எங்கேயும் எப்போதும் படமும் – மனதை உறைய வைக்கும் ஒரு நிஜமும்

engayum eppothum review

அவன் பெயர் ஆனந்தராஜ். அப்போது அவனுக்கு இறுபத்தி மூன்று வயது இருக்கும். அவனுக்கு அம்மா கிடையாது. அப்பா அவனை சிறுவயதிலேயே கைவிட்டு விட்டு ஒதுங்கி விட்டார். தன்னுடைய தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த அவன், நெய்வேலியில் உள்ள அவனது அக்கா வீட்டில் தங்கி என்னுடன் இளங்கலை பட்டம் படித்தான்.

உடன் படித்த நண்பர்கள் யாருக்கும் இது தெரியக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ தன்னுடைய தாத்தாவை காட்டி அவர் தான் தன்னுடைய அப்பா என்றே கடைசி வரை கூறிக்கொண்டு இருந்தான். என்னிடம் உட்பட. படிப்பிலும் கெட்டிக்காரன் என்று சொல்ல முடியாது ஆனால் தேர்வின் போது பின்னால் அமர்ந்து இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம் அவன் தான் தெய்வம். எப்படியும் அறுபது, எழுபது மார்க் வாங்கும் அளவுக்கு அவனுடைய பதில் தாளில் விஷயம் இருக்கும்.

எல்லோரிடமும் எளிதாக ஒத்துப்போகும் சுபாவம் உள்ளவன் அவன். அந்த வயதிற்கே உரிய குறும்பு அவனுக்கு இல்லாமல் இல்லை. இரவு குரூப் ஸ்டடி என்றாலும் அந்த கூட்டத்தில் அவன் இருப்பான், கல்லூரி கட் அடித்து விட்டு ஊர் சுற்றினாலும், சினிமாவுக்கு போனாலும் அவர்களுடனும் அவன் இருப்பான்.  மூன்று வருட படிப்பு முடிந்ததும் அனைவரும் அவர்களுடைய திசையை நோக்கி பிரிந்தோம். அவன் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ முதுகலை பட்டம் படிக்க சேர்ந்து கொண்டான்.

அப்போது வயது முதிர்ச்சி அவனை பக்குவப்படுத்தி இருந்தது.  அவனிடைய பள்ளிபடிப்பு தாத்தாவின் உதவியுடன்.  கல்லூரி படிப்பு அக்காவின் உதவியுடன். அடுத்து?  இந்த கேள்வி அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எப்போதாவது அவனை நேரில் பார்க்கும் போதும், போனில் பேசும் போதும் அவனுள் அந்த வித்யாசத்தை உணர்த்தேன். அவன் முன்பு இருந்த ஆனந்தராஜாக இல்லை இப்போது. அவன் கண்களில் கனவு இருந்தது.

நண்பர் கூட்டம், சினிமா, ஊர் சுற்றுவதை முடிந்தவரை தவிர்த்தான். இரவு பகலாக படித்தான். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அதுவே அவனை முற்றிலும் மாற்றி இருந்தது. படிப்பு முடிந்தது. எதிர் பார்த்த மாதிரி நல்ல மார்க்குகள் பெற்று இருந்தான். கை நிறைய சம்பளம் கூடிய வேலை ஒன்று சென்னையில் அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய தாத்தாவிற்கு, பாட்டிக்கும் அளவிட முடியா சந்தோஷம். அவனுடைய அக்காவிற்கு பெற்ற தாயின் ஸ்தானத்தை அடைந்து விட்ட ஒரு உணர்வு. இனிமேல் அவனுக்காக யாரும் கவலைபட வேண்டாம், அவன் முன்னுக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

சிதம்பரம் அருகே உள்ள காட்டு மன்னார் கோவில்தான் அவர்களது சொந்த ஊர்.  வேலைக்காக சென்னையில் நண்பர்களுடன் தங்குவதற்கு வீடு எல்லாம் பார்த்தாயிற்று. இப்போது தன் சொந்த ஊரில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று இருந்தான். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்த சூழ்நிலையில் நண்பர்கள் அவனை சென்னைக்கு வர வற்புறுத்தினர்.   வேலைக்கு சென்று விட்டால் மீண்டும் அடிக்கடி இங்கு வர முடியாது, அகவே அதுவரை தன் தாத்தா பாட்டியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என அவன் போக மறுத்தான்.

