சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

சேலம்  டூ சேலம்: உலகில் உள்ள அனைத்து சேலம் நகரத்தையும் இணைக்க நட்பு பாலம் அமைப்போம் வாரீர்.

நம் நகரம் போலவே, சேலம், அமெரிக்காவில் 24 பிற மாகாணங்களிலும் உள்ளது. அது மட்டுமில்லாமல், சேலம் என்று பெயரிடப்பட்ட நகரங்கள்  ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட உள்ளது. மற்றுமொரு சுவாரசியமான  தகவல் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரிஜான் மாகாணத்தில், நம் தமிழகத்தின் மதராஸ்( தற்போது சென்னை) போலே மற்றொரு நகரும் பெயர் கொண்டுள்ளது.

1960இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தின் நூலகரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான திரு ஹக் மாரோ, மற்றும் தமிழக சேலத்தில் நன்கு அறியப்பட்ட நூலகரான டாக்டர் புஸ்நாகி ராஜண்ணன் இருவரும் சேர்ந்து இரு நகரங்களை இணைக்க “சகோதர நகரம்” திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டனர்.

1962இல் டாக்டர் ராஜண்ணன்  அமெரிக்காவின் ஒரேஜான் மாகாணத்தில் உள்ள சேலத்திற்கு சென்ற போது அங்குள்ள ரோட்டரி உறுப்பினர்களும், நகர முக்கியஸ்தர்களும், செனட்டர்கள், மற்றும் ஓரிகான் மாநில கவர்னரரும்அவரை வரவேற்று உபசரித்தனர். தனது விஜயத்தின் போது, டாக்டர் ராஜண்ணன் அமெரிக்க சேலத்தில் ஆற்றிய தனது உரையில் இரு நகரங்களையும் இணைக்கும் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

salem sister cities
இந்த கூட்டத்தில் இரண்டு நகரங்களும்  சகோதர நகரங்கள் என முறையாக அறிவிக்கப்பட்டது. 1964இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தின் சேலம் மேயாரான திரு வில்லராட் சி மார்ஷல் தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது இங்குள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், கலெக்டர், நகராட்சி தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்களின் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.

அவர் அமெரிக்க திரும்பிய பிறகு “சகோதர நகரங்கள் ஒருங்கிணைப்பு குழு” ஒன்றை அங்கு தொடங்கிவைத்தார். அதன் பிறகு, நம்முடைய சேலத்தின் தொழிலதிபரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான ஜே.ஆர்.மெஹதா நம் சகோதர நகரமான ஒரிஜான் மாகணத்தின் சேலத்திற்கு சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அவர்களிடம் நம் நல்லெண்ணங்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

எதிர்பாராவிதமாக இந்த பயணங்களுக்கு பிறகு சகோதர நகர திட்டத்தை  தொடர முடியாமல் போயிற்று. ஆதலால் டாக்டர் பி.ராஜண்ணன் அவர்கள் தமிழக சேலத்தையும் மற்ற சேலத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சி ஒரு முன்னோடியாக இருக்கிறது.

இப்போது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, முன்னால் சேலம்வாசி, தர்மபுரி திரு கே.பால சுந்தரம் அவர்கள், உலகில் உள்ள அனைத்து சேலம் நகரங்களை இணைப்பதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்காக முழு ஈடுபாட்டோடு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  1963 முதல், அவர் சர்வதேச-சகோதர-நகர அமைப்பு (www.sister-cities.org) மற்றும் மக்களுடன்-மக்கள் தொடர்பு (www.ptpi.org) அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா சேலத்தின் உள்ளூர் பத்திரிகைகளில் அவரது எழுத்துக்களின் மூலம் இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்.

tim king

அவரது இந்த முயற்சியின் பலனாக, அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தில் உள்ள சேலத்தின் பிரபல தொலைக்காட்சி நிருபரும், பத்திரிக்கையாளருமான திரு. டிம் கிங் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் www.Salem-News.com  எனும் பிரபல இணையதளத்தின் நிறுவனரும் ஆவார்.

