இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்கு ஒரு அருமையான வழி

eyes

மூப்படைந்து இறப்பவர் கூட அடுத்த ஜென்மத்தை பற்றி கடைசி  நிமிடமாவது சிந்தித்தே உயிர் விட்டிருப்பர். வாழ்க்கையை வெறுத்து இளம் வயதில் உயிர் துறப்பவன் கூட அடுத்த பிறவியின் எதிர்பார்ப்பிலேயே இறந்திருப்பான்.  யாருக்குத்தான் அந்த ஆசையில்லை. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்கிறதா என்று நிச்சயம் கிடையாது.  இறந்தபின்பு சொர்க்கம் போகிறோமா இல்லை நரகம் போகிறோமா என தெரியாது. அப்படி ஒன்று இருக்கிறதா என்றும் கூட பார்த்து சொன்னவர்கள் இதுவரை கிடையாது. இருப்பினும் இறந்த பின்பு அனைவருக்கும் வாழ ஒரு வாய்ப்பிருக்கிறதென்றால் முயற்சித்து தான் பார்க்கலாமே..

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர்  எனக்குள்ளே ஒன்று உந்திக்கொண்டு இருந்ததது. ஆனால் யாரை தொடர்பு கொள்வது, எங்கே அதை செய்ய முடியும், அதற்கான வழிமுறை என்ன என்று எனக்கு சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. அப்படியே அந்த எண்ணத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டேன். 19-10-2010 நான் பிறந்து சரியாக இருபத்தைந்து வருஷம் நிறைவடைடைகிறது. உருப்படியாக ஒன்று பண்ணலாமே என்று தோன்றியது. இப்போது தான் கிடப்பில் போட்ட அந்த எண்ணத்தை நோக்கி மீண்டும் முயற்சிக்க ஆரம்பம் செய்தேன். பெரிதாக மெனக்கெடவில்லை. சிறிது இணைய தேடலும் ஒரு சில தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவும் அறிந்து கொண்டேன். அது கண்தானம் எங்கே செய்வது, அதற்கான வழிமுறைகளும் தான். மிகவும் சுலபமானது. ஆனால் ஞாபகமாக பிறந்தநாளன்று செய்து விடலாம் என்று பொறுத்திருந்தேன்.

19 அக்டோபர் 2010.

செவ்வாய் கிழமை

மாலை ஏழு மணி

லோட்டஸ் கண் மருத்துவமனை, சேலம்.

என் கண்ணை தானம் செய்ய என் பெற்றோர்களின் சாட்சி கையெழுத்தோடு பதிவு செய்தேன்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இறந்த பின்பும் உயிர் வாழ இதை விட சிறந்த வழி ஏதேனும் இருப்பதாய் தெரியவில்லை. தானத்திலும் சிறந்தது அன்னதானமென்பர். ஆனால் பார்வை இல்லாதவன் பெரும் அன்னதானமென்பது, தனக்கு அன்னமிட்டவரையும், அரவணைதவர்களின் உருவமும் தன் வாழ்நாளின் கடைசி வரை காணக்கிடைக்காத ஒரு வலியை அவனிடத்தில் ஏற்படுத்தவல்லது. அது அவனுக்கு பசியின் வலியை விட அதிக வலியையும் ஏக்கத்தையும் கொடுப்பது நிச்சயம். தான் இருக்கும் போது தன்னிடம் மிஞ்சியதை அன்னதானமாக கொடுப்பதை விட தான் இறந்த பிறகு தன்னுடலில் எஞ்சியதை கண்தானமாக கொடுப்பதே சிறந்தது. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

உங்களுக்கும் இறந்த பிறகும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால் நீங்களும் தயவு செய்து நிச்சயம் கண்தானம் செய்ய முன்வரவும். இந்த இடுக்கையை படித்த யாரேனும் ஒருவருக்கு கண்தானம் செய்ய எண்ணம் நேர்ந்தால் இங்கே மறுமொழியிட்டு அதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். அப்படி பொது நலம் ஏதும் தோன்றவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் சுயனலவாதியாகவே இருந்து விட்டு போங்கள்.  இந்த பொது நலத்திலும் ஒரு சுய நலம் இருக்கிறது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் இறந்த பிறகு, இந்த பூமியில் உங்கள் உடலரித்து போய் விடினும் உங்கள் கண்களை இன்னொருவரிடம் பத்திரமாக விட்டுச்செல்லுங்கள். புத்திசாலியான சுயநலவாதியாக இருந்துவிடுங்களேன்!