மறுநாள் விடியற்காலை எதிர்வீட்டு நண்பர்கள் ஆனந்த்ராஜின் வீட்டு கதவை தட்டினர். அவர்கள் அண்ணன் தம்பி இருவர். அண்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டு இருந்தான். தம்பி இன்ஜினியரிங் படித்துக்கொண்டு இருந்தான். அண்ணனுக்கு அன்று பட்டமளிப்பு விழாவாம், இவனையும் உடன் வர அழைத்தனர். முதலில் வர மறுத்தவன், பிறகு அவர்களில் வற்புறுத்தலில் பேரின் வர சம்மதித்தான். அதுதான் அவன் வாழ்க்கையில் செய்த மிகவும் மோசமான முடிவு என அவன் உணர்திருக்கவில்லை.

அப்போது வெளியில் காரில் அந்த இருவரும் ரெடியாக இருந்தனர்.  இவன் அவசரமாக குளித்து விட்டு, வீட்டு வாசலில் கட்டி இருந்த கொடியில் துண்டையும், தன்னுடைய பனியனையும் காயவைத்துகொண்டு இருந்தான். அதற்குள் ஹாரன் சத்தம் அவனை மேலும் அவசரபடுத்தியது. அவனுடைய தாத்தாவிற்கு அவன் அவர்களுடன் செல்வதில் விருப்பமில்லை.  ஒரு வழியாக அவரை சமாதனபடுத்திவிட்டு, பாட்டியிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஹாரன் சத்தம் வருவதற்குள் காருக்குள் நுழைந்தான். நேரம் அப்போது காலை ஆறு மணியை கடந்து இருந்தது.  சிதம்பரத்தை நோக்கி கார் சர்ரென பறந்தது. அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதத்தை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது ஒரு குறுகலான கிராமத்து சாலை. கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. அன்று டாக்டர் பட்டம் பெறப்போகும் அண்ணன் தான் காரை ஒட்டிக்கொண்டு இருந்தார். அருகே அவரது தம்பி. பின்னால் இவன். மெதுவாய் போனாலே சரியான நேரத்திற்கு போய் விடலாமே எதற்காக இவ்வளவு வேகம் என கூறி வேகத்தை குறைக்கைச்சொல்லி இவன் எச்சரித்து இருக்கிறான். அவன் கேட்கவில்லை. ஊரில் தெரிந்தவர்கள் பல பேர் அப்போது இவர்களின் வேகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

சிறு தூரம் தான் சென்றிருப்பார்கள். ஒரு திருப்பத்தில் கார் வளையும் போது எதிரில் திடிரென ஒரு லாரி. அது போதுமான அகலம் கொண்ட சாலை இல்லை. இடது புறம் சைக்கிளில் ஒரு வயதானவர் வேறு சென்று கொண்டிருந்தார். ஆ….. “டேய்.. லாரி டா…”….  “இந்த பக்கம் திருப்பு டா…”  “சீக்கிரம் ப்ரேக் போடு டா”… என்ன செய்வது என்று சிந்திக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை அவர்களின் வேகம். டட்…..டா..மா…ர்… .