அனைத்து சேலம் நகரங்கள் இணைக்க ஒருவருக்கொருவர் இடையிலான பரஸ்பர ஆர்வம் காரணமாக, திரு. டிம் கிங் அவர்களை தமிழக சேலத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்யவும், நம் நகரத்தை பற்றிய ஆவண படமொன்றை எடுக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த ஆவணப்படம் ஒரிஜான் மாகணத்தின் சேலம் நகரம் உட்பட பிற மாநிலங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இண்டியானா, அயோவா, கென்டக்கி, மாஸ், மிசவுரி, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், ஓகியோ, தென் கரோலினா, உட்டா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின், மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஒன்டாரியோவில் உள்ள அனைத்து சேலம் நகரங்களிலும் திரையிட திட்டமிடபட்டுள்ளது.

praveen bala arasu

இந்த முயற்சியை ஆதரித்து, அவருக்கு உறுதுணையாக www.Salemjilla.com இணையதள நிறுவனரும், இணைய தொழில்முனைவருமான திரு.பிரவீன் குமார் அவர்களும் மற்றும் சேலம் லீ பஜாரில், விதை ஏற்றுமதி இருக்குமதி செய்துவரும் ஆறுமுக பண்டாரம் நிறுவனத்தின் தொழிலதிபருமான திரு. திருநாவுக்கரசு அவர்களும் திரு.கே.பால சுந்தரம் அவர்களோடு இணைத்து உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்க ஒரிஜான் மாகணத்தின் பிரதிநிதியாக திரு.டிம் கிங் அவர்களை அழைக்க ஒரு குழுவை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த முயற்சி மூலம் அமெரிக்க மற்றும் இந்திய சேலம் மக்களின் நட்புறவும், ஒத்துழைப்பு ஊக்கபடுவது மட்டுமல்லாது அனைவருக்கும் இடையே தொழில் முறை தொடர்பு கொள்ளவும், திறமையை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் நோக்கமே சேலம் நகரம் உள்ள அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள இதே எண்ணங்கள் உடைய மக்களையும், நிறுவனங்களையும் தொடர்பு ஏற்படுத்தி இணைப்பதேயாகும்.

இந்த நோக்கம் நிறைவேற உருவாக்கப்படும் குழுவில் இதில் ஈடுபாடு இருக்கும் தனி நபர்களும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் யார் வேண்டுமாலும் இணையலாம். இந்த குழுவின் மூலம் திரு டிம் கிங் அவர்கள் வந்து செல்வதற்கான நிதியை திரட்டவும், அவருடைய சேவையை முடிந்தவரையில் பயன் படுத்தி நம்முடைய சேலத்தை பற்றிய ஆவணப்படங்களை மற்ற சேலத்தில் திரையிடப்படவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த ஆவணப்படத்தில் நம் சேலத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட தொழில் சமூகங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா தளங்களும், அருங்காட்சியகம், கலை மற்றும் விளையாட்டுகளும் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்திற்கான முயற்சி லாப நோக்கமற்று, வியாபார நோக்கமற்று முற்றிலும் நம்முடைய சேலத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று உலக மக்களிடைய நட்புக்கொள்ளச்செய்வதே ஆகும். இது நிச்சயம் வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வெளி உலகில் இருந்து ஒத்துழைப்பு பெற்று பயன்பெற உதவும்.

sister cities international

இதில் இணைத்து பணியாற்ற நம்முடைய சேலத்தில் ஆர்வம் உள்ள மக்கள், நிறுவனங்களை வரவேற்கிறோம். தொடர்பு கொள்ள திரு.அரசு மொபைல்: 9443247822 மின்னஞ்சல்: vaparasu@gmail.com, திரு பிரவீண்: 9894834151 மின்னஞ்சல்: praveen @ salemjilla.com
திரு.பால சுந்தரம். மொபைல்: 95 246 59 164 மின்னஞ்சல்: kbsundram@yahoo.co.in இதற்கு கிடைக்கப்பெறும் ஆதரவு மற்றும் பதிலை பொறுத்து, குழு அமைத்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.

ஊழலுக்கு எதிரான பாரதம் – சேலத்தின் குரல்

India Against Corruption Movement In Salem

அன்னா ஹசாரே அவர்களின் “ஊழலுக்கு எதிரான பாரதம்” என்ற போராட்டத்திற்கு ஆதரவாக சேலத்தின் பிரபல கல்வியாளர், சமூக ஆர்வலர் திரு.ஜெயப்ரகாஷ் காந்தி அவர்களின் தலைமையில் 17 ஏப்ரல் அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்களும், சங்க நிர்வாகிகளும், தியாகிகளும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு ஊக்குவித்தனர்.  இதில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹசாரே அவர்களின் கொள்கையை ஆதரித்து அனைவராலும் கையொப்பம் இடப்பட்டு “ஊழலுக்கு எதிரான பாரதம்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்து அதனின் நகல், இந்தியாவின் பிரதம மந்திரிக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தியாகிகளும், பெரியோர்களும் பேசிய அந்த மேடையில் அவர்களுக்கினையான போதிய அனுபவம் இல்லாவிடினும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க ஆதரவாக நானும் என்னுடைய எண்ணங்களை பதிவு செய்தேன். நான் பேசியவற்றை அப்படியே இங்கு எழுத்துக்களாய் பதிவிக்கிறேன் .

praveen speaking at India Against corruption, Salem

அனைவருக்கும் என் காலை வணக்கம்,
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுறேன். உங்கள் வாழ்நாளில் இதுவரை  உங்களிடம் லஞ்சமே கேட்கபட்டதில்லை என்று உங்களில் யாரவது இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் தயவு செஞ்சு கொஞ்சம் கையை உயர்திக்காட்ட முடியுமா? – மேடையில் இருப்பவர் கூட.

