என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்… முகம் தெரியாத பலர் கூட இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. “கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையா?”. “நிஜமாகவே கூகுளில் இருந்து காசோலை அனுப்புவார்களா?” அவர்கள் அநேகமாக அடுத்து கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “அதற்கு முன்பணம் ஏதேனும் கட்டவேண்டுமா? தினமும் நாம் அவர்கள் தரும் விளம்பரங்களை கிளிக் செய்துக்கொண்டு இருந்தால் நமக்கு பணம் வருமாமே??”. இந்த கேள்வியிலேயே நான் உணர்ந்து கொள்வேன் அவர்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று.
இன்றைய இணைய பயனாளர்கள் அனைவரும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்து வைத்து உள்ளார்கள். ஆனால் பலர் அதற்கான வழிமுறையை சரிவர அறிந்திருக்கவில்லை. இணையத்தை பொருத்தவரை 99% மோசடி வியாபாரம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தில் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் கும்பலே இங்கு ஏராளம்.
உதாரணமாக, கூகிள் கேஷ் கவ் (Google Cash Cow), கூகிள் மணி (Google Money), கூகிள் கேஷ் சிஸ்டம் (Google Cash System) என்று கூகிளின் பெயர் வருமாறு பல்வேறு இணையதளங்கள் இருக்கிறது. “வீட்டில் அமர்ந்தவாறு தினமும் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களில் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். நாங்கள் அளிக்கும் விளம்பரங்களை நீங்கள் வியர்வை சிந்தாமல் கிளிக் செய்து கொண்டு இருந்தால் போதுமானது. காசோலை உங்கள் வீடு தேடி வரும்” என்று அவர்கள் வலை விரித்து காத்துக்கிடப்பர்.
நோகாமல் நோம்பி கும்பிட நினைக்கும் நம் அப்பாவி மக்கள் இதை விடுவார்களா? அந்த இணையத்தளத்தில் சென்று அவர்களை தொடர்பு கொள்ளுகிறார்கள். முன்பணமாக சில ஆயிரங்கள் கொடுத்தால் விளம்பரங்களையும், பணம் சம்பாதிக்கும் வழி முறைகளையும் கூறுவதாக அவர்கள் சொல்ல, நம்ம ஆள் அவர்கள் கேட்ட பணத்தை கட்டிவிட்டு ஏமாந்து போகிறான். இவ்வாறு தான் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்க நினைத்து பலர் சிக்கிக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்கும் கூகிளிர்க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. கூகுளின் பெயரை அவர்கள் சேர்த்துக்கொண்டதால் அனைவரும் நம்பிவிடுகின்றனர்.
பிறகு, கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையில்லையா? வெறும் ஏமாற்று வேலையா? என்று நீங்கள் கேட்டால் அதுவும் தவறு. கூகிளின் மூலம் பணம் ஈட்டுவது முற்றிலும் உண்மையே. அதற்கு கூகிள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் இருந்தால் மட்டும் போதுமானது. நானும் கூகுளிடம் இருந்த இதுவரை சில காசோலை பெற்று இருக்கிறேன். அதற்காக யாரும் யாருக்கும் முன்பணம் கட்டத்தேவை இல்லை. இதோ இந்த வாரம் நான் பெற்ற மற்றுமொறு கூகிள் காசோலை.
பி.கு: இந்த இடுக்கையின் நோக்கம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை விளக்கவோ, இணைய மோசடிகளை பற்றி தெளிவுபடுத்தவோ, கூகிள் ஆட்சென்ஸ்சை பயன்படுத்தும் முறைகளை பதிவிக்கவோ அல்ல. கூகிள் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மை என்பதை உறைக்கவும், மோசடிகளில் விழாதிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான்.