ஒரே இரவில் பிரபலமான என் ‘ஆன்டிராய்ட்’ பிரசன்டேசன்

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ சங்கம், சேலம் கிளையில் நான் ஆன்ட்ராய்ட் பற்றி பேசியதை ஏற்கனவே எழுதி இருந்தேன். அதற்காக தயார் செய்த அந்த பவர்பாய்ன்ட் பிரசன்டேசனையும் அதில் பகிர்ந்திருந்தேன். அதை பகிருவதற்க்காக “ஸ்லைட் ஷேர்” என்னும் தளத்தில் அதை பதிவேற்றினேன்.  “ஸ்லைட் ஷேர்” என்பது பவர்பாய்ன்ட் பிரசன்டேசனை இணையத்தில் பகிருவதற்கு முதன்மையான இணையத்தளம்.உலகெங்கும் பலரால் பதிவேற்றப்பட்ட பல வகையான கோப்புகளை அங்கு காணலாம்.  நான் அதில் என்னுடையதை பதிவேற்றிய மறுநாள் காலை அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.  அந்த பிரசன்டேசன் முகப்புதகத்தில் பிரபலாமகி இருக்கிறது என்றும். அவர்களுடைய இணையதள முகப்பில் அதை பிரசுரித்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள். மகிழ்ச்சி!

my android ppt is hot on slideshare

ஆன்டிராயிட் பற்றி என் உரை – சேலம் ஐ.எம்.ஏ வில்

Praveen talking about AndroidPraveen Talking in IMA Salem
Indian medical association SalemPraveen speech on Andorid

நேற்று மாலை (23/12/2012) சேலத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் – லேடிஸ் கிளப்பில், ஆன்டிராயிட் பற்றி சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடம் உரையாற்றினேன்.  பெண் மருத்துவர்களும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அதில் பங்குபெற்றனர். “Whatz App – The Power Of Android” என்ற தலைப்பில் ஸ்மார்ட்போன் பற்றியும், ஆன்டிராயிட் போன்களின் உபயோகங்கள் பற்றியும், அதில் தரவிறக்கி பயன்படுத்த வேண்டிய பல முக்கிய மென்பொருள்களையும் பற்றியும் எளியவகையில் புதியர்களுக்கு புரியும்படியும், ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் ஒரு பவர் பாய்ன்ட் பிரசன்டேசன் மூலம் விளக்கினேன்.

பங்குகொண்ட அனைவரும் மிகவும் உபயோகமாக இருந்ததாய் கருத்து தெரிவித்தனர். அதில் மிகுந்த ஆர்வமாய் ஆரம்பம் முதல் என்னிடம் கேள்விகள் கேட்ட ஒரு பெண் மருத்துவருக்கு (மன்னிக்கவும், பெயர் ஞாபகம் இல்லை) 8GB மெமரி கார்ட் பரிசளித்தேன். எனக்கும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள துள்சி ரீடைல்ஸ் வவுச்சர் பரிசாக கொடுத்தார்கள். என்ன வாங்குவது என்று தெரியவில்லை, அம்மாவுடன் வவுச்சரையும், என்னுடைய கிரெடிட் கார்டையும் கொடுத்து ஏதேனும் வாங்கி வர அனுப்பவேண்டும்.

அந்த பவர் பாய்ன்ட் பிரசன்டேசன்  கீழே.

சாய்ந்து சாய்ந்து. நீ பார்க்கும் போது. – முழுப்பாடலும் என் குரலில்

மென்மையாக, மனதை வருடுகிற எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது … இப்போது இதில் முழுப்பாடலையும் நானே பாடி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாடலையும், விஷுவலையும் மெருகேற்றி இருக்கிறேன். வீடியோவுடன்.. பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்… Hope it wont hurt your ears! 🙂

View in HD for Good Visual & Audio Quality!