மேலும் விவரங்கள்

1, இறப்பு ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம். ஆகவே கண்தான முடிவை தயவு செய்து தள்ளி போட வேண்டாம்.

2, உங்கள் கண்கள் நீங்கள் இறந்த பின்னரே தானமாக பெற்றுக்கொள்ளப்படும். நீங்களே விரும்பினாலும் நீங்கள் உயிரோடு இருக்கும் பொது சட்டப்படி உங்கள் கண்ணை தானமாக யாரும் பெற முடியாது. ஆகவே பயப்படமால் பதிவு செய்யவும்.

3, நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் கண் அறுவை செய்து எடுக்கப்படாவிட்டால் பிறருக்கு பயன் படாமல் போய்விடும். ஒருவர் இறந்த பின்னர் அவர்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடனாடியாக கண் வங்கிக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும்.

4, இதை நீங்கள் நேரிடையாக உங்கள் நண்பர்களிடமோ கூறுவது சற்று கடினமாக தான் இருக்கும். அதுவும் இல்லாமல் நீங்கள் சொல்லி வைக்கும் நபர் அந்நேரத்தில் பதட்டத்தில் கண் வங்கியிற்கு தெரிவிக்கவும் மறந்து விட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் உங்கள் நெருங்கியவர்கள் அனைவருக்கும் நீங்கள் கண் தானம் செய்திருப்பதையும்  அவர்கள் பின்பற்ற வேண்டியவற்றையும் (தங்களுக்கு நேர்வதை போலில்லாமல்) பொதுவான மொழியில் கூறவும். நானும் கூட அதை என் பிறந்த நாளன்று கூறாமல் அடுத்த நாளே என் குடும்பத்தாரிடம் கூறினேன்.

5. கண்ணை அகற்றுவது பதினைந்து முதல் அறை மணி நேரமே ஆகும். ஆகவே மதச்சடங்குகள் பாதிக்க வழி இல்லை.

6, கண் தானம் செய்தவரின் பெயரும், கண் வழங்கப்பட்டவரின் பெயரும் மறைக்கப்பட்டுவிடும். இருவர் குடும்பத்தாருக்கும் கடைசிவரை தெரியப்போவதில்லை.

7, கண்தானம் செய்ய விரும்புவோர் லோட்டஸ் ஐ கேர், ஷங்கர் நேந்திராலையா போன்ற மருத்துவமனையின் இணைய தளத்தில் விவரங்களை காணலாம். அல்லது அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்கவும்.

donate-your eyes

சேலம் ஜி.ஆர்.டீ. ஓட்டலில் ஒரு மாலை பொழுது

18.10.2010 அன்று  சேலத்தின் முதன் நான்கு நட்சத்திர ஹோட்டல் என்ற அந்தஸ்துடன் ஜி.ஆர்.டீ. கிராண்ட் எஸ்டான்சியா திறக்கப்பட்டது. நானும் நண்பரும் மூன்றாம் நாளான நேற்று (20-10-2010) மாலை இரவு எட்டு மணி சுமாருக்கு சென்றோம். தற்சமயம் ஒரே ஒரு பல்வகை உணவகம்! (Multi-Cuisine Restaurant)  மட்டுமே அங்கு துவக்க நிலையில் இயக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. பப்பெட் (Buffet) உணவு முறையில் வழங்கப்பட்ட அந்த உணவகத்தில் மூன்றாம் நாளாக இருந்த போதிலும் கூட்டம் நன்றாக இருந்தது. சேலத்தில் கண்டிப்பாக இப்படி ஒரு உணவகம் இல்லை. அறுசுவை உணவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது. வாய்ப்பு கிட்டினால் நீங்களும் சென்று விட்டு வரவும் சென்று விட்டு வரவும். நபர் ஒருவருக்கு சேவை வரி தவிர்த்து ரூபாய் நானூறு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக அதற்கு மதிப்புள்ளது. இன்னும் சிலவாரங்களில் தென்னிந்திய உணவகம் ஒன்றும் அங்கு துவங்கப்பட நிலையில் உள்ளது.

