தலைக்கவசம் உயிர்க்கவசம்

road divder

இன்று மாலை சேலம் சென்னிஸ் கேட்வே அருகே நடந்த சம்பவம். ட்ராபிக் அதிகம் இல்லாத நேரம் அது. இருசக்கர வாகனத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்றுக்கொண்டு இருந்தார். திடீரென சாலையின் நடுவில் இருந்த மதில் சுவரில் இருந்து ஒரு பையன் எகிறி குதித்து சாலையை அதிரடியாய் கடக்க முயற்சிதான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இரு சக்கர வாகன ஓட்டுனர் அவன் மேல் மோதிவிடாமல் இருக்க சடன் ப்ரேக் அடித்தார். அதை பற்றியெல்லாம் துளியும் கவலையில்லாமல் அந்த பையன் நிற்காமால் தொடர்ந்து ஓடிசென்று சாலையை கடந்து சில நொடிகளில் மறைந்து போனான்.

சாலையின் நடுவில் மதில் சுவர் எழுப்பி இருப்பதே அதை யாரும் கடக்க கூடாது என்பதற்கு தான். அதை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த பையன் செய்த காரியத்தின் விளைவு என்னவென்று அவன் யோசித்து பார்க்கவில்லை. இந்நேரம் அவன் வீட்டிற்கு சென்று டீ.வி சீரியல் பார்த்துக்கொண்டோ, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டோ தன் வழக்கமான வாழ்கையை எந்த வித குற்றவுணர்வுமின்றி தொடர்ந்துக்கொண்டு இருப்பான். ஆனால் எந்த தவறும் இழைக்காமல் இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த அந்த நபர்?

அவன் மேல் மோதிவிடமால் இருக்க ப்ரேக் அடித்ததில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, முகம் சேதமாகி, ரத்தம் வழிந்த நிலையில் சாலையில் விழுந்துக்கிடந்தார். அனைவரும் சேர்ந்து அவரை தூக்கி சாலை ஓரமாக உட்கார வைக்க முயற்சிக்கையில் இந்த சம்பவத்தை நான் பார்க்க நேர்ந்தது. அப்போது சாலையெங்கும் காயாத நிலையில் ரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது. முகம் முழுவதும் வீங்கி, படு கோரமாகி, ரத்தம் வழிந்து அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார் அந்த நபர். பார்க்கவே முடியவில்லை. 108 எண்ணிற்கு யாரோ போன் செய்ய, அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து அவரச அவசரமாய் அவரை அள்ளிப்போட்டுகொண்டு சென்றது.

அந்த சாலையில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ரத்தம் உறைந்துகொண்டிருந்ததை பார்த்தபோது, “இந்த நபர் இப்போது எங்கே, எந்த வேலை நிமித்தமாய் சென்றுக்கொண்டிருந்திருப்பார்? ஒருவேளை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளையோ, மகனையோ அழைக்க சென்றிருப்பாரோ? இப்படி ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று அவர் குடும்பத்திற்கு தெரியவரும்போது அவர்கள் படப்போகும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லையே. அவர் தலையில் வேறு மிக மோசமாய் அடிபட்டு இருக்கிறது. ஒருவேளை பிழைக்காமல் போய் விடுவாரோ. இல்லை இல்லை. அப்படியெல்லாம் ஆகக்கூடாது” இவ்வாறு மனம் தன் போக்கிலே சிந்தித்துக்துவங்கியது.

அப்போது அருகில் இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “ஒருவேளை தலைக்கவசம் அணிந்து வந்திருந்தால் இந்நேரம் அவராகவே எழுந்து, வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம், இவ்வளவு பெரிய சேதம் ஆகி இருக்காது”. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் பரணில் நீண்ட மாதங்களாய் கிடந்த என் தலைக்கவசத்தை தூசு தட்டி எடுக்கத்துவங்கினேன்.

சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்

Chennaiyil Oru Naal Movie Review

வழக்கமாக கழியும் நாளாக அல்லாமல் நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் ஸ்தம்பிக்க வைத்த அந்த ஒரு நாள். மூளைச்சாவுற்ற ஹிதேந்திரனின் இதயம் அவசரம் அவசரமாக காரில் எடுத்து செல்லப்பட்டு மின்னல் வேகத்தில் சென்னை சாலைகளில் கடந்து ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாள். அதுதான் இந்த “சென்னையில் ஒரு நாள்”.

மலையாளத்தில் ட்ராபிக் என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்து ஜெயித்த படம் இது. இப்போது ரீமேக் செய்யப்பட்டு ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழில் வெளிவந்திருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு சமூக அக்கறையுடன் வெளிவந்து மக்களிடம் ஒரு நல்ல கருத்தை விதைக்கும் படம்.

மீடியாவில் வேலைக்கிடைத்து, பல கனவுகளுடன் முதல் நாள் வேலைக்கு செல்லும் இளைஞன் கார்த்திக். குடும்ப சூழ்நிலையால் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட ட்ராபிக் போலீஸ் சத்தியமூர்த்தி (சேரன்). பேர் புகழ் என்ற மாய வலையில் சிக்கி, தன் மகள், மனைவியிடம் கூட நேரம் செலவிடாமல் சதா பரபரப்பாக சுத்திக்கொண்டிருக்கும் சினிமா நட்சத்திரம் கவுதம் (பிரகாஷ் ராஜ்). புதிதாய் திருமணமாகி தன் மனைவியுடன் புது வாழ்கையை தொடங்கியிருக்கும் டாக்டர் ராபின் (பிரசன்னா). இவர்கள் நால்வரும் சந்திக்கும் ஒரு புள்ளி தான் கதை துவங்கும் இடம்.

