உணவை பாதுகாக்க கைகோர்ப்போம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
இது பழமொழி.

“காலாவதியாகாத” உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்.
தானத்தில் சிறந்தது “கலப்படமற்ற” அன்னதானம்.
இது புதுமொழி.

Food Safety

மனிதன் என்றைக்கு பணத்தை படைத்தானோ அன்றைக்கே மனிதத்தின் அழிவுக்காலம் தோன்றியது என்று சொல்லலாம். பண்டமாற்றுமுறை வழக்கொழிந்து போய், பணத்திற்கு பண்டம் வாங்கும் முறை வந்த போதுதான் பணத்தை நோக்கிய நம் இனத்தின் பயணம் தொடங்கியது. உணவுக்காக பணத்தேவை என்பது போய், இப்போது வாழ்க்கைதரத்தை உயர்த்திக்கொள்ள பணம் தேவை என்றாகிவிட்டது. அதற்காக பணம் சம்பாதிக்க நிறைய வழிகளை இந்த சமூகம் கட்டமைத்தபோதும், விரைவில் சம்பாதிக்க நம் இனத்தவர்கள் எண்ணியதால் அதற்காக சிலர் எதையும் செய்யத்துணிந்தனர். ஆம் எதையும். ஆனால் அதற்கான நாம் கொடுக்கப்போகும் விலை தான்  கொஞ்சநஞ்சமல்ல.

கடைசியில் எதற்காக பணத்தை நாம் படைத்தோமோ, மனித இனம் இப்பூமியில் உயிர்வாழ ஆதாரமாக எது தேவைப்படுகிறதோ அதை கூட நாம் விட்டுவைக்கவில்லை. விளைவு; உணவில் கலப்படமும். காலாவதியான உணவை விற்பதும். இயற்கைக்கு மாறாக காய்கறி, பழங்களை விளைவிப்பதும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் நான் சொல்லித்தெரியவேண்டியது இல்லை. பாடப்புத்தகத்திலும், செய்திகளிலும், அரசின் விழிப்புணர்வு செயல்பாடுகளினாலும், நம் ஆறாம் அறிவின் மூலமும் அதன் ஆபத்தை அறியப்பெற்று மீண்டும் பணத்தாசையில் அந்த தவற்றை செய்பவர் தான் நாம். ஆனால் அதற்கான முடிவு ஒன்று தான். நிச்சயம் மனித இனத்தின் மிகபெரும் அழிவு அது.  நாம் மூட்டை மூட்டையாய் பணத்தை தூக்கிக்கொண்டு கலப்படம் இல்லா இயற்கை உணவைத்தேடி அலையப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.  அப்படியே எங்காவது அது கிட்டினும் அதற்காக அடித்துக்கொண்டு மாண்டுப்போகும் ஒரு பணத்தாசை பிடித்த இனமாக வரலாற்றில் இடம் பிடிக்கப்போகிறோம். ஆனால் அந்த வரலாற்றை படித்துப்பார்க்க நம் சந்ததிகள் நிச்சயம் இருக்கப்போவதில்லை.

இப்படி பட்ட சூழ்நிலையில் நம் விழிப்புணர்வும், தவறு செய்யும் நிறுவனங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும், அவர்களை புறக்கணிப்பதும் மிகவும் அவசியம். பெரும் பணமுதலைகள் முன்,  சாமான்யர்களாகிய நாம், குறைந்தபட்சம் அதை தான் செய்ய முடியும். ஆனால் அதையும் செய்யத்தவறி மறைமுகமாய் அவர்களுக்கு துணைபோய் அடிமையாய் வாழ்த்திடும் வாழ்க்கையை நம்மில் பலர் இன்னும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம். நிச்சயம் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்து உருவாக வேண்டும்.

சென்ற வாரம் (06/10/2014) சேலம் தாதகாப்பட்டியில் மூன்றுதளங்களில் பிரமாண்டமாக அமைந்துள்ள “ஜெய்சூர்யாஸ் பல்பொருள் அங்காடி”க்கு (Jaisurya’s Deparment Store) சில பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். இது சேலம், ஈரோடு நாமக்கல் பகுதிகளில் பல கிளைகளை கொண்டுள்ளது. எல்லா பொருட்களையும் அதன் தாயரிப்பு தேதியையும், காலவதியாகும் தேதிகளையும் சரிபார்த்தே வாங்கிய நான், கோதுமை பிரட் பாக்கெட்டை கவனிக்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அடுத்த நாள் காலை அதை உண்டும் விட்டேன். மீண்டும் மறுநாள் காலை அதை உண்ண எடுக்கும் போது அந்த பிரட் துண்டுகள் பூசனம் பிடித்து இருந்ததை கவனித்தேன். (கோதுமை பிரட்டின் நிறம் முதல் நாள் கவனக்குறைவை ஏற்படுத்திவிட்டது).  இதை வாங்கி இரண்டு நாள் தானே ஆகிறது. அதுவும் குளிர்சாதனப்பெட்டியில் அல்லவா இதை வைத்திருந்தோம் என்று அதன் தயாரிப்பு தேதியை பார்த்தால் அது அச்சிடப்படவில்லை. அதன் காலாவதி (Best Before) தேதியைப் பார்த்தால் அது 09/09/14 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது அந்த பிரட் பாக்கட் காலாவதி ஆகி சுமார் ஒரு மாதம் கழித்து என்னிடம் அது விற்கப்பட்டு இருக்கிறது. பூசனம் பிடித்த உணவை என் கவனக்குறைவால் நானும் உண்டு இருக்கிறேன். எனக்கு கோபம் கோபமாய் வந்தது. நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். என் கவனக்குறைவால் மிகவும் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். என்ன செய்ய?