Salem GRT multi-cuisine restaurant

Salem GRT Grand Estancia

Salem GRT Estancia Hotel

கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட பெண் இன்ஸ்பெக்டர்

லஞ்சம் மற்றும் ஊழல் தலை விரித்தாடும் இந்திய தேசத்தில் பணத்திற்காக தினந்தோறும் அரங்கேறும் அசிங்கங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. மனிதன் பணத்தை என்று கண்டு பிடித்தானோ அன்றே அதற்கு பிள்ளையார் சுழி போட்டாயிற்று. மனிதேநேயமில்லாத பணத்தாசை பிடித்த மிருகங்கள் களை எடுக்கப்படாத வரை நம் நாடு கண்டிப்பாக செழிக்காது.

சென்ற மாதம் என்னுடைய நெருங்கிய உறவினர் பெண்மணி ஒருவர் மூளைவளர்ச்சி குன்றிய தன் மகனிற்கு “ஊனமுற்றோர்  சான்றிதழ்”  வாங்க சேலத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றார். “ஊனமுற்றோர்  சான்றிதழ்” வைத்திருந்தால் அரசாங்கமிடமிருந்து சிறிதளவு மாதமாதம் உதவித்தொகை பெற முடியும். அது தன் மகனை பராமரிக்க ஓரளவிற்கு அவருக்கு உதவியது.  ஆனால் அதற்காக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த சான்றிதழை பெற வேண்டி இருப்பது போல் தெரிகிறது.

அதை வழங்கும் அந்த அரசு அலுவலர் ஒவ்வொரு முறையும் லஞ்சம் பெற்றே உதவி கோரும் அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வந்துக்கொண்டு இருக்கிறார். உனமுற்றோர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் போய் சேரும் உதவித்தொகையில் கூட லஞ்சமா? இத்தனைக்கும் அந்த அலுவலரும் கால் “உனமுற்றவர்”  என்று அந்த பெண்மனி என்னிடம்  கூறியது தான் வேதனையின் உச்சம். மனிதநேயம் நம்மிடம் எங்கு போயிற்று?

இதே மாதிரி இன்னொரு அசிங்கம் நடந்தேறியது திருப்பூர் நகரில். கொஞ்சம் பழைய செய்திதான் ஆனால் சுரணையுள்ள எந்த மனிதனுக்கும் ஆத்திரத்தை வரவைக்கும் ஒரு வீடியோ அது. தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் கூட வந்திருக்கிறது. விசாரணைக்கு ஒருவரை அழைக்காமல் இருக்க பத்தாயிரம் பணத்தை  லஞ்சமாக ஒரு கடையில் அவரிடம் பெறுகிறார் இன்ஸ்பெக்டர் பெண்மனி ஒருவர். அந்த காட்சியை வீடியோ சுப்பிரமணி என்பவர் கையும் களவுமாக பதிவுசெய்ததவாறு வீடியோ ஆரம்பமாகிறது.

பிறகு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி போலிசை அந்த இடத்திற்கு வரச்சொல்கிறார் அவர். அந்த நேரத்தில் அந்த  பெண்மனி  தன் மானத்தை(!!!) காத்துக்கொள்ள அவரிடம் காலில் விழுந்து கெஞ்சி தன்னை விட்டுவிடும்படி கதறி அழுகிறார். இவரும் விடுவதாய் இல்லை. தன் வாழ்நாள் முழுதும் துடைத்தெறிய முடியாத அந்த இழுக்கு, கேவலம் வெறும் பணத்தால் தானே. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு… கடைசியில் அங்கு வரும் போலிஸ் வீடியோ எடுத்தவரை அள்ளிக்கொண்டு போகிறது.  இந்த மாதிரி நிகழ்வுகளை வீடியோ பதிவை செய்வதற்கு பதிலாக அந்த நபர்களை சுட்டுக் கொள்ளவேண்டும். ஏன்  ஊருக்கும், உலகிற்கும் பாரமாய். அவர்களை களையெடுக்க கண்டிப்பாக ஒரு இந்தியன் தாத்தா நம் நாட்டிற்கு சீக்கிரம் தேவை.

சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
அதனால் தானோ,
ஆய்(யு)த எழுத்தாய்
உன் அப்பா!

