என் சிறுகதையான சாய்ந்து சாய்ந்து.. அவள் பார்த்த போது.. படித்துவிட்டு மஸ்கட்டில் இருந்து நண்பர் செந்தில் குமார் எழுதிய கடிதமும், அதற்க்கு என் பதிலும்.
பிரவீன்…..இந்தக்கதையை இப்பொழுதான் படிக்க நேரமிருந்தது…காரணம் நான் உடல்நலக்குறைவால் இருக்க நேர்ந்ததால் இதை படிக்க முடிந்தது…. மற்றபடி இதை படித்துவிடவேண்டும் என்கிற என்னுடைய பல நாள் ஆவல் இன்றுதான் நிறைவேறியது.
முதலில் தாய்த்தமிழ்மொழியில் நீங்கள் தொடர்ந்து எழுதி வருவதற்கு என் முதற்கன் நன்றியையும், வாழ்த்தினையும் தெரிவித்துகொள்கிறேன்.
இந்தக்கதையை படித்து முடித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை நான் தங்களோடு பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்….இக்கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை தாங்கள் மேன்மேலும் உங்களை பட்டைதீட்டிக்கொள்ளவேயன்றி பழுதுபார்க்கும் நோக்கத்தில் அல்ல என்பதை மிகவும் அழுத்தமாகவே பதியம் செய்யகிறேன்.
தங்கள் எழுத்தின் மிகப்பெரிய பலம்…படிப்பதற்கு ஆவலை தூண்டுவதாகவும், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையிலும் சுவாரஸ்யம் சேர்க்கும் விடயங்கள் அடங்கியதாகவும் இருப்பது. ஒரு எழுத்தாளனுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்த்துக்கள்.
என் முதல் கேள்வி: நீங்கள் உண்மையிலேயே எந்த பெண்ணையாவது மாத கணக்கிலோ, அல்லது வருடகணக்கிலோ காதலித்ததுண்டா ….? இது முழுக்க முழக்க உணர்ப்பூர்வமான காதல் கதையெனில்…..இதில் காதல் வெறும் பத்து சதவீதம்கூட இல்லை.
இதை கதையின் மையப்பொருளாக நீங்கள் எழுத நினைத்தது எதை ?…..அ) காதல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணின் துரோகத்தையா ???, அல்லது ஆ) உணர்ப்பூர்வமான ஒரு ஆணின் உண்மை காதலையா….???
இதில் ஏதேனும் ஒன்று எனில், என்றாலும் எதுபற்றியும் அழுத்தமான பதிவும் இதில் இல்லை.
சினிமா படம் எடுப்பது வேறு, எழுதுவது வேறு….இரண்டையும் சேர்த்து எழுத்தின் புனிதம் கேடுப்பதென்பது ஏற்றுக்கொள்முடியாதது ! காரணம் இவ்வாறு தொடர்ந்து எழுதும் பட்சத்தில் உங்கள் சுயம் என்ன என்பது யாருக்கும் புலப்படாது போகும். மாறாக, இவை காற்றில் கரைந்துபோகும் எழுதுக்களாக மட்டுமே இருந்துவிட்டுபோகும்…. அதுவும் உங்கள் நண்பர்கள் மத்தியில் மட்டுமே !
தொடர்ந்த சினிமா வசனங்களையும், நீண்ட ஆங்கில வாக்கியங்களையும் தவிர்த்திருக்கலாம்…..காரணம் இவை எந்த ஒரு யதார்த்தையும் பெரிதாக ஏற்படுத்திவிடவில்லை. கதையின் வீரியத்தை மட்டுமல்ல, அதன் அழகையும் கெடுத்துவிடும் இதுபோன்ற வாசகங்கள்….இவையெல்லாம் விமர்சனம் எழுவதற்கு வேண்டுமானால் சுவைக்கூட்டும்.