படத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே சிக்னலில் காத்திருக்கும் கார்த்திக் திடீர் விபத்தினால் தூக்கி எறியப்பட்டு மூளைச்சாவுறுகிறான். மற்றொருபுறம் பிரகாஷ் ராஜின் மகள் இதயக்கோளாறினால் அவதியுற்று சில மணி நேரங்களில் மாற்று இதயம் பொருத்தப்படாவிட்டால் உயிரிழக்கும் நிலை. கார்த்திக்கின் மூளைச்சாவு, அவனை கொன்று, இதயம் பிரிக்கப்பட எடுக்கும் முடிவு என்ற எமோஷனல் காட்சிகளில் தொடங்கி, 120 கிலோமீட்டர் தூரமுள்ள வேலூருக்கு குறைவான நேரத்தில் காரில் எடுத்துச்செல்லும் பரபரப்பான காட்சிகளாக விரிந்து, அந்த சிறுமியின் உயிர் காப்பாற்றப்படும் ஒரு நெகிழ்வான முடிவுடன் நிறைவடைகிறது படம்.

இடைவேளையின் போது மக்கள் அனைவரும் கைதட்டிவிட்டு அரங்கிலிருந்து வெளியேறுவதை முதன் முறை பார்க்கிறேன். பரபரப்பின் உச்சத்தில் நிறுத்தப்படும் அந்த இன்டர்வல் ப்ளாக் மக்களை ஆர்ப்பரிக்க செய்துவிடுகிறது. வெளியே வந்து, மீண்டும் உள்ளே செல்லும் வரை அநேகம் பேர் படத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்ததையும் கேட்க்க முடிந்தது. பொதுவாக நான்கு, ஐந்து முறை மக்கள் ஒரு சேர கைதட்டி பார்த்தாலே படம் ஹிட் என்று கூறுவர். இதில் பல இடங்களில் கைதட்டலை கேட்க முடிகிறது. இதுதான் கதை என்று தெரிந்தும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன என்று படத்தோடு ஒன்றிப்போய் பார்க்க முடிகிறது என்பது தான் படத்தின் மிகப்பெரிய பெரிய ப்ளஸ்.

படத்தில் அடிக்கடி கதையின் முன்னும் பின்னும் சென்று, ஒரே நேரத்தில் பல நபர்கள், பல நிகழ்வகளை காட்ட வேண்டி இருப்பதனால் எடிட்டருக்கு இதில் சவாலான வேலை. கச்சிதமாக செய்திருக்கிறார். இறந்து போன கார்த்திக்கை ஐ.சி.யூவில் அவனுடைய காதலி பார்க்கும்போது, அப்படியே பேட் இன் ஆகி உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் அந்த சிறுமியையும், அருகில் நிற்கும் அவளுடைய தாயார் ராதிகாவையும் காட்டப்படும்போது ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் சூழ்நிலைகள் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இப்படி படம் நெடுகிலும்.

chennaiyil-oru-naal-movie-review

படத்தின் இன்னொரு முக்கியமான ப்ளஸ் என்பது நண்பர் அஜயன் பாலாவின் வசனம். மிக யதார்த்தமாக, சினிமாத்தனம் இல்லாமல் கதையோட்டத்திற்கு பக்க பலமாய் இருக்கிறது. “Lets give him a good farewell” என்று கார்த்திக்கை கொன்று இதயத்தை எடுக்க ஏற்பாடு செய்யச்சொல்லி அவன் காதலி பார்வதி சொல்லும் இடமாகட்டும். சென்னை டூ வேலூர் ட்ராபிக் கண்ட்ரோல் செய்ய முடியாது என்று ஆரம்பத்தில் கையை விரிக்கும் கமிஷனர் சரத்குமாரிடம், எனர்ஜி வார்த்தைகள் பேசி விஜயகுமார் அவரை சம்மதிக்க வைப்பதும், பின்னர் அந்த எனர்ஜி அப்படியே சரத்குமாரிடம் இருந்து அவருடைய கீழ்நிலை ஊழியர்களிடம் ட்ரான்ஸ்பர் ஆகுமிடம். “ஒரு நடிகரா நீங்க ஜெயிச்சிருந்தாலும் உங்க வாழ்கையில தோத்துட்டீங்க. தமிழ் சினிமா பார்த்திராத பிக்கஸ்ட் பெயிலியர் ஆப் தி பிக்கஸ்ட் ஸ்டார்” என்று பிரகாஷ் ராஜிற்கு ராதிகா வார்த்தைகளால் சூடுபோடும் இடம் என்று பல இடங்களில் பளிச்சென்ற எதார்த்த வசனங்கள்.

மினிஸ்டர், எம்.பி. என்று யார் பேசியும் கார்த்திக்கின் பெற்றோர் அவனை கொன்று இதயத்தை தானமாய் தர சம்மதிக்கவில்லை என்று பிரகாஷ் ராஜிடம் அவர் பி.ஏ கூறும்போது. “என் பொண்ணுன்னு சொன்னீங்களா?” என்று சீறும் அந்த ஒரு இடம் போதும் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்துக்கொள்ள. படத்தில் அனைவரின் நடிப்பும் பிரமாதம் என்ற போதிலும் கார்த்திக்கின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தன்னுடய மகனை கொல்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டு அங்கிருக்க முடியாமல் தன் மனைவியுடன் காரில் வெகு தூரம் சென்று யாருமற்ற ஒரு இடத்தில் நிறுத்திவிடுவார். இதயம் உடலில் இருந்து பிரிக்கப்பட்டதை தெரியபடுத்த ஹாஸ்பிடலில் இருந்து போன் வரும். அப்படியே மனைவியை திரும்பி பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை. அனைவரையும் கலங்கடிக்கும் இடம் அது.