கார் இப்போது லாரியின் அடியில் சிக்கி அப்பலமாய் நொறுங்கி இருந்தது. அது பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத கிராமத்து பகுதி. அருகில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், கிராமத்தில் இருந்தவர்களும் அனைவரும் சில நிமிடங்களில் கூடி விட்டனர். காரின் முன்பகுதி நொறுங்கி போனதால் முன்னால் அமர்ந்து இருந்த சகோதரர்கள் இருவருக்கும் இடுப்புக்கு கீழே உடல்கள் நசுங்கி போய் இறந்திருந்தனர். பின்னால் அமர்ந்து இருந்த ஆனந்தராஜ் அதிஷ்டவசமாக உயிருடன் தான் இருந்தான். அவனுக்கு பெரிதாய் அடி பட்ட மாதிரி அவர்களுக்கு தெரியவில்லை. கார் கதவு நசுங்கி போய் இருந்ததால் அவர்களால் அவனை வெளியே கொண்டு வர இயலவில்லை.  தனக்கு முன்னால் நண்பர்கள் அகோரமாய் இருப்பதை கான முடியாமல் தன்னை சீக்கிரம் வெளியே எடுக்குமாறு கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் கதவு பிரிக்கப்பட்டது. உள்ளே இருந்து அவனாகவே எழுந்து வெளியே வந்தான்.  அதற்குள் அவரது உறவினர் ஒருவர் தகவல் அறிந்து ஜீப்பில் வந்து இருந்தார். கண்ணில் கண்ணீர் மல்க அவரிடம் நண்பர்களை காப்பாற்றுங்கள் என்றான். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அனைவருக்கும் அப்போது தெரிந்ததால் இவனை பற்றி விசாரிக்க ஆரமித்தார்கள்.  “உனக்கு ஒன்றும் ஆகவில்லையே” என்று கேட்டார் அந்த உறவினர். “எனக்கு ஒன்றும் இல்லை, தலையில் தான் அடி பட்டது போல் இருக்கிறது. சிறிது வலி அவ்வளவுதான்” என்றான்.

அவனை அவசரமாக  ஜீப்பில் ஏறச்சொல்லி மருத்துவமனைக்கு அவனது உறவினர் மற்றும் சிலருடன் அனுப்பி வைத்தனர். அவனாகவே சென்று ஜீப்பில் ஏறி அமர்ந்தான். மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கும் போது விபத்து நடந்தது குறித்து அவன் கூறிக்கொண்டு வந்தான். திடீரென தலை இப்போது மிகவும் வலிக்கிறது என்று தலையை பிடித்துக்கொண்டான். அப்போது தான் அவனது உறவினர் அவனது காதிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை கண்டு திடுக்கிட்டார். சில நொடிகள் தான் ஆனது, அதற்குள் தனக்கு மயக்கம் வருவதாக கூறி அப்படியே ஜீப்பில் சரிந்து விழுந்தான். “அவனுக்கு ஹெட் இஞ்சுரி, இங்கு வரும்முன்னே இறந்து விட்டான்” என டாக்டர்கள் ஒரு வரியில் முடித்துக்கொண்டு விட்டனர்.

நான் அவன் வீட்டிற்கு சென்றடைந்த போது மாலை இருட்டி இருந்தது. வாசலில் நண்பர்கள் உறவினர்களில் ஓலத்தினிடையே கண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தது ஆனந்தராஜின் சடலம். உடலில் எங்கும் காயம் இல்லை. முகம் மட்டும் வீங்கி அவனுடைய முகத்தோற்றத்தை மாற்றி இருந்தது. அருகில் உள்ள கொடியில் அவன் காலை உலர்த்தி விட்டுச்சென்ற துண்டும் பனியனும் இன்னும் ஈரம் உலராமல் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது.

அவனுடைய தாத்தா விரக்தியில் தூரத்தில் வானத்தை பார்த்தவாறு தனியாக அமர்த்து இருந்தார். அவனுடைய பாட்டிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அவனுடைய அக்கா அவன் சடலத்தின் அருகே அமர்ந்து கடவுளிடம் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் இருந்தார்.   அவர் அப்போது கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிச்சயம் கடவுளிடம் பதில் இருக்க வாய்ப்பில்லை.  ஆனந்த ராஜின் கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் அனைத்து அவன் உடலோடு சேர்த்து அன்றிரவே ஏறியூட்டப்பட்டது.