mold bread with fungus

 

Proof to complaint at food safety departmentexpired food item - food safety complaint

 

யோசித்துப்பார்த்தேன்.

1. வேறு ஏதேனும் சப்ளையர்ஸ் காலாவதியான பிரட்பாக்கட்டை இடையில் நுழைத்து அவர்களை ஏமாற்றி இருந்தால்?அந்த பிரட் பாக்கெட் ஜெயசூர்யாஸிசின் சொந்த தயாரிப்பாகும். இதனால் அவர்கள் யாராலும் ஏமாற்றப்படவில்லை என்பது முதலில் உறுதியாகிறது.

2. ஒரு வேலை பணியாளரின் கவனக்குறைவால் இது நிகழ்த்திருந்தால்? அந்த அங்காடி உள்ளே நுழைந்ததும் முதலிலேயே மேசையில் இருப்பது பிரட் பாக்கெட்டுகள் தான். ஒவ்வொரு பிரட் வெரைட்டியில் சுமார் ஐந்து பாக்கெட் என நான்கு வெரைட்டிகள் தான் மேசையின் மேல் இருந்தது என நினைக்கிறேன். கிட்ட தட்ட நாற்பது நாட்களாகவா அந்த பெரிய அங்காடியில் அந்த ஐந்து பாக்கட்டுகளை யாரும்  வாங்காமல் இருப்பார்கள்? (கலாவதி ஆன தேதியில் இருந்து பத்து நாட்களுக்கு முன்னர் அது தயாரிக்கபட்டதாக அறிகிறேன்.)

3. ஒரு வேலை உண்மையாகவே அது விற்பனை ஆகாமல் இருந்திருந்தால்? அந்த அங்காடியின் ஒவ்வொரு சிறுபகுதிகளுக்கும் தனிதனி பணியாளர்கள் இயங்கிக்கொண்டு இருப்பதாகவே காணமுடிகிறது. ஒரு கண்ணாடி மேசையில் கேக், பிரட், இனிப்பு  என்று வெகு சீக்கிரம் வீணாக போகக்கூடிய பொருட்களை தினமும் கண்காணிக்கும் நபருக்கு பல வாரங்களாக விற்பனை ஆகாமல் அப்படியே இருக்கும் பொருட்களை பற்றிய கவனம் இல்லாமலா போய்விடும்?!

4. எது எப்படியோ. நேரில் சென்று அவர்களிடம் இதற்கு நியாயம் கேட்டால் என்ன? என்று ஒரு கேள்வி எழாமல் இல்லை! காலாவதி ஆகி குறைந்தபட்சம் ஓரிரு நாட்கள் மட்டுமே ஆகி இருந்தால் மனிதத்தவறேதும் நிகழ்திருக்கலாம் என்று அவர்களிடம் சென்று  கவனமாய் இருக்க எச்சரிக்கை செய்து, வேறு பிரட் பாக்கெட்டோ அல்லது பணத்தை திரும்பவோ பெறவோ முறையிடலாம். ஆனால் மேற்கொண்ட சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது, காலாவதி ஆகி முப்பது நாட்கள் ஆகிவிட்டதால் இதை மனிதத்தவறென்று கருத்தில் கொள்ள இயலவில்லை.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் ஈரோட்டில் உள்ள கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சில உணவுப்பொருட்கள் வீட்டிற்கு வாங்கிவந்ததாகவும் அவை அனைத்தும் பழையபொருட்கள் என்று பிறகு தெரியவந்ததாகவும் சொன்னது நியாபகம் வந்தது. அது தான் இப்போது ஜெய்சூர்யாஸ் என்று பெயர்மாற்றபட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி இந்த கதை நீண்ட காலமாக தொடர்வது போல் ஒரு உள்ளுணர்வு எழுந்ததால், அங்கு பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட வாய்ப்புள்ள காரணத்தினால், அந்த கடையை சோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.

