ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு

“கெளதம் மேனன் சொன்னப்போ  சிக்ஸ் பேக் கொண்டுட்டு வர கடுமையா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் தான் என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பலவீனமடைவது  எனக்கே புரிஞ்சது. எல்லாருக்கும் என்னோட அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான். ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் இல்லாம யாரும் இதை முயற்சி பண்ண வேணாம்” – இது நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக் ஆப்ஸ் பார்த்து வாயை பிளக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

இந்தி கஜினி திரைப்படத்திற்காக நடிகர் ஆமிர் கான் மெனக்கெட்டது கொஞ்சம் நஞ்சமில்லன்னு சொல்லலாம். ஒரு வருடம் ஜிம்மே கதின்னு கிடந்தார் மனுஷன். அதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வீடியோ எடுத்தும் வச்சி இருந்தாங்க. மேக்கிங் ஆப் கஜினி மாதிரி, அந்த மேக்கிங் ஆப் சிக்ஸ் பேக் வீடியோ இதுதான்.

அப்புறம் நம்ம புரட்சி தளபதி(அவருக்கே அவரே வச்சிகிட்ட பேரு!) கூட அந்த காக்க காக்க ரீமேக் படத்துல சிக்ஸ் பேக் முயற்சி பண்ணினாரு. ஆனா பாவம், படம் ஊத்திக்கிட்டதுனால அது வேஸ்டா பூடுச்சு.  அதுல உள்ள போன அவர் மார்க்கெட்டும், கன்னமும் இன்னமும் மேல வரவே இல்ல. இப்படி இந்திய சினிமா ஹீரோக்களால் சிக்ஸ் பேக் கடந்த சில வருடங்களாக கடை கோடி மக்கள் மத்தியில் கூட பிரபலமானது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜிம்மிலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தினமும் மணிக்கணக்காக மனிதர்கள் வியர்வை சிந்தி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  சிலர் சிக்ஸ் பேக்கிற்கு, சிலர் எயிட்(!) பேக்கிற்கு ஆனால் பலரோ சிங்கிள்  பேக்கிற்கு(ஹி ஹீ நானும் தான்). அதை நாம லஞ்ச் பேக்குனு கூட சொல்லலாம்.

அப்பேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உடற்பயிற்சி மையத்தில்  டம்மி பீசுகளும், காமடி பீசுகளும் சிலர் வந்து போவதை காண்பது தவிர்க்க இயலாதது.. அவர்களுக்கு தேவை சிக்ஸ் பேக்கோ, இல்லை உடல் எடை குறைப்பதோ தெரியாது ஆனால் அவர்கள் அதற்காக ஜிம்மில் நடத்தும் அரங்கேற்றம் சொல்லி மாளாது. அந்த மாதிரி நபர்கள் சில சமயம் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் உற்று கவனிச்சா குபீர்னு சிரிப்பு வந்துடும்.. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் கண்ட அது மாதிரி சில நபர்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. ஓகே வாங்க ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு போலாம்.

சென்ற முதல் நாளே நான் நோட்டமிட்டது என்னவென்றால் அங்கே ஒவ்வொருத்தர் காதிலும் ஒரு ஹெட் செட் தொங்கிக்கொண்டு இருந்தது. உடற்பயிற்சி  செய்யும்போது ஹெட் செட் அணியக்கூடாது என்று ஏற்கனவே எங்கோ படித்த அந்த ஞாபகம் கொஞ்சம் நினைவில் வந்து போனது.. காதில் உஷ்ணம் அதிகரிக்குமாம். அதிலும் சிலர் உச்சக்கட்டம், ட்ரெட் மில்லில் ஓடும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் யாரிடமோ(!) வருத்துக்கொண்டு இருப்பார்கள்.. பக்கத்தில் நாம் ஓடும்போது அதை காதில் கேட்கவே சகிக்காது… அங்க கூடவா மிஸ்டர்?

இன்னொரு வகையறாக்கள் இருக்கிறார்கள்… உடற்பயிற்சி செய்யும்போது போன் பேசக்கூடாது என்று அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறன். அவ்வளவு நல்லவர்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் ஜிம்மின் உள்ளேயே வருவதில்லை.. வெளியிலேயே போனும் கையும்மாக நிற்பார்கள். சில மணிநேரம் தொடர்ந்து பேசும் ஜாம்பவான்கள் நேரம் ஆகிவிடும் காரணத்தினால் உள்ளே வராமலேயே அப்படியே சென்று விடுவதையும் கண்டு இருக்கிறேன். தானும் ஜிம்முக்கு போகிறேன் என்பதற்காகவோ அவர்கள் வருகிறார்களோ என்னவோ. அப்படியே உள்ளே வருபவர்கள் விரல்களுக்கு வலிப்பு வந்தார் போல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பக்கம் பதில் அனுப்புபவருக்கும் வேறு வேலை வெட்டி இருப்பதாக தெரியவில்லை.