அடுத்த  தலைமுறையில் இந்த கேள்விக்கு எல்லாருமே கையை தூக்க வேண்டும். அந்த ஒரு முக்கிய நோக்கத்திற்கு தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.

நான் என் வாழ்வில் சந்தித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் என்னுடைய Relative ஒருவருக்கு இரண்டு  பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே  இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்..  மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில்  வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே. ஆயிரம், லட்சம், கோடினு தினமும் ஊழல் நடப்பதை நான் செய்தித்தாளிலேயும், தொலைகாட்சியிலும் பார்த்தாலும் இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இங்கு அந்த நபர் உடல் ஊனமுற்றிருந்தாலும், அவரை மனம் ஊனமுற்றவராகவே நான் பார்கிறேன்.

இந்த லஞ்சம், ஊழல் என்பது கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை ஒரு வைரஸ் மாதிரி நம் நாட்டில் பரவி இருக்கிறது. ஒருகுழந்தை பிறக்கும்போது “Birth Certificate” வாங்குவதில் தொடங்கி, வாழ்ந்து முடித்து  “Death Certificate” வாங்குவது வரைக்கும் லஞ்சம் தேவைப்படுது. ஒரு computerக்கு எப்படி virus அழித்துவிடாமல் பாதுகாக்க Anti-Virus Softwareதேவைப்படுதோ அதுபோல நாம் நாட்டை Corruption அழித்து விடாமல் பாதுகாக்க நிச்சயம் இந்த “Anti-Corruption Movement” தேவை.

அன்னா ஹசாரே எழுப்பிய அந்த நம்பிக்கை அலை இன்று சேலத்தில் ஜெய பிரகாஷ் காந்தி அவர்களின் மூலமாக வந்தடைந்து இருக்கிறது. லஞ்ச ஊழலை எதிர்த்து இன்று நாம் குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிடாமல்  இதை ஒரு  போரமாக (Forum’) பதிவு செய்து தமிழக அளவில் ஒரு இயக்க சக்தியாக மாற்றவேண்டும். தமிழகம் முழுவதும் எங்களை போன்ற நிறைய இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி ஒவ்வொரு ஊரிலும் இந்த போராட்டத்தை நடத்தவேண்டும்.  எல்லா ஊர்களையும் இணைத்து சேலத்தை மையமாக கொண்டு இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று என் கருத்தை நான் இங்கு பதிவு செய்றேன்.

இதற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உதவ நண்பர்கள் முன்வரவேண்டும். அனைவரையும் இந்த நோக்கம் சென்றடைந்து ஒன்று திரட்ட மீடியா, பிரஸ் சாப்போர்ட் கண்டிப்பாக தேவை. சேலம்ஜில்லா.காம் (Salemjilla.com) என்ற இணைய தளம் மூலமாக நாங்களும் இந்த நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருக்கிறோம்.
எதிர்வரும் காலத்தில் என்னுடைய மகனோ மகளோ லஞ்சம் என்றால் என்ன அர்த்தம்னு டிக்சியனரியில் (Dictionary)  மட்டும் தான் பார்க்க முடியும்னு  ஒரு சூழல்  உருவாகும் என நான் நம்புகிறேன்.

நன்றி வணக்கம்.

அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்த கருத்தரங்கை பதிவு செய்து வெளியிட்டு ஆதரவளித்தது. இதில் பாலிமர் சானலின் செய்தி வெளியீட்டை கீழே காணலாம்.

நடைபயிலும் தாயில்லாமல் பிறந்த ஓர் குழந்தை

suvadugal-baby

புதிதாய் பிறந்த குழந்தை சில மாதங்களில் கவிழ்த்து, பிறகு தவழ்ந்து, மெல்ல மெல்ல தன் பாதத்தை எட்டி வைத்து நடை பயிலும் அந்த தருணத்தை காணக்கிடைக்கும் அதன் தாய்க்கு வரும் உணர்வு தான் இந்த பதிவில் எனக்கும். டிசம்பர் 17, 2008 இல் பிறந்த இந்த சுவடுகள் எனும் என் குழந்தை, இப்பதிவின் மூலம் தன் ஐம்பதாவது பாதசுவடை இணையத்தில் பதிக்கிறது.