எப்படி ஒரு கடையை சோதனைகுட்படுத்துவது?

இதற்க்கு முன்னர் இதை போன்ற பல பிரச்சனைகளை வேறு பொருட்களில்/நிறுவனங்களில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் பிரச்சனை இந்த அளவிற்கு வீரியம் இல்லாததால் அவர்களிடம் நேரிடையாக முறையிட்டு பணத்தை திரும்ப பெற்றிருக்கிறேன், பொருட்களை மாற்றி தரவைத்திருக்கிறேன், மன்னிப்புக்கடிதம் கூட தரவைத்து அவர்களின் தவற்றை பதிவுசெய்து இருக்கிறேன். ஆனால் இம்முறை அப்படி அல்ல.

இணையத்தின் மூலம் சென்னையில் உள்ள “உணவுப்பாதுகாப்பு துறை” அலுவலகத்தை தொடர்புக்கொண்டு சேலத்தில் உள்ள அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை வாங்கினேன். சேலம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த புகாரை கூறியவுடன் அடுத்த அரை மணி நேரத்தில் திருமூர்த்தி என்ற அதிகாரி என் இருப்பிடத்திற்கு வந்து பிரட்பாக்கெட், பில் போன்றவைகளை ஆய்வு செய்து அதை உறுதிபடுத்திக்கொண்டார். (இது வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் நாம் தொடர்புகொள்ளாமல் இருப்பது அவசியம். அவர்களுக்கு விஷயம் தெரிந்து உஷாராக வாய்ப்பு இருக்கிறது).

உடனே அவரும் அவர் உதவியாளரும் அந்த ஆங்காடிக்கு சென்று அணைத்து பிரட்பாக்கட்டுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது நேரம் காலை சுமார் பதினோரு மணி இருக்கும். ஒருவேளை பழைய தேதியிட்டு ஏதேனும் இருந்தால் அதை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பு சோதனைக்கு உட்படுத்துவதாய் இருந்தது.    ஆனால் எதிர்பாராவிதமாக, அதே சமயம் ஆச்சர்யமாக அனைத்து பிரட் பாக்கட்டுகளிலும் தயாரிக்கப்பட்ட தேதி அன்றைய தேதியாகவே இருந்தது (விற்பனை நன்றாக நடைபெறுகிறது என்றும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்).

உடனே அவர் அந்த நிறுவனத்தின் கிளை நிர்வாகியை அழைத்து என்னுடைய புகாரை சொல்லி, அவர்களை எச்சரிக்கை செய்து, மற்ற பொருட்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். என்னை எழுத்துப்பூர்வமாக புகாரை அளிக்குமாறு கூறினர். ஏற்கனவே அந்த நிறுவனத்தின் மேல், அதுவும் அந்த கிளையில் சில புகார்கள் உணவுப்பாதுகாப்புத்துறையில் இருப்பதை அறியபெற்றதால் நான் புகாரை எழுத்துப்பூர்வமாக கொடுப்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி புகாரை அளித்தேன். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Officer Raid & Inspect Jaisuryas Deparmental Store(திரு.திருமூர்த்தி அவர்களும் அவரது உதவியாளரும் சோதனை செய்தபோது)

நீங்களும் ஏதேனும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் தயங்காமல் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அளியுங்கள். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

உணவுப்பாதுகாப்புத்துறை தொலைபேசி எண்கள்:

சென்னை: 044 – 24351051
சேலம்: 0427 – 2450332
இணையத்தளம்: http://www.fssai.gov.in

 

(உணவு பாதுகாப்பு துறைக்கு நான் எழுதிய புகார் கடிதத்தின் சீல் செய்யப்பட்ட நகல்)
scan0003-page1

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை

friendship day tamil poem

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

– பிரவீன் குமார் செ.

செய் அல்லது செத்து மடி – கவிதை

 

IMG_7829

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.
எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.
எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.
நம் வெற்றியை கண்டு
உளம் மகிழ யாருமில்லை என்றாலும்
நம் தோல்வியை கொண்டாட
பெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…
சற்று தடுமாறினாலும்,
நம்மை உயிரோடு விழுங்க
அது தூங்காமல் விழித்திருக்கிறது.

“காலம் கனியும்”
என காத்திருத்தலும் பயனுக்கில்லை.
“வாழ் அல்லது வாழவிடு”
என்ற அறசீற்றமும் பிரயோஜனமில்லை.
உனக்கு இருக்கும் ஒரே வழி,
“செய் அல்லது செத்து மடி..”