பல கோடி செலவு செய்து அழகான ஒரு வீடு கட்டினாலும் அதில் திருஷ்டிக்கு ஏதேனும் வைப்பது போல் இந்த படத்திற்கு சூர்யா. க்ளைமாக்ஸில் வரும் அந்த ஜிந்தா காலனி சீக்வென்சும், சூர்யா வீர வசனம் பேசி தனது ரசிகர்கள் மூலம் ட்ராபிக் கிளியர் செய்து உதவுவது அத்தனையும் தேவையற்ற நாடகத்தனம். படத்தின் நடுவில் தனது பாதையில் இருந்து சிறிது நேரம் காணமல் போகும் அந்த காரை போலே, கதை தனது பாதையிலிருந்து முற்றிலும் விலகி காணாமல் போகும் இடம் அது.  இருப்பினும்  குடும்பத்துடன் அனைவரும் காணவேண்டிய தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான படம். படம் முடிந்து நீங்கள் வெளியே வரும்போது, குறைந்தபட்சம்  உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்திருந்தாலே அது இந்த திரைப்படத்தின் வெற்றி.

பரதேசி – சினிமா விமர்சனம்

Bala in Paradesi Movie Posters

ஒரு டிபிகல் பொழுதுபோக்கு தமிழ் சினிமாவை போலவோ,  மக்கள் குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய ஜனரஞ்சக சினிமாவோ அல்ல இந்த பரதேசி. 1930களில் பஞ்சம்பிழைக்க தேயிலை தோட்டத்திற்கு சென்று கொத்தடிமைகளாக துன்புறுத்தபட்டவர்களின்  வலிகளையும், வேதனைகளையும் மிக அருகில் சென்று  பதிவு செய்யும் ஒரு ஆவணப்படம் இது. பாலா என்ற ஒரு உன்னத கலைஞனின் இதுவரை வந்த படைப்புகளில் ஆகச்சிறந்தது இதுவெனலாம். மொத்தத்தில் தமிழில் வெளிவந்த ஓர் உண்மையான உலக சினிமா.

“எரியும் பனிக்காடு” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “ரெட் டீ” (Red Tea) என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.  டைட்டில் கார்டிலேயே படம் தரப்போகும் உணர்வை பார்வையாளர்களிடம் விதைத்துவிடுகிறார்கள். இதுதான் படம். இதை பற்றிதான் சொல்லப்போகிறோம். நீ பாட்டுக்கும் கண்டபடி எதிர்பார்த்துவிட்டு ஏமாந்துவிடாதே என்கின்ற சூட்சமம் அது. நிச்சயம் இது மாதிரி திரைப்படங்களுக்கு, குறிப்பாக தமிழ் நாட்டு மக்களுக்கு அது அவசியமான ஒன்று.

முதல் பாதியில் சூளூர் எனும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், பஞ்சம் பிழைக்க புறப்படும் சூழ்நிலையையும் விவரிக்கும் இப்படம் இரண்டாம் பாதியில் அவர்கள் நயவஞ்சகத்தில் சிக்குவதையும், கொத்தடிமைகளாக துன்புறுத்தப்படுவதுமென விரிகிறது. வில்லனை கொன்று பழி தீர்க்கும் வழக்கமான கதையாக அல்லாமல் யதார்த்தத்தின் உச்சமாக, வேதனையின் மிச்சத்தில் முடிகிறது படம். ஏற்கனவே இந்த படம் எதைப்பற்றியது என்று தெரிந்தபின்பும், எப்படிப்பட்ட துயரங்களை காட்சிகளாக படம் முழுக்க காட்டிவிட முடியும் என்ற ஆர்வத்தில் தான் நான் சென்றேன். 

இனிக்க இனிக்க பேசி, பஞ்சம் பிழைக்க அழைத்துச்செல்லப்படும் மக்கள், போகும் வழியில் ஒருவன் உடல் பலகீனமாகி விழுந்துவிட, அவனை சுமையாகக் கருதி அப்படியே விட்டுச்செல்ல பணிக்கிறான் அவர்களை அழைத்துச்செல்பவன்.  இந்த இடைவேளை காட்சின் போதுதான்  கதையே துவங்குகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே நரக வேதனைகள். சரியான கூலி தராமல், உடல் உழைப்பை மட்டும் அட்டையாக உறிஞ்சி, மறுப்பவர்களை மாட்டை அடிப்பதை போல் அடித்து சித்திரவதை செய்து, வெள்ளைக்காரனின் காமப்பசிக்கு பெண்ககளை இறையாக்கி, தப்பிசெல்பர்களில் குதிக்கால் நரம்பினை துண்டித்து முடமாக்கி என நீண்டுச்செல்கிறது அந்த நரக வாழ்க்கை.  இது உண்மைச்சம்பவத்தை தழுவியதென்பதால், இப்படித்தான் நம் தமிழ் மக்கள் அக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் அவர்களது தேயிலைத்தோட்டத்தில் கொத்தடிமைகளாக நடத்தபட்டார்கள் என்று நினைக்கும்போது மனம் கனக்கிறது.

