நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா? இதோ ஒரு பரிசோதனை!!!

தமிழனுக்குனு ஒரு மகத்துவம் இருக்கு. விவேக் சொல்கிற மாதிரி “என்னதான் இப்போ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாலும்… ஒரு காலத்துல தெருவுல வித்தை காட்டுறவன் முன்னாடி உட்காந்து கை தட்டுன கும்பல் தான எல்லாரும்”. அது மாதிரி அக்மார்க் தமிழனுக்குனு பிரத்தியோகமான சில குணாதிசயங்கள் உண்டு.. (நகைச்சுவையாக).

அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? இந்த தமிழ் இடுக்கையை படிப்பதினால்  கண்டிப்பாக நீங்கள் ஒரு தமிழன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா?பின் வரும் கேள்விகளுக்கு உங்கள் மனதினுள்ளே பதிலளியுங்கள். ஆம் என்று பலமுறை பதிலளிக்க வேண்டிஇருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு அக்மார்க் முத்திரை பெற்ற தமிழன் தான்.. வாழ்த்துக்கள்.!!!

1. எந்தப்பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க….!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க…!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு…..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9… ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க.! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார
முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ… லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி…!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க…. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க…!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு
இருக்கும்…!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்…. பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க…

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்.

அடடா.. இப்போது நீங்களும் ஒரு அக்மார்க் தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள். அது சரி..  மேலே கொடுக்கப்ட்ட குணாதிசயங்களை தவிர வேறு ஏதேனும் விடுபட்டு இருக்கிறதா? கண்டிப்பாக இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது தோன்றினால் கீழே கிறுக்கவும். வாழ்க தமிழன்!

அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

அராரிராரோ…. நான் இங்கே பாட.. தாயே நீ கண்ணுறங்கு… என்னோட மடி சாய்ந்து….
யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிஞர் சிநேகனின் வரிகளில் ஜேசுதாஸ் அவர்கள் ராம் திரைப்படத்திற்காக பாடியது. இந்த பாடலை பிடிக்காதவர்கள் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது… எனக்கும் தான்.. நான் அடிக்கடி முனுமுனுக்கும் இந்த பாடலை பதிவு செய்தால் என்ன என்று தோன்றியது.

ஜேசுதாஸ் அவர்களின் குரலை நீக்கிவிட்டு என்னுடைய குரலை நுழைத்து பார்க்கலாமா?. இது கண்டிப்பாக விஷப்பரிச்சை என்று தெரியும். ஜேசுதாஸ் அவர்களின் குரலில் அந்த பாட்டை கேட்டுவிட்டு வேறு ஒரு நல்ல பாடகரில் குரலில் கூட அந்த பாட்டை கேட்க நம்மால் முடியாது.. அவர் குரல் தான் அந்த பாட்டின் உயிர். அப்படி இருக்கையில்  நான் பாடினால்? பரவாயில்லை… ஆசைப்பட்டுவிட்டோம்.. பாடி தான் தொலைத்துவிடலாமே…
இதோ..  அந்த வீடியோ பாடல் என் குரலில்..
[xr_video id=”115bc9f130b24270ba9463c977ea14fb” size=”sm”]

உங்கள் பொறுமையை பாராட்டும் வகையில் அதன் பாடல் வரிகள் போனசாக…

ஆராரிராரோ….நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.
ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே.
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே…
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்..
நீ சொல்லி தந்தாயே…
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே…
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே…. தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா.
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா.
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ……
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத
பூமியும் நீ………
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற……..

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து…..

காதல் யுத்தம்

  • உன்னை நினைக்கும் போதெல்லாம்
    என் நினைவுகள்
    நினைவிழக்கிறது!
  • உறங்கச்சென்றால்smoking-lover
    கண்கள்
    ஒத்துழையாமை செய்கிறது!
  • உண்ணசென்றால்
    வயிறு
    உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
  • மூளை
    மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
    வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
  • மொத்தத்தில்,
    உன்னால்
    என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
  • ஒவ்வொருமுறையும்,
    கண்ணீர் புகையை வீசியே
    இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
  • ஆம்.
    கண்ணீரோடு
    என் நுரையீரலில் புகையை வீசியே!!!

– பிரவீன் குமார் செ

எனக்காக பிராத்தனை செய் சகோதரா

என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.

நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.

என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.

போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

எனக்காக பிராத்தனை செய் சகோதரா  –  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.
[xr_video id=”d00a157cbe51401ea8ecd7d978c9537d” size=”md”]

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

என்னுடைய வாழ்கையின்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்

என்னை தனியாக விட்டுச்செல்வாயா
இல்லையேல்
என்னருகில் துணையாக இருப்பாயா?

இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…

அவன்
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
உயிருடன் இருப்பதற்கு.

சரியான நேரத்தில்,
ஒரே ஒரு தருணத்தில்,
ஒரு நிமிடமாவது,
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?

நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
ஆனால் நமக்கு தேவையான அன்பை
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
என்று அவன் சொன்னான்..

இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..