– பிரவீன் குமார் செ

தினமணி மாணவர் மலர் 2014இல் என் கட்டுரை

 

தினமணி மாணவர் மலர் 2014இல்  “மூளைக்கு வேலை கொடுத்தால் முன்னேறலாம்” என்ற தலைப்பில் வெளியான என் கட்டுரையும் அதன் நகலும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். நன்றி.

 

cover

ஒவ்வொரு நாளும் இணையதளப் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் வயது, பாலினம் வித்தியாசமின்றி இணயத்தை பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு இணையப்பயன்பாடு அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகவும் சமூக அந்தஸ்தை காட்டும் விஷயமாகவும் மாறியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை இருபுறமும் கூர்மையான கத்திக்கு ஒப்பிடுவார்கள். அது இணைய விஷயத்துக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.

அதிகளவில் இணையத்தில் பயன்படுத்தும் இளைஞர்களும், மாணவர்களும் அவற்றை தங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் கல்விக்கு உதவுவதுடன் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் கருவியாகவும் விளங்கும் என்கிறார் சேலத்தை சேர்ந்த இணையதள தொழில் விற்பன்னர் சி.பிரவீண் குமார்.

இன்றைய காலகட்டத்தில் கணினி அறிவியல் மாணவர்களுடன், கலை- அறிவியல் பயிலும் மாணவர்களும் பகுதிநேரமாக கணினி பயில்கின்றனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும், அதற்கும் குறைவான தகுதியைக்கொண்டு. கணினி மீது தணியாத ஆர்வத்தை கொண்டிருக்கும் இளைஞர்களும், இணயதளத்தில் எழுதுவது, டிசைனிங், ப்ரோக்ராமிங், அனிமேஷன், டேட்டா என்ட்ரி போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும்.

மாணவர்கள், தங்களின் ஒய்வு நேரத்திற்கு ஏற்ப, மேற்கண்ட எதில் தங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருக்கிறதோ அந்த வேலைகளை வீட்டில், அறையில் இருந்தபடியே இணையத்தின் மூலம் கற்று செய்யலாம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது செலவீனங்களை குறைக்க அவர்களது வேலைகளை இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு செய்வது அனைவரும் அறிந்ததே.

ஆனால்  அமெரிக்காவில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், தனி  நபர்  நிறுவனங்கள்,  சில ஆயிரங்கள், லட்சங்களை  மட்டுமே  செலவழிக்கக்கூடிய  வேலைகளை  அல்லது  ஓரிருவர்   மட்டுமே  செய்யக்கூடிய  வேலைகளை  அப்படி  செய்ய  இயலாது.  அவர்களை   போன்றவர்களுக்கும்   செலவீனங்களை   குறைக்கும்  வகையில்  இந்தியா,  பிலிப்பைன்ஸ்  போன்ற குறைந்த ஊதியப்பணியாளர்கள் கிடைக்கும்  நாடுகளிலுள்ள  சுதந்திர பணியாளர்களை(freelancer)   சில வலைத்தளங்கள் இணைக்க அவர்களுடன் இணைத்துவிடும் பணியை செய்கின்றது.

உதாரணமாக odesk.com, elance.com, feelancer.com போன்ற இணையதளங்களின் மூலம் வீட்டில் இருந்தபடியே அத்தகைய நபர்களை தொடர்புகொண்டு வேலை பெற்று பணம் சம்பாதிக்கலாம். அந்த தளங்களை பயன்படுத்தும் நுணுக்கமும், அத்துறையில் தகுதியும், தன்னம்பிக்கையும்  இருந்தால் ஏதேனும் ஒரு பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து சம்பாதிப்பதை விட மாதம் தோறும் இதில் அதிகம் பணம் ஈட்டக்கூட வாய்ப்புகள் உள்ளது.

எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் வியாபார சந்தையும் வர்த்தகமும் தோன்றுவது நியதி. இணையம் என்று ஒன்று தோன்றி அதில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தபோது அங்கும் ஒரு வியாபார சந்தையும் அதில் வர்த்தகமும்  தோன்றாமல் இல்லை.   பல லட்சம் கோடிகளை குவித்துவைத்துக்கொண்டு இருக்கும் கூகிள் எனும் இனையஜாம்பவானின்  98% வருமானம் தங்களது தேடல் முடிவு பக்கங்களிலும், பல லட்சம் கோடிகளை குவித்துவைத்துக்கொண்டு இருக்கும் கூகிள் எனும் இனையஜாம்பவானின்  98% வருமானம் தங்களது தேடல் முடிவு பக்கங்களிலும், தங்கள் துணை/சார்பு தளங்களில் விளம்பரங்களை விற்று  ஈட்டியவையே. சமூகவலைதளங்களில் ராஜாவான ”பேஸ்புக்”கின் பல்லாயிரம் கோடி ஆண்டு வருமானமும் தங்கள் தளத்தில் விளம்பரங்களை விற்பதன் மூலமே சாத்தியப்படுகிறது.