என் வாழ்க்கை பயணத்தில் நான் காண்பதையும், ரசிப்பதையும், அறிந்து கொள்வதையும், படைப்பதையும் பதிக்கவே இந்த சுவடுகள் எனும் வலைப்பூ என்னில் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரசவித்தது.  இக்கால இடைவெளியில் வெறும் ஐம்பது பதிவென்பது நிச்சயம் சாதனையல்ல. ஆனால் வேலை பளு காரணமாக எழுதுவதில் பல முறை தொய்வு இருந்தும் இப்பதிவின் தொடர் வாசகர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்கள் கமென்ட் மூலமும், மின்னஞ்சல் வாயிலாகவும், செல்பெசியிலும், சாட்டில் பேசியும் தந்த உற்சாகத்தால் தான் நிச்சயம் இது சாத்தியப்பட்டது.

இத்தருணத்தில் இவ்வலைப்பூவை பற்றிய சில சுவையான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவும், என்னை எழுத ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த ஐம்பதாவது பதிவை எழுதுகிறேன்.

இதுவரை இவ்வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்

1, எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய் (10,000+ பார்வைகள்)

இந்த பதிவு வெறும் விளையாட்டிற்காக பதிவிக்கப்பட்டு Viral Marketing எனும் யுக்தி மூலம் பிரபலபடுத்தப்பட்டு வெறும் இரண்டே நாட்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை திரட்டியது. மூன்றாவது நாள் மிக அதிக பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் வலைத்தளம் சரிவர இயங்காமல் போகும் அபாயம் ஏற்பட்டு அந்த பதிவையே நான் தற்காலிகமாக நீக்கும் அளவிற்கு போய்விட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இதோ பத்து நாட்களுக்கு முன்பு தான் அந்த பதிவை அனைவரும் காணுமாறு மீண்டும் திறந்து வைத்துள்ளேன். வெறும் சில நாட்களிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது என்னவென்று அந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் எழுதியதில் மிக அதிக கருத்துக்களையும் பெற்ற பதிவும் இதுதான். அனைத்தும் சுவாரிசமானவையும் கூட.

2, காதல் கவிதைTags

பதிவு எழுத ஆரம்பித்து சிறிது காலத்தில் தான் உணர்தேன், என் வலைத்தளத்தில் அதிகம் படிக்கப்படுவது நானெழுதிய காதல் கவிதைகளே. மிகவும் இது சந்தோஷமாக இருந்தாலும், என் கவிதைகள் பல களவாடப்பட்டு, முகப்புத்தகத்திலும், சில வலைத்தளங்களிலும் என் அனுமதி இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கிறது. என் பெயரோ என் வலைத்தளத்தில் சுட்டியோ கூட வழங்கப்படவில்லை. என்ன செய்ய?  அது மட்டுமில்லாமல் என் கவிதைகளை படித்த பலர்  என்னில் சாட்டிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு என் கவிதைகளை மேற்கோளிட்டு, தாங்கள் விரும்பியவற்றை ஆழமாக விமர்சனம் செய்து பின் தங்கள் காதல் தோல்வி கதைகளை கொட்டிதீர்த்து சென்றனர். இதை என்னன்னு சொல்ல?

3, என்னை பற்றி

என்னுடைய இந்த வலைத்தளத்தில், “என்னை பற்றி” என்ற பக்கம் அதிகம் பார்வையிடபட்டுள்ளது என்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என கருதுகிறேன். ஆனால் அதை ஆச்சர்ய பக்கமாக எண்ணி முகம் தெரியாத பலர் என்னை வாழ்த்தி மின்னஞ்சல் அனுப்பியது தான் ஆச்சர்யம். அனைவருக்கும் நன்றியை தவிர பதில் அனுப்ப என்னிடம் வேறு ஒன்றும் இல்லை.

4, சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்

நானெழுதிய சினிமா விமர்சனத்தில் அதிகம் பேர் பாரட்டியது இதுவே. இது கண்டிப்பாக ஒரு சிறந்த விமர்சனம் இல்லை, சொல்லிக்கொள்ளும்படியாகவும் அதில் ஒன்றும் ஆழமாக இல்லை. இருந்தாலும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாக இருந்தது என்று அனைவரும் கூறியதால் அதே நடையுடன் விமர்சனங்கள் எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

5, அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..