நேரம் இரவு எட்டு மணி. அலுவலகத்தில் இருந்து அப்போது தான் வீட்டிற்குள் நுழைகிறார் மனோகர்.  தன்னுடைய மகளின் படுக்கை அறையை கடக்கும் போது மிகவும் ஆச்சர்யம் உள்வாங்கியது அந்த தந்தைக்கு.. மகள் படுக்கை அறையில்  இல்லை. எப்போதுமில்லாமல் படுக்கை நன்றாக விரிக்கப்பட்டு  இருக்கிறது. அனைத்தும் தூய்மையாகவும், களைக்கபடாமல் இருப்பது தான் அவரின் ஆச்சர்யத்திற்கு காரணம்.

உள்ளே சென்று பார்க்கையில், தலையனை அடியில் ஏதோ காகிதம் போல் தென் பட்டது அவர் பார்வையில். மெல்ல கையில் எடுத்து பார்க்கிறார். கையில் சிறிது நடுக்கம் இருந்தது.. கடிதத்தை விரித்து படிக்க ஆரம்பம் செய்கிறார்.

அன்புள்ள அப்பாவிற்கு,

என்னை மன்னிக்கவும். நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். எனக்கு உங்கள் அனைவரையும் விட்டு பிரிய சற்று கடினமாக தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி எனக்கு தெரியவில்லை அப்பா. என்னால் உங்களுக்கும் அம்மாவிற்கும் பிரச்சனை வர வேண்டாம் என்பதால் நான் என் காதலன் சங்கருடன் வீட்டை விட்டு செல்கிறேன்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், சங்கரை நேரில் சந்தித்தால் உங்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். அவன் காதில் அணிந்திருக்கும் கடுக்கனும், அழுக்கு சட்டையும் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். நான் சங்கரின் பின்னாடி சென்றதற்கு இது மட்டும் காரணம் இல்லை அப்பா, நான் கர்பமாகவும் இருக்கிறேன். குழந்தை என்றால் சங்கருக்கு மிகவும் பிடிக்குமாம் அப்பா. அதனால் தான் நானும் அதற்கு சம்மதித்தேன்.

சங்கர் என்னை விட வயதில் சற்று அதிகம் ( 42 வயது என்பது இந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கிறேன்). அவனுக்கு சொந்தமாக தொழில் இல்லை, வேலை இல்லை, கையில் பணமும் இல்லை, இருந்தாலும் எங்கள் காதல் உண்மையானது என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரிதானே அப்பா?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சங்கருக்கு ஏற்கனேவே நிறைய காதலிகள் இருக்கிறார்கள்.  ஆனால் சங்கருக்கு என்னை தான் மிகவும் பிடிக்குமாம். என்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்திருக்கிறான். எனக்கு அது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் அவனுக்கு நிறைய குழந்தை பெற்று தர வேண்டுமாம். என்னுடைய கனவும் அது தான் அப்பா.

சங்கருக்கு போதை பழக்கமும் இருக்கிறது. அது ஒன்றும் கெடுதல் இல்லை என்று அவன் எனக்கு  புரியவைத்ததால் நான் அதை கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு வாழ்கையில் பெரிய லட்சியம் இருக்கிறது அப்பா. கஞ்சா செடி பயிரிட்டு அதை நண்பர்கள் மூலம் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே அது. நான் அவன் லட்சியத்திற்கு துணையாக இருப்பேன் என்று  உறுதி அளித்து இருக்கிறேன். அது ஒரு மனைவியின் கடமை தானே?

அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக மருத்துவ துறையில் சீக்கிரம் ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இருந்தாலும் நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் சங்கருக்கு ஏய்ட்ஸ் இருக்கிறது. அவன் சீக்கிரம் குணமாக வேண்டும்.

என்னை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள் அப்பா. எனக்கு 15 வயது ஆகிவிட்டது அல்லவா? அதனால் என்னையும் சங்கரையும் நன்றாக பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். நீங்கள் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். ஒரு நாள் கண்டிப்பாக நான்  உங்களையும் அம்மாவையும் பார்க்க உங்கள் பேரகுழந்தையுடன் வருவேன். அம்மாவை கேட்டதாக கூறவும்.

இப்படிக்கு உங்கள் அன்பு மகள்,
மேனகா சங்கர்..

இதை படித்த மனோகருக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. என்ன  செய்வது என்று தெரியவில்லை. பதட்டம் மேலும் அதிகரித்தது.  கை மேலும் உதறல் எடுத்தது. கடிதத்தை திருப்பி பார்த்தார். அப்போது தான் அந்த கடிதம் இன்னும் நீள்வதை அவர் பார்க்க நேரிட்டார்.

பின் குறிப்பு:
அய்யோ அப்பா. மேலே நான் எழுதிய அனைத்தும் உண்மை இல்லை. நான் பக்கத்துக்கு வீட்டு பத்மநாபன் மாமா வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை விட மிகவும் மோசமனவைகள் என்னுடைய வாழ்கையில் இருக்கிறது.  அதை உங்களுக்கு உணர்த்த நினைத்தேன் அவ்வளவே.  வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் பதட்டப்படாமல் மேஜை மேல் இருக்கும் என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை எடுத்து கையெழுத்து போடவும். என்மேல் உங்களுக்கு கோபம் குறைந்தவுடன் என்னை பக்கத்துக்கு வீட்டிற்கு வந்து அழைத்து செல்லவும்.

உங்களை மிகவும் நேசிக்கும்,
உங்கள் அன்பு மகள்,
மேனகா மனோகர்.