அந்தபெண்ணின் புகைப்படத்தை அந்த ஆடவன் பார்த்ததில்லை அதுவரையில் என்றபொழுது, அவன் மனமெங்கும் அவள் பற்றின உணர்வுகள் மட்டுமே நிறைந்துள்ள ஒருவன், எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் எண்ணவோட்டம் , அவன் அந்தப்பெண்ணை பார்க்கும் முதல் பார்வையில், அவளை சந்திக்கும் அந்த முதல் நிகழ்வில் ஏற்படும் உணர்வுகள் தங்கள் எழுத்தில் இன்னும் ஆழமாக வெளிப்பட்டிருக்க வேண்டாமா ? , சரி காருக்குள் இருக்கும்பொழுதுதான் அவளை முதன் முதலாய் பார்க்கிறேன் என்கிறீர்கள்….ஆனால் அதுவும் அழுத்தம் இல்லாமலே வெறும் “தேவதை”….”கொஞ்சம் ஸ்பெஷல்” என்ற வார்த்தைகளில் நீர்த்து போய்விடுகிறது.
காதலுக்கு சோகம் தான் அழகு என்றாலும் இதில் அந்த பாதிப்பும் அவ்வளவாக இல்லை, அது அந்தபெண்ணின் ததுரோகத்தைவிடவும் சிறுமைப்பட்டு போகிறது.
ஏதோ விளையாட்டு பையனொருவனின் முதிர்ச்சியில்லா காதலாகத்தான் இந்தக்கதை முழுக்க தொக்கி நிற்கிறது….காதலுக்குண்டான எந்த முதிர்ச்சியும் இதில் இருவருக்கும் இல்லை.
செல்வராகவன் படம் பார்ப்பதர்க்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் அலைந்ததை எழுதியிருந்தீர்கள்….அந்த சூழ்நிலைக்கு அந்த எழுத்துக்கள் தான் பொருத்தம். அந்த எழுத்தின் யதார்த்தம் மிக அருமை, அதன் பாதிப்பும் மிக அழகு. ஆனால் இதுப்போன்ற உணர்வு சம்மந்தமுள்ள கதைகளுக்கு வேறுமாதிரி சாயல் வெளிப்பட வேண்டும்.
எங்கு நகைச்சுவை உண்மையிலேயே சுவை சேர்க்குமோ அங்கு மட்டுமே அதை சேர்த்தல் நன்று.
நீங்கள் எழுதியது காட்சிக்கு நன்றா இருக்குமே தவிர கதைக்கான எழுத்துக்கு என்றுமே நியாயம் செய்யாது !
“பெண்களை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து தங்கள் எழுத்தில் தவிர்க்கவும், அது தங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்துவிடும்”.
கதை எழுதும்போது மட்டும் நீங்கள்… தேர்ந்த, நல்ல எழுத்தாளர்களை மனதில் கொண்டு எழுதவும்….தயவு செய்து சினிமா இயக்குநர்களை மனதில் வைத்து எழுத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
வாழ்த்துக்கள்…., முயற்சி தொடரட்டும்.
வணக்கம். உங்களின் நேர்மையான கருத்திற்கு மிக்கநன்றி நண்பரே. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவழியாய் படித்து விட்டர்கள். அதற்கும் உங்கள் கருத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு பதில் எழுத தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். (கிடைத்த மறு நாளே முக்கால்வாசி எழுதி முடித்துவிட்டேன்.) இவ்வளவு நீளமாக கருத்தை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று நான் அறிவேன். என் மீதிருக்கும் மதிப்பும், என் எழுத்தை செம்மை படுத்த உதவவேண்டும் என்ற நோக்கமும் இன்றி இதை நீங்கள் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றும் நான் அறிவேன்.