——————————————————————————————-

வாழ்வு முழுவதும் சுகம் தர,
தாசி வாங்கும் பணம் போலே,
வரதட்சணை.

——————————————————————————————-

இடியை பார்த்து
நடுங்காத இந்த நெஞ்சம்
உன் இடையை பார்த்ததும்…..

——————————————————————————————-

மனம் ஒரு குரங்குதான்.
உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
உன் நினைவுகளையும் நினைக்க
மறப்பதில்லையே.

——————————————————————————————-

என்னுயிர்
உன்னுயிரோடு
உறவாடி
உயிர்தருகிறது
ஓர் உயிர்க்கு.

——————————————————————————————-

நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது

——————————————————————————————-

நான் தினமும்
ரத்ததானம் செய்கிறேன்
கொசுக்கடி .

——————————————————————————————-

சிதைந்த சூரியன்
உடைந்த வெண்ணிலா
உதிர்ந்த விண்மீன்
நனைந்த மேகம்
இவை அனைத்தும்
வானில் சாத்தியமென்றால்
என் வாழ்வில்
அவளும் சாத்தியம்

——————————————————————————————-

ஆசிரியப்பா தெரியாது
வெண்பா தெரியாது
எதுகை மோனை தெரியாது
மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
இருந்தும் காதலித்துப்பார்
உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

——————————————————————————————-

உன் கூந்தலில் குடியேற
வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
தற்கொலை செய்தன
தரையில் குதித்து

——————————————————————————————-

உடலை
உயிர் பிரிந்ததும்
எரிப்பது வழக்கம்

நீ
என்னை பிரிந்தும்
நான் இன்னும் பிணமாய்,,,,

——————————————————————————————-

உள்ளத்திற்கும்
உணர்வுகளுக்கும்
ஏற்பட்ட உறவினால்
கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
என் கவிதை

——————————————————————————————-

எந்திரன் விமர்சனம் – இளைஞர்களுக்கான கருத்துள்ள படம்

பத்து வருட கனவை பசித்து, முன்று வருட கடின உழைப்பை மென்று, கோடி கோடியாக பணத்தை முழுங்கி,  வெளிவந்து இருக்கும் இந்த எந்திரன் எதிர்பார்ப்பை வீணடிக்காத ஒரு தந்திரன். ஹாலிவுட் தரத்திலான முதல் தமிழ் சினிமா இது. இந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். அசர வைக்கும் இயந்திர மனிதன், மிரள வைக்கும் காட்சிகள் என இயக்குனர் சங்கரின் கனவு மிகப்பிரம்மாண்டமாய் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் நிறைவேறி இருக்கிறது. ரஜினியின் இத்தனை வருட சினிமா கேரியரில் எந்திரன் ஒரு மிக முக்கியமான படம்.

விஞ்ஞானியான டாக்டர் வசிகரன் (ரஜினி) தனது பத்து வருட உழைப்பால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார். இது சாதாரணமான இயந்திரன் அல்ல. மனித மூளையை விட பன்மடங்கு சிந்திக்கக்கூடிய, பன்மடங்கு சாதுர்யமான, அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஒரு செயற்கை அறிவூட்டப்பட்ட இன்னொரு ரஜினி. இது அனைத்து மொழிகளும் பேசும், அனைத்து கலைகளும் அறிந்திருக்கும், நெருப்பில் செல்ல முடியும், தண்ணீருக்குள் நீந்த முடியும், புத்தகங்களை ஒரே நொடியில் படித்து முடிக்கவும் முடியும். இதன் பெயர் தான் சிட்டி. மனித குலத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சிட்டி அது அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதை போன்ற பல இயந்திர மனிதர்களை இந்திய ராணுவத்திற்கு செய்து தருவதே வசீகரனின் லட்சியம்.

இதே போன்று, இன்னொரு ஆராய்சிக்கூடத்தில் வசீகரனின் குருநாதர்  தீய சக்திகளுக்கு வழி வகுக்கும் வழியில் அதே போன்ற இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுறுகிறார்.   இச்சூழ்நிலையில் வசீகரன் உருவாகிய சிட்டியின் மூலக்கருவை (நியூரல் ஸ்கீமா) திருட முயன்று அதுவும் முடியாமல் போகவே சிட்டியை பரிசோதித்து அனுமதி வழங்கும் குழுவில் இருப்பதினால் அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அதற்கு அந்த இயந்திரத்திற்கு மனித உணர்வுகளான அன்பு, பாசம் போன்றவைகள் புரியாததால் மனிதகுலத்திற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என குற்றாம் சாட்டி வசீகரனின் கனவை குலைக்கிறார்.