இன்னும் கொஞ்சம் பேரு…….. எலும்பும் தோலுமா, வத்தலும் தொத்தலுமா, அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த வகை பசங்க.. எல்லாம் சின்ன பசங்க. அதுல ஒருவன்.. அனேகமா ஏழாவது, எட்டாவது படிக்கணும்னு நெனைக்கிறேன். பாத்தாலே பாவமா இருக்கும்.. சாப்பிட்டு பத்து நாள் இருக்குமோனு தோணுற மாதிரி இருக்ககூடியவன். வெயிட் தூக்க முடியாம தூக்கறதும், அதுக்காக கஷ்டப்படுறதும் பார்க்க முடியவில்லை. எல்லாம் சிக்ஸ் பேக் சினிமா உசுப்பேத்தி விட்ட விடலைகள்.

இது கூட பரவாயில்லைங்க… இன்னொரு நாள்.  ஜிம்மில் கண்ணாடி பிம்பத்தில் அதை காண நேர்ந்தது.. தூண் மறைத்துக்கொண்டு இருந்ததால் அவரை நான் முழுமையாக காண முடியவில்லை. பக்கவாட்டில் தெரிந்த அவர் முகத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு வயது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம்.அவர் ஒரு உயரமான கம்பியை பிடித்து அசால்டாக மேலும் கீழும்  தொங்கிக்கொண்டு இருந்தார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த வயசுல என்ன ஒரு ஷ்டாமினா??? ஒவ்வொரு தொங்களுக்கும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. என்று  அவர் எண்ணுவது வேறு என் காதில் வந்து விழுந்தது. சர்வசாதரணமாக இப்படி தொங்குகிறாரே மனிதர். நாமும் இருக்கிறோமே.  அரைமணி நேரம் ட்ரெட் மில்லில் ஒடுவதற்கே….. ச்சே…

இவ்வாறு மனதில் புலம்பிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து  அவரை எதேச்சையாக  பார்த்தேன்… அவர் இடுப்பை கையில் பிடித்தவாறு அவர் பின்னால் நின்று கொண்டு “டிரைனர்” அவரை மேலும் கீழும் தூக்கி விட்டுக்கொண்டு இருந்தார்…

பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்

kalavaani review

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு… படம் முடியும் வரை இருக்கையில் நெளியாமல் அமர வைக்கும் நேர்த்தியான திரைக்கதை. நரசிம்மராவ் போன்றோரரையும் சிரிக்கவைத்து விடும்  குபீர் வசனங்கள். கை இல்லாதவர்களையும்  அடிக்கடி கைதட்ட வைத்துவிடும் காட்சி அமைப்புகள். காதில் ரத்தம் வரவழைக்காத  பாடல்கள் பின்னணி இசை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் களவாணி திரைப்படத்தை. கதை ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. திரைக்கதை, காட்சி அமைப்புகளே இந்த படத்திற்கு பக்க பலம். இந்த படத்தில் விமலின் நடிப்பு அருமை. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் அவருக்கு கெடைச்சா போதும். சிம்பு, தனுஷ் வரிசையில அவரும் வந்துடுவாரு. அந்த ஹீரோயின் பொண்ணு நெஜமாவே இஸ்கூல் பொண்ணா?  யூனிபார்ம்ல பள்ளிக்கூட மாணவி போல இருக்கு. சீலை கட்டுனா டீச்சர் கணக்கா இருக்கு? எப்புடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல  அவ்ளோதான்.

படத்தோட முக்கிய கதாபாத்திரமே கஞ்சா கருப்புதான். பருத்தி வீரனுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்துலதான் அவருக்கு காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகி இருக்கு.  அவர் வருகிற காட்சி எல்லாம் சிரிச்சே தொலையனும் வேற வழியே இல்ல. அதுவும் அந்த “பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்” காமடி இருக்கே. தியேட்டர்ல போயி கண்டிப்பா பாருங்க.இன்னும் நிறைய இருக்கு.. படத்தோட கிளிமாக்ஸ்ல கூட எதிர்பாராத காமெடி இருக்கு. படம் முடிஞ்ச ஒடனே வெளியே போய்டாதீங்க அவசர குடுக்கை மக்களே. படம் முடிந்து எழுத்து ஒடும் போதும் அதில் சிரிப்பை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர். குடுத்த காசுக்கு கடைசி வரை சிரிச்சிட்டு வாங்க. நான் வெளிவே வந்து பார்கிங்கில் வண்டி எடுக்கும் வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை.. “கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும்” அப்படின்னு இந்த மாதிரி நல்ல படத்துக்கு விளம்பரம் கெடச்சி  இருந்தா இந்த வருடத்தின் சிறந்த படம் இதுவே. வசூல் சாதனை புரிந்திருக்கும் படமும் இதுவாக தான் இருந்து இருக்கும். இந்த  படம் பார்த்து ஒரு வாரம் ஆகுது ஆனால் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. . ஏனென்றால் கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இந்த மாதிரி நல்ல படத்தை எழுதாமல் விட மனம் வரவில்லை.  நம்மால் ஆன விளம்பரமாக இது  இருக்கட்டும். ஒருத்தர் கூடவா இத படிச்சிட்டு இந்த படம் பார்க்க போக மாட்டாங்க. இந்த மாதிரி படத்திற்கு மக்களே வெற்றிபெற உதவ வேண்டும்.. நல்லா இருந்தா நீங்களும் நாலு பேருகிட்ட சொல்லுங்க.. என்ன சொல்றீங்க?