நீங்கள் கூறுவது போல் இந்த கதை அதன் மையக்கருவைவிட்டு சற்று விலகியிருக்கும் தோற்றத்தை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் அது தற்செயலாய் அமைந்தது அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. அந்த ஆணின் காதலையும், பெண்ணின் துரோகத்தையும் நரேடிவ் ஸ்டைலில் எழுதவேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அந்த உண்மை சம்பவங்களின் போக்கிலேயே சூழ்நிலைகளையும், வசனங்களையும் கற்பனை செய்து எழுதமுற்பட்டதே அதற்க்கு காரணம். உண்மை சம்பவத்தில் இருந்து மையக்கருவை மட்டும் எடுத்து கதையின் நோக்கத்தில் சம்பவங்களை நான் கற்பனை செய்து அடுக்கியிருக்கவேண்டும். நான் அந்த தவற்றை எழுதும் போது முற்றிலும் உணரவில்லை. கதைபோகிற போக்கில் முன்யோசனை இன்றி எழுதியதும் ஒரு காரணம்.
இதை சிறுகதை என்று கூறாமல் முற்றிலும் உண்மை சம்பம் என்று சொல்லி இருந்தால் கொஞ்சம் சுவராசியம் இருந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சிறுகதைக்கான வடிவத்தை நான் இதில் சரியாககையாளவில்லை. இதை நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். அதுமட்டும் இல்லாமல் ஆங்காங்கே திரைக்கதை வடிவத்தை என்னையறியாமல் புகுத்தி பல இடங்களில் “வாசிப்பு இன்பத்தை” கொடுக்காமல் விட்டிருக்கிறேன், பல இடங்களில் அதை கெடுத்தும் இருக்கிறேன்.
அதற்க்கு உதாரணம், நீங்கள் கூறியது போல், முதன் முதலாய் அவன் அந்த பெண்ணை காரில் பார்த்தபோது அந்த உணர்வுகளை நான் விசுவலாக நினைத்து எழுதித்தொலைத்துவிட்டேன். எனக்கு நிறைய பேர் அந்த இடமும், முதன் முறை அவனுக்கு காதல் வரும் இடத்தில் செய்த வர்ணனைகளும் பிடித்திருப்பதாய் கூறி இருந்தார்கள். சிலபேர் மிகவும் சிலாகித்து பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்.. ஆனால் அந்த கதையை விட்டு சற்று விலகி ஒரு வாசகனாய் அதை படித்த போது என்னை அது ஏமாற்றம் கொள்ளச்செய்தது.
இது என்னுடய முதல் சிறுகதை. ஒரு நிஜ சம்பவத்தில் தாக்கத்தில், இரண்டு முழு நாட்கள் உட்கார்ந்து முழுமூச்சில் எழுதினேன். (நான் காதலித்தேனா என்று கேட்டுள்ளீர்கள் – எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் என்னுடைய நிஜகதையை பொதுவில் எழுதிடவோ, உங்கள் கேள்விக்கு ஆம் என்று பதில் கூறிடவோ நான் மூடனாக இருந்திட வேண்டும். இருந்தும் நான் யாரையும் காதலிக்கவும் இல்லை… என்னையும் எனக்கு தெரிந்து யாரும் காதலித்ததில்லை… ஆகவே இது என் கதையுமில்லை… ஒகே?.. ஹி. ஹீ…)
இந்த சிறுகதையை (!) நான் எழுதி முடித்தவுடன், நண்பர் ஒருவரை கூப்பிட்டு படிக்க சொன்னேன். எப்படி வந்து இருக்கிறது என்று அறிந்துக்கொள்ள மிகவும் ஆவல். ஆனால் அதை படித்திவிட்டு அவரோ “தப்பா நினைத்துக்கொள்ளாதீர்கள்,,, இது ஒரு குப்பை”யென்று சொல்லிவிட்டு கூலாக போய் விட்டார். இரண்டு நாட்கள் வேறு உலகத்திற்கு சென்று, வேறு சிந்தனையின்றி, உணவின்றி உறக்கமின்றி அதே நினைவோடு வாழ்ந்து வெளியே வந்த எனக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தது. கஷ்டமாகவும் இருந்தது. (எழுதுவது அவ்வளவு சுலபமில்லை), எழுதும்போது அநேகமாக அனைவருக்கும் இது தான் பிரச்சனை. கட்டுரையோ, கதையோ, எழுதி முடிக்கும் வரை அது எப்படி வரப்போகிறது என்று தெரியாது. எழுதி முடித்தாலும் அது எப்படி வந்து இருக்கிறது என்றும புரியாது. யாரேனும் படித்து பாராட்டினாலோ திட்டினாலோ தான் உண்டு.