பாடல்: சாய்ந்து சாய்ந்து.. நீ பார்க்கும் போது…

படம்: நீ தானே என் பொன்வசந்தம்.
இசை: இளையராஜா.Song: Saindhu Saindhu.. Nee Paarkum Pothu
Movie: Neethane En Ponvasantham
Music: Ilayaraja

நீ தானே என் பொன்வசந்தம் – விமர்சனம்

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-Movie-review

மிகவும் எதிர்பார்புக்கிடையில் வெளியான படம் இந்த “நீ தானே என் பொன்வசந்தம்”. சொல்லபோனால் இளையராஜாவின் பாடல்களின் ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் இந்த படத்திற்கே சென்றிருந்தேன். அதுவும் குறிப்பாக சாய்ந்து.. சாய்ந்து பாடல்… அனைவரின் எதிர்பார்ப்பை உடைக்கும் ஒரு யுக்தியாய் படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல மேடைகளிலும், நேர்காணல்களிலும் சொல்லி இருக்கிறார். இருப்பினும் அந்த படத்தின் கதை இது தான்.

வருண் & நித்யா. இவர்களின் குழந்தை பருவம் முதல் பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வேலை தேடும் இளைஞர் பருவம் வரை நடக்கும், நட்பு, சந்தோஷம், துக்கம், காதல், ஊடல் போன்ற உணர்வுகளை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் நெருக்கமாகி பின்பு சண்டையிட்டு பிரியும் இவர்கள் இறுதியில் வரன் தேடும் கல்யாணப்பருவத்தில் ஒன்று சேர்கிறார்களா, இல்லையா என்பது தான் கதை.

சாய்ந்து சாய்ந்து பாடல்.. எவ்வளவு மென்மையாக, மனதை வருடுகிற ஒரு பாடல் இது. கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார். என்னை கேட்டால் அதை படமாக்கி இருக்கவே வேண்டாம். சில பாடல்கள் வெறும் ஆடியோவில் அப்படியே விட்டுவிடுவது உத்தமம். வெறுமனே கண்களை மூடி அந்த பாடலை கேட்டாலே எவ்வளவு விஷுவல்கள். அதே மாதிரி “பெண்கள் என்றால்” பாடல், மிகவும் அழுத்தமான வரிகள். ஆனால் அதற்கான சிச்சுவேசனோ, எமோஷனோ காட்சிகளில் இல்லை.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை வரை வருணும், நித்யாவும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண், பெண் இருவருக்கும் நட்பிலும், காதலிலும் நடக்கும் அத்தனை இனிமைகளும், கசப்புகளும் இவர்களுக்கும் நடக்கிறது. அழகான நிகழ்வுகள் அவை. ஆனால் சுவாரசியமான சம்பவங்களின் மூலம் திரைக்கதை நகராமல் அவர்களது உரையாடல்களின் மூலமாகே நகர்கிறது. இது பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தி பார்ப்பவர்களை போரடிக்க வைக்கிறது. அவ்வப்போது சந்தானம் வந்து கொஞ்சம் அந்த தொய்வை தாங்கிப்பிடிக்கிறார். ஆனால் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த சந்தானம்-ஜெனி லவ் பயங்கர கிளிசே. தற்சமயம் மாய்ந்து மாய்ந்து காதலிப்பவர்களும், சமீபத்தில் பிரிந்தவர்களும் ஒரு வேலை இந்த படம் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-review

இத்தனையையும் மீறி படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது. நித்யாவின் பார்வையில் படத்தை பார்த்தோமானால் மனதை கனக்கவைக்கும் தருணங்கள் அவை. வருணிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த திருமண வரவேற்பிற்கு நித்யா செல்கிறாள். சிறு வயது முதல் அவன் தான் உலகம் என்று வாழ்ந்துவிட்ட அவளுக்கு இப்போது அனைத்தும் கை மீறி சென்று விட்டது. மேடையேறி கைகுழுக்க அவனிடம் கை நீட்டுகிறாள். வருண் அதை உதாசினப்படுத்த அப்போது அவள் முகத்தில் தோன்றும் அந்த ஒரு நொடி வெறுமையும், கண்கலங்கியவாறே அங்கிருந்து வெளியேறுவதும், ரியலிஸ்ட்டிக் டச். வலி மிகுந்த காட்சி அது.

இரவு வரவேற்ப்பு முடிந்து, விடிந்தால் வருணிற்கு திருமணம். இரவு வருணை காரில் அழைத்துக்கொண்டு சிறுவயதில் அவர்கள் சந்தித்த இடங்களுக்கு சென்று அந்த தருணங்களை நினைவு கூறுகின்றனர். அப்போது நித்யாவிற்குள் நடக்கும் மனப்போராட்டங்களும், உரையாடல்களும் எமோஷனின் உச்சம். எப்பேர்பட்ட மேஜிக் கிரியேட் பண்ணியிருக்க வேண்டிய படம். அனைத்து சரிவர இருந்தும் அழகான வாய்ப்பை கவுதம் தவறவிட்டுவிட்டார் என்றே எனக்கு தோன்றியது.

சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் 2

suvarnabhumi-airport

விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!!  தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது.   “ஸ்வர்ண பூமி”  என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு  என்று அர்த்தமாம்.  அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே  அந்த “தாய் மொழி”க்கும்,  நம் “தாய்” மொழிக்கும்  உள்ள ஒற்றுமைகள்  ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில்  கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது.

உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவும் பிரமிக்கவைக்கும் உட்கட்டமைப்பை கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் அங்கு விமானம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தது. அடுத்து இமிக்ரேஷன் பிரிவுக்கு நுழைந்தோம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அங்கு சென்று இறங்கியதும் விசா வாங்கிக்கொள்ளும் “ஆன் அரைவல்” விசா வசதி இருந்தது. அது முன்னமே தெரிந்திருந்தும் நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் விசா ஸ்டாம்ப் செய்துவிட்டே புறப்பட்டு இருந்தோம். இதற்கே ஒவ்வொருவருக்கும்  ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் செலவாகி இருந்தது.  இதை ஒரு முன்னெச்சரிக்கைக்காக செய்திருந்தோம்..

suvarnabumi airport immigration check

புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், நாங்கள் விமான டிக்கெட் பதிவு செய்ய முடிவெடுத்த ஒரு நாளில் திடிரென அந்த செய்தியை படிக்க நேர்ந்தது. அதாவது தாய்லாந்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள், பாங்காக் நகரத்தில் அன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி பெருத்த சேதத்தை, உயிர் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர். இன்றும் கூட தாய்லாந்து முழுவதும், அதுவும் குறிப்பாக பாங்காக் நகரம் கிளர்சியார்களின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கலாம், அபாயமணி அடிக்கப்படலாம் என்ற சூழ்நிலை. ஒருமுறை சுவர்ணபூமி விமான நிலையத்தின் இயக்கத்தை கூட ஸ்தம்பிக்க வைத்ததாக அப்போது படித்ததாய்  நியாபகம்.

அதுவரை அமைதி நிலவரம் தெரிந்த அந்த நாட்டில், நாங்கள் செல்ல முடிவெடுத்த தருவாயில் தோன்றிய அந்த அச்சுறுத்தல் காரணமாக எங்களுடன் வரவிருந்த ஒரு நண்பன் திடீரென பின்வாங்கினான். மரணம் தான் விதியெனில் அது நம்மூரில் கூட நிகழ்ந்துவிடும், அங்கு சென்று தான் இறக்கவேண்டும் என்பதில்லை என்ற என் தத்துவம் அவன் உயிர் பயத்தின் முன் எடுபடவில்லை. கடைசியில் அவனை விட்டு விட்டே டிக்கெட் பதிவு செய்தோம். அந்த சமயம் முதல்  தாய்லாந்தில் நடைபெறும் முக்கிய விஷயங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். .

praveen in suvarnabumi airport

அங்கு சென்று விசா எடுக்கும் சட்டதிட்டங்கள் மாற்றப்படுவதாக ஆலோசனை நடைபெறுகிறதென  ஒரு நாள் செய்தி வந்தது. அதுமட்டும் இல்லாமல் அங்கு சென்று விசா எடுக்கும் போது குறைந்த பட்சம் இருபதினாயிரம் தாய் பாத் (தாய்லாந்து கரன்சி) கையில் இருக்க வேண்டும் அல்லது ஐநூறு அமெரிக்க டாலர் இருப்பதாய் பாஸ்போர்ட்டில் பதிவித்திருக்க வேண்டும். அங்கு சென்று இறங்கியதும், நாங்கள் எடுத்து செல்லும் டாக்குமென்ட்டிலோ, மற்ற விஷயங்கலிலோ  ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் விசா ஸ்டாம்ப் ஆகாது. உடனடியாக அடுத்த ப்ளைட்டில் திரும்ப வேண்டியது தான். அது மட்டுமல்லாமல் பிசியான நேரங்களில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை விசாவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். எதற்கு வம்பென்று புறப்படும் முன் இந்தியாவிலே விசா குத்தியாயிற்று!