இது நான் படித்ததில் பிடித்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தது மட்டுமே என் வேலை. ஆனால் கலகலப்பான ஒரு சிறுகதை. கொஞ்சம் ஒரு தனி நடையில் எழுத முயற்சித்தேன் அவ்வளவே.

இதுவரை நான் எழுதியதிலே அதிக நேரம் செலவிட்டு, அதிக சிரத்தை எடுத்து எழுதிய பதிவு இரண்டு இருக்கிறது.  ஸ்.. ஸப்பா. எழுதுவதையே கொஞ்சம் நாளைக்கு விட்டுடலாம் என் என்னை போட்டு எடுத்துவிட்டது. நான் ஒரு எழுத்தாளனில்லை, எழுத கொஞ்சம் நேரம் பிடிப்பேன் என்பது தான் எனக்கு பிரச்சனை…

இதோ அந்த இரண்டு பதிவுகள்

1.  ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று
2. ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு

இதுவரை அதிக கருத்துக்களை பதிவு செய்த முதல் ஐந்து நபர்கள் பெயர் கீழே.

1, லோகேஷ் தமிழ் செல்வன்
2, செல்வக்குமார்
3, கௌசல்யா
4, ராதிகா
5, யோகேஷ்

ஆரம்பத்தில் ஒவ்வொரு முறை பதிவிட்ட பின்பு “யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துறோம்” என்ற எண்ணம் எனக்குள் வரவிடாமல் தங்கள் கருத்துக்கள் பதிவு செய்து ஊக்குவித்த நல்லுள்ளங்கள் தான் மேலே. நீங்கள் அளித்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே…  உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். Smile

அதிக பார்வையாளர்களை கொண்டு வந்து சேர்த்த முதல் ஐந்து காரணிகள்

1, கூகிள்
2, நேரடி பார்வையாளர்கள்
3, இன்டலி
4, முகப்புத்தகம்
5, ட்விட்டர்

இதில் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது ஒன்று இருக்கிறது. நான் உறங்கும் முன் ஏதேனும் ஒரு பதிவை எழுதிமுடித்தவுடன் இன்ட்லியில் சமர்பித்துவிட்டு உறங்கசென்றுவிடுவேன். மறுநாள் நான் எழும் முன்னரே போதுமான அளவுக்கு அதன் வாசகர்கள் அதற்கு ஓட்டளித்து என பதிவை ஒவ்வொருமுறையும் இன்ட்லியில் “பிரபலமான பதிவு” என்ற அந்தஸ்து கொடுத்து விடுவர். இதுவே அதிகம் என்னை எழுத தூண்டியத்தில் பெரும் பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது.

கூகிள் தான் என வலைதளத்தை பல புதிய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கிறது.

இதோ அதில் முதல் ஐந்து அதிகம் பயன்படுத்தப்பட்ட “தேடு வார்த்தை” (Keywords)

1, காதல் கவிதைகள்
2, சுறா விமர்சனம்
3, மழை நீர் சேகரிப்பு
4, எந்திரன் விமர்சனம்
5, சுனாமி கவிதை

அதிக பார்வையாளர்கள் கொண்ட முதல் ஐந்து நாடுகள்

1, இந்தியா
2, இலங்கை
3, அமெரிக்கா
4, அரபு நாடு
5, சிங்கபூர்

மொத்த பதிவும் ஐம்பது – தொடர் வாசகர்களும் ஐம்பது!

suvadugal

ஐம்பது பதிவுகளை எழுதியதால் என்னவோ சரியாக இந்த நேரத்தில் மின்னஞ்சல் சந்தாதார்களின் எண்ணிக்கையும் ஐம்பது, சுவடுகள் முகப்புத்தக ரசிகர்களும் ஐம்பது மற்றும் கூகுள் நண்பர்களும் ஐம்பது சொச்சத்திலேயே தொடர்வது ஆச்சர்யமாக தான் இருக்கிறது.

கண்டிப்பாக இவ்வாசக நெஞ்கங்களுக்காக அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் இனிமேல் நிறைய எழுத வேண்டும் என் எண்ணியுள்ளேன். இத்தளத்தின் நான் எழுதும் புதிய பதிவுகளை தொடர்ந்து நீங்களும் படிக்க வேண்டுமா? மேலே புகைப்படத்தில் உள்ள மூன்று அம்சங்களிலும் நீங்கள் இத்தளத்தை தொடர்ந்தால் புதிய பதிவுகள் உங்களை தேடியே வரும்.  இத்தளத்தின் வலப்பக்கத்தில் அதை நீங்கள் காணலாம்.