இணையசந்தையின் மதிப்பையும், அதில் நம்பி பல்லாயிரகனகான  பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் செய்யும் வர்த்தகத்தின் அளவையும் புரிந்து கொள்ள. இந்த இரு நிறுவனங்களுமே சரியான உதாரணம். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும்  புது வாடிக்கையாளர்களை கவர்ந்து  தங்களது வியாபாரங்களை அவர்கள் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக அணைத்து தொழில்களும் இப்போது இனைய வாடிக்கையாளர்களை சார்ந்து இருப்பதால் அல்லது அதன் potentialஐ புரிந்து இருப்பதால் சர்ச் இஞ்சின் மார்கடிங் (search engine marketing), சோசியல் மீடியா மார்கடிங் (Social Media Marketing) போன்ற துறைகளில் தேவைகளும், வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது.

மாணவப்பருவத்திலேயே இதை கற்றுக்கொண்டு தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் இருப்பின் இணையத்தின் மூலம் சுயமாக இதை கற்றுக்கொள்ள முடியும்.உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களான பேஸ்புக் நிறுவனர் “மார்க் ஜுக்கர்பர்க்”, கூகிளின் நிறுவனர்கள் “லாரி பேஜ்”, செர்கே பின்” ஆகியோர் தாங்கள் படிக்கும் காலத்தில் விளையாட்டுத்தனமாய் உருவாக்கிய பேஸ்புக், கூகிள் ப்ராஜெக்டுகள் தான் இன்று உலகையே புரட்டிப்போட்டுள்ளன.

புதிய யோசனை, கனவுகளைக் கொண்டுள்ள மாணவர்கள் அவற்றை செயல்படுத்த முன்வந்து, அவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் ஊக்கம் இருந்தால், மாணவ தொழில்முனைவோரை நம் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டிருந்தால் போதும், கணினி அறிவுள்ள சில புத்திசாலி மாணவர்கள் சேர்ந்து ஓர் இணைய சேவையைத்தொடங்க முடியும். அல்லது ஆன்ட்ராய்ட், ஆப்பில் மொபைல் அப்ளிகேசன்களை தயாரிக்க முடியும்.

அது ஓரளவு பிரபலமானால் கூட குறைந்தபட்சம் அதில் கூகிள் விளம்பரங்களை இணைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிளிக்கிற்கும் பணம் சம்பாதிக்கலாம். பிரையன் ஆக்டம், ஜான் கோம் என்ற இருவரும் விளையாட்டாக தொடங்கிய மொபைல் அப்ளிகேஷனான வாட்ஸ் ஆப், அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்டதை மனதில் கொண்டாலே போதும் என்கிறார் பிரவீன் குமார்.

 

12

 

3

4

சிறுகதையும் பெரும்கருத்தும்

 

listen

என் சிறுகதையான  சாய்ந்து சாய்ந்து.. அவள் பார்த்த போது..  படித்துவிட்டு மஸ்கட்டில் இருந்து நண்பர் செந்தில் குமார் எழுதிய கடிதமும், அதற்க்கு என் பதிலும்.

பிரவீன்…..இந்தக்கதையை இப்பொழுதான் படிக்க நேரமிருந்தது…காரணம் நான் உடல்நலக்குறைவால் இருக்க நேர்ந்ததால் இதை படிக்க முடிந்தது…. மற்றபடி இதை படித்துவிடவேண்டும் என்கிற என்னுடைய பல நாள் ஆவல் இன்றுதான் நிறைவேறியது.

முதலில் தாய்த்தமிழ்மொழியில் நீங்கள் தொடர்ந்து எழுதி வருவதற்கு என் முதற்கன் நன்றியையும், வாழ்த்தினையும் தெரிவித்துகொள்கிறேன்.

இந்தக்கதையை படித்து முடித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை நான் தங்களோடு பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்….இக்கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை தாங்கள் மேன்மேலும் உங்களை பட்டைதீட்டிக்கொள்ளவேயன்றி பழுதுபார்க்கும் நோக்கத்தில் அல்ல என்பதை மிகவும் அழுத்தமாகவே பதியம் செய்யகிறேன்.

தங்கள் எழுத்தின் மிகப்பெரிய பலம்…படிப்பதற்கு ஆவலை தூண்டுவதாகவும், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையிலும் சுவாரஸ்யம் சேர்க்கும் விடயங்கள் அடங்கியதாகவும் இருப்பது. ஒரு எழுத்தாளனுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்த்துக்கள்.