இமிக்ரேஷன் பகுதியில் வரிசையில் நின்று செல்கிறேன். என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்த ஒரு ஆபிசர் என்னையும் என் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தையும் மாற்றி மாற்றி சில முறை பார்த்தார்.  அவர் கண்களில் ஒரு டெரர் தெரிந்தது. அடிக்கடி நான் கெட்டப் மாற்றுவதில் உள்ள சிக்கல் தான் அது என்று நினைக்கிறேன். மறுபடியும் என்னையும் அவர் கணினியையும் மாற்றி மாற்றி பார்த்தார். சரி அடுத்த ப்ளைட்டில் சென்னை கிளம்ப சொல்ல போகிறாரா,  இல்லை அவர் பார்வையே அப்படி தானா என்று நான் யோசித்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்த காமிரா என்னை பார்த்து கண்ணடித்தது. தாய்லாந்தில் நுழையும் ஒவ்வொருவரின் முகமும் பதிவு செய்யப்பட்ட பிறகே அங்கே அனுமதிக்கப்படுகின்றனர்.

praveen in suvarnabumi airport

ஒரு வழியாய் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு  போகலாம் என்று சொன்னார்.  இமிக்ரேஷன் பார்மாலிட்டி முடித்து, லக்கேஜை கலெக்ட் செய்துக்கொண்டோம். கிலோ மீட்டர் கணக்கில் நீண்டு இருப்பது போல் நடக்க நடக்க முடிவில்லாமல் போய் கொண்டிருந்தது அந்த அரைவல் டெர்மினல். அந்த விடியற்காலையில் கூட  நிறைய ஐரோப்பியர்கள் வந்து இறங்கிக்கொண்டு  இருந்தனர். எங்கு நோக்கிலும் வெள்ளைத்தோல் மனிதர்கள். சீலை, சுடிதார், தாவணிகள் முற்றிலும்  மறைந்து இப்போது வெறும் அரைக்கால் சட்டையும், அரைகுறை ஜீன்ஸ், டீ-சர்ட்டு மட்டுமே தென்பட அரமித்தது.  அதை மீறி கருப்பாய் ஏதேனும் மனிதஉருவம் தென்பட்டால் அது அவர்களுடைய நிழலாக இருக்கும் அல்லது ஏதேனும் முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்திருக்கும். அந்நிய தேசத்தில் நுழைந்ததற்கான முதல் அறிகுறி அது.

முதல் வேலையாய் கையில் இருக்கும் டாலரை, தாய்லாந்து கரன்சியாக மாற்ற வேண்டும். நாங்கள் புறப்படும் போது, நம் இந்திய பணத்தை அமெரிக்க டாலராய் தான் மாற்றி எடுத்துப்போய் இருந்தோம். அங்கு இறங்கியவுடன் செலவு செய்வதற்கு போதிய அளவில் தாய்லாந்து பணம் கையில் இல்லை. தாய்லாந்து கரன்சி இந்தியாவில் சரியான ரேட்டில் கிடைப்பது போல் தெரியவில்லை. அதாவது நம் இந்திய ரூபாய்க்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் தான் ஒரு தாய்லாந்து ரூபாய் இங்கே கொடுக்கிறார்கள். ஆனால் 1.75 ரூபாய்க்கே (Approx) ஒரு தாய்லாந்து பாத் நமக்கு வர வேண்டும். அப்போ பல ஆயிரம் ரூபாய் இங்கேயே மாற்றினால் நமக்கு எவ்வளோ இழப்பு ஏற்படும்?