இதோ இந்த வலைப்பூவில் கடந்த இரு வருடங்களில் பதியப்பட்ட நாற்பத்தி ஒன்பது பதிவுகளையும் கீழே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் நான் கோருவது ஒன்றே ஒன்று தான். நீங்கள் இவ்வலைபதிவின் தொடர் வாசகராக இருப்பின் என்னுடைய சில கேள்விகளுக்கு ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து கருத்துக்கூற இயலுமா? புதிய பார்வையாளர்கள் கூட தாங்கள் கீழ உள்ள பட்டியலில் உள்ள பதிவுகளை படித்துவிட்டு பதில் சொல்லலாம்.

நாற்பத்தி ஒன்பது பதிவுகளின் முழு பட்டியல்

49. தாமஸ் அண்ணா என்கிற அஜயன் பாலா
48. ஒரு ஜல் புயல், நிறைய மழை, கொஞ்சம் தத்துவம்
47. இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்கு ஒரு அருமையான வழி
46. சேலம் ஜி.ஆர்.டீ. ஓட்டலில் ஒரு மாலை பொழுது
45. கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட பெண் இன்ஸ்பெக்டர்
44. சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு
43. எந்திரன் விமர்சனம் – இளைஞர்களுக்கான கருத்துள்ள படம்
42. எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்
41. பாராட்டப்பட வேண்டிய முதல் கோவை பதிவர்கள் சந்திப்பு
40. சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்
39. சிரித்தே தொலைக்க வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் – விமர்சனம்
38. ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு
37. நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்
36. ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று
35. சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று
34. நண்பா இதோ கூகிள் எனக்கு அனுப்பிய காசோலை
33. பெண் சிசுக்கொலை
32. ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு
31. பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்
30. சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு
29. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா
28.
வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்
27. சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்
26. என் காதல் சொல்ல நேரமில்லை
25. சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று
24. என் பார்வையில் பையா திரைப்படம் – விமர்சனம்
23. என் பார்வையில் விண்ணைத்தாண்டி வருவாயா
22. உன்னை பார்த்த நாள் முதல்
21. நினைத்து நினைத்து பார்த்தேன்
20. பெண்ணும் ஐம்பூதமும்
19. உலக நாயகனும் மயிர்க்கூச்சரியும உலக நிகழ்வுகளும்
18. ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது
17. நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா? இதோ ஒரு பரிசோதனை!!!
16. அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்
15. காதல் யுத்தம்
14. எனக்காக பிராத்தனை செய் சகோதரா
13. அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..
12. சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்
11. நியூ யார்க் நகரம் – ஜில்லுனு ஒரு காதல் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்
10. என் பார்வையில் அயன் திரைப்படம்.
9. போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்
8. ஆஸ்கார் தமிழனின் எல்லா புகழும் இறைவனுக்கே
7. தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்..
6. என் பார்வையில் கஜினி தமிழும், கஜினி ஹிந்தியும்
5. கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை
4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2009
3. நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்
2. ஒ சாந்தி சாந்தி – வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்
1. மனிதமுயற்சி

இதோ உங்களுக்கு என் கேள்விகள்

1, கவிதைகள், பாடல்கள், தகவல்கள், சினிமா விமர்சனங்கள், அனுபவக்கதைகள் போன்ற பல்வகை பதிவுகள் காணக்கிடைக்கும் இத்தளத்தில் உங்களுக்கு பிடித்தது எந்த வகையான பதிவுகள்?

2, தொடர்ந்து எந்த வகையான பதிவுகளை நான் பதிவிக்க வேண்டுமென எண்ணுகிறீர்கள்? ஏன்?

3, இந்த நாற்பத்தி ஒன்பது பதிவுகளில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் எவை? (ஒன்றுக்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம்)

4, முழுப்பதிவாக இல்லாவிடிலும் ஒரு குறிப்பிட்ட பாடலோ, சிறு வாக்கியமோ, கவிதையோ, உங்களுக்கு பிடித்தவற்றை மேற்கோளிலிட்டால் மிக்க மகிழ்ச்சி.

5, இவ்வலைதளத்திலோ, என் எழுத்துகளிலோ, அல்லது பொதுவாகவோ ஏதேனும் குறை தென்பட்டால், அல்லது யோசனை ஏதேனும் இருந்தால் இத்தளத்தின் மேலே “தொடர்பு கொள்க” பகுதியில் எனக்கு எழுதி அனுப்பி வைக்கவும். மிகவும் வரவேற்கிறேன்.