படத்தின் முதல் காட்சியில், ஒரே ஷாட்டில் அந்த கிராமத்தின் சந்து பொந்துகளில் புகுந்து அம்மக்களில் இயல்பு வாழ்க்கைக்குள் நம்மையும் இழுத்துப்போடுகிறது செழியனின் காமிரா. படத்தின் கடைசி காட்சியில் அதர்வா கதறும் இடத்திலிருந்து அந்த மலையை சுற்றிவிட்டு மீண்டும் அதர்வா இருக்கும் இடத்திற்கே ஒரே ஷாட்டில் காமிரா வந்து நிற்கும் இடம் கூட அபாரம்.  இப்படி பல இடங்களில் செழியன் படத்தை தன் கையில் ஏந்தியிருக்கிறார். ஆனால்  படம் முழுக்க செபியா டோன் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இது ஒரு ஆவணப்படம் என்ற தோற்றத்தைத்தான் உருவாக்குகிறது.

கிராமத்தில் நடக்கும் உரையாடல்களை சரி வர கவனிக்க இயலவில்லை. திரையரங்கின் ஒலியமைப்பில் பிரச்சனையா? அல்லது  படத்தின் ஒலிச்சேர்க்கை தன்மையே அதுதானா? என்று விளங்கவில்லை. ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கையில், ஊர் பெரியவரான அந்த பெரியப்பா இறந்துவிட, அனைவரும் அவரை கிடப்பில் போட்டுவிட்டு அதை மறைத்து கொண்டாடி மகிழ்வது நமக்கு சற்று உறுத்துகிறது.  அதிலும் உச்சம், கடைசிவரை அந்த பிணம் அக்கதையில் என்னவாயிற்று என்று நம்மிடம் இயக்குனர் மறைத்தது.  இளையராஜாவால் மட்டுமே அந்த படம் இசையால் முழுமையடைந்திருக்கும் என்ற உணர்வு நிச்சயம் எழாமலில்லை.

இருவருடங்களுக்கு முன்பு நுவரேலியா என்று இலங்கையில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்றிருந்தேன். வழியில் ஒரு தேயிலை தோட்டத்தின் அருகே சாலையில் வண்டியை நிறுத்தினோம். தேயிலை தோட்டத்தில் சில புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று அந்த மலைச்சரிவில் சிறிது தூரம் ஏறினோம். சற்று தூரத்தில் அங்கு பெண்கள் பலர் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே செல்லச்செல்ல அனைவரும் செய்வதறியாது சற்று அதிர்ச்சியுடன் எங்களையே பார்த்தனர்.

அருகில் இருந்த நண்பனிடம் “இங்கே புகைப்படம் எடுக்கலாமானு தெரியல. இவங்ககிட்ட எப்படி கேட்கறது? இவங்களுக்கு தமிழ் வேற தெரியாதே" என்றேன்.

“தம்பி எங்களுக்கு தமிழ் நன்றாக தெரியும்" என்று அந்த தேயிலை பறிப்பவர் மத்தியில் இருந்து ஒரு பெண்மணி குரலெழுப்பினார்.

எனக்கு ஆச்சர்யம் தாழவில்லை. “ஓ… உங்களுக்கு தமிழ் தெரியுமா?  இங்கே நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?”

“தம்பி, தப்பாக எடுதுத்க்கலைனா ஒன்னு சொல்லட்டுமா?"

“சொல்லுங்கமா”

“இங்க யாரும் நிக்காதீங்க தம்பி. அவுங்க பார்தாங்கன்னா எங்களுக்குத்தான் பிரச்னை. சீக்கிரம் போயுடுங்க தம்பி.”

உடனே அவசர அவசரமாக அங்கிருந்து கீழிறங்கினோம். எந்த சூழ்நிலையில் அதை சொல்லி இருப்பார் என்று அப்போது யோசிக்கவில்லை. அந்த வார்த்தைக்கான அர்த்தம் உண்மையில் அப்போது புரியவில்லை.. ஆனால் இப்போதோ அவர்களின் வேதனைகளை யோசித்துப்பார்க்கவே மனம் அஞ்சி நடுங்குகிறது.

பிபி தீவு (Phi Phi Island) தாய்லாந்து பயணம் 4

Phi Phi Island

Ko Phi Phi Island. இது கிராபி  (Krabi) பகுதியில்  உள்ள ஒரு தீவு.  கோ (KO) என்றால் தாய் மொழியில் தீவு என்று அர்த்தம். அகவே எல்லா தீவுகளின் பெயர்களும்  இங்கு கோ (KO)  என்றே ஆரம்பமாகும். நிறைய  தீவுக்கூட்டங்கள் இதன் அருகே  இருப்பினும் இதை மட்டும் தான் மக்கள் வாழ்விடமாகக் கொண்டு வசிக்கிறார்கள். 2000வருடம் வெளிவந்த “தி பீச்” என்ற “லியனார்டோ டி காப்ரியோ”வின் ஆங்கிலப்படம் மூலம் இந்த தீவு  பிரபலம். தற்போது  வெளிவந்த “ஏழாம் அறிவு” படத்தில் வரும் “முன்னந்தி சாரல் நீ” பாடல் கூட இங்கு தான் படமாக்கப்பட்டது.

அன்று  காலை சொன்ன நேரத்திற்கு வாகனம் ஹோட்டலுக்கு வந்தது. நேரமானால் கப்பல் புறப்பட்டுவிடும் பிறகு அவர்கள் பொறுப்பல்ல என்று தொலைபேசியில் அவர்கள்  கூறியதால்  நாங்கள்  புறப்படுவதற்கு அவர்களை பத்தி நிமிடத்திற்கு மேல் காத்திருக்கசெய்யவில்லை. ஏற்கனவே சிலரை வேறு வேறு ஹோட்டல்களில் இருந்து  அந்த வாகனத்தில் பிக் அப் செய்து  வந்திருந்தனர்.  அரைமணி நேர பயணத்தில் புக்கெட் தீவின் தென் பகுதியில் உள்ள துறைமுகத்தை அடைந்தோம்.  ஏற்கனவே   அறிவுறுத்தப்பட்டு  இருந்ததினால்  நாங்கள் ஷார்ட்ஸ்  அணிந்தே  சென்றிருந்தோம். பல கம்பெனிகளின் சிறிய ரக  உல்லாச கப்பல்களும், அதிவேக படகுகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கப்பல் கம்பெனியுடன் தொழில் தொடர்பில் உள்ள பல்வேறு டூர் ஏஜென்சிகள் தங்களுடைய வாடிக்கையாளைர்களை அங்கு குவித்துக்கொண்டு இருந்தனர்.

பயணிகளை சரிபார்த்து, அடையாளத்திற்கு ஒவ்வொருவரின் சட்டையிலும் அந்த கப்பல் கம்பனியின் லோகோ பதித்த ஸ்டிக்கரை ஒட்டிய பிறகே  கப்பலில் ஏற்றினர்.  மிகவேகமாக தங்களுடைய ப்ரோபசனல் காமிரா மூலம்  இரண்டு பேர் கப்பலுக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் புகைப்படமாக சுட்டுதள்ளிக்கொண்டிருந்தனர்.   கப்பலில்   அன்று மாலை திரும்பும்போது  அவரவர்  புகைப்படங்கள் அச்சு செய்யப்பட்டு  அந்த தீவின்  பெயர் பொறித்த  ஒரு  பிளாஸ்டிக்   தட்டு போன்ற ஒன்றை ஞாபக சின்னமாக வழங்குகின்றனர். ஒவ்வொன்றும் நூறு ரூபாய். அவரவர்  புகைப்படம் அச்சு செய்யப்பட்டதை வேண்டியவர்  பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். வாங்கப்படாததை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

Phi Phi Island

Phi Phi Island

Phi Phi Island

Phi Phi Island

கப்பலில் மொத்தம் மூன்று தளங்கள் இருந்தது. மூன்றாவது தளமானது கப்பலின் மேலே திறந்தவெளி தளம். . மொட்டை மாடி  போல. அடுத்த இரண்டு தளங்களிலும் வரிசையாக விமானத்தில் உள்ள இருக்கைகளை போல், தொலைக்காட்சி வசதியுடன்  குளிரூட்டப்பட்ட பெரிய அறை கொண்டிருந்தது.  அவ்விரண்டு அறைகளுக்கு வெளியேயும் கடலை ரசித்தபடி அமர்ந்துச்செல்ல இருக்கைகள். நாங்கள் ஏறியபோது அதில் கூட்டம் நிரம்பியிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தேனீர், காபி, பிஸ்கட், கேக் போன்ற ஸ்நாக்ஸ் பண்டங்கள் அனைத்தும் இலவசம்.

யோசித்து பார்த்தால் வெறும் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் தான் நாங்கள் நபர் ஒன்றிற்கு  இந்த  தீவு பயணத்திற்கு கொடுத்திருப்போம். மூன்று மணி நேர கப்பல் பயணம். தீவில் ஒரு மணி நேரம். அசைவ மதிய உணவு. மீண்டும் கரைக்கு திரும்ப மூன்று மணிநேர கப்பல் பயணம். இதில் குளிரூட்டப்பட்ட அறையும், இலவச தேனீர், பண்டங்களும்.. நாங்கள்  அளித்த பணத்தில் இந்தியாவில் உள்ள  டூர் எஜெண்டிற்கும் ஒரு  சிறு பகுதி செல்கிறது. தாய்லாந்தில் உள்ள   டூர் எஜெண்டிற்கும் ஒரு  சிறு பகுதி  செல்கிறது. பிறகு எப்படி இந்த கப்பல் கம்பனியால் இது சாத்தியம்?

உண்மையில் தாய்லாந்து சுற்றுலா வியாபாரம் சற்று  தந்திரமானது. . எங்களுடன் பயணித்த  மக்களில் அநேகம் பேர் ஐரோப்பியர்கள். அவர்களிடம் வாங்கப்பட்ட டாலர்  எங்களுடைய கட்டணத்தை விட  பலமடங்கு  அதிகம் என்று தெரிந்துக்கொண்டேன். இதில்  விசேஷம் என்னவென்றால், ஐரோப்பியர்களை பொருத்தவரை அவர்கள் கட்டிய பணம்   அவர்களுக்கு சிறிய தொகைதான். தாய்லாந்துகாரர்களுக்கு அது பெரிய தொகை.  ஆளுக்கேற்றவாறு அவர்கள் பணம் வசூலிக்கின்றனர்.  அதுமட்டும் இல்லாமல்  பல நாட்களுக்கு முன்னே நாங்கள் முன்பதிவு செய்ததால்  கட்டணமும் குறைவு.

கப்பலின் அருகிலேயே இருபுறங்களிலும்  பெரிய பெரிய ஜெல்லி மீன்கள்  கூட்டம் கூட்டமாய்  மேலே தென்பட்டது.  நான்  கப்பலில்  தேமேவென   அமர்ந்துவர  விருப்பமில்லாமல் அனைத்து தளங்களிலும்  சுற்றிக்கொண்டும்,  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் என் நேரத்தை செலவிட்டேன். கப்பலின்  கீழ் தளத்தின் பின்புறத்தில் எஞ்சினின் விசையில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு இருப்பதை அருகில் பார்க்க த்ரில்லான அனுபவம்.  காமிரா லென்சும்,  என்னுடய கூலிங் கிளாசும் உப்புகாற்றில் அவ்வப்போது வெண்படிவம் அப்பிக்கொண்டது. அடிக்கடி அதை சுத்தம் செய்துக்கொண்டே இருக்கவேண்டியதாயிற்று.

பி பி  தீவிற்கு செல்லும் முன்னர்,  மங்கி  கேவ்  என்ற  தீவிற்கு அருகே கப்பல் நிறுத்தப்படுகிறது. தீவு என்றதும் இறங்கி சுற்றிப்பார்க்கும் இடம் அல்ல. அது ஒரு பிரம்மாண்டமான மலை.  ஸ்நோர்க்லிங்க் செய்வதற்காக அந்த  நிறுத்தம்.  அதாவது  மிதவை  உடை அணிந்துக்கொண்டு, மூச்சுக்குழல் பொருத்தப்பட்ட ஒரு கண்ணாடியை  மாட்டிக்கொண்டு தண்ணீருக்குள் நீந்திசெல்வது. மூச்சுக்குழலின் ஒரு முனை தண்ணீரில் மேல் மிதக்கும் என்பதால் மறுமுனையை வாயில் சொறுகி  சுவாச இடையூறின்றி பவளப்பாறைகளையும், மீன்களையும் ரசித்தவாறு நீந்திச்செல்லலாம்.

அந்த இடத்திற்கு  வந்தடையும் முன்னரே அந்த கப்பலின் சிப்பந்திகள் அந்த இடத்தின் பெயரும், குறிப்புகளும் எழுதப்பட்ட பலகையை பிடித்துக்கொண்டு கப்பலில்  உள்ள பயணிகள் அனைவருக்கும்  தெரியுமாறு   ஒவ்வொரு இடமாக போய் காட்டிவிட்டு சென்றனர்.  அவரிடம்  ஏதேனும் கேள்விகேட்டால் அவர்களுக்கு  ஆங்கிலம்  புரியவில்லை.  ரிசப்சன்  பகுதிக்கு  சென்றேன்..  ஏற்கனவே  ஸ்நோர்க்லிங்  செல்ல பணம்  செலுத்தியவர்களுக்கு  அங்கு மிதவை உடையும், முகமூடியும்  விநியோகம்  செய்யபட்டுக்கொண்டிருந்தது.  புதிதாக  அதற்கு  கட்டணம்  செலுத்த விரும்பிகிறவர்களுக்கு ஆயிரம்  தாய் பாத்  வசூல் செய்தனர். அதாவது நம்மூர் பண மதிப்பில் சுமார் ரெண்டாயிரம் ரூபாய். எங்கள் பயண கட்டணத்தில் இது ஏற்கனவே  உள்ளடங்கியுள்ளது,  எனவே எங்களை நீந்த தயாராகசொன்னார் அங்கிருந்த பெண்மணி.

Phi Phi Island

Phi Phi Island

Phi Phi Island

எனக்கு நீச்சல் தெரியாததால் நான் எந்த சூழ்நிலையிலும்  கடலில் இறங்குவதாக இல்லை.  உடன்  வந்த நண்பர்கள்   ஏற்கனவே உள்ளாடையுடன் நின்றுக்கொண்டு மிதவை உடையை  மாட்டியவாறு கடலில் குதிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். திரும்பிப்பார்த்தால்  திடீரென கப்பலில்  இருந்த  ஆண்கள், பெண்கள் அநேகம் பேர்  இப்போது சுயமாக  தங்களை துகிலுரித்துக்கொண்டிருந்தனர்.  இந்த  சங்கடத்தை  எதிர்நோக்க  விருப்பம் இல்லாததாலோ என்னவோ,  கப்பலில் ஏறியதில் இருந்தே  சில பெண்கள்  பிகினி உடையில் இதற்கு தயாராகவே வந்தனர்.   அனைவரும் அந்த மலை போன்ற தீவிற்கு  கூட்டம் கூட்டமாய் நீந்திசென்றனர்.  அவர்களை பார்பதற்கு  கூட்டமாய் மீன்கள் நீந்துவது போல் தான்  இருந்தது. கப்பலில் மேல் தளத்தில் இருந்து நான்  அனைத்தையும்  தனியாக நின்று ரசித்துக்கொண்டு இருந்தேன்.  ஒரு அரைமணி  நேரம் அங்கு செலவிடப்பட்டது.

அடுத்து அந்த பி.பி. தீவை நோக்கி புறப்பட்டோம்.  இது  ஏற்கனவே  2004 ஆம் ஆண்டு சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட தீவு.   அப்போது இந்த  தீவிற்கு  உல்லாச  சுற்றுலா  வந்த   குடும்பத்தினர்,   சுனாமி  தாக்கியபோது  எடுத்த  வீடியோவை  யூடியுபில் பார்த்திருக்கிறேன். பயங்கர கொடுராமான அழிவு அது.  இப்போது நாங்கள்  வருவதற்கு  சில நாட்கள்  முன்பு  புக்கெட் தீவில்   நிலநடுக்கம்  இருந்தது.  சுனாமி  எச்சரிக்கையும்   அப்போது இருந்தது.   நடுக்கடலில் கப்பலில் இருக்கும்போது  சுனாமியே  வந்தாலும்  அதன் சுவடு தெரியாது.  ஆனால் ஒருவேளை அந்த  தீவில் இருக்கும்போது  வந்துவிட்டால்? உள்ளுக்குள் கொஞ்சம் பயம் ஊர்ந்துக்கொண்டு தான்  இருந்தது.

அது மட்டும் இல்லாமல்,  கூகில் வரைபடத்தில்  என் நண்பர்கள் என்னுடைய இருப்பிடத்தை   தொடரும் வசதியிருக்கிறது.  நான் எங்கே இருக்கிறேன். எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று  உடனுக்குடன் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.  அப்போது எதேச்சையாக  என் உறவினர்  ஒருவர்  தன்னுடைய  மொபைலில்  கூகில்  வரைபடத்தில்  என் இருப்பிடத்தை காண, அது  ஏதோ  ஒரு தேசத்தில்  நடுக்கடலில்  ஒரு  புள்ளியில் பயணம் செய்வதை போல் காட்ட, கிலி அடைந்து  என் வீட்டை தொடர்பு கொண்டுள்ளார்.  அப்படிப்பட்ட பகுதி அது.

Phi Phi IslandPhi Phi IslandPhi Phi IslandPhi Phi Island

அந்த தீவில்  உள்ளே நுழைவதற்கு  இருபது  தாய்  பணம்  கட்டணமாக  வசூலிக்கின்றனர். இதை வைத்து  அந்த தீவின்  தூய்மையை   பாதுகாக்கின்றனர்.  தீவுக்குள்  நுழையும் பொழுது  வரிசையாக  கடைகள் இருக்கிறது.  அந்த தீவின்  பெயர் பொறித்த  உடைகள் , ஞாபக சின்னங்கள்  என  நிறைய பொருள்கள்  அங்கு விற்கப்படுகிறது. ஆனால் அனைத்தும்  விலை சற்று கூடுதல். ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான்  தீவுக்குள்  வரமுடியும், அங்கு தங்கவும்  செய்ய முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.  எனவே  இங்கு நம் நிம்மதியையும், அனுபவத்தையும் கெடுக்கும் அளவிற்கு கூட்டம் இல்லை.  கூச்சல்கள் இல்லை.

Phi Phi Island

Phi Phi IslandIMG_2201Phi Phi IslandPhi Phi IslandPhi Phi IslandPhi Phi Island

அப்போது அந்த தீவில்  ஏற்கனவே  சில  கப்பல் வந்திருந்தது. எங்கள் சட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அந்த கப்பல்  கம்பனியின் ஸ்டிக்கரை வைத்து எங்களை   அடையாளம் கண்டு வழி நடத்தினர். உள்ளே ஒரு இடத்தில்  பலவகையான உணவுகள் பப்பெட்  முறையில் வழங்கப்பட்டது.  அக்டோபாஸ், சிக்கன் என்று அசைவதிற்கு பஞ்சமில்லை. உணவு உண்ட பிறகு  கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் பீச். அது தீவின்  மறுபுறம்.  பச்சை பசலென்ற மிதக்கும்  மலைகள், பட்டு போன்ற மென்மையான மணல். கிரிஸ்டல் கிளியர் கடல்.  மெரீனா  பீச்  மட்டுமே பார்த்த  நமக்கு  இது  நிச்சயம் ஒரு சுவாரசியமான அனுபவம். உண்மையில் அது விவரிக்க முடியா அனுபவம்.  வாழ்க்கையில்  ஒருமுறையேனும் அனுபவிக்கவேண்டிய அனுபவம்.

Ko_Phi_Phi_after_sunset,_preparing_for_the_night

அங்கு இரவு தங்குவதற்கு நிறைய ஹோட்டல்கள் இருக்கிறது.   ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி, அருகில் இருக்கும் தீவுகளையும் சுற்றிப்பார்த்து அந்த  இயற்கை  அதிசயத்தை  முழுமையாக அனுபவிக்க ஆசை.  கற்பனை செய்து பாருங்கள். நடுக்கடலில் ஒரு சிறிய தீவு. ஆள் அரவமற்ற தனிமையான இரவுப்பொழுது. அமைதியான கடற்கரை. அதில் மோதும் மெல்லிய அலைகள்.  பவுர்ணமி நிலா வெளிச்சம்.  அந்த வெளிச்சத்தில் மின்னும் மணல்.  இப்படி ஒரு இரவு அமைந்தால்?  பேச்சுலர் வாழ்க்கையில் இது தேவையற்ற கனவு என்பதால் இப்போதைக்கு… dot.

– பயணம் தொடரும்

Phi Phi Island பயண அனுபவத்தின் முழு வீடியோ தொகுப்பு

Phi Phi Island – புகைப்படங்கள்

தடை செய்திட வேண்டிய “அமீரின் ஆதி-பகவன்”- விமர்சனம்

ammer-adhi-bagawan-movie-review

கல்லூரியில் ஒரு முறை எனக்கும், என் நண்பன் ஒருவனுக்கும் விஷமமான ஒரு போட்டி. அப்போது நடைபெற்ற ஒரு வகுப்புத்தேர்வில் யார் மிகவும் குறைவான மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பதே அது. இப்போது கிறுக்குத்தனமாய்  தோன்றினாலும் அப்போது அதில் ஒரு  சுவாரசியம் இருந்தது. அந்த தேர்வின் கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் எழுதியும், மனதில் தோன்றிவைகளையும் எல்லாம் கிறுக்கியும் எப்படியும் அதில் ஜெயித்து விடவேண்டும் என்று மிகவும் கவனமாக எழுதி முடித்தேன். நண்பனும் எனக்கு போட்டியாக எழுதி முடித்தான். எப்படியும் நான் தான் ஜெயிப்பேன் என்று நம்பிக்கை நிறைய இருந்தது.