மனமுடைந்த வசீகரன் மீண்டும் அதை தன் ஆராய்ச்சிக்கூடத்திற்கு கூட்டி வந்து அதற்கு அனைத்து மனித உணர்வுகளையும் புரிய வைக்கிறார். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. அதுவரை வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் இயந்திரமாக செயல்பட்ட அது மனிதனை போல் சிந்திக்கவும் தொடங்குகிறது. விளைவு வசீகரனின் காதலியான சனாவிடம்(ஐஸ்வர்யாவை) அதற்கு காதல் உணர்வு வருகிறது. அதன் உணர்வுகள் வசீகரனின் கட்டுப்பாட்டை மீறி செல்வதை அறிந்ததும் கோபத்தில் அவர் சிட்டியை உடைத்து குப்பைக்கூலத்தில் தூக்கிப்போடுகிறார். விஷயம் அறிந்த வில்லன் அதை மீண்டும் இணைத்து அதன் மூலக்கூற்றை கண்டுபிடித்து அதை தீய செயல்கள் புரிய ப்ரோக்ராம் மூலம் மாற்றியமைக்கிறார். அது சானா மீது வெறித்தனமான காதலில் மீண்டும் எழுகிறது. உலகத்தை அழிக்கவும் அது முற்படுகிறது. ஆனால் இம்முறை யாருக்கும் கட்டுப்படாத இயந்திரமனிதனாய்….

இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரம் சிட்டி என்கிற இயந்திர மனிதனே. இதில் ஹீரோவும் அதுதான், காமடியனும் அதுதான், கடைசியில் வில்லனும் அதுதான். ஒரு ரஜினியை திரையில் கண்டாலே ரசிகர்களின் ஆராவாரத்திற்கு அளவு இருக்காது அதவும் நூற்றுக்கணக்கான ரஜினியென்றால்? சொல்லவா வேண்டும் தீபாவளிதான். ரோபோவே ஜொள்ளும் அளவிற்கு பொருத்தமான அழகி ஐஸ்வர்யா ராய்தான் என்பது படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.  முப்பத்தி ஏழு வயது மதிக்கத்தக்க திருமணமான ஒரு பெண்மணியை ஹீரோயினாக நம் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அது இவர் மட்டும் தான். இப்படத்தில் கொள்ளை அழகு (மேக் அப் உதவியுடன்).   இந்த படத்தில் சந்தானமும், கருணாசும் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து நகைச்சுவை செய்ய முயல்கிறார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அதுவும் அவர்களின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு துளியும் ஒட்டவில்லை என்பதே அதற்கு காரணம். இரண்டு பேருமே “அட நம்ம இவ்வளவு பெரிய படத்துல நடிக்கிறோமா” என்ற ஆச்சர்யத்தையும், பயத்தையும் முகத்தில் சுமந்தவாரே படம் முழுக்க வருவது போல் தோற்றம் அளிக்கின்றனர்.