நன்றி பார்வையாளர்களே, மிக்க நன்றி வாசகர்களே

எழுத நிறைய இருக்கிறது ஆனால் நான் இன்னமும் எழுதவே ஆரம்பிக்கவில்லை.. இதோ (எழுத்து) நடை பயின்று கொள்ள இன்னும் நூற்றுக்கணக்கான பாதச்சுவடுகளை பதிக்கும் ஆசையில் மீண்டும் என் குழந்தை தன்  நடையை போடுகிறது. கீழே விழாமல் நீங்கள் அதை கடைசிவரை அதன் கரம் பிடித்து அழைத்துக்செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்…  பயணம் தொடரும்……

இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்கு ஒரு அருமையான வழி

eyes

மூப்படைந்து இறப்பவர் கூட அடுத்த ஜென்மத்தை பற்றி கடைசி  நிமிடமாவது சிந்தித்தே உயிர் விட்டிருப்பர். வாழ்க்கையை வெறுத்து இளம் வயதில் உயிர் துறப்பவன் கூட அடுத்த பிறவியின் எதிர்பார்ப்பிலேயே இறந்திருப்பான்.  யாருக்குத்தான் அந்த ஆசையில்லை. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்கிறதா என்று நிச்சயம் கிடையாது.  இறந்தபின்பு சொர்க்கம் போகிறோமா இல்லை நரகம் போகிறோமா என தெரியாது. அப்படி ஒன்று இருக்கிறதா என்றும் கூட பார்த்து சொன்னவர்கள் இதுவரை கிடையாது. இருப்பினும் இறந்த பின்பு அனைவருக்கும் வாழ ஒரு வாய்ப்பிருக்கிறதென்றால் முயற்சித்து தான் பார்க்கலாமே..

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர்  எனக்குள்ளே ஒன்று உந்திக்கொண்டு இருந்ததது. ஆனால் யாரை தொடர்பு கொள்வது, எங்கே அதை செய்ய முடியும், அதற்கான வழிமுறை என்ன என்று எனக்கு சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. அப்படியே அந்த எண்ணத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டேன். 19-10-2010 நான் பிறந்து சரியாக இருபத்தைந்து வருஷம் நிறைவடைடைகிறது. உருப்படியாக ஒன்று பண்ணலாமே என்று தோன்றியது. இப்போது தான் கிடப்பில் போட்ட அந்த எண்ணத்தை நோக்கி மீண்டும் முயற்சிக்க ஆரம்பம் செய்தேன். பெரிதாக மெனக்கெடவில்லை. சிறிது இணைய தேடலும் ஒரு சில தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவும் அறிந்து கொண்டேன். அது கண்தானம் எங்கே செய்வது, அதற்கான வழிமுறைகளும் தான். மிகவும் சுலபமானது. ஆனால் ஞாபகமாக பிறந்தநாளன்று செய்து விடலாம் என்று பொறுத்திருந்தேன்.

19 அக்டோபர் 2010.

செவ்வாய் கிழமை

மாலை ஏழு மணி

லோட்டஸ் கண் மருத்துவமனை, சேலம்.

என் கண்ணை தானம் செய்ய என் பெற்றோர்களின் சாட்சி கையெழுத்தோடு பதிவு செய்தேன்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இறந்த பின்பும் உயிர் வாழ இதை விட சிறந்த வழி ஏதேனும் இருப்பதாய் தெரியவில்லை. தானத்திலும் சிறந்தது அன்னதானமென்பர். ஆனால் பார்வை இல்லாதவன் பெரும் அன்னதானமென்பது, தனக்கு அன்னமிட்டவரையும், அரவணைதவர்களின் உருவமும் தன் வாழ்நாளின் கடைசி வரை காணக்கிடைக்காத ஒரு வலியை அவனிடத்தில் ஏற்படுத்தவல்லது. அது அவனுக்கு பசியின் வலியை விட அதிக வலியையும் ஏக்கத்தையும் கொடுப்பது நிச்சயம். தான் இருக்கும் போது தன்னிடம் மிஞ்சியதை அன்னதானமாக கொடுப்பதை விட தான் இறந்த பிறகு தன்னுடலில் எஞ்சியதை கண்தானமாக கொடுப்பதே சிறந்தது. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

உங்களுக்கும் இறந்த பிறகும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால் நீங்களும் தயவு செய்து நிச்சயம் கண்தானம் செய்ய முன்வரவும். இந்த இடுக்கையை படித்த யாரேனும் ஒருவருக்கு கண்தானம் செய்ய எண்ணம் நேர்ந்தால் இங்கே மறுமொழியிட்டு அதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். அப்படி பொது நலம் ஏதும் தோன்றவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் சுயனலவாதியாகவே இருந்து விட்டு போங்கள்.  இந்த பொது நலத்திலும் ஒரு சுய நலம் இருக்கிறது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் இறந்த பிறகு, இந்த பூமியில் உங்கள் உடலரித்து போய் விடினும் உங்கள் கண்களை இன்னொருவரிடம் பத்திரமாக விட்டுச்செல்லுங்கள். புத்திசாலியான சுயநலவாதியாக இருந்துவிடுங்களேன்!