என் முதல் கேள்வி: நீங்கள் உண்மையிலேயே எந்த பெண்ணையாவது மாத கணக்கிலோ, அல்லது வருடகணக்கிலோ காதலித்ததுண்டா ….? இது முழுக்க முழக்க உணர்ப்பூர்வமான காதல் கதையெனில்…..இதில் காதல் வெறும் பத்து சதவீதம்கூட இல்லை.

இதை கதையின் மையப்பொருளாக நீங்கள் எழுத நினைத்தது எதை ?…..அ) காதல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணின் துரோகத்தையா ???, அல்லது ஆ) உணர்ப்பூர்வமான ஒரு ஆணின் உண்மை காதலையா….???

இதில் ஏதேனும் ஒன்று எனில், என்றாலும் எதுபற்றியும் அழுத்தமான பதிவும் இதில் இல்லை.

சினிமா படம் எடுப்பது வேறு, எழுதுவது வேறு….இரண்டையும் சேர்த்து எழுத்தின் புனிதம் கேடுப்பதென்பது ஏற்றுக்கொள்முடியாதது ! காரணம் இவ்வாறு தொடர்ந்து எழுதும் பட்சத்தில் உங்கள் சுயம் என்ன என்பது யாருக்கும் புலப்படாது போகும். மாறாக, இவை காற்றில் கரைந்துபோகும் எழுதுக்களாக மட்டுமே இருந்துவிட்டுபோகும்…. அதுவும் உங்கள் நண்பர்கள் மத்தியில் மட்டுமே !

தொடர்ந்த சினிமா வசனங்களையும், நீண்ட ஆங்கில வாக்கியங்களையும் தவிர்த்திருக்கலாம்…..காரணம் இவை எந்த ஒரு யதார்த்தையும் பெரிதாக ஏற்படுத்திவிடவில்லை. கதையின் வீரியத்தை மட்டுமல்ல, அதன் அழகையும் கெடுத்துவிடும் இதுபோன்ற வாசகங்கள்….இவையெல்லாம் விமர்சனம் எழுவதற்கு வேண்டுமானால் சுவைக்கூட்டும்.

அந்தபெண்ணின் புகைப்படத்தை அந்த ஆடவன் பார்த்ததில்லை அதுவரையில் என்றபொழுது, அவன் மனமெங்கும் அவள் பற்றின உணர்வுகள் மட்டுமே நிறைந்துள்ள ஒருவன், எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் எண்ணவோட்டம் , அவன் அந்தப்பெண்ணை பார்க்கும் முதல் பார்வையில், அவளை சந்திக்கும் அந்த முதல் நிகழ்வில் ஏற்படும் உணர்வுகள் தங்கள் எழுத்தில் இன்னும் ஆழமாக வெளிப்பட்டிருக்க வேண்டாமா ? , சரி காருக்குள் இருக்கும்பொழுதுதான் அவளை முதன் முதலாய் பார்க்கிறேன் என்கிறீர்கள்….ஆனால் அதுவும் அழுத்தம் இல்லாமலே வெறும் “தேவதை”….”கொஞ்சம் ஸ்பெஷல்” என்ற வார்த்தைகளில் நீர்த்து போய்விடுகிறது.

காதலுக்கு சோகம் தான் அழகு என்றாலும் இதில் அந்த பாதிப்பும் அவ்வளவாக இல்லை, அது அந்தபெண்ணின் ததுரோகத்தைவிடவும் சிறுமைப்பட்டு போகிறது.

ஏதோ விளையாட்டு பையனொருவனின் முதிர்ச்சியில்லா காதலாகத்தான் இந்தக்கதை முழுக்க தொக்கி நிற்கிறது….காதலுக்குண்டான எந்த முதிர்ச்சியும் இதில் இருவருக்கும் இல்லை.

செல்வராகவன் படம் பார்ப்பதர்க்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் அலைந்ததை எழுதியிருந்தீர்கள்….அந்த சூழ்நிலைக்கு அந்த எழுத்துக்கள் தான் பொருத்தம். அந்த எழுத்தின் யதார்த்தம் மிக அருமை, அதன் பாதிப்பும் மிக அழகு. ஆனால் இதுப்போன்ற உணர்வு சம்மந்தமுள்ள கதைகளுக்கு வேறுமாதிரி சாயல் வெளிப்பட வேண்டும்.

எங்கு நகைச்சுவை உண்மையிலேயே சுவை சேர்க்குமோ அங்கு மட்டுமே அதை சேர்த்தல் நன்று.

நீங்கள் எழுதியது காட்சிக்கு நன்றா இருக்குமே தவிர கதைக்கான எழுத்துக்கு என்றுமே நியாயம் செய்யாது !

“பெண்களை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து தங்கள் எழுத்தில் தவிர்க்கவும், அது தங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்துவிடும்”.