ஏர்போர்ட்டிலேயே பல வங்கிகள் கரன்சியை மாற்றும் சேவை செய்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு முக்கிய கரன்சிக்கான விலையும் அவர்களது கவுண்டரில் டிஜிட்டல் போர்டில் காட்டிக்கொண்டு இருந்தது. ஆனால் டாலருக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட  சுமார் மூன்று தாய் பாத் வரை குறைவாகவே காணப்பட்டது. நீண்ட தூரம் நடந்தோம். அனைத்து கரன்ஸி எக்ஸ்சேஞ் கவுண்டரையும் பார்வையிட்டோம். அதே விலை தான். ஒரு சிறிய தொகையை, அன்றைய ஒரு நாள் செலவிற்கு ஆகும் அளவுக்கு மட்டும் அப்போது மாற்றுவதாய் முடிவு செய்யப்பட்டது. அது உண்மையிலே அருமையான முடிவு என்று பிறகு உணர்தோம். விமான நிலையத்தில் பணம் மாற்றினால் நமக்கு பெருத்த நட்டமே. அதை பற்றி பிறகு பேசுகிறேன்.

praveen in suvarnabumi airport

அடுத்து மொபைல் கனக்சென். எனக்கு கால் கட்டணத்தை விட, 3G கவரேஜ் மற்றும் டேட்டா தான் முக்கியம். இணையத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் பேச யுக்திகள் இருக்க, எதற்கு ஐ.எஸ்.டி போட்டு அதிக கட்டணத்தில் இந்தியாவிற்கு அழைக்க வேண்டும்? எந்த மொபைல் நிறுவனம் அங்கே சிறந்த சேவை வழங்குகிறது, அதுவும் குறிப்பாக நாங்கள் செல்லும் அனைத்து பகுதிகளுக்கு கவரேஜ் இருக்கிறதா, 3G இருக்கிறதா என ஏற்கனவே இணையத்தில் ஆராயப்பட்டு முடிவு செய்தாயிற்று. சிம் கார்ட் வாங்குவது மட்டும் தான் பாக்கி. நண்பர் ஒருவர் கரன்ஸி மாற்றும் வேலையை கவனிக்க, நான் A.I.S மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் கவுண்டரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். இரண்டு அழகிய இளம்பெண்கள் என்னை வரவேற்க புன்னகையுடன் தயாரானார்கள்.

அருகே சென்றதும், “சுவாதி காம்” என்று என்று நீட்டி முழக்கி அவர்கள் என்னை நோக்கி கூறியது ஏதோ ராகத்தில் பாடுவது போல் இருந்தது. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம்  “காலை வணக்கம்”. தாய் மொழியின் முக்கிய வார்த்தைகளை உச்சரித்துக்காட்டி, கூடவே  அதன் ஆங்கில அர்த்தத்தை விளக்கும் சில ஆன்டிராயிட் மென்பொருள்களை என் மொபைல் போனில் தரவிறக்கி வைத்திருந்தேன். சிலது ஞாபகமும் இருந்தது. இசையை கேட்பது போல் மிகவும் லயமான மொழி அது. அவர்கள் பேசக்கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு பாஸ்போர்ட் நகல், கொஞ்சம் பணம், நிறைய மொழி பரிவர்த்தனைகள்  – ப்ரீ ஆக்டிவேட்டட்  சிம் கார்ட் ரெடி.

இப்போது பாங்காக் வானம் விடிந்துக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் வெளியே செல்லப்போவதில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில், சுமார் ஏழு மணிக்கு அங்கிருந்து இன்னொரு விமானத்தின் மூலம் புக்கெட் தீவு செல்லவிருக்கிறோம். நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த கணங்கள். இயற்கை அன்னையின் மடியில் தவழக்கூடிய அந்த நொடிகள். அங்குதான் நிகழப்போகிறது. புக்கட் தீவே.. இதோ வருகிறேன்… உன்னை தேடி ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்து வருகிறேன். இப்படி கண்களை மூடி கனவு கண்டுகொண்டிருக்கையில், திடிரென நான் படித்த அந்த எச்சரிக்கை செய்தி என் மனதில் பளிச்சென்று வந்து போனது.  உள்ளுக்குள் மெல்ல பயம் படர ஆரம்பித்தது. கிளர்சியார்களின் பிரச்சனை போல்  எங்களுக்கு இன்னொரு பிரச்சனைக்கான அறிகுறி அங்கு காத்திருந்தது. அது ஏற்கனவே இதற்கு முன்னர் பல உயிர்களை அந்த தீவுகளில்  காவு வாங்கியுள்ளது .அதுதான் சுனாமி.

– பயணம் தொடரும்

பாங்காக்கில் இருந்து புக்கட் தீவு பயணத்திற்காக விமானம் மேலெழும்புகையில் எடுக்கப்பட்ட வீடியோ இது

 

சுவர்ணபூமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு: