சிறப்பு விருந்தினராக சோனா கல்லூரியில்

 

IMG_2959

பிப்ரவரி 27 அன்று, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ பிரிவில் தொடங்கப்பட இருந்த “மார்கடிங் க்ளப்” துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தேன். கூகிள் அட்வோர்ட்ஸ் (Google Adwords)துறையில் சேவை நிறுவனம் நடத்தி வருவதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட நிபுணன் என்பதாலும் அதை பற்றி எம்.பி.ஏ மாணவர்களிடம் சிறப்பு விரிவுரையாற்ற கேட்டிருந்தார்கள். தொழில்நுட்ப விஷயம் என்பதால் பிரசன்டேசன் இல்லாமல் பேசினால் மொக்கை போட்டுவிடும் என்பதால் கொஞ்சம் அதற்காக நேரம் ஒதுக்கி தயார் படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் நேரமினை காரணமாக ஒரு வாரம் கிடைத்தும் வழக்கம் போல் கடைசி நாள், கடைசி நிமிட பரபரப்பில் தான் அது தயாரானது. மாணவர்கள் என்பதால் கொஞ்சம் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எளிதாக புரியுமாறும், ஆவலை தூண்டுமாறும் கொஞ்சம் நகைச்சுவை  சிந்தனை அதில் புகுத்த வேண்டியிருந்தது. தவறினால் நாம் மட்டும் தனியாய் சுவரை பார்த்து பேசிக்கொண்டு இருக்க வேண்டி நேரிடும். மாணவனாய் இருக்கும்  கஷ்டம் மாணவனாய் இருந்தால் தான் தெரியும்.

ஆனால் எப்போதும் மாணவர்களிடம் கலந்துரையாடுவது மிகவும் எனர்ஜிடிக்காண அனுபவம். அதுமட்டும் இல்லமால் மிகவும் மனநிறைவானதும் கூட. நம்மால் ஒருவர் ஆர்வம் பெற்று அதை கற்றுணர்ந்து வாழ்க்கையில் பயனுற்றால் அந்த மனநிறைவு வேறு எதிலும் நிச்சயம் கிடைக்காது.

சுமார் ஆறு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்குட் பிரபலமாய் இருந்த நேரம். ஆத்தூரில் இருந்து ஒரு பள்ளி மாணவன் என்னை அதில் விடாமல் பலமுறை தொடர்பு கொண்டதாய் நினைவு. என்னை பற்றி இணையத்தில் அறிந்துக்கொண்டு ஏதோ ஒரு உந்துதலில் என்னை பார்க்க விரும்பினான். இணையத்தில் இப்படி எனக்கு அடிக்கடி பல புதுப்புது தொடர்புகள் வரும். அவ்வபோது தொலைப்பேசிகளும் கூட வரும்.

ஏதோ ஒரு காரணத்தால் அப்போது நான் முன் பின் தெரியாதவர்களை என்னை ஒரு போதும் சந்திக்க அனுமதித்ததில்லை. செய்துக்கொண்டு இருந்த முதல் வேலையை விட்டுவிட்டு அடுத்து பிழைக்க வழிதேடி இரவு பகலாய் வாழ்க்கை போராட்டம்  நிகழ்ந்துக்கொண்டு இருந்த காலக்கட்டம்.  அவர்களுக்கு என்னை பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் எனக்கு அவர்களை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அது போன்ற புதிய தொடர்புகளை நான் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. அப்போது நான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

சரியாக நியாபகமில்லை. என் நினைவுகளை மீண்டும் கிளறிப்பார்த்தே இதை எழுதுகிறேன். ஒரு நாள் அந்த மாணவனின் அப்பா என்னை போனில் தொடர்பு கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் சேலம் வந்திருப்பதாகவும், தன் மகன் என்னை பற்றி நிறைய அவரிடம் சொல்லி இருப்பதாகவும், என்னை இன்று பார்த்தே தீரவேண்டும் என்று விரும்புவதாகவும் தன்மையுடன் கூறினார். அதுமட்டும் இல்லாமல் சேலம் அண்ணா பூங்காவில் எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார். தவிர்க்கமுடியாத அன்பின் அழைப்பு.

நான் அங்கு சென்று அவர்களை அன்று சந்தித்தது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சி அளித்தது என்பது மட்டும் இன்னும் எனக்கு  நியாபகம் இருக்கிறது. ஆனால் அன்று அவர்களிடம் என்ன பேசினேன், என்ன நடந்தது என்று சுத்தமாய் நினைவில்லை.  அதன் பிறகு இணயத்தில் அந்த மாணவன் என்னை ஓரிருமுறை தொடர்பு கொண்டான். அவ்வளவே!

பல வருடங்கள் கடந்துவிட்டது. திடீரென மூன்று நாட்களுக்கு முன்னர். அதாவது சோனா கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய இரண்டொரு நாளில் முகபுத்தகத்தில் அந்த பையனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

Conversation started Sunday
Shafi Ahamed
02/03/2014 13:00

I don’t think you remember me.. Me and my Dad met you once in Salem. I am a Google Certified professional working as a Digital Marketing Manager in XXX, Chennai

Because of you, I did this certification and completed successfully.

Thanks for it Sir

 

காலம் சில நேரங்களில் நம் சாதாரண செயல்களை கூட மிகவும் அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது. பொறுப்புகளை உணரச்செய்து விடுகிறது. “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏதேனும் உதவி தேவைபட்டால் கண்டிப்பாக என்னை தொடர்புகொள்ளவும். வாழ்த்துக்கள்!” என்று சுருக்கமாய் பதில் அளித்தேன். அந்த நாள் மிகுந்த மனநிறைவுடன் முடிந்தது!

 

20140227_170927

IMG_2960

IMG_2964

பாலு மகேந்திரா – முதலும், கடைசியும்.

 

Balu Mahendra

“நல்ல கவிதை என்பது ஒரு காகிதத்தில் எழுதப்பட்டாலும், டாய்லெட் திஸ்யூ பேப்பரில் எழுதப்பட்டாலும் அது நல்ல கவிதை தான். எதில் அது எழுதப்பட்டு உள்ளது என்பது முக்கியம் அல்ல.”

“விலையுயர்ந்த காமிரா என்பதால் அது தானாகவே ஒரு சிறந்த படத்தை எடுத்துவிட முடியாது. அதை கையாளும் படைப்பாளிதான் தான் முக்கியம்.”

பாலுமகேந்திராவின் இந்த வார்த்தைகள் நிச்சயம் படைப்புலகத்தில் பொன்னேட்டில் பதிக்கப்படவேண்டியவைகள். இதைவிட ஒரு படைப்பாளிக்கு ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளை யாரேனும் கூறிவிட முடியுமா என தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் படித்த முக்கிய வரிகளில் இதுவும் அடங்கும்.

அஜயன் பாலா அவர்களின் திருமணத்தின் போது தான் நான் முதன் முறை பாலுமகேந்திராவை பார்க்கிறேன். கடைசியும் அதுவே. தி-நகரில் ஒரு ஹோட்டலில் நடந்த அந்த திருமணதிற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். பாலுமகேந்திரா தான் தலைமை ஏற்றி நடத்தி வைப்பதாக இருந்தது. ஏழு மணிக்கு துவங்கவேண்டிய திருமணத்திற்கு நானும் நண்பரும் ஆறரை மணிக்கே அங்கு சென்றிருந்தோம்.  ஆனால் அப்போது அங்கு புகைப்படக்காரர்கள் தவிர வேறு யாருமில்லை. ஒரு சிலர் திருமணம் நிகழும் அறையை தயார் செய்துக்கொண்டு இருந்தனர். அவ்வளவே.

சரியாக  ஐந்து நிமிடம் கழிந்து இருக்கும், கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ், கண்ணாடி மற்றும் தனது ட்ரேட்மார்க் தொப்பியுடன் உள்ளே நுழைந்தார் பாலுமகேந்திரா. மாப்பிள்ளை, மணமகள்  கூட அப்போது அங்கு வந்து சேரவில்லை. அவசர அவசரமாக அவரை வரவேற்று உள்ளே அழைத்துசென்று இருக்கையில் அமரவைத்தோம். இந்த வயதிலும் அதிகாலை எழுந்து, அனைவருக்கும் முன்னே கிளம்பி வந்து சேர்ந்த அந்த மனிதரின் நேரம் தவறாமை ஆச்சர்யம் அளித்தது. படைப்பாளி என்பதை தாண்டி அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்திருக்கிறேன். ஆனால் அதை நேரில் பார்க்கும்போது பன்மடங்கு அவர் மேல் மதிப்பு கூடியது.

யாரும் அப்போது வந்து சேரவில்லை என்பதால் அவர் தனியாகவே நீண்ட நேரம் முன்வரிசையில் அமர்ந்து இருந்தார். பாலுமகேந்திராவை நேரில் சந்தித்து ஒரு முறையாவது பேசமுடியாதா என்று நிறைய பேர் இருக்கும் சூழ்நிலையில்  இப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது எவ்வளவு பெரிய பாக்கியம்? ஆனால் அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. பேச நிறைய இருந்தும் அவர் மேல் இருந்த பிரமிப்பில், அவர் எளிமையின் ஆச்சர்யத்தில் நான் அப்போது மூழ்கிப்போய்இருந்தேன்.  அவரை தொந்தரவு செய்யவேண்டாமென சற்று தள்ளி நின்று என் காமிராவில் அவரை புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். காமிரா கவிஞரை நான் என்னுடைய காமிராவில் பதிவு செய்வதை விட வேறு என்ன பெரிய பாக்கியம் அந்த சூழ்நிலையில் எனக்கு கிட்டிவிடப்போகிறது?. அவர் கண்களை மூடியபடியே நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்து இருந்தார்.

குறித்த நேரத்தைவிட்டு சற்று தாமதமாகத்தான் திருமணம் தொடங்கியது.  திருமண நிகழ்வின் போது மணமேடைக்கு அழைத்து அவர் அமரவைப்பட்டார். மைக்கில் ஒவ்வொருவராய் வந்து மணமக்களை வாழ்த்தி பேசிக்கொண்டு இருந்ததை  பொறுமையாய் கடைசி வரை கேட்டுக்கொண்டு இருந்தார். அவரும் பேசினார். திருமணம் நிகழ்வு முடிந்ததும் அனைவரும் உணவு விருந்திற்கு அழைக்கப்பட்டனர். இருக்கையில் இருந்து எழுந்து மேடையில் இருந்து இறங்க ஆயத்தமானார் பாலுமகேந்திரா. மேடையில் இருந்து தனியாக இறங்குவதற்கு அவர்  சிரமப்படுவதை பார்த்ததும் ஓடிச்சென்று கை கொடுத்து கீழே இறக்கிவிட்டேன்.

“ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

“பரவாயில்லை சார். இந்தபக்கம் தான் பந்தி. உணவருந்தலாம் வாங்க.” என்று அவரை அழைத்துச்செல்ல முற்பட்டேன்.

“தம்பி.,,,,, தப்பா நெனச்சிக்காதீங்க.,,, நேரம் ஆச்சு. சேரன் படத்தோட ஆடியோ வெளியீட்டுக்கு பத்து மணிக்கு போகணும். மணி இப்பவே ஒன்பது. இப்போ போனா தான் சரியா இருக்கும். சாப்பிடாமா போறேன்னு எதுவும் நெனச்சிச்காதிங்க தம்பி..” என்று மெல்லிய குரலில் மிகப்பொறுமையாய் குழந்தைபோல பதிலளித்து விடைபெற்றார்.

இவ்வளவு விளக்கம் என்னிடம் அவர் சொல்லி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது மட்டும் இல்லாமல் சேரனின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவருடைய முனைப்பு, நேரம் தவறாமை, அதுவும் இந்த வயதில்!!!  பாலுமகேந்திரா ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதை தாண்டி ஒரு மிகச்சிறந்த மனிதராய் என் மனதில் அப்போது ஊடுருவினார். இவ்வளவு எளிமையான ஒரு லெஜன்ட்’ஐ உண்மையில் காண மூடியுமா என்று தெரியவில்லை. எனக்கு ஆச்சர்யம் விலக சில நிமிடங்கள் பிடித்தது.

திடீரென பாலுமகேந்திரா உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார் என இணையத்தில் படித்த அடுத்த நொடியே அது வதந்தியாகத்தான் இருக்கும் என வேண்டிக்கொண்டு அஜயன் பாலாவிற்கு போன் செய்தேன். “அது உண்மை தான் பிரவீன். அவருடைய வீட்டில் தான் இருக்கிறேன்” என்று சொன்னபோது மனம் கனத்தது.

அன்று தான் நான் பாலுமகேந்திராவுடன் பேசப்போகும் கடைசி தருணம் என்று தெரிந்திருந்தால் சத்தியமாய் அந்த சந்தர்பத்தை தவறவிட்டிருக்க மாட்டேன். நிறைய உரையாடி, ஒரு புகைப்படமாவது அவருடன் எடுத்து இன்னும் கொஞ்சம் நியாபகங்களை திரட்டி என்னுள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருந்திருப்பேன்! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!

ஜில்லாவும் வீரமும் – இது விமர்சனம் அல்ல நிதர்சனம்

 

jilla veeram movie review

ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ரொம்பா நாளா வாய்க்கா தகராறு, இதுல வேற கிட்ட தட்ட ஏழு வருடம் கழித்து தல-தளபதியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஹ்ம்ம் ஸ்டார்ட் ம்யூசிக்… பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் தாரத்தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு என்கின்ற ரேஞ்சிக்கு இவர் படத்தை அவர்களும், அவர் படத்தை இவர்களும் முழு நேர தொழிலாய் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள். படம் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு ரசிகர்களும் அதை பார்த்து விடுவார்கள். ஆனால் இவர்களின் சண்டையால் எந்த படம் சிறந்த படம் என்று உறுதிப்படுத்திக்கொண்டு திரையரங்கம் செல்ல சாமானியர்கள் தான் தடுமாறவேண்டியிருக்கிறது.

ரிலீஸ் ஆன அன்று சேலம் கைலாஸ் பிரகாஷ் திரையரங்கில் “ஜில்லா” இரவுக்காட்சிக்கு புக் செய்திருந்தேன். 10:30 மணிக்கு காட்சி தொடங்கும் என்பதால் சுமார் 10 மணிக்கே போயிருந்தோம். திருவிழா மாதிரி கூட்டம். 10:30 மணி ஆகியும் முந்தைய காட்சி முடிந்து யாரும் வெளிவரவில்லை. சாலையிலேயே அனைவரும் கூட்டம் கூடமாய் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை. விஜய் போஸ்டர், கட் அவுட் அருகே நின்று நிறையே பேர் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டும், அதை பேஸ்புக்கில் அப்லோட் செய்துக்கொண்டும் இருந்தனர். மணி சுமார் பதினொன்று ஆனது. இரண்டு தியேட்டருக்கான கூட்டமும் சாலையில் பொறுமையிழந்து இருந்ததால் தள்ளுமுள்ளு கூச்சல் ஏற்பட்டது.

போலீஸ்காரர் “தம்பி புரிஞ்சிக்கோங்கப்பா. ரொம்ப நீளமான படமாம்… அதுமட்டும் இல்லாமல் லேட்டா தான் போட்டாங்களாம்.. தயவு செஞ்சி வெயிட் செய்யுங்க… பணம் சம்பாதிக்கறது அவுங்க, நாங்க இங்க உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறோம்” என்று சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்திக்கொண்டு இருந்தார். ஒருவழியாய் படம் முடிந்து எங்களுடைய காட்சி சுமார் பதினொன்று முப்பதுக்கு தொடங்கியது. வழக்கமாய் ஹாய் சொல்லி நம்மை வரவேற்கும் முகேஷ் அன்று விடுப்பு எடுத்திருந்தார். (ஒருவேளை முந்தைய காட்சி முழு படம் பார்த்து இருப்பாரோ?).

படம் மூன்று மணி நேரம் நீளம். இருபது நிமிடம் இடைவேளை வேறு. ஒருவழியாய் படம் முடிந்து வெளியே வந்த போது மணி சுமார் மூன்று. வீட்டிற்கு வந்தால் அம்மா வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சி இருந்தேன்னா கோவிலுக்கு போலாம் இன்னைக்கு ஏகாதேசி. சொர்க்கவாசல் திறக்கும் என்றார். நான் என்னுடைய ரூம் வாசலை சாத்திவிட்டு என் கனவு வாசலை திறந்துவைத்தேன். என்னா அடி… ஒரு மனுஷனுக்கு ரெஸ்ட் வேணாமா!?

ஜில்லா:

  • ஜில்லாவை பொறுத்தவரை சாதாரண கதை தான் என்றாலும் சுத்தமாய் சுவாரசியமாய் இல்லாத திரைக்கதையும், வழக்கமான டெம்ப்ளட் காட்சியும், காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகளும் நிறைந்த வழக்கமான விஜய் படம். இதை நடுநிசியில் நான் பார்க்கவேண்டும் என்று என் விதி இருந்திருக்கிறது.
  • என்னுடன் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் இடைவேளையின் போதே வீட்டிற்க்கு போய்விடலாம் தூக்கம் வருது என்றார். (ஒன்னரை மணி). இன்னொரு நபரோ இடைவேளை பிறகு காஜல் அகர்வால் டான்ஸ் இருக்கும் அதனால வெயிட் பண்ணுவோம் என்றார். விதி மீண்டும் விளையாடியது.
  • இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. மீதம் ரசிகர்களிடையே அல்ரெடி ஹிட். படத்தின் பின்னணி இசையும் அபாரம். மொத்தத்தில் இமான் கொஞ்சம் இந்த படத்தை தாங்கி இருக்கிறார்.
  • இப்படி ஒரு வழக்கமான மசாலா படம் என்று தெரிந்தும் மூன்று மணி நேரத்திற்கு எடிட்டர் ஏன் ஜவ்வனே இழுத்தார் என்று தெரியவில்லை!
  • “பசங்க” ஸ்ரீ ராம் விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கும், விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கு வரும் பையன் சம்பத்திற்கும் பொருத்தமாய் இருந்தும் ஏன் மாற்றி நடிக்கவைத்தார்கள் என தெரியவில்லை.
  • படம் ஏன் நீளம்னு யோசிச்சு பார்த்தால் சரியான ஒரு காரணம் தென்பட்டது. படம் இரண்டரை மணி நேரத்திற்கு தான் எடுத்து இருப்பார்கள் போல. ஆனால் சண்டைகாட்சிகளில் விஜயிடம் அடிவாங்கும் ஒவ்வொருவரும் ஸ்லோ மோஷனில் பறந்து விழுந்து ஆளுக்கு தலா ஒரு நிமிடம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி முப்பது பேர் அடிவாங்கியவுடன் உடனே கீழே விழாததால் படம் முப்பது நிமிடம் நீண்டு விட்டது.

விஜய்க்கு உண்மையிலேயே செம மாஸ் இருக்கிறது. குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கும். மரணமொக்கை படங்களையும் அதை மொக்கை என்று ஏற்றுக்கொள்ளாமல் அதை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படிபட்ட படத்திற்கும் கண்டிப்பாக ஓபனிங் காரண்டி இருக்கு. அப்படி இருந்தும் அவர் நல்ல படங்களை கொடுக்க முயலாமல் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் கொடுக்கும் ரகசியம் தான் புலப்படவில்லை. ஒரு காலத்தில் விஜய்யின் பரமரசிகனாய் இருந்திருக்கிறேன். அது திருமலை வரை.

அதுவரை ஒவ்வொரு படங்களிலும் வித்யாசமமான கதைகளில் நடித்துக்கொண்டு இருந்தவர் தனக்கான ரூட் பிடித்துவிட்டதாய் எண்ணி தொடந்து பஞ்ச் டயலாக் பேசி பேசியே வில்லன்களை பஞ்சராக்கிக்கொண்டு இருந்தார். இதை அவரும் கூட தனது பேட்டிகளில் உறுதிபடுத்தியிருக்கிறார். நடுவில் அத்தி பூத்தார் போல் கில்லி, காவலன், துப்பாக்கி போன்ற படங்களும் வரத்தான் செய்தது. பத்துவருடங்களுக்கு இவ்வளவு தான் என்றால் இது தொடரும் பட்சத்தில் அவருடைய பாதி சினிமா வாழ்க்கை நம்மை ஏமாற்றியதாகவே இருக்கப்போகிறது.

வீரம்:

  • இதுவும் சாதாரண கதை தான் என்றாலும், ரசிகர்களை குறிவைத்து எடுத்திருந்தாலும் குறைந்தபட்சம் கொஞ்சம் சுவாரசியமாய் திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். சந்தானம் காமடியும் அதற்க்கு நிறைய உதவி இருக்கிறது.
  • தேவையான இடங்களில் மட்டும் பஞ்ச் டயாலக் வைத்தும் சில இடங்களில் அதை ரசிக்கும்படி இருந்ததாலும் அந்த அளவுக்கு காது கிழியவில்லை.
  • பாடல்களும், பின்னணி இசையும் படு மொக்கை. பாடல்கள் நன்றாக இருந்திருந்தால் இன்னும் படத்தை சப்போர்ட் செய்திருக்கும்.
  • அஜீத் ஏன் இன்னமும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார் என்று தெரியவில்லை. மங்காத்தா படம் ஓகே. ஆனால் இதில் அப்படியே தமன்னாவின் அப்பா போலவே இருக்கிறார். தந்தையும் மகளும் டூயட் பாடுவதை பார்க்க கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.
  • ரயில் சண்டைகாட்சி அமைப்பு மிக நன்றாக இருந்தது. மாஸ்னா என்னனு தெரியாதவங்களுக்கு அந்த காட்சிகளில் புரிந்துக்கொள்ளமுடியும்.
  • · தமன்னா வெள்ளை பொம்மைன்னு எல்லாருக்கும் தெரியும் அனால் அவர் அஜித் பக்கத்தில் நிற்கும்போது அஜித் கூட கொஞ்சம் கருப்பாக தான் தெரிகிறார். என்னா கலரு!

விஜயை போலவே அஜீத்திற்கும் செம மாஸ் இருக்கிறது. நல்ல ஓபனிங் இருக்கிறது. ஆனால் விஜய் தெளிவாய் ஒரு தப்பான ரூட் பிடித்து போய்க்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர் எந்த பாதையில் போவது, எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்று தவறான படங்கள் கமிட் செய்கிறார். இயக்குனர்களும் அவரை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவருக்கும் எப்போவாவது அத்திபூத்தார்போல் நல்லா படம் அதுவாக அமைகிறது.

ரசிகர்களை மட்டுமே குறிவைத்து படம் எடுக்கும் போக்கை விட்டு விரைவில் இவர்கள் மாற வேண்டும். புறக்கணிப்பு இல்லாமல் மாற்றம் நிகழப்போவதில்லை. குறைந்தபட்சம் இன்னொரு ரசிகர்களிடம் சண்டை போடாத அளவிற்கு முதிர்ச்சி ஏற்பட்டு அங்கிருத்து அந்த மாற்றம் ஏற்படவேண்டும். ஆனால் அதற்கான சாத்தியம் இருப்பதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

ஒரு வேலை நீங்கள் தல-தளபதி ரசிகர்கள் அல்லாத பட்சத்தில் நிச்சயம் இந்த இரண்டு திரைப்படமும் பார்த்தே தீரவேண்டிய படம் இல்லை. அப்படி எதோ ஒரு படம் குடும்பத்தோட பொங்கலுக்கு போகணும்னு விருப்பம் இருந்தால் வீரம் “முயற்சி” செய்யலாம். ரிஸ்க் எடுக்க “வீரம்” இல்லாதவங்க பொங்கல் சாப்பிட்டுவிட்டு சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக எனப்படும் ஏதேனும் ஒன்றை பார்க்கவும். எப்படியும் அடுத்த தீபாவளிக்கு இந்த இரண்டு படமும் உங்கள் வீடு தேடி வரும்! குமுதா ஹாப்பி அண்ணாச்சி?

 

பாதச்சுவடுகள் – 1 (27/12/2013)

என் வாழ்க்கையின் சின்ன சின்ன அன்றாட சந்தோஷங்கள், சம்பவங்கள், அனுபவங்கள், நினைவுகளை “என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்” என்ற தலைப்பில் அவ்வப்போது பதிவுசெய்ய உத்தேசித்து உள்ளேன். இது  27 டிசம்பர் 2013 அன்று பதித்த பாதச்சுவடுகள்.

என் கல்லூரி நண்பன்.. மணிகண்டன் என்கின்ற தர்வேஷ். சினிமாவில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, பல வருட காத்திருப்புகளுக்கு பிறகு, இன்று இரண்டாவது நாயகனாக “புவனக்காடு” என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறான்! விஜய் சேதுபதியுடன் சேர்ந்து பல சினிமா தயாரிப்பு அலுவலங்களுக்கு இருவரும் வாய்ப்பு தேடி அலைந்த காலங்களும் உண்டு. இந்த படம் நிச்சயம் அவனுக்கு முதற்படிக்கட்டு தான். அடுத்து விரைவில் அவன் முழு கதாநாயகனாக நடித்து இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. 2014ஆம் வருடம் அவனுக்கு மிகச் சிறந்த வருடமாக அமைய வேண்டி வாழ்த்துக்கள்!

எதிர்பாராவிதமாய் இன்று இத்திரைப்படம் சேலத்தில் வெளியாகவில்லை. ஆதலால் இன்னும் அதனை பார்க்க இயலவில்லை.சென்னையில் இத்திரைப்படம் வெளியாகும் திரையரங்கை காண, மொபைலில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் தேடியபோது அவனுடைய பெயரையும் பட்டியலில் கண்டபோது மனதினுள் அளவில்லாத மகிழ்ச்சி. இவனுக்கும் எனக்கும் மிகபெரிய பெரிய தொடர்பு உண்டு. அவனுடைய விடாமுயற்சியை கண்கூடாக பார்த்து வியந்திருக்கிறேன். ஏற்கனவே செல்வராகவனை பற்றி நான் எழுதிய கட்டுரையில் இவனை பற்றியும் பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்திருக்கிறேன்.

அதிலிருந்து சிலவரிகள். (சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்)

/// என்னை போல் சினிமா ஆசையுடன் இரண்டு நண்பர்கள் அப்போது இருந்தனர். ஒருவனுக்கு நடிகராக வேண்டும் ஆசை. இன்னொருவனுக்கு கிராபிக்ஸ் வேலை சேர. அவர்களுக்கும் கல்லூரி முடிந்ததும் சென்னை செல்வது தான் திட்டம். பார்ட்னர்ஸ் ஆப் கிரைம் என்பது போல் நாங்கள் மூவரும் ஒன்று சேரவேண்டி இருந்தது. பகலில் கல்லூரி. மாலை முதல் இரவு வரை ஒரு மைதானத்தில் அமர்த்து அவரவர் கனவை விவாதிப்போம். என்னுடைய கனவுகளும் அங்கு தான் பிறக்க ஆரம்பித்தது. சினிமா பற்றி நிறைய பேசுவோம். கதை விவாதம் செய்வோம்.
———-
———
———
ஒரு சில மாதங்கள் கழித்து ஒரு வீக் என்ட் சென்னை சென்றேன். நடிகராகும் கனவில் கல்லூரி முடிந்ததும் என்னுடன் சென்னை செல்வதாய் இருந்த நண்பன் இப்போது சென்னையில் தான் இருந்தான். இன்னும் அவனுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்போது வந்த “எங்கேயும் எப்போதும்” படம் வரை சில படங்களில் தலை காட்டி விட்டான். அவன் சொன்னது மாதிரியே கல்லூரி முடிந்ததும் வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டான். என்னையும் சென்னைக்கு வந்து விடு என்று அப்போது கூப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அன்று அவன் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அவனிடம் பணம் இல்லை. நான் தான் உணவு வாங்கி கொடுத்தேன். அவனுடைய சின்ன ரூமில் பல பேர் தங்கி இருந்தனர். அங்கு அப்போது அழுக்கு லுங்கியுடன் சவரம் செய்யாத முகத்துடன் ஒருவன் அமர்ந்து இருந்தார். அவரை காட்டி இவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தான். உதவி இயக்குனர் என்றதும் எனக்கு அவர் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது. நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களில் போட்டோ ஆல்பம் சிலது அவன் ரூமில் இருந்தது. நீண்ட நாட்கள் ஆனது என்பதால் நானும் அவனும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்.
சிறிது நேரத்தில் அந்த உதவி இயக்குனர் அறையை விட்டு வெளியே சென்று என் நண்பனை கூப்பிட்டு அவனிடம் மெதுவாய் ஏதோ சொன்னார். அது என் காதிலும் விழுந்தது. அதை கேட்டது எனக்கு தூக்கி வாரி போட்டது. ///
மேலும் வாசிக்க –
http://www.cpraveen.com/suvadugal/meeting-with-selvaraghavan/

Bhuvanakkadu Dharvesh

———————————————————————————————————————————–

// என்றென்றும் புன்னகை – சினிமா விமர்சனம் //
வழக்கம் போல் ஒரு மொக்கை படமாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தேன் ட்ரைலர் பார்த்தபோது! பரவாயில்லை ஏதோ சுமாரான ஒரு படம் என்று நினைத்திருந்தேன் மேலோட்டமாய் முகப்புத்தக விமர்சனங்கள் பார்த்தபோது! ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி நான் வயிறு வலிக்க சிரித்து, மகிழ்ந்து, ரசித்து பார்த்த படம் இதுதான் என்று புரிந்தது திரையரங்கம் சென்று முழுப்படமும் பார்த்தபொழுது!
சந்தானம், ஜீவா, த்ரிஷா ஆகியோரின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். சோக காட்சிகளிலும் ஊசி ஏற்றுவது போல் காமடியை நுழைத்த இயக்குனருக்கு சபாஷ். மீண்டும் குடும்பத்துடன் விரைவில் இன்னொருமுறை பார்ப்பேன். டோன்ட் மிஸ் இட். என்றென்றும் புன்னகை! முடிவில்லா புன்னகை!

Jeeva's Endrendrum Punnagai Movie Review

————————————————————————————————————————————

எழுத்தாளார், நண்பர் “குமார நந்தன்” என்னுடைய முதல் சிறுகதை படித்துவிட்டு தன் முகப்புத்தக சுவற்றில் எழுதிய பின்வரும் கருத்துக்கள் நிச்சயம் எனக்கு எனர்ஜி டானிக்…

அஜயன் பாலா ஷேர் செய்திருந்த சிறுகதையின் மூலம் பிரவீன் குமார் அறிமுகம் ஆனார். அஜயன் மூலம் அறிமுகம் ஆகும் இரண்டாவது நண்பர் இவர். (முதல் நண்பர் மகிழம் சித்த மருத்துவமணை சிவக்குமார்) அதென்னவோ சேலத்து நண்பர்களை இங்கே இருக்கும் என்னைப் போன்றவர்களை விட அஜயன் பாலா அதிகம் பேரைத் தெரிந்தும் தொடர்பிலும் இருக்கிறாரே என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி பாலா?
பிரவீனின் சாய்ந்து சாய்ந்து அவள் பார்த்த போது என்ற அவருடைய முதல் சிறுகதையைப் படித்தேன். கதை ஓரளவு வெண்ணிற இரவுகளை நினைவுபடுத்துகிறது. போனில் பேசியபோது அவர் உண்மையில் வெண்ணிற இரவுகள் கதையைப் படித்ததில்லை என்று தெரிந்தது. வெரிகுட் ஒருவர் முதல் கதையிலேயே தாஸ்தாவெஸ்கியை நினைவு படுத்துகிறார் என்றால் நிச்சயம் இவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம்.

அந்த சிறுகதையை படிக்க – http://www.cpraveen.com/suvadugal/saindhu-saindhu-short-story/

————————————————————————————————————————————-

ஒரு கிறிஸ்டியன் ஸ்கூலில் ஒரு மீட்டிங் காரணமாக என்னை அழைத்திருந்தார்கள். மீட்டிங் முடிந்து வெளிய வந்தேன். அப்போது மைதானத்தில் அனைத்து குழந்தைகளும் Culturals ப்ராக்டிஸ் செய்துக்கொண்டு இருந்தார்கள். நான் கூலர்ஸ் மாட்டிக்கொண்டு தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடய வாகனம் நோக்கி நடந்தேன். திடீரென அருகில் ஒரு சிறுவன் என்னை நோக்கி வேக வேகமாய் வந்தான். எதோ என்னிடம் சொல்ல வருகிறான் என்று அவனிடம் திரும்பினேன்..
“நீங்க துப்பாக்கி விஜய் மாதிரியே ஸ்டைலா இருக்கீங்க… Father….”
“தம்பி.. I am not Father.. டோன்ட் கால் மே Father!!!”
“ஓகே Father… டா..டா.. Bye Father ” என்று சொல்லி விட்டு விருட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்………………

“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” நானும் – விமர்சனம்

Onayum-Aatukuttiyum-movie-review

அதென்னவோ தெரியவில்லை, இது தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சியுகமோ என்று கூட தோன்றுகிறது. வரிசையாய் நல்ல படங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது நம் தமிழ் சினிமாவில். எதை முதலில் பார்ப்பது, எதை விடுவது எனக்கூட சில சமயம் குழப்பம் ஏற்படுகிறது. நீண்ட நாள் கழித்து சினிமாவை பற்றி எழுதுகிறேன். விமர்சனமே எழுத வேண்டாம் என்று தான் இது நாள் வரை இருந்தேன். ஆனால் சமீபத்தில் பார்த்த “மூடர் கூடம்” படத்தை பற்றி  எழுதவேண்டும் என மிகப்பெரிய உந்துதல் இருந்தும் இந்த “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படத்திற்கு எழுதியே தீரவேண்டும் என்று முடிவுசெய்தேன். ஆனாலும் இது விமர்சனம் அல்ல. இங்கு கதையை பற்றி நான் சொல்லப்போவதும் இல்லை.

ஆரம்பத்தில் சேலத்தில் இந்த படம் எங்குமே ரிலீஸ் ஆவதற்கான அறிகுறியே இல்லை. சேலத்தின் முக்கிய திரையரங்கமான ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ்’இல் படு மொக்கை சிரிப்பு படங்கள் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்திற்கு வழிவிடாமல் இன்னும் ஓடிக்கொண்டு இருந்தது. முந்தையநாள் ஒரு பாடாவதி திரையரங்கில் மட்டும் இந்த படம் வெளியாவதாக செய்தி வந்தது.  நண்பர் ஒருவர் அதை ஆன்லைனில் புக் செய்திட முற்பட்டபோது, இரண்டு டிக்கட்டிற்கு வெறும் முப்பது ரூபாய் என அந்த இணையத்தளம் காண்பித்திருக்கிறது. ஆச்சர்யமாகி தியேட்டருக்கு அவர் போன் செய்து கேட்டிருக்கிறார். “படம் வருமோ வராதோ தெரியலை சார். முப்பது ரூபாய் கட்டி நீங்கள் சீட்டை மட்டும் கன்பார்ம் செய்துகொள்ளுங்கள். படம் ஒரு வேலை ரிலீஸ் ஆச்சினா நேரா தியேட்டருக்கு வந்து டிக்கெட்டிற்காண பணம் செலுத்துங்கள்” என குண்டை தூக்கி போட்டார்.

இந்த படத்தை தாயாரிக்க ஆளில்லாமல் சொந்த படம் எடுக்கவேண்டிய சூழ்நிலை. படத்தை வாங்கி நிறைய திரையரங்கில், அட் லிஸ்ட் முதன்மையான திரையரங்கில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை. தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களை கொடுத்தும்,  தவிர்க்க முடியாத இயக்குனர் என பெயர் வாங்கியும், முந்தைய திரைப்படத்தில் ஹிட் அடிக்க தவறியதால் மிஸ்கினுக்கே இந்த நிலை.  அது தான் சினிமா! சித்திரம் பேசுதடி என்ற நான் மிகவும் ரசித்த திரைப்படம் கொடுத்த இயக்குனர் என்பதாலோ, அந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிமுகப்படுத்தியதாலோ என்னவோ அனைவரும் எதிர்பார்த்த ராஜாராணியை புறம்தள்ளிவிட்டு முதல் நாளே இந்த படத்தை பார்க்க போனேன். அவருக்கு வாழ்வா சாவா போராட்டம் அல்லவா இது?  ஆனால் உண்மையில் மிஸ்கின் இதில் மீண்டும் ஜனித்திருக்கிறார்.

ஓநாய் போன்ற குணம் படைத்த மனிதனும், ஆட்டுகுட்டி போன்று குணம்படைத்த மனிதனும் சேர்த்து பயணிக்கும் கதைபோல இது தோன்றினாலும் இது உண்மையில் ஓநாய்க்குள் ஒளிந்திருக்கும் இருக்கும் ஆட்டுக்குட்டியையும், ஆட்டுக்குட்டிக்குள் இருக்கும் ஒநாயையும் தோலுரித்துக்காட்டும் படம். சொல்லப்போனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கலந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது எந்த சதவிகிதத்தில் என்பதில் தான் ஒவ்வொருவரின் முகம் மாறுபடுகிறது.

தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்கள் கம் நடிகர்களில்  நிச்சயம் ஒருவர் கூட மிஸ்கின் அளவிற்கு ஜோலிக்கவில்லை. மனிதர் பின்னி இருக்கிறார். அதுவும் அந்த சுடுகாட்டில் ஒரே ஷாட்டில் கதையை சொல்லும் இடத்தில். வாய்ப்பே இல்லை! ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு அபரீதமானது. வழக்கமான சினிமாவை விரும்புவர்கள் நிச்சயம் இந்த படத்தை விரும்பப்போவதில்லை என்பதை விரும்பியே தான் தயாரிப்பாளர் மிஸ்கின் இதை தயாரித்து இருக்கிறார்.  படம் முடிந்து வெளிய வரும்போது தான் நான் உணர்ந்தேன்.. அட படத்தில் அந்த மஞ்சள் புடவையும் இல்லை, பாடல்களும் இல்லை. ஹாட்ஸ் ஆப் டு யூ மிஸ்கின். வான்ட் டூ ஹக் யூ…