கதை எழுதும்போது மட்டும் நீங்கள்… தேர்ந்த, நல்ல எழுத்தாளர்களை மனதில் கொண்டு எழுதவும்….தயவு செய்து சினிமா இயக்குநர்களை மனதில் வைத்து எழுத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

வாழ்த்துக்கள்…., முயற்சி தொடரட்டும்.

வணக்கம். உங்களின் நேர்மையான கருத்திற்கு மிக்கநன்றி நண்பரே. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவழியாய் படித்து விட்டர்கள். அதற்கும் உங்கள் கருத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு பதில் எழுத தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். (கிடைத்த மறு நாளே முக்கால்வாசி எழுதி முடித்துவிட்டேன்.)  இவ்வளவு நீளமாக கருத்தை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று நான் அறிவேன்.  என் மீதிருக்கும் மதிப்பும், என் எழுத்தை செம்மை படுத்த உதவவேண்டும் என்ற நோக்கமும் இன்றி இதை நீங்கள் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றும் நான் அறிவேன்.

நீங்கள் கூறுவது போல் இந்த கதை அதன் மையக்கருவைவிட்டு சற்று விலகியிருக்கும் தோற்றத்தை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் அது தற்செயலாய் அமைந்தது அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. அந்த ஆணின் காதலையும், பெண்ணின் துரோகத்தையும் நரேடிவ் ஸ்டைலில் எழுதவேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அந்த உண்மை சம்பவங்களின் போக்கிலேயே சூழ்நிலைகளையும், வசனங்களையும் கற்பனை செய்து எழுதமுற்பட்டதே அதற்க்கு காரணம். உண்மை சம்பவத்தில் இருந்து மையக்கருவை மட்டும் எடுத்து கதையின் நோக்கத்தில் சம்பவங்களை நான் கற்பனை செய்து அடுக்கியிருக்கவேண்டும். நான் அந்த தவற்றை எழுதும் போது முற்றிலும் உணரவில்லை. கதைபோகிற போக்கில் முன்யோசனை இன்றி எழுதியதும் ஒரு காரணம்.

இதை சிறுகதை என்று கூறாமல் முற்றிலும் உண்மை சம்பம் என்று சொல்லி இருந்தால் கொஞ்சம் சுவராசியம் இருந்திருக்கும்.  உண்மையில் சொல்லப்போனால் சிறுகதைக்கான வடிவத்தை நான் இதில் சரியாககையாளவில்லை. இதை நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். அதுமட்டும் இல்லாமல் ஆங்காங்கே திரைக்கதை வடிவத்தை என்னையறியாமல் புகுத்தி பல இடங்களில் “வாசிப்பு இன்பத்தை” கொடுக்காமல் விட்டிருக்கிறேன், பல இடங்களில் அதை கெடுத்தும் இருக்கிறேன்.

அதற்க்கு உதாரணம், நீங்கள் கூறியது போல், முதன் முதலாய் அவன் அந்த பெண்ணை காரில் பார்த்தபோது அந்த உணர்வுகளை நான் விசுவலாக நினைத்து எழுதித்தொலைத்துவிட்டேன். எனக்கு நிறைய பேர் அந்த இடமும், முதன் முறை அவனுக்கு காதல் வரும் இடத்தில் செய்த வர்ணனைகளும் பிடித்திருப்பதாய் கூறி இருந்தார்கள். சிலபேர் மிகவும் சிலாகித்து பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்.. ஆனால் அந்த கதையை விட்டு சற்று விலகி ஒரு வாசகனாய் அதை படித்த போது என்னை அது ஏமாற்றம் கொள்ளச்செய்தது.

இது என்னுடய முதல் சிறுகதை. ஒரு நிஜ சம்பவத்தில் தாக்கத்தில், இரண்டு முழு நாட்கள் உட்கார்ந்து முழுமூச்சில் எழுதினேன். (நான் காதலித்தேனா என்று கேட்டுள்ளீர்கள் – எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால்  என்னுடைய நிஜகதையை பொதுவில் எழுதிடவோ, உங்கள் கேள்விக்கு ஆம் என்று பதில் கூறிடவோ நான் மூடனாக இருந்திட வேண்டும். இருந்தும்  நான் யாரையும் காதலிக்கவும் இல்லை… என்னையும் எனக்கு தெரிந்து யாரும் காதலித்ததில்லை… ஆகவே இது என் கதையுமில்லை… ஒகே?.. ஹி. ஹீ…)