இதை குப்பை என்று நண்பர் கூறியவுடன் உண்மையில் இந்த கதையை வெளியிடாமல் அப்படியே அழித்துவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அந்த முடிவு மிகப்பெரிய வலியை எனக்குள் ஏற்படுத்தியது. சரி கடைசியாய் இன்னொருவரிடம் கேட்போம் என்று எழுத்தாளர் நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு இந்த குப்பையை அனுப்பி படிக்கச்சொல்ல மிகவும் சங்கடமாக இருந்தது. இருந்தும் அனுப்பி வைத்தேன்.
சில நிமிடங்களில் அவரிடம் இருந்து போன். கதையின் முடிவை படித்துவிட்டு கண்கள் கலங்கியது பிரவீன் என்றார். நிஜமாய் தான் சொல்கிறாரா? இல்லை ஒருவேளை என்னை கலாய்கிறாரா? என்று சந்தேகம். நேரடியாய் கேட்க்க முடியவில்லை. ஆனால் அவரின் நீண்ட நேர உரையாடலில் அந்த சிறுகதை அவருக்கு பிடித்திருக்கிறது என உணர்ந்துக்கொண்டேன். கதையின் ஓட்டத்தில் சில மாற்றங்களும், நிறைய பகுதியை வெட்டிவிட சொன்னார். அப்படி செய்தால் பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் என்றார். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. கஷ்டப்பட்டு எழுதினேனே? எப்படி அதை செய்வது என மனம் தடுத்தது. (சில நிமிடங்கள் முன்பு வரை ஒட்டுமொத்தமாய் அதை அழித்துவிடகூட எண்ணி இருந்தேன் – எல்லாம் பாராட்டு/அங்கிகாரம் செய்யும் வேலை!!!)
எந்த பத்திரிக்கையிலும் வராவிட்டால் பரவாயில்லை என்று எதையும் வெட்டாமல் அப்படியே என வலைப்பூவில் பிரசுரம் செய்தேன். ஆனால் நானே எதிர்பாராவண்ணம் மிகவும் கூர்மையான விமர்சனங்கள், கதையின் ஒவ்வொரு பகுதியையும் அலசி ஆராய்ந்து கேள்விகள், கதாபத்திரங்களை பற்றி அபிப்பிராயங்கள் , காதல் சம்பவங்களை பற்றி சிலாகிப்புகள் என்று கதையோடு ஒன்றி போய் நிறையபேர் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்கள். ஒரு நண்பர் எல்லாவற்றிக்கும் மேலே போய் பிரபல ரஷ்ய எழுத்தாளர் “தாஸ்தா வெஸ்க்கி”யின் “வெண்ணிற இரவுகள்” போல இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகா மொத்தம் என் உழைப்பு போகவில்லை என்று மனம்தேற்றிக்கொண்டாலும் எனக்கு கதையின் ஓட்டத்தில், என் எழுத்தில் உடன்பாடில்லை.
ஒருவேளை இது நன்றாக எழுதப்பட்டு இருந்தால் இதன் வீச்சு வேறுமாதிரி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. முதல் சிறுகதை. இரண்டு நாள் உழைப்பு. அதனால் குப்பையென்று இதை அழித்துவிட மனமில்லாமல் ஜஸ்ட் என் வலைப்பூவில் வெளியிட்டேன். அடுத்தமுறை நிச்சயம் ஒரு நிறைவான சிறுகதை எழுதுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்க்கு முன்னர் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
பி.கு: பெண்களை கொச்சைபடுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. அது முற்றிலும் ஓர் உண்மை சம்பவம்! கதாபாத்திரமும் உண்மை!