இதோ போனஸாக களவாணி ரிங்டோன் – இலவச டவுன்லோட்.

சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

பெண்கள் பூவென்றிருந்தேன்
என் இதயம் குத்தப்படும் வரை.

ரோஜாவை அழகாக படைத்தவன்
முள்ளையும் மறக்கவில்லை!

——————————————————————————————-

காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
காவிரியில் தண்ணீர் இல்லையாம்
கண்ணீராவது ஓடட்டும்!

——————————————————————————————-

தமிழ்நாட்டிற்கு
புதிய மின்சார விநியோகம்
உன் விழிகளிலிருந்து!

——————————————————————————————-

நான் தவமிருந்தது உண்மைதான்
உன் வரம் கிடைக்குமென!

சாபம் கொடுத்துவிட்டாயே
கடைசிவரை கண்ணீரென!

——————————————————————————————-

உனக்கும்
நல்ல மனதுதான்
உன் நினைவுகளையாவது
காதலிக்க விட்டாயே…

——————————————————————————————-

தடுக்கித்தான் விழுந்தேன்.
அவள் நெஞ்சம்,
புதைக்குழி என்றறியாமல்….

——————————————————————————————-
தாடி கூட,
சரியாக முளைக்கவில்லை,
தேவதாஸ் ஆகிட!

——————————————————————————————-

தமிழ்நாட்டில்,
மின்சார தட்டுப்பாடு
அவள் கண் சிமிட்டும்போது.

——————————————————————————————-

விடியும் என்றுதான்
தினமும் உறங்குகிறேன்!

——————————————————————————————-

மின்னி மின்னி
மறையும் மின்மினிப்பூச்சி
உன் விழி!

——————————————————————————————-
நீ தீண்டினாலும்
சுகம்தான்!
திட்டினாலும்
சுகம்தான்!

——————————————————————————————-

காதல் வலையே
பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்
என்று பீற்றிக்கொள்ளாதே
அவளை
பிடித்துத்தான் விழுந்தேன்

——————————————————————————————-

என் இதயமாளிகையில்
இருக்கும் என்னவளுக்கு
மூச்சு திணறுகிறதாம்
புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

– பிரவீன் குமார் செ

http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா

2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.

இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின்  ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே  வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.

இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக  வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.

அம்மா!
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
குழந்தையாய் நான்
சாப்பிட அடம்பிடித்த போது,
நீ பாசத்துடன் ஊட்டிய
அந்த நிலாச்சோறு.

முழுக்கால் சட்டை வயதில்
பள்ளிக்கு செல்லும் முன்
அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்
அந்த பத்து ரூபாய் நோட்டு.

எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்
உன் கண்களில் வரும்
அந்த கண்ணீர் துளி.

சரியாக படிப்பதில்லையென
அப்பா என்னை அடிக்கும் போது
நீ மட்டுமே என் மேல் வைத்த
அந்த நம்பிக்கை.

அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..

நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு
உன் கடைசி தருணத்தில்
எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,
நீயோ
என்னை பற்றியும்
என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு
என் மடியில் உயிர் பிரிந்த
அந்த தருணம்.

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

அம்மா!
இப்போது
நீ எதிர்பார்த்த நிலையில்
நானிருக்கிறேன்.என்றாலும்
என்னுடன்
எனக்கு துணையாய் இருப்பதோ
உன் குரலும்
உன் உருவமும் தான்.

வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்

“அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது… ” – “சத்தம் போடாதே” படத்தின் பாடலை ஒரு குழந்தை எவ்வளவு அழகாக பாடிக்கொண்டே ஆடுகிறது என்று பாருங்கள். அதனால் தான் இந்த இடுக்கையின் தலைப்பு “வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்”. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பி.கு: இந்த வீடியோவை அடியேன் தான் எடுத்தேன் ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 🙂