மேலும் விவரங்கள்

1, இறப்பு ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம். ஆகவே கண்தான முடிவை தயவு செய்து தள்ளி போட வேண்டாம்.

2, உங்கள் கண்கள் நீங்கள் இறந்த பின்னரே தானமாக பெற்றுக்கொள்ளப்படும். நீங்களே விரும்பினாலும் நீங்கள் உயிரோடு இருக்கும் பொது சட்டப்படி உங்கள் கண்ணை தானமாக யாரும் பெற முடியாது. ஆகவே பயப்படமால் பதிவு செய்யவும்.

3, நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் கண் அறுவை செய்து எடுக்கப்படாவிட்டால் பிறருக்கு பயன் படாமல் போய்விடும். ஒருவர் இறந்த பின்னர் அவர்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடனாடியாக கண் வங்கிக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும்.

4, இதை நீங்கள் நேரிடையாக உங்கள் நண்பர்களிடமோ கூறுவது சற்று கடினமாக தான் இருக்கும். அதுவும் இல்லாமல் நீங்கள் சொல்லி வைக்கும் நபர் அந்நேரத்தில் பதட்டத்தில் கண் வங்கியிற்கு தெரிவிக்கவும் மறந்து விட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் உங்கள் நெருங்கியவர்கள் அனைவருக்கும் நீங்கள் கண் தானம் செய்திருப்பதையும்  அவர்கள் பின்பற்ற வேண்டியவற்றையும் (தங்களுக்கு நேர்வதை போலில்லாமல்) பொதுவான மொழியில் கூறவும். நானும் கூட அதை என் பிறந்த நாளன்று கூறாமல் அடுத்த நாளே என் குடும்பத்தாரிடம் கூறினேன்.

5. கண்ணை அகற்றுவது பதினைந்து முதல் அறை மணி நேரமே ஆகும். ஆகவே மதச்சடங்குகள் பாதிக்க வழி இல்லை.

6, கண் தானம் செய்தவரின் பெயரும், கண் வழங்கப்பட்டவரின் பெயரும் மறைக்கப்பட்டுவிடும். இருவர் குடும்பத்தாருக்கும் கடைசிவரை தெரியப்போவதில்லை.

7, கண்தானம் செய்ய விரும்புவோர் லோட்டஸ் ஐ கேர், ஷங்கர் நேந்திராலையா போன்ற மருத்துவமனையின் இணைய தளத்தில் விவரங்களை காணலாம். அல்லது அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்கவும்.

donate-your eyes

சேலம் ஜி.ஆர்.டீ. ஓட்டலில் ஒரு மாலை பொழுது

18.10.2010 அன்று  சேலத்தின் முதன் நான்கு நட்சத்திர ஹோட்டல் என்ற அந்தஸ்துடன் ஜி.ஆர்.டீ. கிராண்ட் எஸ்டான்சியா திறக்கப்பட்டது. நானும் நண்பரும் மூன்றாம் நாளான நேற்று (20-10-2010) மாலை இரவு எட்டு மணி சுமாருக்கு சென்றோம். தற்சமயம் ஒரே ஒரு பல்வகை உணவகம்! (Multi-Cuisine Restaurant)  மட்டுமே அங்கு துவக்க நிலையில் இயக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. பப்பெட் (Buffet) உணவு முறையில் வழங்கப்பட்ட அந்த உணவகத்தில் மூன்றாம் நாளாக இருந்த போதிலும் கூட்டம் நன்றாக இருந்தது. சேலத்தில் கண்டிப்பாக இப்படி ஒரு உணவகம் இல்லை. அறுசுவை உணவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது. வாய்ப்பு கிட்டினால் நீங்களும் சென்று விட்டு வரவும் சென்று விட்டு வரவும். நபர் ஒருவருக்கு சேவை வரி தவிர்த்து ரூபாய் நானூறு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக அதற்கு மதிப்புள்ளது. இன்னும் சிலவாரங்களில் தென்னிந்திய உணவகம் ஒன்றும் அங்கு துவங்கப்பட நிலையில் உள்ளது.

Salem GRT multi-cuisine restaurant

Salem GRT Grand Estancia

Salem GRT Estancia Hotel