சில நாட்களில் பேப்பர் அனைத்தும் திருத்தப்பட்டு அந்த வகுப்பில் ஒவ்வொருவருக்கும் கூப்பிட்டு கொடுத்தார் எங்கள் மேடம். அவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியும் எனக்கு பத்து மார்க் வந்திருந்தது. அடுத்து நண்பனின் பேப்பரை கொடுத்தார். எங்கள் வகுப்பில் மிகவும் நன்றாக படிப்பவன் அவன். நல்ல ப்ரில்லியன்ட். எப்படியும் என்னைவிட அதிக மார்க் வாங்கி இருப்பான் என்று இந்த போட்டி தெரிந்த அனைவரும் சந்தோசப்பட்டுக்கொண்டோம். ஆனால் அப்போது அவன் பதில் தாளை வாங்கிபார்த்த எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியம். அவன் வாங்கிய மார்க் “பூஜ்யம்”. எதுவும் எழுதாமல் வெறும் வெற்றுப்பேப்பரை கொடுத்து வந்துள்ளான் அந்த dog.  சொதப்புவதும் சாதாரண விஷயமில்லை. அதுக்கும் தனித்திறமை வேண்டும்.

அதுபோல்  மணிரத்தினத்தின் கடல் படத்திற்கு போட்டியாக அமீர் தனது ஆதி-பகவன் படத்தை வெளியிட்டு இருக்கிறார். இருவருக்கும் முதல் காட்சியில் இருந்து படத்தை சொதப்புவதில்  “நானா-நீயா” என்று கடும் போட்டி இருந்திருக்கிறது. மணிரத்னம் சீனியர். எப்படியும் அவர்தான் ஜெயிப்பார் என்று அனைவருக்கு நினைத்தனர். ஆனால் இறுதியில் அமீர் தனது அபாரத்திறமையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் எனக்கு ஜெயம் ரவியும் நிலைமையை நினைத்து தான் பரிதாபம்.

பாய்ஸ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சியை போன்று நிஜத்தில் ஒரு சம்பவம் நடப்பது போல் கற்பனை செய்துபாருங்கள். அதே சித்தார்த் போன்ற ஒரு கல்லூரி பையன் ஹரிணி போன்ற ஒரு பெண்ணை பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கிறான். பல நாட்கள் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவளையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறான். ஆனால் ஹரிணி அவனை கண்டுக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் இதில் வருத்தமடைந்த சித்தார்த், முன்னாவை தூதுக்கு அனுப்புகிறான். முன்னா ஹரிணி மற்றும் சித்தார்த் இருவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பன். அவனுடைய காதல் பொய் என்று ஹரிணி நினைக்கிறாள் என்று முன்னா அவனிடம் சொல்கிறான்.  ஒருவேளை அவன் காதல்  உண்மையெனில் நாளை காலை எட்டு மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வாசலில் நிர்வாணமாய் வந்து நிற்கும் தைரியம் அவனுக்கு இருக்கிறதா என்றும் அவள் சொல்கிறாள்  என்கிறான்.

முதலில் இதை கேட்டதும் அவன் திடுக்கிட்டாலும், அவன் வயதும், ஹார்மோனும், காதலும் அவன் கண்ணை மறைக்கிறது. எப்படியாவது தன் காதல் உண்மை தான் என நிரூபிக்கவேண்டும். அதற்கு இது தான் சந்தர்ப்பம் என்று நம்புகிறான். மறுநாள் சொன்ன நேரத்திற்கு ஸ்பென்சர் பிளாசா அருகே நிற்கிறான். ஹரிணியும், முன்னாவும் ஒன்றாக ஸ்பென்சர் வாசலில்  வருவதை பார்க்கிறான்.  கண்களில் நீர் வழிய, மனதை கடினப்படுத்திக்கொண்டு  தன் உடைகளை ஒவ்வொன்றாக களைகிறான். அங்கிருக்கும் பொதுஜனங்கள் பற்றி அவன் உள்ளுணர்வு எந்த சமிஞ்சையும் செய்யவில்லை. அனைவரும் வேடிக்கை பார்ப்பதை அவன் பொருட்படுத்தாமல் அவள் அருகே நிர்வாணமாய் சென்று “ஐ லவ் யூ ஹரிணி.” என்கிறான். எப்படியும் தன் காதலை புரிந்துக்கொண்டு தன்னை அணைத்துக்கொள்வாள் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

ஆனால் அவள் எதுவுமே புரியாத மாதிரி பார்த்துவிட்டு, “ஷிட், வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்” என்று கத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். செய்வதறியாது சித்தார்த் திரு திருவென முழிக்க, அவனை சுற்றி இப்போது பெரிய கூட்டம் கூடியிருந்தது. அதில்  அநேகம் பேர் அவனுடைய கல்லூரி மாணவர்களும், மாணவிகளும். “சேம் சேம்… பப்பி சேம்”என்று அனைவரும் சப்தமாய் கத்த, மெல்ல அவன் அருகில் வந்து  முன்னா சொன்னான் “ஏப்ரல் பூல்…  ஏப்ரல் பூல்… நல்லா ஏமாந்தியா மச்சி? இன்னைக்கு ஏப்ரல் ஒன்னுடா!”.

அந்த கதையில் வந்த “சித்தார்த்தி”ன் நிலைமை தான் இந்த படத்தினால் “ஜெயம் ரவி”யின் நிலமை. அமீரை நம்பி அரவாணியாக பல கனவுகளுடன் நடித்திருந்த ரவி உண்மையில் கோமாளி ஆக்கப்பட்டிருக்கிறார்.  இந்த படத்தை தடை செய்ய கோர்ட்டில் முறையீடு செய்ததை கேள்விப்பட்டு கோபப்பட்ட சினிமா ரசிகர்கள், நிச்சயம் இப்போது அதற்காக வருத்தப்படுவார்கள்.  ஒருவேளை இப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால், அதை பார்த்திட வாய்ப்பு கிடைக்காமல் பொதுமக்கள் தப்பி இருப்பார்கள். மிகச்சிறந்த காவியம் ஒன்று தடைசெய்யப்பட்டது என்றும் நம்பப்பட்டு தமிழ் சினிமா வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டு இருக்கும்.