முற்பகுதிகளில் சிட்டி ரோபோ செய்யும் சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவிற்கு விறுவிறுப்பு. அந்த ரயிலில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், நெருப்பில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதில் ஆகட்டும் கண்டிப்பாக இந்தியாவின் சூப்பர் மேன் சிட்டி தான். ஆங்கில படத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த மாதிரி காட்சிகள் தமிழ் படத்தில் காணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. முக்கியமாக சிட்டி பிரசவம் பார்க்கும் அந்த காட்சியை காணும்போது அனைவருக்கும் கண்டிப்பாக சிலிர்த்துவிடும். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்  கதாபாத்திரத்தை போல் இந்த சிட்டியையும் பல படங்களில் தொடர்ந்து இந்திய சினிமாவில் எடுக்கும் அளவிற்கு ஸ்கோப் இருக்கிறது. ஷங்கருக்கு இந்த யோசனை இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதே மாதிரி ரஜினியை தவிர வேறு யாராலும் இந்த படத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியாது. ரோபோவாக நம்ம ஊர் நடிகர்களை நாம் திரையில் ஏற்றுக்கொள்ள தவறினால் முழு படமுமே எள்ளி நகைக்கக் கூடியதாகிவிடும் சூழ்நிலை இருக்கிறது. ரஜினி கணக்கச்சிதமாக இயந்திர மனிதனாக இதில் பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பகுதியில் வரும் அந்த வில்லத்தனமான இயந்திரனின் சிரிப்பும், ஆடு மாதிரி கத்திக்கொண்டே நடந்து வரும் தோரணையும் ரஜினியை பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் கூட அவருக்கு தீவிர ரசிகனாகியே தீரவேண்டும். ஸ்டைல் எதுவும் இல்லமால் தன் நடிப்பை வெளிக்கொண்டு வர நல்ல படமாக இது அமைந்துள்ளது. ரஜினியை ரோபோவாக முற்றிலும் நம்பும்படியாகவும் கொஞ்சமும் இம்மி பிசகாமல் இப்படத்தை உருவாக்கிய விதத்தில் இயக்குனர் ஷங்கரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயர் கண்டிப்பாக எந்திரன் அவருக்கு பெற்றுக்கொடுக்கும்.

ஒரு விஞ்ஞான அறிவுள்ளவன் அனைவருக்கும் புரியும்படியாக கதை சொல்ல முடியாது. அதே போல் ஒரு படைப்பாளியால் விஞ்ஞானியை போல் டெக்னிக்கல் வார்த்தை அறிந்திருக்க முடியாது. ஆனால் இரண்டையும் கையாளக்கூடிய திறமை படைத்த ஒரே லோக்கல் சரக்கு சுஜாதா மட்டும் தான். அவரில்லாமல் இந்தப்படம் கண்டிப்பாக இந்த அளவிற்கு சாத்தியப்பட்டு இருந்துருக்காது. இந்த கதையின் மூலக்கருவே மறைந்த சுஜாதாவின் ஒரு பழைய சிறுகதையின் தாக்கத்தால் உருவானதே என எங்கோ படித்தாய் ஞாபகம்.
படத்தின் வசனங்களில் நிறைய இடத்தில், சுஜாதா தான் இறந்தாலும் தன் எழுத்திற்கு அழிவில்லை என்று ஞாபகப்படுத்துகிறார். சந்தானமும், கருணாசும் சிட்டி ரோபோவிடம் “எங்களுக்கு மட்டுமே இருக்கும் ஒன்று உனக்கு இல்லை” என்று அதை உசுப்பேற்றிவிட. அது வசீகரனிடம் சென்று “அது என்ன எனக்கு மட்டும் இல்லை” என்று அம்மாஞ்சியாய் கேட்பது போன்ற நையாண்டி வசனமும். இன்னொரு காட்சியில் மனிதர்களிடம் மட்டுமே இருப்பது போட்டி, பொறாமை, வஞ்சகம், துரோகம் போன்ற உணர்வுகள்தான் என்ற வசனமும் ஹய்லைட். கொசுவிடம் பேசும் அந்த காட்சிகளும் சுஜாதாவின் கைவன்னம்தான்.

பின்னணி இசையில் ஏ.ஆர் ரகுமானுக்கு சரியான தீனி இந்த படத்தில் கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் வருவது போன்ற பின்னணி இசை இந்திய மண்ணில் இவரை தவிர வேறு யாராலும் தரமுடியாது. அட ஹாலிவுட்காரனுங்களுக்கே இவர் மியூசிக் போட போய்ட்டார் அப்புறம் என்ன ஹாலிவூட் போன்ற பின்னணி என்ற அடைமொழி?!!! சும்மா சொல்லக்கூடாது க்ளைமாக்சில் கலக்கிவிட்டார் மனுஷன். அரிமா அரிமா பாடலில் வரும் “எந்திரா எந்திரா” பிட் தான் இனிமேல் அலாரம் டோனாக வைக்கப் போகிறேன். எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் “எந்திரா… எந்திரா,,,” என்று உச்சக்குரலில் கத்தி எழுப்பி விடும் ஒரு பாடல்.