இந்த சிறுகதையை (!) நான் எழுதி முடித்தவுடன், நண்பர் ஒருவரை கூப்பிட்டு படிக்க சொன்னேன். எப்படி வந்து இருக்கிறது என்று அறிந்துக்கொள்ள மிகவும் ஆவல். ஆனால் அதை படித்திவிட்டு அவரோ  “தப்பா நினைத்துக்கொள்ளாதீர்கள்,,, இது ஒரு குப்பை”யென்று சொல்லிவிட்டு கூலாக போய் விட்டார். இரண்டு நாட்கள் வேறு உலகத்திற்கு சென்று, வேறு சிந்தனையின்றி, உணவின்றி உறக்கமின்றி அதே நினைவோடு வாழ்ந்து வெளியே வந்த எனக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தது. கஷ்டமாகவும் இருந்தது. (எழுதுவது அவ்வளவு சுலபமில்லை), எழுதும்போது அநேகமாக அனைவருக்கும் இது தான் பிரச்சனை. கட்டுரையோ, கதையோ, எழுதி முடிக்கும் வரை அது எப்படி வரப்போகிறது  என்று தெரியாது. எழுதி முடித்தாலும் அது எப்படி வந்து இருக்கிறது என்றும புரியாது. யாரேனும் படித்து பாராட்டினாலோ திட்டினாலோ தான் உண்டு.

இதை குப்பை என்று நண்பர் கூறியவுடன் உண்மையில்  இந்த கதையை வெளியிடாமல் அப்படியே அழித்துவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அந்த முடிவு மிகப்பெரிய வலியை எனக்குள் ஏற்படுத்தியது. சரி கடைசியாய் இன்னொருவரிடம் கேட்போம் என்று எழுத்தாளர் நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு  இந்த குப்பையை அனுப்பி படிக்கச்சொல்ல  மிகவும் சங்கடமாக இருந்தது. இருந்தும் அனுப்பி வைத்தேன்.

சில நிமிடங்களில் அவரிடம் இருந்து போன். கதையின் முடிவை படித்துவிட்டு  கண்கள் கலங்கியது பிரவீன் என்றார். நிஜமாய் தான் சொல்கிறாரா?  இல்லை ஒருவேளை என்னை கலாய்கிறாரா? என்று சந்தேகம். நேரடியாய் கேட்க்க முடியவில்லை. ஆனால் அவரின் நீண்ட நேர உரையாடலில் அந்த சிறுகதை அவருக்கு பிடித்திருக்கிறது என உணர்ந்துக்கொண்டேன். கதையின் ஓட்டத்தில் சில மாற்றங்களும், நிறைய பகுதியை வெட்டிவிட சொன்னார். அப்படி செய்தால் பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் என்றார். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. கஷ்டப்பட்டு எழுதினேனே? எப்படி அதை செய்வது என மனம் தடுத்தது. (சில நிமிடங்கள் முன்பு வரை ஒட்டுமொத்தமாய் அதை அழித்துவிடகூட எண்ணி இருந்தேன் – எல்லாம் பாராட்டு/அங்கிகாரம் செய்யும் வேலை!!!)

எந்த பத்திரிக்கையிலும் வராவிட்டால் பரவாயில்லை என்று எதையும் வெட்டாமல் அப்படியே என வலைப்பூவில் பிரசுரம் செய்தேன். ஆனால் நானே எதிர்பாராவண்ணம் மிகவும் கூர்மையான விமர்சனங்கள், கதையின் ஒவ்வொரு பகுதியையும் அலசி ஆராய்ந்து கேள்விகள், கதாபத்திரங்களை பற்றி அபிப்பிராயங்கள் , காதல் சம்பவங்களை பற்றி சிலாகிப்புகள்  என்று  கதையோடு ஒன்றி போய் நிறையபேர் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்கள். ஒரு நண்பர் எல்லாவற்றிக்கும் மேலே போய் பிரபல ரஷ்ய எழுத்தாளர் “தாஸ்தா வெஸ்க்கி”யின் “வெண்ணிற இரவுகள்” போல இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகா மொத்தம் என் உழைப்பு போகவில்லை என்று மனம்தேற்றிக்கொண்டாலும் எனக்கு கதையின் ஓட்டத்தில், என் எழுத்தில் உடன்பாடில்லை.

ஒருவேளை இது நன்றாக எழுதப்பட்டு இருந்தால் இதன் வீச்சு வேறுமாதிரி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது.  முதல் சிறுகதை. இரண்டு நாள் உழைப்பு. அதனால் குப்பையென்று இதை அழித்துவிட மனமில்லாமல் ஜஸ்ட் என் வலைப்பூவில் வெளியிட்டேன்.  அடுத்தமுறை நிச்சயம் ஒரு நிறைவான சிறுகதை எழுதுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்க்கு முன்னர் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

பி.கு: பெண்களை கொச்சைபடுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. அது முற்றிலும் ஓர் உண்மை சம்பவம்! கதாபாத்திரமும் உண்மை!