############################################

நாம் தினமும் நாளிதழ்களில், தொலைகாட்சிகளில் பார்க்கும் விபத்துகள் அனைத்தும் வெறும் செய்திகளாகத்தான் தெரிகிறது. ஆனால் நமக்கு வேண்டியவருக்கு நிகழும் பொழுது தான் அது வெறும் செய்தி அல்ல, அது ஒரு ஈடு செய்ய முடியா ஒரு இழப்பு என்ற வலியை உணர்கிறோம். அப்படி ஒரு வலியை உணரச்செய்யும் படம் தான் “எங்கேயும் எப்போதும்”. படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எனக்கு ஞாபகப்படுத்திய சம்பவம் தான் மேலே தான் குறிப்பிட்டது.

“வேகமாக போகதப்பா.. பாத்து பொறுமையா, நிதானமா போ”ன்னு அம்மா பாசத்தோடு சொல்லும் போதும், “வண்டி ஓட்டும் போது செல்போன் பேசாதேனு” அப்பா கண்டிக்கும் போதும் கேட்காத நம்மை, படாரென  ஓங்கி செவிலில் அறைந்து எச்சரிக்கிறது இந்த “எங்கேயும் எப்போதும்”.

நாடு கடந்த சேலம் – நக்கீரன் இதழில் எங்கள் பேட்டி

“நாடு கடந்த சேலம்” என்னும் தலைப்பில் நக்கீரன் செப்டம்பர் 14, 2011 இதழில் எங்களுடைய முயற்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது!  மேலும் படிக்க கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கவும். இம்முயற்சியில் எங்களுடன் இணைய ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பூவில் உள்ள “தொடர்பு கொள்க” பகுதியில் மூலம் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கீழே கருத்திடவும்.

Nakkeran Salem 28 Project news

இம்முயற்சியை பற்றிய மேலும் தகவலுக்கு கீழுள்ள பதிவுகளை வாசிக்கவும்.
1. சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி
2. சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

மங்காத்தா அதிரடி ஆட்டம் – விமர்சனம்

Mankatha review

அஜித்தின் ஐம்பதாவது படம் தான் இந்த மங்காத்தா.  தொடர் தோல்விகளால் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய சூழ்நிலை. அதற்காக வழக்கம் போல் இந்த படத்துல ஹீரோ ஊரையோ அல்லது நாட்டையோ காப்பாத்த கிளம்பல. பணம், பெண் என்று பித்து பிடித்து அலையும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம். “Strictly No Rules” என்று அஜித் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து விதிகளையும் உடைத்து மங்காத்தா விளையாடி அதில் ஜெயித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும்  ஐநூறு கோடி ருபாய் பணத்தை தன் வசாமாக்க திட்டம் போட்கிறார் ஜெயப்ரகாஷ். அதை கொள்ளை அடிக்க  புறப்படுகிறது வைபவ், பிரேம் ஜி என்று நால்வர் கொண்ட கும்பல். இதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் ஐந்தாவதாக சேர்கிறார் விநாயக் என்ற சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜித்.

அந்த ஐந்து பேரும் திட்டம் போட்டவாறு ஐநூறு கோடியையும் கொள்ளையடித்து விடுகின்றனர் ஆனால் அதை பங்கிட்டு கொள்வதில் தான் பிரச்சனை. பணத்தாசை காரணமாக அனைவரையும் கொன்று அதை ஒரே பங்காக சுருட்ட நினைக்கிறார் அஜித். ஆனால் பணம் அவருக்கே கிடைக்காமல் காணாமல் போகிறது. அதை தேடி தான் மீதி கதை.. இந்த கும்பலை தேடிபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். கூடவே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

“எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது”னு படத்தோட ட்ரைலர்லேயே கதையை சொல்லிட்டாங்க. அஜித் முதற்கொண்டு படத்தில் வரும் அனைவருமே கெட்டவர்கள் தான்.இவராவது நல்லவராக வராரேனு ஒருத்தரை நினைத்தால் அட அவரும் கடைசியில கெட்டவர் தான். அந்த ஐந்து பேரில் அஜீத்திற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் அவரும் அதில் ஒருவராகவே காண்பித்து கதையை நகர்த்தியது அருமை. அதே போல் பணம் காணாமல் போகும் போது அதை யார் எடுத்திருப்பார்கள் என்று அந்த கதாபாதிரங்களுக்கு எழும் குழப்பங்களும், கேள்விகளும் நமக்கும் எழாமல் இல்லை.

mankatha trisha lakshmi rai

அஜீத்தின் இது நாள் வரைய எல்லா படங்களையும் சில நொடிகள் ஒரே காட்சியில் ஓட விட்டு “அஜித் 50” என்று படம் தொடங்கும்போதே அதிரடி. விசில் பறக்கிறது.  அடுத்த மே மாதம் வந்தால் தனக்கு நாற்பது வயது என்ற கூறி நரைத்த முடியுடன் இந்த படத்தில் அஜித் கொஞ்சம் அசத்தலாக வருகிறார். முதல் பாதியில் தனியாக செஸ் விளையாடி கதையை நரெட் செய்யும்போது பின் பாதியில் பணத்தின் மேல் தனக்கு உள்ள பைத்தியத்தை வெளிபடுத்தும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பர்பார்மென்ஸ்.

இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள். உதட்டசைவில் அதை புரிந்து கொள்கிறவர்கள் கைதட்டி ஆற்பரிக்கிரார்கள். புரியாதவர்கள் எரிச்சலுடன் முழிக்கிறார்கள். படத்தில் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இருந்தும் படத்திற்கு தேவை இல்லாத கதாபாத்திரங்கள். ஆனால் லட்சுமிராய் கொஞ்சம் பயன்ப்பட்டு இருக்கிறார்.

அஜித் திரிஷா காதலே இந்த கதைக்கு தேவையில்லாத போது அவர் அதற்கு அழுவதும், ஒரு சோக பாட்டும் நம் பொறுமையை சோதிக்கிறது. சோக பாடல் ஆரமித்தபோது எங்கே இன்னும் யுவன் சங்கர் ராஜாவை காணோமே என்று யோசிக்க ஆரமித்த போது கரெக்டாக வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டார். ஆனால் இரண்டு குத்து பாடல்களை தவிர வேறு ஏதும் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வழக்கம் போல் பின்னனி இசை கலக்கல்.

ajith-premji-vaibhav-veer-mankatha-still

வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கம் போல் வரும் அத்தனை சகாக்களும் இந்த படத்திலும். இளைஞர்களை டார்கெட் செய்யும் வசனங்கள் மூலம் நிறைய காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார். ஒரு பாடலில், அஜித் மற்றும் த்ரிஷா நடனமாட, வீட்டின் உட்புறங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவது மிகவும் புதுமையான, ரசிக்கும்படியான முயற்சி. வழக்கம் போல் பிரேம்ஜி இந்த படத்திலும் மற்ற திரைப்படங்களின் வசனம் பேசியே வருகிறார். அவ்வப்போது எரிச்சல் ஊட்டினாலும் பல இடங்களில் டைமிங் வசனத்தால் சிரிக்க வைக்கிறார். உதரணமாக “மனுஷன் கண்டு புடிச்சதுல உருப்படியானது ரெண்டே ரெண்டு தான்.. ஒன்னு சரக்கு… இன்னொன்னு முறுக்கு.” என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது.

படம் முடிந்து என்டு கார்டு ஓடும்போது அஜித் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. அதில் தனியாக ஒரு நகைச்சுவை குறும்படம் பார்த்த அனுபவம் இருந்தது. மொத்தத்தில் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட வேண்டிய படம்