விஷயங்களை உள்ளது உள்ளபடியே சொல்லி இருக்கிறார். திரையில் மட்டுமே ரசிக்கப்பட்ட என் போன்றோருக்கு நிச்சயம் இந்த புத்தகத்தை படித்தவுடன் என்னை போலவே அவர் மேல் வியப்பும், மதிப்பும் பன்மடங்கு கூடும்.
21 வயதில் கன்னிராசி படத்திற்கு டைரக்டர்.
22 வயதில் ஆண்பாவம் படத்தில் நடிகர்.
25 வயதில் திரைப்பட தயாரிப்பாளர்
26 வயதில் இசைஅமைப்பாளர்.
ஒரு நிமிடம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது. இருபத்தி ஒன்று, இரண்டு வயதில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது… உண்மையிலேயே மிகபெரிய சாதனையாளர் தான் இந்த “பாண்டியராஜன்”. “தேடல்”, புதிதாய் வாழ்கையை தேட ஆரம்பிக்கும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.
“தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்.”