ஆஸ்கார் விருது பெற்ற ராசூல் பூக்குட்டி இத்திரைப்படத்திற்கு அதே உலகத்தரமான ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்துள்ளார். அது படத்தை பார்த்தால் தான் உணர முடியும். ஒளிபதிவாளர் ரத்தினவேலு அபாரம். கிளிமாஞ்சரோ பாடலையும், காதல் அணுக்கள் பாடலையும் திரையில் காணும்போது கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. கொள்ளையழகாய் தன் காமிராவில் படம்பிடித்து இறக்கிறார். சாபு சிரிலின் கலையும் அப்படியே. படத்தில் எந்த இடத்திலும் கிராபிக்ஸ் எது? செட் எது? என்றே கண்டுபிடிக்க முடியாது.

இப்படி படம் நெடுக பல பெருமைகள் இருந்தாலும் படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. என்னதான் மாதக்கனுக்குல பரீட்சைக்கு படிச்சிட்டு போனாலும் சில கேள்விகளுக்கு  சொதப்புவது இல்லையா அது போல தான். லஞ்சம், அரசியல் போன்று தான் தொன்று தொற்று பின்பற்றும் பார்முலாவை இந்த படத்தில் விட்டுவிட்டு வந்தாலும்  ரஜினி இருக்கும் தைரியத்தில் கதையிலும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார் போலும். கதைக்களம் நமக்கு புதியதாய் இருந்தாலும் கதை அரதப்பழசுதான். முக்கோண காதல் கதை. கடைசியில் உண்மையான காதலர்களே சேருகிறார்கள். இந்த படத்திற்கான ரோபோ என்ற கருவை வைத்து படத்தின் கதையில் பூந்து விளையாட வாய்ப்புகள் இருந்தும் ஒரு இந்தியக்கதையை ஆங்கில படத்திற்கு இணையான தரத்தில் சொல்ல மட்டுமே முயன்று இருக்கிறார் இயக்குனர்.

சில இடங்களில் காட்சிகோர்வைகள் இல்லை. இன்னும் சில இடங்களில் டீடைல்ஸ் பத்தவில்லை. பாமரனுக்கு புரியாது என்று விட்டு விட்டார்களோ என்னவோ. எனக்கு க்ளைமாக்சை காணும்போது ராமநாரயனின் “குட்டி பிசாசு” ட்ரைலரை பார்த்த நியாபகம் தான் வந்தது. (படம் பார்க்கவில்லை). கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக சிந்தித்து கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம். கிராபிக்ஸ் பண்ணிக்காலம் என்ற நம்பிக்கையில் அதை பற்றி கவலைப்படவில்லை போலும். ஆங்கிலப்படங்களை அவ்வளவாக கண்டிராதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கிளைமாக்ஸ் பிரமிக்க வைத்து இருந்து இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நீண்டு போய் தொய்வை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் குறைகள் என்பதை விட படத்தை மேலும் மெருகேற்றகிடைத்த வாய்புகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் எந்திரன் தலையில் தூக்கிவைத்து கொண்டாடவேண்டிய ஒரு படம். தமிழ் படமாயிற்றே… இங்கே இருந்து இவ்வளவு தூரம் பண்ணி இருப்பது சும்மாவா?

இந்த திரைப்படத்தில் சங்கர் சொல்லவந்த விஷயம் இது தான், வஞ்சகம், துரோகம், பழிவாங்குதல் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்களை விட்டொழிந்து வாழ வேண்டும். அது மட்டுமில்லாமல் வசீகரன் தனக்கு துரோகம் செய்துவிட்ட சிட்டியை வெட்டி உடைக்கும் போது “எனக்கு வாழனும் டாக்டர், நான் சனாவை காதலிக்கிறேன்னு” கெஞ்சும்போதும். க்ளைமாக்சில் சிட்டி தன்னை தானே ஒவ்வொரு பாகமாய் கழட்டி உயிர்துறக்கும் சீனும் கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் பாரத்தை ஏற்படுத்துவான் இந்த எந்திரன்.

இந்த படத்தில் இயக்குனர் சங்கருக்கே தெரியாமல்  இன்னொரு  மெசேஜ் இருக்கிறது. அது என்னவென்றால், எப்பேர்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பெண்ணை மட்டும் காதலிக்க ஆரம்பித்தால் கடைசியில் அவனுக்கு நிச்சயம் சங்கு தான்.  அது ரோபோவாக இருந்தாலும் சரி.   பூம் பூம் ரோபோடா…..yahoo